கைம்மானம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

கைம்மானம்

திருவரங்கம் -3

திருவரங்கனின் பெருமைகளையெல்லாம் ஈண்டு விளக்குகிறார் ஆழ்வார்.

கலிவிருத்தம்

திருமாலைத் தென்னரங்கத்தில் கண்டேன்

1398. கைம்மான மழகளிற்றைக்

கடற்கிடந்த கருமணியை,

மைம்மான மரதகத்தை

மறையுரைத்த திருமாலை,

எம்மானை எனக்கென்று

மினியானைப் பனிகாத்த

அம்மானை, யான்கண்ட

தணிநீர்த் தென் னரங்கத்தே. 1

உலகேழும் உண்டவனை அரங்கத்தில் கண்டேன்

1399. பேரானைக் குறுங்குடியெம்

பெருமானை, திருத்தண்கால்

ஊரானைக் கரம்பனூர்

உத்தமனை, முத்திலங்கு

காரார்தின் கடலேழு

மலையேழிவ் வுலகேழுண்டும்,

ஆராதென் றிருந்தானைக்

கண்டதுதென் னரங்கத்தே. 2

அடியார் மனத்தில் இருப்பவன் அரங்கன்

1400. ஏனாகி யுலகிடந்தன்

றிருநிலனும் பெருவிசும்பும்,

தானாய பெருமானைத்

தன்னடியார் மனத்தென்றும்

தேனாகி யமுதாகித்

திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்

ஆனாயன் ஆனானைக்

கண்டதுதென் னரங்கத்தே. 3

இரணியனை அழித்தவன் இடம் அரங்கம்

1401.வளர்ந்தவனைத் தடங்க்டலுள்

வலியுருவில் திரிசகடம்,

தளர்ந்துதிர வுதைத்தவனைத்

தரியாதன் றிரணியனைப்

பிளந்தவனை, பெருநிலமீ

ரடிநீட்டிப் பண்டொருநாள்

அளந்தவனை, யான்கண்ட

தணிநீர்த்தென் னரங்கத்தே. 4

யாகங்களில் அவியுணவை உண்பவன் இடம்

1402. நீரழலாய் நெடுநிலனாய்

நின்றானை, அன்றரக்கன்

ஊரழலா லுண்டானைக்

கண்டார்பின் காணாமே,

பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப்

பின்மறையோர் மந்திரத்தின்,

ஆரழலா லுண்டானைக்

கண்டதுதென் னரங்கத்தே. 5

கம்சனைக் கொன்றவன் அரங்கன்

1403. தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார்

தவநெறியை, தரியாது

கஞ்சனைக்கொண் றன்றுலக

முண்டுமிழ்ந்த கற்பகத்தை,

வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்

விசையுருவை யசைவித்த,

அஞ்சிறைப்புட் பாகனையான்

கண்டதுதென் னரங்கத்தே. 6

என் உள்ளத்தே உறைபவன் அரங்கன்

1404. சிந்தனையைத் தவநெறியைத்

திருமாலை, பிரியாது

வந்தெனது மனத்திருந்த

வடமலையை, வரிகண்டார்

கொந்தணைந்த பொழில்கோவ

லுலகளப்பா னடிநிமிர்த்த

அந்தணனை, யான்கண்ட

தணிநீர்த்தென் னரங்கத்தே. 7

யாவர்க்கும் பிரான் அரங்கன்

1405. துவரித்த வுடையார்க்கும்

தூய்மையில்லாச் சமணர்க்கும்,

அவர்கட்மங் கருளில்லா

அருளானை, தன்னடைந்த

எமர்கட்கு மடியேற்கு

மெம்மாற்கு மெம்மனைக்கும்,

அமரர்க்கும் பிரானாரைக்

கண்டதுதென் னரங்கத்தே. 8

மெய்யார்க்கு மெய்யன் அரங்கன்

1406. பொய்வண்ணம் மனத்தகற்றிப்

புலனைந்தும் செலவைத்து,

மெய்வண்ணம் நினைந்தவர்க்கு

மெய்ந்நின்ற வித்தகனை,

மைவண்ணம் கருமுகில்போல்

திகழ்வண்ண மரதகத்தின்,

அவ்வண்ண வண்ணனையான்

கண்டதுதென் னரங்கத்தே. 9

இவற்றைப் பாராயணம் செய்க: தீவினை தீரும்

1407. ஆமருவி நிரைமேய்த்த

அணியரங்கத் தம்மானை,

காமருசீர்க் கலிகன்றி

யலிசெய்த மலிபுகழ்சேர்,

நாமருவு தமிழ்மாலை

நாலிரண்டோ டிரண்டினையும்,

நாமருவி வல்லார்மேல்

சாராதீ வினைதாமே. 10

அடிவரவு: கைம்மானம் பேரானை ஏனாகி வளர்ந்த நீர் தம் சிந்தனை துவரித்த பொய் ஆமருவி -- பண்டை.










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வெருவாதாள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பண்டை
Next