ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
மூன்றாம் பத்து
கள்வன்கொல்
திருவாலி: 3
ஆழ்வார், நாயகி நிலையை அடைந்து முன்பு வண்டு, குருகு ஆகியவற்றை வயலாலி மணவாளனுக்குத் தூது விட்டார். வயலாளி எம்பெருமான் அன்றிரவில் வந்து பரகாலநாயகியை அழைத்துச் சென்றுவிட்டதாக ஈண்டுக் கூறப்படுகிறது. தன்னோடு படுத்துறங்கிய தன் பெண்ணை (பரகாலநாயகியை) க் காணமல் தாய் திகைத்துப் புலம்புவதுபோல் இப்பாசுரம் அமைந்துள்ளது. உடன்போக்கு நிகழ்ந்துவிட்டதே என்று தாய் இரங்குகிறாள்.
தலைவனுடன் தலைவி யாரும் அறியாமல் சென்றுவிடுவது உன்போக்கு எனப்படும்.
உடன்போக்கு நிகழ்ந்தபின் தாய் இரங்குதல்
கலிநிலைத்துறை
கள்வனும் என் மகளும் ஆலிநகர் புகுவோரோ?
1208. கள்வன்கொல் யானறியேன்
கரியானொரு காளைவந்து,
வள்ளிமருங் குலென்றன்
மடமானினைப் போதவென்று,
வெள்ளிவளைக் கைப்பற்றப்
பெற்றதாயரை விட்டகன்று,
அள்ளலம் பூங்கழனி
யணியாலி புகுவர்கொலோ! 1
என் மகள் ஆயனுடன் பேசிக்கொண்டே ஆலி புகுவாளோ?
1209. பண்டிவ னாயன்நங்காய்!
படிறன்புகுந்து, என்மகள்தன்
தொண்டையஞ் செங்கனிவாய்
நுகர்ந்தானை யுகந்து,அவன்பின்
கெண்டையண் கண்மிளிரக்
கிளிபோல்மிழற் றிநடந்து,
வண்டமர் கானல்மல்கும்
வயலாலி புகுவர்கொலோ! 2
சூர்ப்பனகை மூக்கை அறுத்தவனுடன் சென்றாளே! ஐயகோ!
1210. அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய்!
அரக்கர்குலப் பாவைதன்னை,
வெஞ்சின மூக்கரிந்த
விறலோன்திறங் கேட்கில்,மெய்யே
பஞ்சியல் மெல்லடியெம்
பணைத்தோளி பரக்கழிந்து,
வஞ்சியந் தண்பணைசூழ்
வயலாலி புகுவர்கொலோ! 3
மாதவனைத் துணைகொண்டு நடந்தாளே!
1211. ஏதுஅவன் தொல்பிறப்பு?
இளைய வன்வளை யூதி,மன்னர்
தூதுவ னாயவனூர்
சொலுவீர்கள்! சொலீரறியேன்,
மாதவன் தன் துணையா
நடந்தாள்தடஞ் சூழ்புறவில்,
போதுவண் டாடுசெம்மல்
புனலாலி புகுவர்கொலோ! 4
மாயனுடன் அன்னமென நடந்து செல்வாளோ!
1212. தாயெனை யென்றிரங்காள்
தடந்தோளி தனக்கமைந்த,
மாயனை மாதவனை
ததித்தென்னை யகன்றஇவள்,
வேயன தோள்விசிறிப்
பெடையன்ன மெனநடந்து,
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவர்கொலோ! 5
என்னிடம் இரக்கமின்றிச் சென்றுவிட்டாளே!
1213. என்துணை யென்றெடுத்தேற்
கிறையேனு மிரங்கிற்றிலள்,
தன்துணை யாயவென்றன்
தனிமைக்கு மிரங்கிற்றிலள்,
வன்துணை வானவர்க்காய்
வரஞ்செற்றரங் கத்துறையும்,
இன்துணை வன்னொடும்போ
யெழிலாலி புகுவர்கொலோ! 6
நம்பின்னை மணாளனை விரும்பினாளே!
1214. அன்னையு மத்தனுமென்
றடியோமுக் கிரங்கிற்றிலள்,
பின்னைதன் காதலன்றன்
பெருந்தோள்நலம் பேணினளால்,
மின்னையும் வஞ்சியையும்
வென்றிலங்கு மிடையாள்நடந்து,
புன்னையும் அன்னமும்சூழ்
புனலாலி புகுவர்கொலோ! 7
யாவரும் தொழுமாறு ஆலி புகுவரோ?
1215. முற்றிலும் பைங்கிளியும்
பந்துமூசலும் பேசுகின்ற,
சிற்றில்மென் பூவையும்விட்
டகன்றசெழுங் கோதைதன்னை,
பெற்றிலேன் முற்றிழையைப்
பிறப்பிலிபின் னேநடந்து,
மற்றெல்லாம் கைதொழப்போய்
வயலாலி புகுவர்கொலோ! 8
நெடுமாலும் என் மகளும் ஆலி புகுவரோ?
1216. காவியங் கண்ணியெண்ணில்
கடிமாமலர்ப் பாவையப்பாள்,
பாவியேன் பெற்றமையால்
பணைத்தோளி பரக்கழிந்து,
தூவிசே ரன்னமன்ன
நடையாள்நெடு மாலொடும்போய்,
வாவியந் தண்பணைசூழ்
வயலாலி புகுவர்கொலோ! 9
இத்தமிழ்மாலை படித்தோர் தேவருலகு அடைவர்
1217. தாய்மனம் நின்றிரங்கத்
தனியேநெடு மால்துணையா,
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவரென்று,
காய்சின வேல்கலிய
னொலிசெய்தமிழ் மாலைபத்தும்,
மேவிய நெஞ்சுடையார்
தஞ்சமாவது விணணுலகே. 10
அடிவரவு: கள்வன் பண்டு அஞ்சுவன் ஏதவன் தாய் என் அன்னை முற்றில் காவி தாய்மனம் -- நந்தா.
.