சீலைக்குதம்பை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

மூன்றாம் பத்து

சீலைக்குதம்பை

யசோதை கன்றுகளை மேய்க்கக் கண்ணனைக் காட்டிற்கு அனுப்பினாள்;ஆனால் அவன் பிரிவு தாளாது ஏங்கினாள். மாலையில் அவன் திரும்பி வருகிறான். அவனுடைய அலங்காரங்களைக் கண்டு மகிழ்கிறாள். பிறரையும் அழைத்து அவ்வழகைக் காணச் செய்கிறாள். தான் பெற்ற பெருமைகளையும், கண்ணனது தீம்புகளையும் கூறி, "கண்ணா!நீ நாளை முதல் கன்றின் பின் போகாமல் கோலம் செய்து இங்கே இரு"என்கிறாள். ஆழ்வார் அசோதையாக இருந்து அப்படியே அநுபவித்துக் கூறுகிறார்.

கண்ணன் கன்றுகள் மேய்த்து வருவதுகண்டு அன்னை மகிழ்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கடல் வண்ணணின் இடைக்கோலம்

244. சீலைக் குதம்பை ஒருகா தொருகாது

செந்நிற மேல்தோன் றிப்பூ,

கோலப் பணைக்கச்சும் கூறை யுடையும்

குளிர்முத் தின்கோ டாலமும்,

காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன்

வேடத்தை வந்து காணீர்,

ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்!

நானேமற் றாரு மில்லை. 1

மன்னிய சீர் மதுசூதனன்

245. கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில்

காவிரித் தென்ன ரங்கம்,

மன்னிய சீர்மது சூதனா!கேசவா!

பாவியேன் வாழ்வு கந்து,

உன்னை யிளங்கன்று மேய்க்கச் சிறுகாலே

ஊட்டி யருப்ப டுத்தேன்,

என்னில் மனம்வலி யாளரு பெண்ணில்லை

என்குட்ட னே!முத் தம்தா. 2

கோடல் பூச்சூடிவரும் தாமோதரன்

246. காடுக ளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து

மறியோடி, கார்க்கோ டல்பூச்

சூடி வருகின்ற தாமோ தரா!கற்றுத்

தூளிகா ணுன்னு டம்பு,

பேடை மயிற்சாயல் பின்னை மணாளா!

நீராட் டமைத்து வைத்தேன்,

ஆடி யமுதுசெய் அப்பனு முண்டிலன்

உன்னோ டுடனே யுண்பான். 3

கடிபொழில் வேங்கடவன்

247. கடியார் பொழிலணி வேங்கட வா!கரும்

போரே றே!நீ யுகக்கும்

குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக்

கொள்ளாதே போனாய் மாலே,

கடியவெங் கானிடைக் கன்றின்பின் போன

சிறுக்குட் டச்செங் கமல

அடியும் வெதும்பி,உன் கண்கள் சிவந்தாய்

அசைந்திட் டாய்நீ யெம்பிரான்! 4

சிற்றாயர் சிங்கம்

248. பற்றார் நடுங்கமுன் பாஞ்சசன் னியத்தை

வாய்வைத்த போரே றே!என்

சிற்றாயர் சிங்கமே!சீதைம ணாளா!

சிறுக்குட்டச் செங்கண் மாலே,

சிற்றாடை யும்சிறுப் பத்திர முமிவை

கட்டிலின் மேல்வைத் துப்போய்,

கற்றாய ரோடுநீ கன்று மேய்த்துக்

கலந்துடன் வந்தாய் போலும்! 5

காயம்பூ வண்ணன்

249. அஞ்சுட ராழியுன் கையகத் தேந்தும்

அழகா!நீ பொய்கை புக்கு,

நஞ்சுமிழ் நாகத்தி னோடு பிணங்கவும்

நானுயிர் வாழ்ந்தி ருந்தேன்,

என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?

ஏதுமோ ரச்ச மில்லை,

கஞ்சன் மனத்துக் குகப்பன வேசெய்தாய்

காயாம்பூ வண்ணங் கொண்டாய்! 6

பார்கடல் வண்ணன்

250. பன்றியு மாமையு மீனமு மாகிய

பார்கடல் வண்ணா, உன்மேல்

கன்றி னுருவாகி மேய்புலத் தேவந்த

கள்ள வசுரர் தம்மை,

சென்று பிடித்துச் சிறுகைக ளாலே

விளங்கா யெறிந்தாய் போலும்,

என்றுமென் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்

அங்ஙன மேயா வார்களே. 7

வாட்டமிலாப்புகழ் வாசுதேவன்

251. கேட்டறி யாதன கேட்கின்றேன் கேசவா!

கோவல ரிந்தி ரற்கு,

காட்டிய சோறும் கறியும் தயிரும்

கலந்துட னுண்டாய் போலும்,

ஊட்ட முதலிலே னுன்றன் னைக்கொண்

டொருபோ துமெனக் கரிது,

வாட்டமி லாப்புகழ் வாசுதே வா!உன்னை

அஞ்சுவ னின்று தொட்டும். 8

கோலம் செய்து இங்கே இரு

252. திண்ணார் வெண்சங் குடையாய் திருநாள்

திருவோண மின்றேழா நாள்முன்,

பண்ணேர் மொழியாரைக் கூவி முளையட்டிப்

பல்லாண்டு கூறு வித்தேன்,

கண்ணாலஞ் செய்யக் கறியும் கலத்த

தரிசியு மாக்கி வைத்தேன்

கண்ணா!நீ நாளைத்தொட் டுக்கன்றின் பின்போகேல்

கோலஞ் செய்திங் கேயிரு. 9

கடல் வண்ணன் கழவிணை காண்பவர்

253. புற்றர வல்கு லசோதைநல் லாய்ச்சிதன்

புத்தி ரன்கோ விந்தனை,

கற்றினம் மேய்த்து வரக்கண் டுகந்தவள்

கற்பித்த மாற்ற மெல்லாம்,

செற்றமி லாதவர் வாழ்தரு தென்புது

வைவிட் டுசித் தன்சொல்,

கற்றிவை பாடவல் லார்கடல் வண்ணன்

கழவி ணைகாண் பர்களே. 10

அடிவரவு:சிலை கன்னி காடுகள் கடி பற்றார் அஞ்சுடர் பன்றி கேட்டு திண்ணார் புற்று - தழைகளும்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is அஞ்சன வண்ணனை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தழைகளும்
Next