‘சங்கர விஜய’ங்களும் ஆசார்யாள் குறித்த மற்ற நூல்களும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆசார்யாளின் சரித்ரத்தைச் சொல்வதற்கென்றே ஏற்பட்டதாக ‘சங்கர விஜய’ங்கள் என்று சொல்கிற பல புஸ்தகங்கள் பல பெரியவர்கள் எழுதியிருக்கிறார்கள். ‘ப்ருஹத் சங்கர விஜயம்’, ‘ப்ராசீன சங்கர விஜயம்’, ‘ஆனந்தகிரீய சங்கர விஜயம்’, ‘வ்யாஸாசாலீய சங்கர விஜயம்’, ‘மாதவீய சங்கர விஜயம்’, ‘சித்விலாஸீய சங்கர விஜயம்’, ‘கேரளீய சங்கர விஜயம்’, ‘கோவிந்த நாதீய சங்கர விஜயம்’ என்று இப்படி ஏழெட்டு இருக்கின்றன1. ஸதாநந்தர் என்பவர் எழுதிய ‘சங்கர திக் விஜயஸாரம்’ என்றும் ஒரு ஆசார்ய சரித்ரம் இருக்கிறது.

‘ப்ருஹத் சங்கர விஜயம்’ என்றால் பெரிசான, விஸ்தாரமான சங்கர விஜயம் என்று அர்த்தம். அது முழுசாகக் கிடைக்கவில்லை. மற்ற புஸ்தகங்களில் அதிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பதிலிருந்தே அதைப் பற்றித் தெரிகிறது. ஏறக்குறைய ஆசார்யாளின் காலத்திலேயே செய்யப்பட்டதென்று தெரியவருகிறது. ‘ப்ராசீன சங்கர விஜயம்’ என்றாலும் ‘புராதனமான சங்கர சரித்ர புஸ்தகம்’ என்றே அர்த்தம். இதுவும் கிடைக்கவில்லை. ‘கொடேஷன்’களிலிருந்து தெரிவதோடு ஸரி.

ஆனந்த கிரீயம், கோவிந்த நாதீயம் என்றெல்லாம் சொல்வது அவற்றை எழுதிய ஆனந்தகிரி, கோவிந்தநாதர் ஆகியவர்களின் பெயரிலேயே புஸ்தகத்துக்கு டைட்டில் சொல்வதுதான். ஆனந்தகிரியின் முழுப்பெயர் அனந்தா நந்தகிரி. சித்விலாஸீயம் என்பது சித்விலாஸர் என்பவருக்கும் (விஜ்ஞான கந்தர் என்றே) இன்னொருவருக்கும் நடந்த ஸம்வாத (ஸம்பாஷணை) ரூபத்தில் எழுதப்பட்டிருப்பதால் அப்படிப் பெயர் பெற்றிருக்கிறது. ‘கேரளீயம்’ கேரள தேசத்தில் பண்ணப்பட்டது. கோவிந்த நாதீயத்திற்கும் இதற்கும் ஸ்வல்ப வித்யாஸமே. கோவிந்தநாதர் கேரளத்துக்காரர்.

எல்லாவற்றையும்விட அதிகமாக ப்ரசாரமாகியிருப்பது மாதவீய சங்கர விஜயம் என்பது.

‘சங்கர விஜயம்’ என்று குறிப்பிடும் இந்த க்ரந்தங்களைத் தவிர இன்னும் சில நூல்களும் ஆசார்ய சரித்ரத்தைக் கூறுபவையாக இருக்கின்றன. தமக்குள் காயத்ரி புகுவதற்கு முன் ஸரஸ்வதி புகுந்து விட்டாளென்று ராஜசூடாமணி தீக்ஷிதர் என்பவர் சொன்னதாகச் சொன்னேனல்லவா? அவர் “சங்கராப்யுதம்” என்று ஆசார்ய சரித்ரத்தை எட்டு ஸர்கங்களில் காவ்யமாக எழுதியிருக்கிறார். பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுகளில் இருந்தவர். பதினேழாம் நூற்றாண்டுக் கடைசியிலிருந்த ராமபத்ர தீக்ஷிதரின் ‘பதஞ்ஜலிசரி’தத்தில் ஆசார்யாளுடைய பரம குருவையும், குருவையும் பற்றி விரிவாகக் கதை சொன்னபின், கடைசி ஸர்கத்தில் சுருக்கமாக ஆசார்ய சரித்ரம் கொடுக்கப்பட்டிருப்பதை முன்பே சொன்னேன். ராஜசூடாமணி தீக்ஷிதர் அப்பைய தீக்ஷிதரின் மைத்துனரென்றால் இவர் அவருடைய (அப்பையருடைய) தம்பி பேரரான நீலகண்ட தீக்ஷிதரின் சிஷ்யர்.

வல்லீஸஹாய கவி என்பவர் ‘ஸ்ரீ சங்கராசார்ய சம்பூ’ என்று செய்திருக்கிறார். கவிதையும் வசன நடையும் கலந்து கலந்து வரும் காவ்ய வகைக்குச் சம்பூ என்று பெயர்.

சட்டம், ஸங்கீதம் இரண்டிலும் முக்யமான புள்ளியாயுள்ள டி.எஸ். வேங்கடராமய்யரின்2 தகப்பனார் லக்ஷ்மண ஸூரி என்பவர். ஸூரி என்றால் ஸூர்யன்தான். ‘அறிவு ஜ்யோதி’ என்கிறார்களே, அப்படிப் பட்டவர்களையே ஸூரி என்பது. வைகுண்டத்தில் பகவானோடு ஸதா காலமும் நித்யவாஸம் செய்பவர்களை வைஷ்ணவர்கள் ‘நித்ய ஸூரிகள்’ என்பார்கள். இவர் (லக்ஷ்மணஸூரி) ஆசார்ய பாஷ்யங்களை அநுஸரித்து ஈசோபநிஷத், மாண்டூக்யோபநிஷத் ஆகியவற்றுக்குக் காரிகைகள் செய்திருப்பதிலிருந்து, ‘ஜார்ஜ் தேவ சதகம்’ என்பதாக பிரிட்டிஷ் ராஜாவின் மீது கவி செய்கிறவரையில் பல துறைகளிலும் தம்முடைய வ்யுத்பத்தியை (இலக்கியத் திறமையை)க் காட்டியிருப்பதால் அக்காலத்தில் மைஸூர் திவானாயிருந்த ஸர் கே. சேஷாத்ரி ஐயர் இவருக்கு ஸூரிப் பட்டம் கொடுத்தார். மஹாமஹோபாத்யாயப் பட்டமும் பெற்ற பண்டிதர். “பகவத் பாதாப்யுதயம்” என்பதாக அவர் நம்முடைய ஆசார்யாளின் சரித்ரத்தைப் பற்றி ஒரு சிறு காவ்யம் தம்முடைய கடைசி காலத்தில் செய்திருக்கிறார்.

“பகவத்பாத ஸப்ததி” என்ற பெயரில் இரண்டு புஸ்தகங்கள் இருப்பதாகத் தெரிகிறது. “ஸப்ததி” என்றால் எழுபது. ராமாநுஜாசார்யாரின் மேல் வேதாந்த தேசிகர் “யதிராஜ ஸப்ததி” என்று எழுபது ச்லோகம் செய்திருக்கிறார். அதேபோல ஆசார்யாளின் பேரில் ஜகந்நாத கவி என்பவர் செய்திருப்பது பகவத்பாத ஸப்ததி. இவர் ஷாஜஹானின் ஸபையிலிருந்த ஜகந்நாத கவி இல்லை. வேறே ஒருவர். இந்த ஸப்ததி முழுசாகச் கிடைத்திருக்கிறது. உமாமஹேச்வர சாஸ்த்ரி என்ற ஒருவர் செய்துள்ள இன்னொரு பகவத்பாத ஸப்ததியில் சில ச்லோகங்கள் அகப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஸுமார் 250 வருஷம் முந்தி இருக்கலாம், அப்போதிருந்த ச்ருங்கேரி ஸ்வாமிகளின்3 உத்தரவின் பேரில், அந்த மடத்து ஆஸ்தான வித்வானாயிருந்த காசி லக்ஷ்மண சாஸ்த்ரிகள் என்பவர் ‘குருவம்ச காவ்யம்’ என்று ஏழு ஸர்கம் கொண்டதாக அந்த மடத்து குரு பரம்பரா சரித்ரம் எழுதியிருக்கிறார். அதில் முதல் மூன்று ஸர்கங்களில் ஆசார்யாள் சரித்ரம் வருகிறது.

ஆசார்யாளின் பெயரிலுள்ள ஒவ்வொரு மடத்திலும் உள்ள குரு பரம்பரைப் புஸ்தகங்களில் அவருடைய சரித்ர விவரமும் நிறையவோ, கொஞ்சமோ இருக்கும். இந்த (காஞ்சி) மடத்திலும் அப்படி ‘புண்ய ச்லோக மஞ்ஜரி,’ ‘(ஜகத்)குரு ரத்நமாலா’, அதன் வ்யாக்யானமான ‘ஸுஷமா’ ஆகியவற்றில் இருக்கிறது.

புராண – இதிகாஸங்களில் ஆசார்யாள் ஈச்வாராவதாரமே என்று சொல்லியிருப்பதை முன்னமேயே சொன்னேன். அவற்றிலே குறிப்பாக “சிவ ரஹஸ்ய”மும் “மார்க்கண்டேய ஸம்ஹிதை”யும் கொஞ்சம் detailed-ஆகவே ஆசார்யாள் சரித்ரத்தைச் சொல்கின்றன. ஒருவிதத்தில் அவற்றை நமக்கு basic text என்கிறார்களே, அப்படிப்பட்ட ஆதார க்ரந்தங்களாக வைத்துக்கொள்ளலாம்.


1 “ப்ரஹ்மாநந்தீய சங்கர விஜயம்” என்று ஒரு நூலும் ப்ரஹ்ம ஸ்ரீ சி.வே. ராதாகிருஷ்ண சாஸ்திரிகளின் “ஸ்ரீ சங்கர விஜய மகரந்தம்” எனும் நூலில் குறிபிடப்பட்டுள்ளது. “மகரந்தம்” என்பது ஆசாரிய சரிதத்தைக் கூறும் எல்லா நூல்களினின்றும் தொகுப்பு செய்து, ஒன்றுக்கொன்று மாறுபட்ட விவரங்களையும் முடிந்தமட்டில் இசைத்துத் தரும் ஸமீப கால (1978) ஸம்ஸ்க்ருத நூலாகும்.

2 இவர் தற்போது காலமாகிவிட்டார்.

3 1963-ல் கூறியது. இங்கு குறிப்பிடப் பெறுபவர்கள் ஸ்ரீ ச்ருங்கேரி பீடத்தில் 1705-41 ஆசார்யர்களாக இருந்த ஸ்ரீ ஸச்சிதாநந்த பாரதி ஸ்வாமிகள் (II)

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அவருக்கு குரு எதற்கு?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  1. கதாபேதங்கள்
Next