போதலர்ந்த

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

நான்காம் பத்து

போதலர்ந்த

திருத்தேவனார் தொகை

தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனைச் சேவிக்க வந்து திரண்டு நின்ற இடமாதலால் இவ்வூருக்குத் திருத்தேவனார் தொகை என்று பெயர் வந்தது. இதைக் கீழ்ச்சாலை என்றும் கூறுவர். இவ்வூர் திருநாங்கூரிலிருந்து ஒரு மைல் தொலைவில் மண்ணியாற்றின் தென்கரையில் உள்ளது. இது திருநாங்கூர்த் திவ்விய தேசக் கணக்கில் சேர்ந்தது.

கொச்சசுக் கலிப்பா

மாதவப் பெருமாள் இருக்குமிடம் இத்தலம்

1248. போதலர்ந்த பொழில்சோலைப்

புறமெங்கும் பொருதிரைகள்,

தாதுதிர வந்தலைக்கும்

தடமண்ணித் தென்கரைமேல்,

மாதவன்றா னுறையுமிடம்

வயல்நாங்கை, வரிவண்டு

தேதெனவென் றிசைபாடும்

திருத்தேவ னார்தொகையே. 1

வேதப்பொருளே எம்பெருமான்

1249. யாவருமா யாவையுமா

யெழில்வேதப் பொருள்களுமாய்

மூவருமாய் முதலாய

மூர்த்தியமர்ந் துறையுமிடம்,

மாவரும்திண் படைமன்னை

வென்றிகொள்வார் மன்னுநாங்கை,

தேவரும்சென் றிறைஞ்சுபொழில்

திருத்தேவ னார்தொகையே. 2

எல்லாப் பொருளுமாவான் எம்பெருமான்

1250. வானாடும் மண்ணாடும்

மற்றுள்ள பல்லுயிரும்,

தானாய வெம்பெருமான்

தலைவனமர்ந் துறையுமிடம்,

ஆனாத பெருஞ்செல்வத்

தருமறையோர் நாக்கைதன்னுள்,

தேனாரு மலர்ப்பொழில்சூழ்

திருத்தேவ னார்தொகையே. 3

தேவர்கள் தொழுமிடம் திருத்தேவனார் தொகை

1251. இந்திரனு மிகையவரும்

முனிவர்களும் எழிலமைந்த,

சந்தமலர்ச் சதுமுகனும்

கதிரவனும் சந்திரனும்,

'எந்தையெமக் கருள்',எனநின்

றருளிமிடம் எழில்நாங்கை

சுந்தரநல் பொழில்புடைசூழ்

திருத்தேவ னார்தொகையே. 4

உலகேழு முண்டவன் உறைவிடம் இது

1252. அண்டமுமிவ் வலைகடலு

மவனிகளும் குலவரையும்,

உண்டபிரா னுறையுமிடம்

ஒளிமணிசந் தகில்கனகம்,

தெண்டிரைகள் வரத்திரட்டும்

திகழ்மண்ணித் தென்கரைமேல்,

திண்திறலார் பயில்நாங்கைத்

திருத்தேவ னார்தொகையே. 5

ஆலிலையில் பள்ளி கொண்டவன் இடம் இது

1253. ஞாலமெல்லா மமுதுசெய்து

நான்மறையும் தொடராத,

பாலகனா யாலிலையில்

பள்ளிகொள்ளும் பரமனிடம்,

சாலிவளம் பெருகிவரும்

தடமண்ணித் தென்கரைமேல்,

சேலுகளும் வயல்நாங்கைத்

திருத்தேவ னார்தொகையே. 6

நரசிங்கனின் இடமே திருத்தேவனார் தொகை

1254. ஓடாத வாளரியி

னுருவாகி யிரணியனை,

வாடாத வள்ளுகிரால்

பிளந்தளைந்த மாலதிடம்,

ஏடேறு பெருஞ்செல்வத்

தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,

சேடேறு பொழில்தழுவு

திருத்தேவ னார்தொகையே. 7

மைதிலியை மணம் புரிந்தவன் மகிழ்விடம் இதுதான்

1255. வாராரு மிளங்கொங்கை

மைதிலியை மணம்புணர்வான்,

காரார்திண் சிலையிறுத்த

தனிக்காளை கருதுமிடம்,

ஏராரும் பெருஞ்செல்வத்

தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,

சீராரும் மலர்ப்பொழில்சூழ்

திருத்தேவ னார்தொகையே. 8

குவலயாபீடத்தைக் கொன்றவன் கோயில் இது

1256. கும்பமிகு மதயானை

பாகனொடும் குலைந்துவிழ,

கொம்பனைப் பறித்தெறிந்த

கூத்தனமர்ந் துறையுமிடம்,

வம்பவிழும் செண்பகத்தின்

மணங்கமழும் நாங்கைதன்னுள்,

செம்பொன்மதிள் பொழில்புடைசூழ்

திருத்தேவ னார்தொகையே. 9

வைகுந்தத்தில் தேவரோடு இருப்பர்

1257. காரார்ந்த திருமேனிக்

கண்ணனமர்ந் துறையுமிடம்,

சீரார்ந்த பொழில்நாங்கைத்

திருத்தேவ னார்தொகைமேல்,

கூரார்ந்த வேற்கலியன்

கூறுதமிழ் பத்தும்வல்லார்

ஏரார்ந்த வைகுந்தத்

திமையவரோ டிருப்பாரே. 10

அடிவரவு: போதலர்ந்த யாவருமாய் வானாடும் இந்திரன் அண்டம் ஞாலம் ஓடாத வாரார் காரார் -- கம்பமா.



 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திருமடந்தை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கம்பமா
Next