ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – ஆசார்ய பாஷ்யத்தில் பௌத்தக் கொள்கைகள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆசார்ய பாஷ்யத்தில் பௌத்தக் கொள்கைகள் : திங்நாகருடைய வைபாஸிகக் கொள்கைகளை ஆசார்யாள் பாஷ்யங்களில் கண்டனம் பண்ணியிருக்கிறார். அந்தக் கொள்கைகளிலேயே சிலதை எடுத்துக்கொண்டு, சிலதை மாற்றி ஸெளத்ராந்திகம் என்று ஒரு பௌத்தப் பிரிவுண்டு. யோகாசாரம் என்றும் விஞ்ஞானவாதம் என்றும் மூன்றாவதாக இன்னொரு பிரிவு உண்டு. கி.பி. நாலாவது நூற்றாண்டுக்காரர்களாகக் கருதப்படும் அஸங்கரும் வஸுபந்துவும் உருவாக்கியது. இதையும் ஆசார்யாள் கண்டித்திருக்கிறார். மாத்யமிகம் அல்லது சூன்யவாதம் என்பதாக ஒரு நாலாவது பிரிவும் உண்டு. முக்யமாக அதை வளர்த்துக் கொடுத்தவர் நாகார்ஜுனர். அவரை கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்காரராகத் தீர்மானித்திருக்கிறார்கள். இந்த ஸித்தாந்தத்தையும் ஆசார்யாள் கண்டித்திருக்கிறார்.

‘நாகார்ஜுனர், அஸங்கர், திங்நாகர் ஆகியவர்கள் முறையே கி.பி. இரண்டாம், நாலாம், ஆறாம் நூற்றாண்டுகளில் வந்தவர்களாக இருக்க இவர்களுடைய கொள்கைகளை க்ரிடிஸைஸ் செய்த சங்கரர் எப்படி கி.மு.வாக இருக்க முடியும்?’ என்று கேட்கிறார்கள்.

கனிஷ்கரின் காலத்தில் பௌத்தம் மஹாயானம், ஹீனயானம் என்று இரண்டாகப் பிளந்தது. ஆசார்யாளின் நேர் சிஷ்யரான பத்மபாதர் (ஆசார்யாளின் ஸூத்ர பாஷ்யத்திற்குத் தாம் எழுதிய விளக்கமாகிய) ‘பஞ்ச பாதிகா’வில் மஹாயானத்தைப் பேர் குறிப்பிட்டுக் கண்டனம் செய்திருக்கிறார். கனிஷ்கரை அதிக பக்ஷமாகப் பின்னேகொண்டு போனாலும் கி.மு. முதல் நூற்றாண்டுக்குப் பூர்வ காலத்தில் தாங்களால் சேர்க்க முடியவில்லை என்று இன்னொரு காரணம் சொல்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 2. குமாரிலர் காட்டும் காளிதாஸனின் மேற்கோள் (மனஸ்சாட்சி ப்ரமாணம்)
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  4. ஆசார்ய ஸ்தோத்ரங்களில் A.H. குறிப்புக்கள்
Next