துறவியானார்! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

கிட்டே வந்துவிட்ட நதியில் ஒருநாள் தாயாருக்கு ஸ்நானம் பண்ணி வைத்தார். அப்புறம் தாமும் ஸ்நானம் பணண இறங்கினார்.

அப்போது அவர் காலை ஒரு முதலை பிடித்துக் கொண்டு விட்டது. (இப்போதுங்கூட அந்தத் துறைக்கு ‘முதலைக் கடவு’ என்றே பேர் இருக்கிறது.)

கரையேறிருந்த தாயார் பரிதவித்துப் போய்விட்டாள். பர்த்தா காலமாகி விட்டார், ஏக புத்ரனுக்கு இப்படி ஆபத்து என்றால் ஒரு ஸ்த்ரீக்கு எப்படியிருக்கும்?

ஆசார்யாளானால் ‘இதுதான் நாம் எதிர்பார்த்த ஸமயம்’ என்று அவளைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். “முதலை வாயிலிருந்து மீளுவது நடக்காத காரியம். இது ஸஹஜமான சாவில்லை. துர்மரணம். அபம்ருத்யுவுக்கு ஆளானவர்களின் ஆவி படுகிற கஷ்டம் எனக்கு உண்டாகும். உனக்கும் புத்ரகர்மாவினால் ஏற்படும் ஸத்கதி கிடைக்காது. இப்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது – இதிலிருந்து மீளுவதற்கு வழி ஏற்பட்டாலும் ஏற்படும்படியாக ஒன்றுதோன்றுகிறது. உனக்கும் அது ஸம்மதமானால் அப்படிப் பண்ணுகிறேன். அப்போது எனக்கும் அபம்ருத்யு தோஷம் வராது. உனக்கும் ஸத்கதி கிடைக்கும். என்னவென்றால்…

“இப்போது நான் ஸந்நியாஸாச்ரமம் வாங்கிக் கொண்டால் வேறே ஜன்மா வந்து விட்டது போலாகும். அப்போது இந்த ஜன்மாவுக்கு ப்ராரப்தமாக ஏற்பட்ட மரணமும் விலகிவிடலாம். காலை இழுக்கும் முதலை விட்டுவிடலாம். ஒருத்தன் ஸந்நியாஸியானால் அவனுடைய இருபத்தோரு முன் தலைமுறைக்காரர்களுக்கு ஸத்கதி கிடைத்து விடும். அதனால் உனக்கும் அப்படிக் கிடைக்கும்.

“முதலை விடாமல் மரணமே ஏற்பட்டாலும் ஸந்நியாஸியாகிவிட்டால் அது துர்மரணம் என்று ஆகி ஆவியாய் திரியப் பண்ணாது.

“ஆகையால் எப்படிப் பார்த்தாலும் அதுதான் வழியென்று தோன்றுகிறது”.

“ஜலத்திலிருந்து கொண்டுதான் ப்ரைஷ மந்த்ரம் (துறவற தீக்ஷை மேற்கொள்வதற்கான மந்த்ரம்) சொல்லி, மனஸினால் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். தற்செயலாக நான் ஜல மத்தியிலேயே இருக்கிறேன்”.

“இந்த ஸந்தர்பத்தை விட்டுவிட்டால் முதலை முழுங்குவது தவிர வேறே என்னவும் நடப்பதற்கில்லை. எனக்கும் துர்மரணம், உனக்கும் ஸத்கதி இல்லை என்றுதான் முடிந்துவிடும். அதனால் இதுதான் வழியென்று அபிப்ராயப்படுகிறேன். ஆனாலும் உன் அநுமதி இல்லாமல் ஸந்நியாஸம் வாங்கிக்கொள்வதற்கு எனக்கு உரிமையில்லை. அதனால் நீ தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்” என்று சொன்னார்.

‘எட்டு வயஸுக் குழந்தையை ஸந்நியாஸியாகப் போ என்று சொல்வதா என்று பார்த்தால், இல்லாவிட்டால் முதலை அல்லவா நிச்சயமாக இழுத்துக்கொண்டு போய்விடும்?’ என்று அந்த அம்மாள் குழம்பினாள். ‘தன்னோடு கூட வாஸம் பண்ணாவிட்டாலும் உயிரை வைத்துக்கொண்டு [“உசிரை வெச்சுண்டு” என்று ஒரு தாயின் பரிவுடன் கூறுகிறார்கள்] எங்கேயாவது ஸந்நியாஸியாக இருக்கட்டும்; கண்ணாலேயாவது எப்போதாவது பார்க்கலாம்; பார்க்காவிட்டால்கூட ஸரி, எங்கேயாவது குழந்தை இருந்து கொண்டிருந்தால் போதும்’ என்று நினைத்தாள்.

ஆனாலும் ‘ஸந்நியாஸம் வாங்கிக்கோ!’ என்று சொல்ல நா வரவில்லை. “உனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படியே பண்ணிக்கொள்ளு” என்று சொன்னாள்.

இப்படிச் சொல்வதா, அப்படிச் சொல்வதா என்று குழப்பமாக, dilemma என்கிறார்களே, அப்படி அந்த அம்மாளுக்கு ஏற்பட்டது இது இரண்டாம் தடவை. இதற்கு முந்தி, முதல் ‘டைலம்மா’ ஆசார்யாளுடைய பிறப்பைப் பற்றி ஏற்பட்டது. “மந்தர்களாக, ஆனால் தீர்க்காயுஸோடு நூறு பிள்ளைகளா? மஹா மேதையாக, ஆனால் அல்பாயுஸாக ஒரே பிள்ளையா? எது வேண்டும்?” என்று ஸ்வாமி கேட்டது முதல் ‘டைலம்மா’! அப்போது என்ன சொன்னாள்? உங்கள் இஷ்டப்படியே பண்ணிக்கோங்கோ!” என்றுதானே சொன்னாள்? இப்போது அவருடைய இறப்பைக் குறித்ததாக இரண்டாவது ‘டைலம்மா’ ஏற்பட்டபோதும் அதே பதிலைச் சொன்னாள்!

‘ஒருவேளை அப்போது ஸ்வாமி சொன்ன அல்பாயுஸ் காலம் இப்போதுதான் முடிவதாயிருக்குமோ என்னவோ? இப்போது நாம் எதையாவது சொல்லிவிடாமல், அவருக்கே விட்டுவிட்டால் மனஸை மாற்றிக்கொண்டு ஆயுஸை நீடித்தாலும் நீடிக்கக்கூடும்’ என்று நினைத்துச் சொன்னாள்.

நீ என்ன செய்தாலும் ஸரி” என்று அவள் சொல்லிவிட்டதால் தாயாரின் அநுமதி இல்லாமலில்லை என்று ஆகிவிட்டது! இதுதானே அவருக்கு வேண்டியிருந்தது? அதனால் இது அர்த்தாங்கீகாரம்தான் (முழுச் சம்மதமாயில்லாத பாதிச் சம்மதம்தான்) என்று எடுத்துக்கொள்ளாமல், அநுமதி கிடைத்துவிட்டதாகவே வைத்துக்கொண்டு, ப்ரைஷோச்சாரணம் பண்ணி ஸந்நியாஸாச்ரமம் வாங்கிக்கொண்டு விட்டார்.

‘தன்னால் ஒரு ப்ராணிக்கும் ஒருவித பயமும் உண்டாகப்படாது’ என்பதாகப் பரம ப்ரேமையைத் தெரிவிப்பது அந்த (ப்ரைஷ) மந்த்ரம். ஸந்நியாஸி என்றால் அவனைப் பார்த்து ஒரு ப்ராணி பயப்படக் கூடாது. ஜீவகுலம் முழுதற்கும் அவனைப் பார்க்கிறபோதே ஆனந்தம் ஏற்பட வேண்டும். க்ருஹஸ்தன் அவனுடைய தர்மத்தை உத்தேசித்துப் பல பேரை வேலை வாங்குவதில் விரட்டியடிக்க வேண்டியும் வரும், தண்டிக்கும்படியும் வரும். ‘ஐயோ வந்துட்டானா?’ என்று இரண்டு பேர் அவனிடம் பயப்பட நேரலாம். அவன் தான்யம் கொண்டு வருகிறான், காய்கறிகொண்டு வருகிறானென்றால் அப்பபோது அந்தப் பயிர், ‘என்னைப் பிடுங்கவந்து விட்டானே?’ என்று பயப்படும்; செடி, ‘என்னைக் கிள்ளி (கறிகாய்) எடுத்துக் கொண்டுபோக வருகிறானே!’ என்று நடுங்கும். ஸந்நியாஸிக்கோ இந்த மாதிரி ஹிம்ஸைக் கார்யம் எதுவுமே விதிக்கப்படவில்லை. யாராவது பிக்ஷைபண்ணிப் போட்டால்தான் அவன் ஆஹாரம் பண்ணலாமேதவிர, தானாக ஒரு இலையைகூடப் பறிக்கப்படாது என்று வைத்திருக்கிறது. யாருமில்லாத வனத்திலிருந்தால்கூட, அதுவாகவே உதிர்ந்து விழுந்த பழம், சருகு முதலியவற்றைத்தான் அவன் எடுத்துக் கொள்ளலாம். ஜைன – பௌத்தங்கள் சொல்லும் பூர்ண அஹிம்ஸை நடைமுறை உலகத்தில் இவனுக்குத்தான் ஸாத்யம் என்று நம் தர்ம சாஸ்த்ரத்தில் இப்படி ஸந்நியாஸ தர்மத்தை வைத்திருக்கிறது.

ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதில் இரண்டு மூன்று விதம் இருக்கிறது. ஸந்நியாஸி ஆகவேண்டுமென்று ஒருத்தனுக்கு இருந்தால் சாஸ்த்ர ப்ரகாரம் detailed-ஆக ச்ராத்தாதிகள், ஹோமாதிகள் எல்லாம் பண்ணி குரு முகமாக ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதுதான் முறை. க்ரம ஸந்நியாஸம் என்பது. நோய் வாய்ப்பட்டு மரணத்தை எதிர்பார்த்திருக்கும்போது விரக்தி, வைராக்யம் ஏற்பட்டு ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதற்கு ‘ஆதுர ஸந்நியாஸம்’ என்று பேர். பலஹீன ஸ்திதியிலுள்ள இவன் விஸ்தாரமாக ஹோமம், ச்ராத்தம் என்று பண்ண முடியுமா? அதனால் சுருக்கி ஸுலபமாக்கி தீக்ஷா க்ரமத்தைக் கொடுத்திருக்கிறது. இதையும்விட இன்னொரு விதம், ‘அத்யாதுர (அதி ஆதுர) ஸந்நியாஸம்’ என்று இருக்கிறது. ‘ஆபத் ஸந்நியாஸம்’ என்று பொதுவாகச் சொல்வது அதுதான். வ்யாதி முற்றி ப்ராணாபாயமான நிலையே ஏற்படும்போதோ, அல்லது ஏதாவது பெரிய விபத்து ஏற்பட்டு சீக்ரமே மரணம் ஸம்பவிக்கலாமென்று இருக்கும்போதோ சட்டென்று ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு விடுவதுதான் ஆபத் ஸந்நியாஸம். இந்த நிலையில் ப்ரைஷோச்சாரணம் மட்டுமே போதும். (குரு முகமாக இன்றித்) தானே அதை ஸ்வீகரித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறது.

ஆசார்யாள் இப்போது ஸந்நியாஸியானது அப்படித்தான். ஆனாலும் கொஞ்சம் யதோக்த ஸந்நியாஸம் மாதிரியே ஜல மத்தியில் இருந்துகொண்டு ஆச்ரம ஸ்வீகாரம் செய்து கொள்ளும்படியாக அவருக்கு வாய்த்தது!

உடனே முதலை அவர் காலை விட்டுவிட்டது!

ஆகாசத்தில், ரதத்தில் ஒரு கந்தர்வன் தென்பட்டான்.

முதலை அப்படி ஆனது.

பதினெட்டு தினுஸான தேவ ஜாதிகளில் கந்தர்வர் ஒன்று. கிந்நரர், கிம்புருஷர் முதலானவர்களைப் போல இவர்களும் தேவ ஜாதி. மநுஷ்ய ஜாதியைவிட ஜாஸ்தி அறிவுச் சக்தி, ஸூக்ஷ்மமான வ்யாபக சக்தி எல்லாம் உள்ள ஜாதிகள். நமக்கு தெரியாததெல்லாம் அவர்களுக்குத் தெரியும். நம் கண், காது முதலானவை சில விதமான லைட் வேவ், ஸெளண்ட் வேவ்களையே பிடிக்க முடிவதால் இதற்கு மேலே ஒன்றும் கிடையாது என்று எப்படிச் சொல்லலாம்? நம் காதுக்கு நேராகக் கேட்காததை க்ரஹித்து வந்து கேட்கப் பண்ண இப்போது ரேடியோ வந்திருக்கவில்லையா?1 வெளியிலே இப்படி ஒரு கருவியாயில்லாமல் ஈச்வரன் ஒரு சரீரத்திலேயே கரணமாக அந்த சக்தியையும் வைத்துச் சில ஜீவ ஜாதிகளைப் படைக்கிறானென்றால், அதெல்லாம் முடியாது என்று நாம் ஆக்ஷேபிக்கலாமா? ஸ்வாபாவிமாக இப்படி அவர்கள் சக்தி பெற்றிருப்பது மட்டுமில்லை. யோக சாஸ்த்ரங்களில் சிலதில் இருப்பதை ஸாதனை பண்ணி ஸித்தி பெற்றால் மநுஷ்ய ஜாதிக்கும் அந்த சக்தி வரும். நம் கண்ணுக்குத் தெரியாததைக் காட்டும் ரேடியோலைட் மாதிரி நமக்கே வாய்க்கும்! யோக ஸித்தி பெற்றவர்களுக்கு கந்தர்வாதிகள் ப்ரத்யக்ஷமாகவே தெரிவார்கள். நாம் சாஸ்த்ர விஷயமென்றாலே ஒன்றும் ஆலோசித்துப் பார்க்காமல் குருட்டு நம்பிக்கை, ஸூபர்ஸ்டிஷன் என்று ஒரே வார்த்தையில் தள்ளி விடுகிறோம்!

முதலை கந்தவர்னாயிற்று. அது எப்படி என்பதற்கும் கதை சொல்லியிருக்கிறது.

கந்தர்வ ஜாதியினர் உத்ஸாஹ ஜீவிகள். குடி, பாட்டு, ஆட்டம் என்று இருப்பார்கள். இந்த கந்தர்வனும் அப்படி இருந்தவன்தான்.

அவனே தன் கதையை ஆசார்யாளிடம் சொல்லிக் கொண்டான்– [சிரித்து] ஆடோ – பயாக்ரஃபி!

“நான் பாட்டுக்கு ஸதா குடித்துக்கொண்டு, எங்கள் ஸ்த்ரீகளோடு ஆடிப் பாடிக்கொண்டு மதோன்மத்தமாகக் கிடப்பது வழக்கம். ஒருநாள் துர்வாஸ மஹர்ஷி வருகிற வழியிலே இப்படிக் கிடந்தேன். அவரோ இதற்கெல்லாம் நேர் விரோதம். நெருப்பாக இருப்பவர். சீலத்தில் மாத்ரமில்லை, கோபத்திலும் நெருப்பானவர். அவர் வருவதையும் லக்ஷ்யம் பண்ணாமல் முதலை கிடக்கிற மாதிரி ஜல க்ரீடை பண்ணிக்கொண்டு நான் கிடந்ததைப் பார்த்ததும் அவருக்கு மஹா கோபம் வந்துவிட்டது.

“முதலையாகப் போகக் கடவாய்!” என்று சபித்து விட்டார்.

உடனே அவர் காலில் விழுந்து அபசாரத்துக்காகக் கெஞ்சி மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

“அவர் பரமசிவாம்சம் அல்லவா? அதனாலே ருத்ர கோபமும் வரும்; அது மாதிரியே, அந்தப் பரமசிவனை எப்படி ‘ஆசுதோஷி’2 என்று சொல்லியிருக்கிறதோ அப்படியே இவரையும் ரொம்ப எளிதாக ப்ரீதிப்படுத்தி விடவும் முடியும். இப்போது நான் கெஞ்சியவுடன் இரக்கம் கொண்டுவிட்டார்.

“அதனால், ‘ஸரி, சாபத்தை அப்படியே வாபஸ் வாங்கி கொள்ள முடியாதாகையால் இப்போதைக்கு முதலை ஜன்மா வரட்டும். ஆனால் பரமேச்வரனுடைய காலடியைப் போய்ப் பிடித்துக் கொள்ளு. விமோசனம் கிடைத்துவிடும்’ என்றார்.”

புராணங்களில் அநேகக் கதைகள் இப்படி வருவது தான் ஒரு கதாபாத்ரம் மதோன்மத்தமாயிருந்து அபசாரம் பண்ணுவது, தபஸ்வி ஒருத்தர் சாபம் கொடுப்பது, உடனே இந்தப் பாத்ரம் கெஞ்சுவது, அவர் கருணையோடு விமோசனம் சொல்வது என்று. ஸாதாரணமான ஒரு ஜீவனுடைய லக்ஷணம் தன்னிஷ்டப்படித் திமிராக இருப்பது; அப்படி இருப்பதில் கஷ்டம் வந்தால் பல்லைக் காட்டுவது – ‘மிஞ்சினால் கெஞ்சுவது’ என்பதுதானென்றும்; தபஸின் லக்ஷணமும் தபஸ்வியின் லக்ஷணமும் என்னென்ன என்றும் இந்தக் கதைகள் காட்டுகின்றன. தபஸின் லக்ஷணம் சக்தி. அதனால்தான் ஒரு தபஸ்வி ‘கல்லாகப்போ, முதலையாகப் போ’ என்றால் தேவர்களுங்கூட அப்படியாகி விடுகிறார்கள். தபஸ்வியின் லக்ஷணம் என்ன? அந்த சக்தியை எப்படி உரியபடி ‘ஹார்னெஸ்’ செய்யணுமோ அப்படி நல்லதற்கே செய்வது. தப்புப் பண்ணினால் தண்டிக்க வேண்டியது தர்மமென்பதற்காக சாபம் தருவது. தப்பை உணர்ந்தபோது மன்னிக்க வேண்டியது தர்மமென்பதால் அப்போது கருணையோடு சாப விமோசனம் தருவது. அந்தக் கதைகளில் இப்படி ஒன்றுக்கொன்று ஈடு கொடுத்துக்கொண்டு போவதைப் பார்க்க அழகாக இருக்கும்.

“பரமசிவனின் காலடியைப் பிடித்துக்கொள் என்றால் அது எப்படி ஸாத்யம்? நான் முதலையானபின் ஏதாவது ஆற்றிலே மடுவிலே கிடப்பேனாயிருக்கும். அவரானால் கைலாஸ உச்சியில் உட்கார்ந்திருப்பவர். எப்படிப் பிடிப்பது?” என்றேன்.

“அதற்கு அவர், ‘அதைப் பற்றி நீ கவலைப்படாதே. அவருடைய காலடியே உன்னைத் தேடிக்கொண்டு வரும், போ!” என்று சொல்லி அனுப்பினார். ‘நான் கொடுத்த சாபம் தப்பாது. உன் முதலை ஜன்மமே ஈச்வரன் அவதாரம் செய்யப் போகிற ஸமயத்திலே அவருக்கு ஒரு ப்ரச்னையைத் தீர்த்து வைத்து, அவர் துர்யாச்ரமியாகப் புறப்பட உதவி பண்ணும். அவதார நோக்கம் நிறைவேற ஒரு கருவியாகும் பாக்யம் உனக்குக் கிடைக்கும்’ என்றார்.

“அவர் சொன்னபடியேதான் இங்கே வந்து ஸாக்ஷாத் சிவாம்சமான தங்களுடைய காலடியைப் பிடித்தேன். எனக்கும் முதலை ஜன்மா தீர்ந்தது; தங்களுக்கும் ஒரு குடும்பத்து மநுஷ்யர் என்ற ஜன்மா தீர்ந்தது; என்று சொல்லி அந்த கந்தர்வன் ஆசார்யாளை நமஸ்கரித்து விட்டுப் போய்விட்டான்.

முதலையாக ஜன்மா எடுத்த அவன் அவர் காலடியைப் பிடித்து சாப விமோசனம் பெற்ற மாதிரி நாமும் பிடித்தால் ஜன்ம நிவ்ருத்தி பெறலாம் என்று காட்டத்தான் அந்த க்ராமத்துக்கே காலடி என்று பேர் வந்ததோ என்னவோ? பகவத் பாதரின் ஊர் கால் – அடி!


1 1932-ல் கூறியது

2 ‘ஆசு’ — சடுதியில்; ‘தோஷி’ — திருப்தியடைந்து மகிழ்பவர்

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is உலகப் பணி அழைத்தது!மனித தர்மமும், அவதார மர்மமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அன்னையைப் பிரிந்து ஆசானைத் தேடி...
Next