லோகத்திலுள்ளவர்களுக்கெல்லாம் ஆசார்யாளுடைய ஸூத்ரபாஷ்யத்தின் பெருமையைத் தெரியப் பண்ண வேண்டுமென்று ஸூத்ரகர்த்தாவான வ்யாஸர் நினைத்தார். ரொம்ப ரொம்பச் சுருக்கமாக வார்த்தைகளை அடக்கி அவர் ஸூத்ரம் பண்ணிவிட்டதால், ‘அர்த்தம் பண்ணுகிறேன்’ என்று சொல்லி அவரவரும் இஷ்டப்படி இழுத்து, நீட்டி இல்லாத அர்த்தத்தையெல்லாம் சொல்லி வந்தார்கள். அப்போது ஆசார்யாள்தான் வ்யாஸாசார்யாளின் எண்ணம் என்னவோ அதையே பரிபூர்ணமாகப் புரிந்துகொண்டு தம்முடைய பாஷ்யத்தை எழுதியிருந்தார். அதனால் ப்ரீதியடைந்த வ்யாஸாசார்யாள், ‘இன்னும்கூட இவரை நன்றாகப் பரீக்ஷித்து முடிவில் இவர் செய்த பாஷ்யம்தான் நமக்கு ப்ரீதியானது என்று லோகம் புரிந்துகொள்ளச் செய்யணும்’ என்று நினைத்தார்.
வ்யாஸ ரூபத்திலேயே போனால் ரொம்பவும் விநயகுணம் படைத்த ஆசார்யாள் வாயைத் திறக்க மாட்டார். மேதா விலாஸத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு பக்திதான் பண்ணுவார் என்பதால் யாரோ ஒரு வயோதிக ப்ராம்மணர் மாதிரி ரூபமெடுத்துக் கொண்டு வந்தார்.
“ஸூத்ர பாஷ்யம் பண்ணி இருக்கிறீராமே, இதற்கென்ன அர்த்தம், அதற்கென்ன அர்த்தம்?” – என்று ஆசார்யாளைக் கேட்டுக்கொண்டு போனார். ஆசார்யாளும் தயங்காமல் பதில் சொல்லிக்கொண்டு போனார். இவர் என்ன அர்த்தம் சொன்னாலும் அவர் உள்ளூர ஸந்தோஷப்பட்டுக் கொண்டே, “அதெல்லாம் இல்லை இப்படித்தான் அர்த்தம்” என்று எதையாவது சொல்லி ஆக்ஷேபித்தார். அவர் சொல்வது பொருந்தாது என்று ஆசார்யாள் விஸ்தாரம் பண்ணி வாயை அடைப்பார். ஒரு விஷயமாக வாயை அடைத்தாலும் அவர் இன்னொன்றைப் பிடித்துக்கொள்வார். அப்புறம் விதண்டாவாதமாக எல்லாங்கூட பண்ண ஆரம்பித்தார்.
‘விதண்டாவாதம்‘ என்பது அவ்வளவு ஸரியில்லை. விதண்டை வேறே, வாதம் வேறே! – வாதம், ஜல்பம், விதண்டை என்று மூன்று. வாதம் என்பது நேர்மையாக, திறந்த மனஸோடு ஆர்க்யூ பண்ணுவது. ‘ஜல்பம்’ என்பது வீம்பாகத் தன் கட்சி என்று ஒன்றையே பிடித்துக்கொண்டிருப்பது. விதண்டை என்றால் எதையும் தர்க்கப்படி ரூபிக்காமல், தன் கட்சி என்று ஒன்றை ரூபிப்பதில்கூட அக்கறை காட்டாமல், எதிராளி என்ன சொன்னாலும் அது தப்பு என்று மட்டும் குதர்க்கமாகச் சண்டை போடுவது. ‘கொண்டி’ என்று சொல்வார்கள.
ஆசார்யாளோடு நாள் கணக்கில் வ்யாஸர் வாதம், விதண்டை எல்லாம் பண்ணினார்.
இரண்டு மஹாமேதைகள் இப்படி பலத்த வாதம் பண்ணுவதைப் பார்த்து சிஷ்யர்கள், பண்டிதர்களெல்லாம் ஆச்சர்யப்பட்டார்கள். சிஷ்யர்களுக்கு அப்பப்போ அடித்துக் கொள்ளும், “யார்டா, இந்தக் கிழவர்? நம் குருநாதரையே ஜயித்து விடுவார் போலிருக்கே!” என்று. அப்புறம் இவர் (ஆசார்யாள்) டாண் டாணென்று பாயின்ட்களைக் கொடுக்கும்போது, “இந்தக் கிழம் என்னதான் பண்ணிப் பார்த்தாலும் ஆசார்யாளிடம் ஜம்பம் சாயுமா? மண்ணைக் கவ்வாமல் போகமுடியுமா?” என்று உத்ஸாஹம் அடைவார்கள்.
‘ஆசார்யாளுக்குச் சளைக்காமல் இப்படியரு மநுஷ்யர் வாதம் பண்ணுவதா? இவர் யாராயிருக்கும்?’ என்று பத்மபாதர் நினைத்துக் கொஞ்சம் ஞானத்ருஷ்டியினாலே பார்த்தார். ‘அட, வேத வ்யாஸ பகவானல்லவா வந்திருக்கிறார்!’ என்று தெரிந்து கொண்டுவிட்டார்.
‘ஸரிதான்! நம் குருநாதரோ பரமசிவன் – சங்கர: சங்கர: ஸாகக்ஷாத்! வந்திருக்கும் வேத வ்யாஸரோ மஹாவிஷ்ணுவே: வ்யாஸோ நாராயண ஸ்வயம்! இப்படி சிவ – விஷ்ணுக்களே வாத விளையாட்டுப் பண்ணுவதென்றால் அது எப்போது முடியுமோ, எப்படி முடியுமோ? இப்படி ஆகணும், அப்படி ஆகணும் என்றெல்லாம் சிஷ்யரான நாம் ஆசைப்பட்டால் ஆகிவிடுமா? இங்கே நாம் ஒண்ணும் பண்ணிக் கொள்வதற்கில்லை. நாம் ஏதாவது மத்யஸ்தம், கித்யஸ்தம் பண்ணி முடிகிற விஷயமா இது? அவர்கள் தெய்வங்கள். நாமோ அடிமை, கிங்கரர். சங்கர பகவானும் நாராயண பகவானுமே விவாதம் நடத்துவதாக ஏற்பட்டிருக்கும்போது கிங்கரனான நாம் என்ன செய்வது?
“சங்கர: சங்கர: ஸாகக்ஷாத் வ்யாஸோ நாராயண: ஸ்வயம் |
தயோர்-விவாதே ஸம்ப்ராப்தே கிங்கர: கிங்கரோம்யஹம் ||1”
‘கிங்கர: கிங்கரோம்யஹம்’ என்று வார்த்தையைத் திருப்பியிருப்பதில் ‘கிங்கரோம்யஹம்’ என்பதை ‘கிம் கரோமி அஹம்?’ என்று பிரித்துக் கொள்ளவேண்டும். ‘நான் என்ன செய்வேன்?’ என்று அர்த்தம்.
இப்படி ச்லோகமாகச் சொல்லி இரண்டு பேரையும் பத்மபாதர் நமஸ்கரித்தார்.
‘அப்படியா? ஸூத்ரகாரரான வ்யாஸாசார்யாளேயா வந்திருப்பது? ‘என்று ஆசார்யாளுக்கு ஒரே பக்தியும், ஸந்தோஷமும், அடக்கமும் வந்துவிட்டது. “வாஸ்தவமாக இந்த பாஷ்யம் தங்கள் ஹ்ருதயத்தை அநுஸரிப்பதாக இருந்தால் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி ஸ்வஸ்வரூபம் எடுத்துக்கணும்” என்று ப்ரார்த்தித்துக்கொண்டார்.
கிழப்ராம்மணர் உடனே வ்யாஸ ரூபத்தில் தர்சனம் கொடுத்தார், ஆசார்யாளுக்கு நிரம்ப அநுக்ரஹம் செய்து, “லோகத்தில் நேர்மையாகவும் கொண்டி வழியிலும் யாரார் என்னவெல்லாம் ஆக்ஷேபித்துக் சொல்லமுடியுமோ அதற்கு மேலே நாமே சொல்லி, அத்தனைக்கும் உன் பாஷ்யம் பதில் சொல்கிறது என்று காட்டவே இப்படி வந்தேன். இந்த பாஷ்யத்திற்கு என் பூர்ண அங்கீகாரம் உண்டு” என்றார்.
ஆசார்யாள் தாம் எழுதினதையெல்லாம் அவருடைய பாதத்தில் வைத்தார். “தங்களுடைய அங்கீகாரம் கிடைத்துவிட்டபின் நான் செய்ய எதுவுமில்லை. தங்கள் அநுக்ரஹத்தில் இவை ப்ரசாரமாகிவிடும். இப்போது எனக்கும் பதினாறு வயஸ் பூர்த்தியாகிறது. எட்டைப் பதினாறாக்கி அதுவும் முடிகிறது. யதாஸ்தானம் திரும்புவதற்கு அநுமதி தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
“இல்லை, இல்லை அப்படிப் பண்ணப்படாது. புஸ்தகங்கள் எழுதிவிட்டாலும், சிஷ்யர்களால் அவை ப்ரசாரமாகி விடுமென்றாலும் அதுமட்டும் போதாது. புஸ்தகமும் சிஷ்யர்களும் பண்ண முடியாமல் உன்னால்தான் முடியும் என்பதாகச் சில கார்யங்கள் இருக்கின்றன. நீயே தேசம் பூராவும் போய் நேரில் வாதம் நடத்தினால்தான் வழிக்கு வரக்கூடியவர்களாக அநேக பண்டிதர்கள், ஸித்தாந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அதைவிட முக்யமாக உன் ஸ்வரூப தர்சனம் அவர்களுக்கும், ஸர்வ ஜனங்களுக்கும் கிடைக்க வேண்டாமா? புஸ்தகமும், ஸித்தாந்தமும், ப்ரசாரமும் வாத ப்ரதிவாதமும் இருக்கட்டும். அவை பண்ணுவதையெல்லாம்விடப் பெரிசாக உன் தர்சனமே பண்ணிவிடுமே! ஜனங்களையெல்லாம் ஸந்தோஷப்படுத்தி, சுத்தப்படுத்தி நல்ல வழிக்குக் கொண்டுவந்துவிடுமே! ஆனதினாலே, எட்டைப் பதினாறாக்கிக் கொண்ட நீ இன்னும் பதினாறு வருஷம் இருக்கவேண்டும். பரதக் கண்டம் முழுதிலும் திக்விஜயம் பண்ணி, உன்னைப்போல திக்விஜயம் செய்தவர் எவருமில்லை என்னும்படியாகப் பண்ணி தர்மோத்தரணத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்” என்று வ்யாஸர் சொன்னார்.
இவர் ‘சங்கர: ஸாக்ஷாத்’, அவர் ‘நாராயண ஸ்வயம்’ என்றாலுங்கூட அவதாரத்திலே மநுஷ்யர் மாதிரி அடங்கியிருக்கவேண்டும் என்று காட்டுவதற்காக வ்யாஸாசார்யாள் ப்ரம்மாவைக் கொண்டே ஆசார்யாளுக்கு இன்னும் பதினாறு வருஷம் ஆயுஸை நீடிக்க நினைத்தார். ப்ரம்மாதானே ஜன்மா தந்து, இத்தனை ஆயுஸ் என்று எழுதுபவர்?
ப்ரம்மாவும் அப்படியே அங்கே தோன்றினார்.
த்ரிமூர்த்திகளும் சேர்ந்து விட்டார்கள்!
முதலில் சிவனின் வரத்தால் ஆசார்யாள் எட்டு என்று ஆயுஸ் பெற்றுப் பதினாறாக்கிக் கொண்டார். இப்போது விஷ்ணு, ப்ரம்மா இருவரும் இன்னொரு பதினாறு கொடுத்தார்கள்.
“ஈச்வராவதாரத்திற்கு நான் என்ன ரூல் பண்ணுவது! இஷ்டப்படி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம்” என்றும் ப்ரம்மா சொன்னார்.
அப்புறம் ப்ரம்மாவும் வ்யாஸரும் அந்தர்தானமானார்கள்.
ஆசார்யாளுடைய காசி வாஸத்தின்போது நாலு முக்யமான விஷயங்கள் நடந்தன. ஒன்று அவர் பாஷ்ய உபதேசம் பண்ணினது. இன்னொன்று, பத்மபாதர் அவரிடம் வந்து சிஷ்யராகி, ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு, அந்தப் பேர் பெற்றது. மூன்றாவது, வ்யாஸர் வந்து பரீக்ஷித்து பாஷ்யத்தைப் பரிபூர்ணமாக அங்கீகரித்து ஆசார்யாளுக்கு இன்னொரு பதினாறு வயஸு நீடிக்கவைத்தது. நாலாவது இப்போது சொல்லப் போகிறது:
1 ‘ஆனந்தகிரீய சங்கர விஜயம் — 52-வது ப்ரகரணம்.