முன்னுரை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

முன்னுரை

ஸ்ரீய:பதியான ஸர்வேச்வரன் ஸ்ரீமந் நாராயணனுடைய திருவருளாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். கருவிலே திருவுற்ற இவர்கள் இறைவனுடைய லீலாரஸங்களை நன்கு சுவைத்தவர்கள். இவர்களுடைய திருவாக்குகள் கன்னலே பாலே தேனே அமுதே என்று தித்திப்பனவாகும். எப்பெருமானை நேரில் கண்டு, அவன் ஸ்வரூப ரூப குணங்களை அழகிய தமிழ்ப் பாடல்களிலே வடித்துக் கொடுத்துள்ளார்கள். அவைகளே இன்று நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று வழங்குகின்றன. இத்திவ்வியப் பிரபந்தத்தைத் திராவிட வேதம் என்றும் தமிழ் வேதம் என்றும் கொண்டாடுகின்றனர், இவர்களால் பாடப் பெற்ற புண்ணியத் தலங்கள் மொத்தம் நூற்றெட்டாகும். இந்த நூற்றெட்டு திவ்விய தேசங்களின் பெருமைகளையும், ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்களுடைய வைபவங்களையும் இந்நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தால் அறியலாம்.

இத்தகைய திவ்வியப் பிரபந்தம் ஆழ்வார்களுடைய காலத்துக்குப் பின்னே வழக்கிலிருந்தாலும் இடைக்காலத்தில் வழக்காறற்று மறைந்துபோயிற்று. பின்பு, நாதமுனிகள் என்னும் ஆசாரியார் (இவர் வீரநாராயணபுரம் என்னும் காட்டுமன்னார்கோவில் திவ்யதேசத்தில் அவதரித்தவர்) ஒரு சமயம் திருக்குடந்தை என்னும் கும்பகோணத்திற்குச் சென்று பெருமாளை ஸேவிக்கும்பொழுது, அங்கு மேற்றிசியினின்றும் வந்திருந்த ஸ்ரீவைஷ்ணவர் சிலர் 'ஆராவமுதே அடியேனுடலம்'என்னும் திருவாய்மொழியை நல்ல இசையோடு பாடிப் பரவுவதைக் கேட்டுப் பரவசமானார். மேலும் அவர்கள் 'குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துளிப்பத்தும்'என்று பாடி முடிப்பதைக் கேட்ட நாதமுனிகள், அவர்களை அணுகி, உங்களுக்கு ஓராயிரமும் தெரியுமோ என்று கேட்க, அவர்கள் நாங்கள் அறியோம்- ஆயினும் நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூரென்னும் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் பெறலாம் என்று பதிலுரைத்தனர். உடனே நாதமுனிகளும் திருக்குருகூரை அடைந்து அங்குள்ள பெரியவர்களின் சொற்படி, ஸ்ரீ மதுரகவிகளியற்றிய 'கண்ணி நுண்சிறுத்தாம்பு'என்னும் திவ்வியப் பிரபந்தத்தைப் பன்னீறாயிரம் தடவை அனுஸந்தானம் பண்ணி பக்தியோடு நின்றவளவில், நம்மாழ்வார் இவர் முன் தோன்றி தாமியற்றிய திருவாய்மொழியையும், மற்றைய ஆழ்வார்களின் பாடல்களாகிய மூவாயிரத்தையும் இவருக்கு உபதேசம் செய்தார். இவ்வாறு நாதமுனிகள் நாலாயிரம் பெற்ற விதத்தைப் பற்றி குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன.

இப்படிப்பட்ட நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை இதற்கு முன் பல பேர் வெளியிட்டிருந்தாலும் நாங்கள் தற்கால மக்களுக்கு ஏற்ற வகையில் எல்லாவிதத்திலும் பயன்படும்படி பல புதிய அம்சங்களைச் சேர்த்து நூதனமாக வெளியிட்டிருக்கிறோம். இப்பதிப்பு கெட்டியான உயர்ந்த காகிதத்தில் பெரிய எழுத்துக்களைக் கொண்டு முதியோரும் எளிதாகப் படிக்கும்படி பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு பதிகத்தின் சாரமான கருத்துக்களும் எளிய தமிழில் சுருக்கமாகப் பதிகத் தொடக்கத்தில் தரப்பட்டுள்ளன. இதைத் தவிர ஒவ்வொரு பாடலின் மையக் கருத்தோ அல்லது சொற்றொடறோ அந்தந்தப் பாடலின் தலைப்பாகக் கொடுக்கப்பட்டிருப்பது இப்பதிப்பின் தனிச் சிறப்பாகும். பாட்டுகளின் தொடர் எண்களும், பதிகங்கள் தோறும் தனி எண்களும் மற்றும் பிற்சேர்க்கையில் பாட்டு முதற் குறிப்பகராதியும் தரப்பட்டுள்ளன.

இத்தனைப் புதிய அம்சங்களோடு நல்ல கட்டுக்கோப்பான பைண்டில் வெளிவரும் இந்நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இறைவனுடைய அருளைப் பெறுவதற்கும், நினைத்த காரியம் கைகூடுவதற்கும், மேன்மேலும் செல்வம் கொழிப்பதற்கும், புகழ்பெற்று விளங்குவதற்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கவேண்டியது இன்றியமையாததாகும். தற்காலம் காகித விலை, அச்சுக் கூலி முதலியவைகள் பன்மடங்காக உயர்ந்திருந்த போதிலும் பொது மக்களின் நம்மையைக் கருதி லாப நோக்கில்லாமல் ஏறத்தாழ அடக்க விலைக்கே விற்கப்படும் இந்நூலை, ஆஸ்திகர்களான அன்பர்கள் அனைவரும் வாங்கிப் படித்து, ஸ்ரீமந்நாராயணனுடைய அநந்தமான கல்யாண குணங்களைச் சுவைத்து, உண்மையான தத்துவங்களையறிந்து பக்தி செய்து பேறு பெறவேண்டும் என்று வேண்டுகிறோம்.

- ஓம் நமோ நாராயணாய-


  Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பொய்கையாழ்வார்
Next