ஸூத்ர பாஷ்யத்தில் ஓரிடத்தில்1 ஸத்துக்கும் அஸத்துக்கும் (இருக்கிற வஸ்துவுக்கும் இல்லாத வஸ்துவுக்கும்) ஸம்பந்தம் காட்டுவது அஸம்பாவிதம் என்று ஆசார்யாள் சொல்லிக்கொண்டுபோகும் போது, “பூர்ணவர்மனுக்குப் பட்டாபிஷேகம் ஆவதற்கு முன்னால் ஒரு மலடியின் பிள்ளை ராஜாவாக இருந்தான்” என்று (வாஸ்தவமாக உள்ள பூர்ணவர்மனை ஒருகாலும் இருக்க முடியாத மலடி மகனோடு ஸம்பந்தப்படுத்திச்) சொல்வது எத்தனை அஸம்பாவிதம் என்று உவமை காட்டியிருக்கிறார். அவர் குறிப்பிடும் ராஜாவான பூர்ணவர்மன் யார்? அவனுடைய காலத்தைத் கண்டு பிடித்துவிட்டால் அவனுக்கு ஸமகாலத்தவராகவோ பின் காலத்தராகவோ இருந்திருக்கக்கூடிய ஆசார்யாளின் காலத்தைக் கண்டுபிடித்து விடலாம், என்று ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார்கள்.
பூர்ணவர்மன் என்று பேருள்ள இரண்டு ராஜாக்களை இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
Far East -ல் (தூரக் கிழக்கு நாடுகளில்) பாரத கலாசாரம் வெகு நாட்களுக்கு முந்தியே பரவியிருந்ததென்று தெரிந்திருக்கலாம். அவற்றில் ‘யாவகம்’ எனப்படும் ஜாவாவில் கி.பி. நாலாம் நூற்றாண்டில் ஒரு பூர்ணவர்மன் ஆட்சி செய்திருக்கிறான். அங்கே அவனுடைய பாதத்தை ஒரு பாறாங்கல்லில் விஷ்ணு பாதம் மாதிரிச் செதுக்கியிருக்கிறது. அதிலேயே அவனுடைய சிலா சாஸனமும் பொறித்திருக்கிறது. விஷ்ணுவுக்கு ஸமானமானவன் என்று அவனை வர்ணித்திருக்கிறது.
‘ஆனால் ஜாவா தேசத்துப் பூர்ணவர்மனை ஆசார்யாள் எதற்கு உதாஹரணம் காட்டியிருக்கப் போகிறார்? அவருடைய ஸூத்ர பாஷ்யத்தைப் படிக்கக்கூடிய நம் தேசத்து வித்வத் ஸமூஹத்துக்குத் தெரிந்த ஸ்வதேச ராஜா எவனையாவதுதான் அவர் குறிப்பிட்டிருக்கணும்’ என்று சொல்லி ரிஸர்ச்காரர்கள் இந்தப் பூர்ணவர்மனைத் தள்ளிவிடுகிறார்கள்.
அவர்கள் கண்டு பிடித்துள்ள இன்னொரு பூர்ணவர்மன்தான் நம் தேசத்தவன். மகத தேசத்தின் மேற்குப் பகுதியில் ஆட்சி செலுத்தியவன். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முன்பாதியில் இந்தியாவில் 16 வருஷம் சுற்று ப்ரயாணம் செய்த ஹுவான் த்ஸாங் அந்த ஸமயத்தில் பூர்ணவர்மன் மகத நாட்டரசனாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். ‘அதனால் ஆசார்யாள் refer பண்ணுவது இவனாகவே இருக்கவேண்டும். அவர் பாஷ்யம் எழுதியது காசியில். மேற்கு மகதம் அதன் கிட்டே வந்து விடுகிறது. காசியோடு ரொம்பவும் ஸம்பந்தப்பட்டது கயை. அங்கே (கயையில்) பௌத்த விரோதியான சசாங்கன் என்ற ராஜா வெட்டிவிட்ட போதி வ்ருக்ஷத்தைப் பூர்ணவர்மன் மறுபடி நட்டு, போஷித்து, துளிக்கப் பண்ணியதாகத் தெரிகிறது. அதனால் பாஷ்யத்தில் அவனையே சொல்லியிருக்கிறாரென்று வைத்துக்கொள்ளலாம்’ என்கிறார்கள். அதாவது ஆசார்யாள் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு அப்புறம்தான் வந்தவர் என்பதற்கு இதுவும் எவிடென்ஸ் என்கிறார்கள்.
இரண்டு ராஜாக்களில் இன்னொருத்தன் யாரென்றால்…
‘Far East ராஜாவைப்பற்றி நம்மூரில் ஆசார்யாள் பாஷ்யம் எழுதி ப்ரசாரம் பண்ணும்போது குறிப்பிடுவதற்கில்லை என்றாலும், அந்த தூர தேசத்தில் நம்முடைய வைதிக மதமும் பௌத்த மதமும் பரவியதால் அங்கே நம்முடைய தெய்வங்களுக்குக் கோவில், பௌத்த விஹாரங்கள் முதலியன இருக்கின்றன; அகஸ்த்யர், புத்தர், போதிஸத்வர் முதலியவர்களுக்கு விக்ரஹங்கள், அவர்களைப் பற்றி சாஸனக்குறிப்புகள் ஆகியவையும் இருக்கின்றன.
இப்படி இண்டியன் இன்ஃப்ளூயென்ஸைக் காட்டுவதாக அங்கே ஆசார்யாளைப் பற்றியும் குறிப்புக் கிடைக்கக் கூடியது ஸாத்யமே. ஆசார்யாள் அந்த தேச ஸமாசாரத்தை பாஷ்ய புஸ்தகத்தில் குறிப்பிடுவதற்கில்லை என்பது மாதிரி அந்த தேசத்தினர் ஆசார்யாளைக் குறிப்பிடமாட்டார்கள் என்று சொல்லமுடியாது’ என்ற அடிப்படையில் இந்த இன்னொரு ராஜாவைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
காம்போஜம் என்று சொல்லப்படும் கம்போடியாவில், ச்லோகரூபமான ஒரு ஸம்ஸ்க்ருத சாஸனம் அகப்பட்டிருக்கிறது. அது இந்த்ரவர்மன் என்ற காம்போஜ ராஜாவின் சாஸனம். அதில் அவனுடைய குருவின் பெயர் சிவஸோமன் என்று சொல்லி, அந்த சிவஸோமன் “பகவான் சங்கர”ரிடமிருந்து சாஸ்த்ரங்களைக் கற்றுக்கொண்டாரென்று சொல்லியிருக்கிறது: யேநாதீதாநி சாஸ்த்ராணி பகவத்-சங்கராஹ் வயாத் | அதற்கப்புறம் அந்த ‘பகவத் சங்கர’ரின் தனிப் பெருமையை ரொம்பவும் கொண்டாடி ச்லோகத்தை முடித்திருக்கிறது. அதாவது அவருடைய பாதமாகிற தாமரையை மிச்சம் மீதியில்லாமல் அத்தனை வித்வத் ச்ரேஷ்டர்களின் சிரஸாகிற வண்டு வரிசைகளும் மொய்த்துக்கொண்டிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறது. அறிஞருலகம் முழுவதும் அவருடைய பாதத்தில் தலைவைத்து வணங்குவதாக அர்த்தம்: நிச்சேஷ-ஸூரி மூர்த்தாலி-மாலாலீடாங்க்ரி-பங்கஜாத் .
இந்த பகவான் சங்கரர் ஆசார்யாளாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். அந்தப் பெயரில் இப்படி வித்வத் ஸமூஹம் முழுவதாலும் வணங்கப்பட்டவராகக் கம்போடியாவில் எவருமில்லை; இந்தியாவிலும் ஸ்ரீ சங்கர பகவத்பாதாளைத் தவிர எவருமில்லை என்று எடுத்துக்காட்டுகிறார்கள். “சங்கர பகவத:” என்று அவருடைய புஸ்தக Colophonகளிலும் இருக்கிறதென்றேனல்லவா? அதற்கு இது (‘பகவத் சங்கர’ என்பது) அப்படியே ஒத்துப்போவதைக் காட்டுகிறார்கள்.
இந்த்ரவர்மனின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பின்பாதி என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது2. அவனுடைய குரு சிவஸோமன் அவனைவிட முப்பது, நாற்பது வருஷம் பெரியவராயிருக்கலாம். அவர் ஆசார்யாளின் நேர் சிஷ்யராயிருந்து அவரிடமிருந்து எல்லா சாஸ்த்ரமும் அப்யாஸம் செய்திருக்கிறாரென்றால் ஆசார்யாள் காலம் கி.பி.. 788-820 என்று கருத்து ரொம்பவும் ஸரியானதே என்று தோன்றுகிறது-என்கிறார்கள்.
1 II.1.18
2 கி.பி. 878-87 அவனது ஆட்சிக்காலம் என்பது வரையறை.