ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – ஹாலன் – பூர்ணவர்மன் : பல ஆதாரங்களின் சான்றுகள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

கர்ண பரம்பரையாக வந்த நம்பிக்கை, மடங்களின் ஆதாரம் என்பவை தவிர இன்னும் சிலதும் (ஆசார்யாள் காலம் கி.மு. 6-5 நூற்றாண்டே என்பதற்கு ஆதரவாக இருப்பதைச்) சொல்கிறேன்.

புராணங்களை ஒன்று சேர்த்துப் பார்ப்பதில் நமக்குத் தெரியும் ‘ஜீனியாலஜி’ ப்படி (ராஜ வம்சங்களின்படி) கி.மு. 1500லிருந்து கி.மு. 1200 வரை (ஸுமாராகத்தான் சொல்கிறேன்) மௌர்யர்கள் ஆண்டபின் கி.மு. 900 வரை சுங்கர்களும், அப்புறம் சுமார் நூறு வருஷம் காண்வர்களும் ஆட்சி நடத்தி முடித்து, கி.மு. எட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து ஐநூறு வருஷங்கள் “ஆந்த்ரர்”கள் என்று சொல்லப்படும் சாதவாஹனர்கள் ஆண்டிருக்கிறார்கள். ‘டெக்கானி’ல் (தக்காணத்தில்) தான் சாதவாஹனர் ஆட்சி ஏற்பட்டாலும் அது வடக்கேயும் பரவியிருந்ததால் அவர்களையே விசேஷித்து மகதாதிபதிகளாகவும் சொல்லியிருக்கிறது. ஆசார்யாள் காலம் கி.மு. ஆறாம்-ஐந்தாம் நூற்றாண்டு என்றால், அப்போது இந்த ஆந்தர வம்சத்தின் ஆட்சியே நடந்திருக்கவேண்டும்.

“குரு ரத்னமாலா”விலிருந்து இப்படியே கன்ஃபர்ம் ஆகிறது. காசியில் விச்வநாதர் தீண்டாதானாக வந்தபின் ஆசார்யாள் குமாரிலபட்டரைப் பார்க்க ப்ரயாகைக்குப் புறப்பட்டதைப் சொல்லுமிடத்தில், “ஹால ராஜனால் ஆதரிக்கப்பட்டவராக இருந்தபோதிலும் அவர் காசியை விட்டுப் புறப்பட்டார்” என்று வருகிறது1. ஹாலன் என்று சாதவாஹன (ஆந்த்ர) ராஜா இருந்ததைப் புராணப் பண்டிதர்கள், ஓரியன்டலிஸ்ட்கள் இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள். ஓரியன்டலிஸ்ட்களே அவனை கி.பி. முதல் நூற்றாண்டுகாரனாகச் சொல்லியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். அவனுக்குக் காசி வரை ஆதிக்யம் இருந்திருக்கக்கூடியதே என்றும் தெரிகிறது. தம் காலத்தில் ஸார்வபௌமன் இல்லை என்று ஆசார்யாள் சொல்லியுள்ள படி இந்த ஹாலனும் தேசம் பூராவும் பரவிய ராஜ்யத்தை ஆளாவிட்டாலும், கோதாவரி – கங்கை நதிகளுக்கு இடைப்பட்ட பெரிய பகுதியை ஆண்டிருக்கக்கூடும். அதனால் காசி அவன் ராஜ்யத்தில் இருந்திருப்பது ஸாத்யமே. ராஜா என்பதைவிடக் கவி என்று அவனுக்கு ப்ரஸித்தி உண்டு. ப்ராக்ருத பாஷையில் யதார்த்த வாழ்க்கையை இயற்கையாக வர்ணித்து இக்கால ‘ஸமூஹக் கதைகள்’ என்பவற்றைப் போல ஏழு சதகம் கொண்ட புஸ்தகம் எழுதியிருக்கிறான்.

கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து ஐநூறு வருஷம் ஆண்ட ஒரு வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதைவிடத் திட்டமாக நம்முடைய புராணாதிகளிலிருந்து இவனுடைய காலத்தைச் சொல்லமுடியுமா என்றால், முடியும். அப்படியொரு ஆராய்ச்சி செய்து (கே.ஜி.) நடேச சாஸ்த்ரி “ஜிஜ்ஞாஸா” ஸஞ்சிகையில் எழுதியிருக்கிறார். கலியுக ஆரம்பத்திலிருந்து மகதத்தை ஆண்டவர்களில் ஹாலன் 74-வது ராஜா என்று அவருடைய ஆராய்ச்சியிலிருந்து தெரிகிறது. ப்ருஹத்ரதனின் வழியாக ஏற்பட்ட பார்ஹத்ரத வம்சத்தில் ஆரம்பித்துக் கலியில் மகதத்தை ஆண்ட வம்சங்கள் ஒவ்வொன்றிலும் வந்த ராஜாக்கள், அவர்களுடைய ஆட்சிக் காலங்கள் ஆகியவற்றைப் புராணம் முதலியவற்றிலிருந்து நிர்ணயிக்கும்போது, 74-வது ராஜவாக ஆந்த்ர வம்சத்து ராஜா ஒருவன் இருந்தானென்பது ஸரியாகவே இருக்கிறது என்கிறார்கள். ஆசார்யாளின் காலமான கலி வருஷம் 2600 வாக்கில் இவன் இருந்திருப்பதாகச் சொல்வதும் பொருத்தமாக இருக்கிறது2. எப்படியென்றால், சராசரியில் ஒரு ராஜா 35 வருஷ அளவுக்குப் பட்டத்திலிருந்தால் 74 x 35 என்பது 2600-க்கு ஸரியாகத்தானிருக்கும். சராசரி 35 வருஷமென்பது யதார்த்தமானதே என்று சொல்கிறார்கள். ஆனால் ஆசார்யாள் இவன் காலத்திலிருந்தாரென்பது நன்றாக ஒப்புக்கொள்ளும்படி இருக்கிறது.

இவ்வளவுக்கும் மேல், எதிர்பார்க்காததாக இன்னொரு ‘டிஸ்கவரி’யும் செய்திருக்கிறார்கள். என்னவென்றால் ‘வாயு புராண’த்தில் “தத: ஸம்வத்ஸரம் பூர்ணோ ஹாலோ ராஜா பவிஷ்யதி என்று வருகிறதாம். “அப்புறம் பூர்ணன் என்கிற ஹாலன் ராஜா ஆவான்” என்று அர்த்தம். அதாவது ஹாலனுக்கே பூர்ணன் என்று ஒரு பேர் இருந்திருப்பதாகத் தெரிகிறது. ப்ராம்மணர்கள் ‘சர்மன்’ போட்டுக்கொள்வது போல, ஸகல க்ஷத்ரியர்களும் தங்கள் பேரோடு ‘வர்மன்’ என்று சேர்த்துக் கொள்ளவார்கள். தக்ஷிணத்திலேயே பல்லவர்களில் மஹேந்த்ரவர்மன் பாண்டியர்களில் ஜடாவர்மன் என்றெல்லாம் பார்க்கிறோமல்லவா? அப்படி ‘பூர்ணன்’ என்ற பேருக்கு ‘வர்மன்’ சேர்ந்தால்? பூர்ண வர்மன்.

‘பூர்ணவர்மனுக்கு முன்னால் மலடிமகன் ஆண்டான்’ எனற ஆசார்யாள் ஸுத்ர பாஷ்யத்தில் சொல்லியிருப்பதை வைத்து, “அவன் யார்? அவனா இவனா?” என்று நவீனவழி ஆராய்ச்சிக்காரர்கள் தோண்டித் துருவியதாகப் பார்த்தோமல்லவா? “அந்த எவனுமே இல்லை. நம்முடைய பழைய புஸ்தகங்களில் சொல்லியிருக்கும் ஆந்த்ர ராஜனான ஹாலன் தான் அந்தப் பூர்ணவர்மன். எங்கள் கணக்குப்படி இவனும் கி.மு. 500; ஆசார்யாளும் அதே ‘பீரியட்’. ஒன்றுக்கொன்று கச்சிதமாக ஒத்துப் போகிறது” என்று ஒரு ‘டிஸ்கவரி’ நம்முடைய வழி வழி வந்த அபிப்ராயங்களை அநுஸரிப்பவர்கள் செய்திருக்கிறார்கள்.


1 ச்லோகம் 21.

2 கலியுகத்தில் முதலில் பார்ஹத்ரத வம்சத்தில் 22 மன்னர்கள். 23-லிருந்து 27 அடங்க ஐவர் ப்ரத்யோத வம்சம். 28-லிருந்து 37 அடங்கப் பதின்மர் சிகநாக வம்சம். 38-39 ஆகிய இருவர் நந்த வம்சம். 40-லிருந்து 51 அடங்கப் பள்ளிருவர் மௌர்யர்கள், 52-லிருந்து 61 அடங்கப் பதின்மர் சுங்கர்கள். 62-லிருந்து 65 அடங்க நால்வர் காண்வ வம்சம். 66-லிருந்து 97 அடங்க முப்பத்திருவர் ஆந்திரர் என்படும் சாதவாஹனர். 74-வது மன்னன் ஆந்த்ர வம்சமென்றே ஆகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 24. முக்கிய ஆதாரம்:சங்கர மடங்களிடையே ஒரே கருத்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  26. பௌத்த-ஜைன நூல்களின் அத்தாட்சி
Next