அன்னை மறைவு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்படி லோகத்திற்காக ஆசார்யாள் எல்லாம் பண்ணிக்கொண்டிருக்கும் போது – உலகத்துக்கே குழந்தையாக, குழந்தை குருவாக அநுக்ரஹம் பண்ணிக்கொண்டிருக்கும்போது – பெற்ற தாயாருக்குக் குழந்தையாக, ‘அந்திமத்தில் கடமையைப் பண்ணுகிறேன்’ என்று முன்னே வாக்குக் கொடுத்திருந்தார் அல்லவா? அதைப் பண்ணும்படி ஆயிற்று.

அந்த அம்மாளுக்கு நிர்யாண ஸமயம் வந்தது. அது உடனே ஆசார்யாளுக்குத் தெரிந்தது. காலடியில் ப்ரஸன்னமானார். தாயாரை ஆச்வாஸப்படுத்தி அத்வைத உபதேசமாக ஸ்தோத்ரங்கள் சொன்னார். அந்த்ய ஸ்மரணை எப்படியோ அப்படியே மரணத்துக்கு அப்புறம் ஆகுமென்பதால் அவளுக்கு முக்தி கிடைக்கச் செய்யணுமென்று அப்படிச் சொன்னார்.

ஆனால் அது அவளுக்குப் பிடிபடவில்லை.

‘பிடிபடுகிற மாதிரி பக்தியாய் சொல்லுவோம்’ என்று சிவ ஸ்தோத்ரங்கள் சொன்னார்.

அவளைக் கைலாஸத்துக்கு அழைத்துபோக ப்ரமத (பூத) கணங்கள் வந்தன.

அவள் பயப்பட்டாள்.

இதுவும் ஸரியாய் வரவில்லையே என்று விஷ்ணு ஸ்தோத்ரங்கள் சொன்னார். “ச்ரியா ச்லிஷ்டோ விஷ்ணு:” என்று ஆரம்பித்து “க்ருஷ்ணாஷ்டகம்” சொன்னார் என்று சொல்வார்கள்.

ஸுகுமாரர்களான விஷ்ணு ஸேவகர்கள் வந்தார்கள்.

தாயாருக்கு சாந்தமாகவும் ஸந்தோஷமாகவும் ஆயிற்று.

அவர்கள் அவளுடைய உயிரை விஷ்ணு லோகத்துக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

கொடுத்த வாக்குப்படி ஆசார்யாள் தஹனம் பண்ண நினைத்தார்.

பந்துக்களும், புரோஹிதர்களும் ஸந்நியாஸியான ஏக புத்ரரின் தர்மம் என்ன என்று புரிந்துகொள்ளாமல் ஆக்ஷேபித்தார்கள். இப்போது1 தேசாபிமானிகள் பண்ணுவதெல்லாம் பண்ணினார்கள் – ஒத்துழையாமை பஹிஷ்காரம் எல்லாம் (பண்ணினார்கள்) !

ஆசார்யாள் ஒருவர் மாத்திரமாக இருந்துகொண்டு தாயார் சரீரத்தைச் சேதித்துத் தூக்கிக்கொண்டு போய் அகத்துக் கொல்லையிலேயே தஹனம் செய்யும்படி ஆயிற்று.

அதற்கு ப்ராயச்சித்தமாக இன்றைக்கும் அந்த சீமையில் நம்பூதிரிகளில் செத்துப்போனவரின் சரீரத்தை ஜாடையாகச் சேதித்துக் கொல்லையிலேயே தஹனம் செய்கிறார்கள்.

இன்னொரு விஷயம் அங்கே சொல்கிறார்கள். ஒத்தழையாமையும் பஹிஷ்காரமும் செய்யாமல் இரண்டு குடும்பத்தினர் மட்டும் துக்கம் கேட்க வந்து ம்ருத சரீரத்தின் தலை மாட்டிலும் கால் மாட்டிலுமாக நின்றார்களாம். இவர்களுடைய வம்ச பரம்பரையினர் என்று இன்றைக்கும் ‘தலையாற்றுப் பள்ளி’, ‘காப்பள்ளி’ என்ற இரண்டு இல்லத்துக்காரர்களைச் சொல்கிறார்கள்.


1 1939-ல் கூறியது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஸ்ரீ சங்கர மடங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அகில பாரத க்ஷேத்ராடனம்
Next