ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
நாச்சியார் திருமொழி
நாமமாயிரம்
மன்மதன் வரும் காலம் பங்குனி மாதம். அவன் வருகைக்காக ஆயர் பெண்கள் வீதிகளை அழகு மிளிரச் செய்கிறார்கள்;கோலமிடுகிறார்கள்:மணலாலும், மற்றப் பொருள்களாலும் மிகச் சிறிய விளையாட்டு வீடுகளை அமைக்கிறார்கள். கண்ணன் விரைவாக வந்து அவற்றை அழிக்க முயல்கிறான். 'கண்ணா! நாங்கள் அருக்குமிடத்திற்கு வருகிறாய். உன் முகத்தைக் காட்டுகிறாய்!புன்முறுவல் செய்கிறாய்!எங்கள் சிற்றிலையும் அழிக்கறாய். நெஞ்சையும் அழிக்கிறாய்!இது நியாயமா?'என்று கூறுகிறார்கள்.
சிறுமியர் மாயனைத் தம் 'சிற்றில் சிதையேல்!'எனல்
கலி விருத்தம்
நாராயணா!எங்கள் சிற்றிலைச் சிதையாதே
514. நாமமாயிர மேத்தநின்ற
நாராயணாநர னே,உன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா
லெமக்குவாதை தவிருமே,
காமன்போதரு காலமென்றுபங்
குனிநாள்கடை பாரித்தோம்,
தீமைசெய்யும் சிழிதரா!எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே. ¢ 1
எங்கள்மீது ஏன் இரக்கம் உண்டாகவில்லை?
515. இன்றுமுற்றும் முதுகுநோவ
இருந்திழைத்தஇச் சிற்றிலை,
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,
அன்றுபாலக னாகியாலிலை
மேல்துயின்றவெம் மாதியாய்,
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக்
கம்மெழா ததெம் பாவமே. 2
ஆனைகாத்தவனே!அருளாய்
516. குண்டுநீருறை கோளரீ!மத
யானைகோள்விடுத் தாய்,உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
கண்களாலிட்டு வாதியேல்,
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக்
கைகளால்சிர மப்பட்டோம்,
தெண்டிரைக்கடற் பள்ளியாய்!எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே. 3
கண்ணா!உன்முகம் மாயமந்திரமோ!
517. பெய்யுமாமுகில் போல்வண்ணா!உன்றன்
பேச்சும்செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
மாயமந்திரந் தான்கொலோ,
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
நோவநாங்களு ரைக்கிலோம்,
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையேலே. 4
எங்கள் உள்ளம் உன்னை நோக்கியே ஓடுகிறது
518. வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல
மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா!கேசவா!உன்
முகத்தனகண்க ளல்லவே. 5
இலங்கையை அழித்தவனே!எம்மைத் துன்புறுத்தாதே
519. முற்றிலாதபிள் ளைகளோம்முலை
போந்திலாதோமை, நாடொறும்
சிற்றில்மேலிட்டுக் கொண்டுநீசிறி
துண்டுதிண்ணென நாமது
கற்றிலோம்,கட லையடைத்தரக்-
கர்குலங்களை முற்றவும்
செற்று,இலங்கையைப் பூசலாக்கிய
சேவகா!எம்மை வாதியேல். 6
யாங்கள் சிறுமியர்:எங்களை ஏன் துன்புறுத்துகிறாய்?
520. பேதநன்கறி வார்களோடிவை
பேசினால்பெரி தின்சுவை,
யாதுமொன்றறி யாதபிள்ளைக
ளோமைநீநலிந் தென்பயன்,
ஓதாமாகடல் வண்ணா!உன்மண
வாட்டிமாரொடு சூழறும்,
சேதுபந்தம் திருத்தினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையேலே. 7
எங்களைத் துன்புறுத்துவதால் உனக்கு என்ன பயன்?
521. வட்டவாய்ச்சிறு தூதையோடு
சிறுசுளகும்ண லுங்கொண்டு,
இட்டமாவிளை யாடுவோங்களைச்
சிற்றிலீடழித் தென்பயன்,
தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர்ச்
சக்கரம்கையி லேந்தினாய்,
கட்டியும்கைத் தாலின்னாமை
அறிதியேகடல் வண்ணனே! 8
சிற்றிலும் சிதைப்பான், சிந்தையும் சிதைப்பான் கோவிந்தன்
532. முற்றத்தூடு புகுந்துநின்முகங்
காட்டிப்புன்முறு வல்செய்து,
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக்
கக்கடவையோ கோவிந்தா,
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற
நீண்டளந்துகொண் டாய்,எம்மைப்ப--
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப்
பக்கம்நின்றவ ரென்சொல்லார்? 9
குறை நீங்கி வைகுந்தம் அடைவர்
523. 'சீதைவாயமு தமுண்டாய்!எங்கள்
சிற்றில்நீசிதை யேல்!' என்று,
வீதிவாய்விளை யாடுமாயர்
சிறுமியர்மழ லைச்சொல்லை,
வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி
புத்தூர்மன்விட்டு சித்தன்றன்,
கோதைவாய்த்தமிழ் வல்லர்குறை
வின்றிவைகுந்தம் சேர்வரே. 10
(சிறுமியர் கடற்கரைக்கோ, ஆற்றங்கரைக்கோ சென்றால் மணலைக் குவித்து அதில் வாயில்கள் வைத்து விளையாட்டு (மேடுகள்) வீடுகள் அமைப்பது வழக்கம். இதைச் சிற்றில் (சிறுமை+இல்) என்று கூறுவர்.)
அடிவரவு:நாமம் இன்று குண்டு பெய் வெள்ளை முற்றிலாத பேதம் வட்ட முற்றத்தூடு சீதை--- கோழி.