ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
நாச்சியார் திருமொழி
கண்ணனென்னும்
'தாய்மார்களே!எனக்கு உபதேசம் செய்வதை நிறுத்தி விட்டு, கண்ணன் அணிந்த பீதாம்பரத்தைக் கொண்டு வந்து என்மீது வீசுங்கள். அவனணிந்த திருத்துழாயைக் கொண்டு வந்து என் கூந்தலில் செருகுங்கள். அவனுடைய வனமாலையைக் கொண்டு வந்து என்மீது போட்டுப் புரட்டுங்கள். அவன் நடந்து சென்ற இடங்களிலுள்ள மண்ணைக் கொண்டு வந்து என்மீது பூசுங்கள். இம்முறைகளுள் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால் நீங்கள் என்னைக் காப்பாற்றலாம்'என்று ஆண்டாள் கூறுகிறாள்.
'அச்சுதன் அணிபொருட்கொண்டு அவலம் தணிமின்' எனல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கண்ணனது பீதாம்பரத்தைக் கொண்டு வீசுங்கள்
627. கண்ண னென்னும் கருந்தெய்வம்
காட்சி புளிப்பெய் தாற்போலப்
புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
புறநின் றழகு பேசாதே,
பெண்ணின் வருத்த மறியாத
பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு,என்னை
வாட்டம் தணிய வீசீரே. 1
திருத்துழாயை என் கூந்தலில் சூட்டுங்கள்
628. பாலா லிலையில் துயில்கொண்ட
பரமன் வலைப்பட் டிருந்தேனை,
வேலால் துன்னம் பெய்தாற்போல்
வேண்டிற் றெல்லாம் பேசாதே,
கோலால் நிரைமேய்த் தாயனாய்க்
குடந்தைக் கிடந்த குடமாடி,
நீலார் தண்ணந் துழாய்கொண்டென்
நெறிமென் குழல்மேல் சூட்டீரே. 2
கண்ணன் சூடிய மாலையை எனக்குச் சூட்டுங்கள்
629. கஞ்சைக் காய்ந்த கருவில்லி
கடைக்க ணென்னும் சிறைக்கோலால்,
நெஞ்சூ டுருவ வேவுண்டு
நிலையும் தளர்ந்து நைவேனை,
அஞ்சே லென்னா னவனொருவன்
அவன்மார் வணிந்த வனமாலை,
வஞ்சி யாதே தருமாகில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3
கண்ணனின் வாய்ச்சுவை எனக்கு வேண்டும்
630. ஆரே யுலகத் தாற்றுவார்
ஆயர் பாடி கவர்ந்துண்ணும்,
காரே றுழக்க வுழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை,
ஆரா வமுத மனையான்றன்
அமுத வாயி லூறிய,
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி யிளைப்பை நீக்கீரே. 4
கண்ணன் ஊதும் குழல்வாய் நீரைத் தடவுங்கள்
631. அழிலும் தொழிலு முருக்காட்டான்
அஞ்சே லென்னா னவனொருவன்,
தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
சுற்றிச் சுழன்று போகானால்,
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே
நெடுமா லூதி வருகின்ற,
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே. 5
கண்ணணின் திருவடிப் பொடியைப் பூசுங்கள்
632. நடையன் றில்லா வுலகத்து
நந்த கோபன் மகனென்னும்,
கொடிய கடிய திருமாலால்
குளப்புக் கூறு கொளப்பட்டு,
புடையும் பெயர கில்லேன்நான்
போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
போகா வுயிரென் னுடம்பையே. 6
என்னைக் கண்ணனுடன் இணையுங்கள்
633. வெற்றிக் கருளக் கொடியான்றன்
ee தாடா வுலகத்து,
வெற்ற வெறிதே பெற்றதாய்
வேம்பே யாக வளர்த்தாளே,
குற்ற மற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பணைத்தோளோடு,
அற்ற குற்ற மவைதீர
அணைய வமுக்கிக் கட்டீரே. 7
என் மார்பைப் பறித்துக் கண்ணன் மார்பில் எறிவேன்
634. உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத,
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்,
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே. 8
ஒருநாள் கண்ணன் உண்மை சொல்வானா?
635. கொம்மை முலைக ளிடர்தீரக்
கோவிந் தற்கோர் குற்றேவல்,
இம்மைப் பிறவி செய்யாதே
இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்,
செம்மை யுடைய திருமார்வில்
சேர்த்தா னேலும் ஒருஞான்று,
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
விடைதான் தருமேல் மிகநன்றே. 9
துன்பக் கடலிலிருந்து நீங்குவர்
636. அல்லல் விளைத்த பெருமானை
ஆயர் பாடிக் கணிவிளக்கை,
வில்லி புதுவை நகர்நம்பி
விட்டு சித்தன் வியன்கோதை,
வில்லித் தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்,
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே. 10
அடிவரவு:கண்ணன் பால் கஞ்சை ஆரே அழில் நடை வெற்றி உள்ளே கொம்மை அல்லல் -- பட்டி.