ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
மூன்றாம் பத்து
ஊன் வாட
திருச்சித்திரகூடம்: 1
தில்லைநகர் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குள்ளே இக்கோயிலும் உள்ளது. ஸ்ரீவைஷ்ணவர்கள் சிதம்பரத்தைச் சித்திரகூடம் என்றே சொல்லுவார்கள். இக்கோயிலில் கோவிந்தராஜர் எழுந்தருளியிருக்கிறார். 'உடம்பை உலர்த்திக் காய்கனி இலைகளை உண்டு, தண்ணீரிலும், காடுகளிலும், மலைகளிலும் தவம் செய்து மோட்சத்தை அடைய விரும்புகிறீர்களே! ஏன் இவ்வளவு துன்பம்? சித்திரகூடத்திற்கு சென்றாலே போதும். நீங்கள் விரும்பும் பயனை மிக எளிதில் பெறலாம்' என்று ஆழ்வார் கூறுகிறார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தவம் செய்யவேண்டாம்: சித்திரகூடம் செல்லுங்கள்
1158. ஊன்வாட வுண்ணா துயிர்காவ லிட்டே
உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து,
தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா
தமதா இமையோ ருலகாள கிற்பீர்
கானாட மஞ்ஞைக் கணமாட மாடே
கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்,
தேனாட மாடக் கொடியாடு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 1
தவம் வேண்டா: திருவாழ்மார்வனை நினையுங்கள்
1159. காயோடு நீடு கனியுண்டு வீசு
கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து
தீயோடு நின்று தவஞ்செய்ய வேண்டா
திருமார்பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்,
வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த,
தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 2
பல்லவர்கோன் பணிந்த சித்திரகூடம் செல்லுங்கள்
1160. வெம்பும் சினத்துப் புனக்கேழ லொன்றாய்
விரிநீர் முதுவெள்ள முள்புக் கழுந்த,
வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான்
அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர்,
பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து
படைமன்ன வன்பல் லவர்கோன் பணிந்த,
செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3
உலகளந்தவனின் திருநாமங்களைச் சொல்லுங்கள்
1161. அருமா நிலமன் றளப்பான் குறளாய்
அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த,
பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம்
பிறவித் துயர்நீங்கு துமென்ன கிற்பீர்,
கருமா கடலுள் கிடந்தா னுவந்து
கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல்,
திருமால் திருமங் கையடாடு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 4
பரசுராமனாக அவதரித்தவனே கோவிந்தராஜன்
1162. கோமங்க வங்கக் கடல்வைய முய்யக்
குலமன்ன ரங்கம் மழுவில் துணிய,
தாமங் கமருள் படைதொட்ட வென்றித்
தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர்,
பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப்
புகழ்மங்கை யெங்கும் திகழ,புகழ்சேர்
சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 5
கிளிகளும் வேதவொலி செய்யும் சித்திரகூடம்
1163. நெய்வா யழலம் புதுரந்து முந்நீர்
துணியப் பணிகொண் டணியார்ந்து,இலங்கு
மையார் மணிவண் ணனையெண்ணி நுந்தம்
மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர்,
அவ்வா யிளமங் கையர்பேச வுந்தான்
அருமா மறையந் தணர்சிந் தைபுக,
செவ்வாய்க் கிளிநான் மறைபாடு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 6
புண்ணிய தீர்த்தங்கள் சூழ்ந்தது திருச்சித்திரகூடம்
1164. மௌவல் குழலாய்ச்சி மென்தோள் நயந்து
மகரம் சுழலச் சுழல்நீர் பயந்த,
தெய்வத் திருமா மலர்மங்கை தங்கு
திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்
கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள்,
தெய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 7
மூவாயிரம் மறையாளர் வணங்கும் சித்திரகூடம்
1165. மாவாயி னங்கம் மதியாது WP
மழைமா முதுகுன் றெடுத்து,ஆயர் தங்கள்
கோவாய் நிரைமேய்த் துலகுண்ட மாயன்
குரைமா கழல்கூ டும்குறிப் புடையீர்,
மூவா யிரநான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காய சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 8
பாவம் நீங்கச் சித்திரகூடம் செல்லுங்கள்
1166. செருநீல வேற்கண் மடவார் திறத்துச்
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்,
அருநீல பாவ மகலப் புகழ்சேர்
அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர்,
பெருநீர் நிவாவுந்தி முத்தங்கொ ணர்ந்தெங்கும்,
வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள,
திருநீல நின்று திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 9
பரமன் அடியில் பலகாலம் வாழ்வர்
1167. சீரார் பொழில்சூழ்ந் தழகாய தில்லைத்
திருச்சித்ர கூடத் துறைசெங்கண் மாலுக்கு,
ஆராத வுள்ளத் தவர்கேட் டுவப்ப
அலைநீ ருலகுக் கருளே புரியும்,
காரார் புயற்கைக் கலிகன்றி குன்றா
ஒலிமாலை யோரொன்ட தோடொன்றும் வல்லார்,
பாரா ருலக மளந்தா னடிக்கீழ்ப்
பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே. 10
அடிவரவு: ஊன்வா காய் வெம்பும் அருமா கோமங்க நெய் மௌவல் மாவாய் செரு சீரார் - வாட.
.