நண்ணாத

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

நண்ணாத

திருக்கடல் மல்லை

பகவத் பக்தியின் எல்லை நிலம் பாகவத பக்தி. தலசயனத்து உறைவாரை எண்ணும் பாகவதர்களே தமக்குத் தலைவர்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். கடல்மல்லை பெருமையுடையது. தலசயனத் தெம்பெருமான் மிகவும் பெருமை கொண்டவன். அவனையே நினைக்கும் அடியார்கள் பெருமையார் உயர்ந்தவர்கள். அவர்கள் எப்போதும் பகவானையே வணங்ககிறவர்கள். அவர்களுக்கு அடியவராக இருப்பதே தமக்கு ஏற்றம் என்று எண்ணுகிறார் அழ்வார்.


தரவு கொச்சகக் கலிப்பா

தலசயனப் பெருமாளை நினையாதவரை மதியோம்

1098. நண்ணாத வாளவுண

ரிடைப்புக்கு, வானவரைப்

பெண்ணாகி யமுதூட்டும்

பெருமானார், மருவினிய

தண்ணார்ந்த கடல்மல்லைத்

தலசயனத் துறைவாரை,

எண்ணாதே யிருப்பாரை

யிறைப்பொழுது மெண்ணோமே.

தலசயனத்தை நினைப்பாரே எம்மை ஆள்பவர்

1099. பார்வண்ண மடமங்கை

பனிநன்மா மலர்க்கிழத்தி,

நீர்வண்ணன் மார்வத்தி

லிருக்கையைமுன் நினைந்தவனூர்,

கார்வண்ண முதுமுந்நீர்க்

கடல்மல்லைத் தலசயனம்,

ஆரெண்ணும் நெஞ்சுடையா

ரவரெம்மை யாள்வாரே.

தலசயனப் பெருமாளை நினைவார் எம் நாயகர்

1100. ஏனத்தி னுருவாகி

நிலமங்கை யெழில்கொண்டான்,

வானத்தி லவர்முறையால்

மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,

கானத்தின் கடல்மல்லைத்

தலசயனத் துறைகின்ற,

ஞானத்தி னொளியுருவை

நினைவாரென் நாயகரே.

தலசயனரைக் கொண்டாடுவோரே எம் குலதெய்வம்

1101. விண்டாரை வென்றாவி

விலங்குண்ண, மெல்லியலார்

கொண்டாடும் மல்லகலம்

அழலேற வெஞ்சமத்துக்

கண்டாரை, கடல்மல்லைத்

தலசயனத் துறைவாரை,

கொண்டாடும் நெஞ்சுடையா

ரவரெங்கள் குலதெய்வமே.

மனமே தலசயனம் தொழுவாரையே விரும்பு

1102. பிச்சச் சிறுபீலிச்

சமண்குண்டர் முதலாயோர்,

விச்சைக் கிறையென்னு

மவ்விறையைப் பணியாதே,

கச்சிக் கிடந்தவனூர்

கடல்மல்லைத் தலவயனம்,

நச்சித் தொழுவாரை

நச்சென்றன் நன்னெஞ்சே

மனமே தலசயனர் பக்தர்களைப் பிரதட்சிணம் செய்

1103. புலன்னொன்நிதிக் குவையோடு

புழைக்கைமா களிற்றினமும்

நலங்கொள்நவ மணிக்குவையும்

சுமந்தெங்கும் நான்றொசிந்து,

கலங்களியங் கும்மல்லைக்

கடல்மல்லைத் தலசயனம்,

வலங்கொள்மனத் தாரவரை

வலங்கொள்ளென் மடநெஞ்சே

மனமே தலசயனம் தொழுவாரையே தொழு

1104. பஞ்சிச் சிறுகூழை

யுருவாகி, மருவாத

வஞ்சப்பெண் நஞ்சுண்ட

அண்ணல்முன் நண்ணாத,

கஞ்சைக் கடந்தவனூர்

கடல்மல்லைத் தலவயனம்,

நெஞ்சில் தொழுவாரைத்

தொழுவாயென் தூய்நெஞ்சே

தலசயனரின் அன்பர்களையே தொழு வேண்டும்

1105. செழுநீர் மலர்க்கமலம்

திரையுந்த வன்பகட்டால்,

உழுநீர் வயலுழவ

ருழுப்பின்முன் பிழைத்தெழுந்த,

கழுநீர் கடகமழும்

கடலமல்லைத் தலசயனம்,

தொழுநீர் மனத்தவரைத்

தொழுவாயென் தூய்நெஞ்சே.

சிவனோடு வாழும் திருமால் பக்தரை வணங்கு

1106. பிணங்களிடு காடதனள்

நடமாமு பிஞ்ஞகனோடு,

இணங்குதிருச் சக்கரத்தெம்

பெருமானர்க் கிடம்,விசும்பில்

கணங்களியங் கும்மல்லைக்

கடல்மல்லைத் தலசயனம்,

வணங்குமனத் தாரவரை

வணங்கென்றன் மடநெஞ்சே

இவற்றைப் படிப்போர் அரசர்க்கரசராவர்

1107. கடிகமழு நெடுமறுகில்

கடல்மல்லைத் தலசயனத்து,

அடிகளடி யேநினையு

மடியவர்கள் தம்மடியான்,

வடிகொள்நெடு வேல்வலவன்

கலிகன்றி யலிவல்லார்,

முடகொள்நெடு மன்னவர்தம்

முதல்வர்முத லாவாரே

அடிவரவு - நண்ணாத பார் ஏனம் விண்டார் பிச்ச புலன் பஞ்சி செழுநீர் பிணம் கடி - திவளும்






 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is பாராயது
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திவளும்
Next