ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
ஆறாம் பத்து
கிடந்த நம்பி
திருநறையூர் -- 7
நமோ நாராயணம் என்னும் திருப்பெயரையே சொல்லுமாறு திருநறையூரில் ஆழ்வார் நம்க்கெல்லாம் அறிவுரை கூறுகிறார்.
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
திருமாலின் திருநாமம் நமோநாராயணம்
1538. கிடந்த நம்பி குடந்தை மேவிக்
கேழ லாயுலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி
எறிஞர் அரணழிய,
கடந்த நம்பி கடியா ரிலங்கை
உலகை யீரடியால்,
நடந்த நம்பி நாமம் சொல்லில்
நமோநா ராயணமே. 1
உலகளந்தான் திருப்பெயர் நமோநாராயணம்
1539. விடந்தா னுடைய அரவம் வெருவச்
செருவில் முனநாள்,முன்
தடந்தா மரைநீர்ப் பொய்கை புக்கு
மிக்க தாடாளன்,
இடந்தான் வையம் கேழ லாகி
உலகை யீரடியால்,
நடந்தா னுடைய நாமம் சொல்லில்
நமோநா ராயணமே. 2
வெண்ணெயுண்டான் திருநாமம் நமோநாராயணம்
1540. பூணா தனலும் தறுகண் வேழம்
மறுக வளைமருப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட
பெருமான் திருமார்வன்,
பாணா வண்டு முரலும் கூந்தல்
ஆய்ச்சி தயிர்வெண்ணெய்,
நாணா துண்டான் நாமம் சொல்லில்
நமோநா ராயணமே. 3
விபீடணனுக்கு நல்லவன் நாமம் நமோநாராயணம்
1541. கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள்
நச்சிப் பாடகத்துள்,
எல்லா வுலகும் வணங்க விருந்த
அம்மான், இலங்கைக்கோன்
வல்லா ளாகம் வில்லால் முனிந்த
எந்தை, விபீடணற்கு
நல்லா னுடைய நாமம் சொல்லில்
நமோநா ராயணமே. 4
கோவர்த்தனன் திருநாமம் நமோநாராயணம்
1542. குடையா வரையால் நிரைமுன் காத்த
பெருமான், மருவாத
விடைதா னேழும் வென்றான் கோவல்
நின்றான், தென்னிலங்கை
அடையா அரக்கர் வீயப் பொருது
மேவி வெங்கூற்றம்,
நடையா வுண்ணக் கண்டான் நாமம்
நமோநா ராயணமே. 5
நமோநாராயணம் என்றே சொல்லுங்கள்
1543. கான எண்கும் குரங்கும் முகவும்
படையா, அடலரக்கர்
மான மழித்து நின்ற வென்றி
அம்மான், எனக்கென்றும்
தேனும் பாலும் அமுது மாய
திருமால் திருநாமம்,
நானும் சொன்னேன் நமரு முரைமின்
நமோநா ராயணமே. 6
நமோநாராயணம் என்ற நாமம் மிக நல்லது
1544. நின்ற வரையும் கிடந்த கடலும்
திசையு மிருநிலனும்,
ஒன்று மொழியா வண்ண மெண்ணி
நின்ற அம்மானார்,
குன்று குடையா வெடுத்த அடிக
ளுடைய திருநாமம்,
நன்று காண்மின் தொண்டீர்!சொன்னேன்
நமோநா ராயணமே. 7
ஆநிரை காத்தவன் பெயர் நமோநாராயணம்
1545. கடுங்கால் மாரி கல்லே பொழிய
அல்லே யெமக்கென்று
படுங்கால், நீயே சரணென் றாயர்
அஞ்ச அஞ்சாமுன்,
நெடுங்கால் குன்றம் குடையன் றேந்தி
நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்
நமோநா ராயணமே. 8
நமோநாராயணம் என்றால் வினைகள் நீங்கும்
1546. பொங்கு புணரிக் கடல்சூ ழாடை
நிலமா மகள்மலர்மா
மங்கை, பிரமன் சிலனிந் திரன்வா
னவர்நா யகராய,
எங்க வடிக ளிமையோர் தலைவ
ருடைய திருநாமம்,
நங்கள் வினைகள் தவிர வுரைமின்
நமோநா ராயணமே. 9
இவற்றைப் பாடினால் பாவம் பறந்துவிடும்
1547. வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று
நறையூர் நெடுமாலை,
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு
நம்பி நாமத்தை,
காவித் தடங்கண் மடவார் கேள்வன்
கலிய னொலிமாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம்
நில்லா வீயுமே. 10
அடிவரவு:கிடந்த விடம் பூண் கல் குடை கான நின்ற கடுங்கால் பொங்கு வாவி -- கறவா.
.