ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – நமது சரித்ர ஆதார நூல்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஜெனரலாகக் கொஞ்சம் சொல்கிறேன். நம் ராஜ வம்சங்களின் காலங்களைப் புராணங்களில் கொடுத்திருக்கிறது. அது தவிர ஸுமார் ஆயிரம் வருஷம் முந்தி கல்ஹணர் என்ற கவி காஷ்மீர ராஜ வம்சத்தைப்பற்றி ஆதியோடந்தம் விசாரித்து, கர்ண பரம்பரையாக வந்த தகவலையெல்லாமும் சேர்த்து “ராஜ தரங்கிணி” என்று புஸ்தகம் எழுதியிருக்கிறார். (‘கர்ண பரம்பரை’ என்றவுடனேயே ‘கதை’ என்று தூக்கிப் போட்டு விடக்கூடாது. ஆதாரமில்லாமல் இப்படி வழிவழி வந்திருக்குமா என்று ஆராய்ந்து பார்த்து, மற்ற ஆதாரங்களோடு ஸரி பார்த்தால் அதில் ஏற்கத்தக்கதாக நிறைய இருக்கும்.) ஒரு ராஜா என்றால் பிற ராஜாக்களோடு யுத்தம் செய்வது, விவாஹ ஸம்பந்தம் வைத்துக்கொள்வது என்றெல்லாம் வரத்தானே வரும்? அதனால் காஷ்மீர வம்சாவளியை சொல்லிக்கொண்டு போகும் ‘தரங்கிணி’ அந்தந்தக் காலங்களில் இந்தியாவில் இருந்து வந்து இதர ராஜாக்களையும் பற்றித் தெரிவித்து விடுகிறது. அநேக இடங்களில் இதில் இருப்பதும் புராணங்களில் சொல்லியிருப்பதும் ஒத்துப்போய்விடுகின்றன.

நேபாளத்தில் ஆதியிலிருந்து ஆட்சி நடத்தியவர்களைப் பற்றி வரிசைவாரியாகக் காலம் சொல்லி ராஜ வம்சாவளி என்று இருக்கிறது. ‘Chronicle of Nepal’ என்று இங்கிலீஷில் சொல்கிறார்கள். பண்டிட் பகவான் லால் இந்த்ராஜி என்பவர் ஒரு புத்த பிக்ஷுவிடமிருந்து இந்த வம்சாவளியைப் பெற்று ப்ரகாசப்படுத்தியிருக்கிறார். மஹாபாரத காலத்திலிருந்து அதில் ராஜாக்களின் பெயர்களும் காலங்களும் கொடுத்திருக்கிறது. அதிலிருந்தும் நம் சரித்ர புருஷர்களின் காலத்தைப்பற்றி அறிய முடிகிறது. புராணம் முதலான மற்ற source-களிலிருந்து நாம் பெறும் தகவல்களில் பல இதோடு ஆச்சர்யமாக ஒத்துப் போகிறது.

லங்கையில் ‘மஹாவம்சம்’ என்று ஒரு புஸ்தகம். குறைந்தபக்ஷம் 1500 வருஷத்துக்கு முற்பட்டது. அந்த தேசத்தில் பௌத்த மதத்தின் வரலாறு என்ன என்று அது தெரிவிக்கிறது. ஹிந்து புஸ்தகங்களைவிட பௌத்தப் புஸ்தகங்களுக்கு ஸத்யத்வம் ஜாஸ்தி என்று காட்டுவது ரிஸர்ச்காரர்களின் வழக்கம். அதனால் அவர்களும் மஹா வம்சத்தைப் பெரும்பாலும் நம்பலாமென்கிறார்கள்.

ராஜாவின் ஆதரவு அல்லது அநாதரவிலேயே மதவளர்ச்சி அல்லது நலிவு ஏற்பட்டிருப்பதால் ‘மஹா வம்சம்’ ராஜ வம்சங்களைப் பற்றியும் தெரிவித்துவிடுகிறது. ஆதியில் இந்தியாவினாலேயே லங்கையின் ஸமய கலாசாரம், அரசியல் வாழ்வு எல்லாம் ஏற்பட்டு, அப்புறமும் சண்டை — ஸ்நேஹிதம் என்று இரண்டு விதத்திலும் இந்த இரண்டு நாடுகளும் ஸம்பந்தப்பட்டிருந்திருப்பதால் இதிலேயும் நம்முடைய தேசத்தவர்களைப் பற்றிய கால விவரங்கள் வருகின்றன.

புராணங்கள், வடக்கே ஒரு கோடியில் காஷ்மீரத்தின் ராஜ தரங்கிணி, இன்னொரு கோடியில் நேபாளி வம்சாவளி, தென்கோடியில் லங்கையின் மஹாவம்சம் என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு அவை எங்கே ஒத்துப் போகின்றன என்று பார்த்து, அப்படிப்பட்டவற்றையாவது நாமும் ஒப்புக்கொள்வது என்று வந்தால் நன்றாயிருக்கும். இப்படிப் பல இருக்கவே செய்கின்றன.

நாம் சொல்வது History-யே இல்லை. வெறும் story-தான் என்று சொல்பவர்களும் நிஜமான History-ஐத்தான் சொல்லியிருப்பார்கள் என்று அப்படியே நம்பாமல் இதையும் அதையும் சேர்த்து அலசிப் பார்க்கலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 7. கலியுகத்தில் நமது காலக் கணக்குகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  9. மையக் கேள்வி:மெகஸ்தனிஸ் சொல்லும் ஸன்ட்ரகோட்டஸ் யார்?
Next