பொறுத்தேன்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

பொறுத்தேன்

திருவிண்ணகர்-2

ஈண்டு உள்ளனவும் திருவிண்ணகர்ப் பாசுரங்களே, முன்பு ஆழ்வார் 'வேண்டேன் மனை வாழ்க்கையை'என்றார். பகவான் ஓடி வந்து அருள் கொடுக்கவில்லை. 'என் குற்றங்களைப் பாராதே. பிராட்டியைச் சேர்ந்தவன் எனக்கருதி என்னை கொள்'என்று அவர் ஈண்டு வேண்டுகிறார்.

கலிநிலைத்துறை

எல்லாவற்றையும் துறந்து நின்னை அடைந்தேன்

1458. பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு

ளின்ப மெனவிரண்டும்

இறுத்தேன், ஐம்புலன் கட்கிட

னாயின வாயிலொட்டி

அறுத்தேன், ஆர்வச்செற் றம் அவை

தம்மை மனத்தகற்றி

வெறுத்தேன், நின்னடைந் தேன்திரு

விண்ணகர் மேயவனே! 1

திருவிண்ணகரானே!நீயே சரணம்

1459. மறந்தே னுன்னைமு னம்மறந்

தமதி யின்மனத்தால்,

இறந்தே னெத்த னையுமத

னாலிடும் பைக்குழியில்,

பிறந்தே யெய்த்தொழிந்

தேன்பெரு மானே திருமார்பா,

சிறந்தேன் நின்னடிக் கேதிரு

விண்ணகர் மேயவனே! 2

மனத்திருந்த தேனே!உன்னையே சரணடைந்தேன்

1460. மானேய் நோக்கியர் தம்வயிற்

றுக்குழி யிலுழைக்கும்,

ஊனேய் ஆக்கை தனையுத

வாமை யுணர்ந்துணர்ந்து,

வானே!மாநில மே!வந்து

வந்தென் மனத்திருந்த

தேனே, நின்னடைந் தேன்திரு

விண்ணகர் மேயவனே! 3

பந்தபாசங்களை அகற்றி உன்னைச் சேர்ந்தேன்

1461. பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி

ரென்றிவர் பின்னுதவா

தறிந்தேன், நீபணித் தஅரு

ளென்னுமொள் வாளுருவி

எறிந்தேன், ஐம்புலன் கள்இடர்

தீர வெறிந்துவந்து

செறிந்தேன், நின்னடிக் கேதிரு

விண்ணகர் மேயவனே! 4

எதுவும் நிலையாது:எனவே நின்னைச் சேர்ந்தேன்

1462. பாண்டேன் வண்டறை யும்குழ

லார்கள்பல் லாண்டிசைப்ப,

ஆண்டார் வையமெல் லாம்அர

சாகி,முன் னாண்டவரே

மாண்டா ரென்றுவந் தார்அந்

தோ!மனை வாழ்க்கைதன்னை

வேண்டேன் நின்னடைந் தேன்திரு

விண்ணகர் மேயவனே! 5

மல்லர்களை அடர்த்தவனே!சரணம்

1463. கல்லா வைம்புலன் கள்அவை

கண்டவா செய்யகில்லேன்,

மல்லா!மல்லம ருள்மல்

லர்மாள மல்லடர்த்த

மல்லா, மல்லலம் சீர்மதிள்

நீரிலங் கையழித்த

வில்லா, நின்டைந் தேன்திரு

விண்ணகர் மேயவனே! 6

திருவிண்ணகரானே!நீயே கதி

1464. வேறா யானிரந் தேன்வெகு

ளாது மனக்கொளெந்தாய்,

ஆறா வெந்நர கத்தடி

யேனை யிடக்கருதி,

கூறா ஐவர்வந் துகுமைக்

கக்குடி விட்டவரை,

தேறா துன்னடைந் தேன்திரு

விண்ணகர் மேயவனே! 7

வானவர் தலைவா!யான் நின் அடைக்கலம்

1465. தீவாய் வல்வினை யாருட

னின்று சிறந்தவர்போல்,

மேவா வெந்நர கத்திட

ருற்று விரைந்துவந்தார்,

மூவா வானவர் தம்முதல்

வா!மதி கோள்விடுத்த

தேவா, நின்னடைத் தேன்திரு

விண்ணகர் மேயவனே! 8

பாண்டவர் தூதா!என்னை ஏற்றுக்கொள்

1466. போதார் தாமரை யாள்புல

விக்குல வானவர்தம்

கோதா, கோதில்செங் கோல்குடை

மன்ன ரிடைநடந்த

தூதா, தூமொழி யாய்!சுடர்

போலென் மனத்திருந்த

வேதா, நின்னடைந் தேன்திரு

விண்ணகர் மேயவனே! 9

தேவர் உலகு சேர்வர்

1467. தேனார் பூம்புற வில்திரு

விண்ணகர் மேயவனை,

வானா ரும்மதில் சூழ்வயல்

மங்கையர் கோன்,மருவார்

ஊனார் வேல்கலி யனொலி

செய்தமிழ் மாலைவல்லார்,

கோனாய் வானவர் தம்கொடி

மாநகர் கூடுவரே. 10

அடிவரவு:பொறுத்தேன் மறந்தேன் மானேய் பிறிந்தேன் பாண்டேன் கல்லா வேறா தீவாய் போதார் தேனார் -- துறப்பேன்.


 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வண்டுணும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  துறப்பேன்
Next