ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெருமாள் திருமொழி
ஆலை நீள்கரும்பு
மகனின் திருவிளையாடல்களைக் கண்டுகளிக்கும் அனுபவத்தை இழந்த தேவகியாக இருந்துகொண்டு ஆழ்வார் அனுபவிக்கிறார்.
'கண்ணா!என்னை உனக்குத் தாய் என்கிறார்கள். உலகில் உள்ள தாய்மார்களுள் நான் கடைசியாக இருப்பவள். பாக்கியமில்லாதவள்!உன்னைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டவில்லை!நீ படுத்திருக்கும் அழகைக் காணவில்லை!உன்னுடைய இளம் பருவ இன்பத்தை நான் அனுபவிக்கவில்லை!உனக்குப் பால் கொடுக்கும் பாக்கியத்தையும் பெறவில்லை. ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் திருவிலேன். எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே!'என்று தேவகி புலம்புவது போல் ஆழ்வார் உள்ளமுருகக் கூறுகிறார்.
சேய் வளர் காட்சியின்சீரை யசோதைபோல்
தாய் தேவகி பெறாத் தாழ்வெண்ணிப் புலம்பல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தாய்மாருள் நான் கடையானவள்
708. 'ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ
அம்பு யத்தடங் கண்ணினன் தாலோ,
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ
வேழப் போதக மன்னவன் தாலோ,
ஏல வார்குழ லென்மகன் தாலோ'
என்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய,
தாலொ லித்திடும் திருவினை யில்லாத்
தாய ரில்கடை யாயின தாயே. 1
c மல்லாந்து கிடந்ததைக் காணப்பெற்றிலேன்
709. வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண்
மருவி மேலினி தொன்றினை நோக்கி,
முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள்
பொலியு நீர்முகில் குழவியே போல,
அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும்
அங்கை யோடணைந் தானையிற் கிடந்த,
கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ!
கேச வா!கெடு வேன்கெடு வேனே! 2
நந்தன் பெற்றனன் நல்வினை
710. முந்தை நன்முறை யன்புடை மகளிர்
முறைமு றைதந்தம் குறங்கிடை யிருத்தி,
'எந்தை யே!என்றன் குலப்பெருஞ் சுடரே!
எழுமு கில்கணத் தெழில்வக ரேறே,
உந்தை யாவன்?'என் றுரைப்பநின் செங்கேழ்
விரலி னும்கடைக் கண்ணினும் காட்ட,
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா
நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே! 3
நின் இளமைப்பருவ இன்பத்தை இழந்தேன்
711. களிநி லாவெழில் மதிபுரை முகமும்
கண்ண னே!திண்கை மார்வும்திண் டோளும்,
தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும்
தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த,
இளமை யின்பத்தை யின்றென்றென் கண்ணால்
பருகு வேற்கிவள் தாயென நினைந்த,
அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த
பாவி யேனென தாவிநில் லாதே! 4
எல்லாம் யசோதையே பெற்றாள்
712. மருவு நின்திரு நெற்றியில் சுட்டி
அசைத ரமணி வாயிடை முத்தம்
தருத லும்,உன்றன் தாதையைப் போலும்
வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர,
விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து
வெகுளி யாய்நின்று ரைக்குமவ் வுரையும்,
திருவி லேனென்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதைபெற் றாளே. 5
c உண்ட உணவின் மிச்சம் எனக்குக் கிடைக்கவில்லை!
713. தண்ணந் தாமரைக் கண்ணனே!கண்ணா!
தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையால்,
மண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன்
மார்வில் மன்னிடப் பெற்றிலே னந்தோ,
வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும்
வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்,
உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன்
என்னை என்செய்யப் பெற்றதெம் மோயே! 6
நின் திருக்கண் நோக்கத்தை இழந்தேன்
714. குழக னே!என்றன் கோமளப் பிள்ளாய்!
கோவிந் தா!என் குடங்கையில் மன்னி,
ஒழுகு பேரெழி லிளஞ்சிறு தளிர்போல்
ஒருகை யாலொரு முலைமுகம் நெருடா,
மழலை மென்னகை யிடையிடை யருளா
வாயி லேமுலை யிருக்கவென் முகத்தே,
எழில்கொள் நின்திருக் கண்ணிணை நோக்கந்-
தன்னை யுமிழந் தேனிழந் தேனே! 7
அசோதையே இன்பத்தின் இறுதி கண்டாள்
715. முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும்
முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும்
நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்,
அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்,
தொழுகை யுமிவை கண்ட அசோதை
தொல்லை யின்பத் திறுதிகண் டாளே. 8
நின் விளையாட்டுக்களைக் காணப்பெற்றிலேன்
716. குன்றி னால்குடை கவித்தும் கோலக்
குரவை கோத்த தும்குட மாட்டும்,
கன்றி னால்விள வெறிந்ததும் காலால்
காளி யன்தலை மிதித்தது முதலா,
வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம்
அனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர,
ஒன்றும் கண்டிடப் பெற்றிலே னடியேன்
காணு மாறினி யுண்டெனி லருளே. 9
கண்ணா!நீ நல்ல தாயைப் பெற்றாய்!
717. வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
வரண்டு நார்நரம் பெழக்கரிந் துக்க,
நஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ!
சுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய்,
கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய்!
கடைப்பட் டேன்வெறி தேமுலை சுமந்து,
தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன்
தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே! 10
நாரணன் உலகு நண்ணுவர்
718. மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை
வான்செ லுத்திவந் தீங்கணை மாயத்து,
எல்லை யில்பிள்ளை செய்வன காணாத்
தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்,
கொல்லி காவலன் மாலடி முடிமேல்
கோல மாம்குல சேகரன் சொன்ன,
நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள்
நண்ணு வாரொல்லை நாரண னுலகே. 11
அடிவரவு:ஆலை வடி முந்தை களி மருவு தண்ணம் குழகன் முழுதும் குன்றினால் வஞ்சம் மல்லை -- மன்னு.