முமுக்ஷு பற்றி ஆசார்யாளும் ஆதி நூல்களும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

முமுக்ஷுதைப் பற்றிப் பல இடங்களில் சொல்லியிருக்கும் ஆசார்யாள் குறிப்பாக சிலது ‘விவேக சூடாமணி’யில் மனோமய கோசத்தைப் பற்றி விஸ்தாரம் பண்ணும்போது சொல்லியிருக்கிறார் – அன்னமயத்திலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு கோசத்தையும் பற்றிச் சொல்லிக் கொண்டு போகும்போது மனோமயத்தைப் பற்றி வருகிற இடத்தில்.

சிரத்தை ஸமாதானங்களை புத்தி ஸம்பந்தப்படுத்தி [ஆசார்யாள்] சொன்னதாகப் பார்த்தோம். முமுக்ஷுதையைச் சொல்லும்போது மனஸை ஸம்பந்தப்படத்திச் சொல்லியிருக்கிறார். அதனால் முமுக்ஷுதை மனஸில்தான் ஏற்பட வேண்டியது என்று அர்த்தம் பண்ணிக் கொண்டுவிடக் கூடாது. மனஸ் என்று ஒன்று இல்லை என்று அடித்துப் போடுவதில் ஒருவன் ஆழமாகக் கவனம் வைத்தால்தான் ஸரியான முமுக்ஷுவாக ஆகி, அதற்கு மேல் ஸரியான வழியில் போக முடியும் என்றே காட்டுகிறார். ஒரு ஸ்டேஜ் வரையில், மனஸில் தோன்றுவதிலேயே நல்லதாக இருப்பவை கெட்டதாக இருப்பவை என்று சீர் பிரித்துக் கெட்டதைத் தள்ளி நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டியது. அப்புறம் மோக்ஷம் ஒன்றே குறி என்று தீவிர முமுக்ஷுதை ஏற்படப் பக்குவமாகும் போது, “நல்லதென்பதும் மனஸில் உற்பத்தியாகி, மனஸின் அநுபவத்திற்குள் வருவதாகத்தானே இருக்கிறது? ஆத்மாவோ மனஸாலும் பிடிக்க முடியாதது; மனஸ் நசித்த அப்புறமே அதை அடைய முடியும். ஆகையால் நல்லதுகள் என்று இருக்கும் பலவற்றையும், அவற்றுக்கு ஆச்ரயமும் விஷயமுமாகிற மனஸையுங்கூட நாம் தள்ளிவிட்டு, நல்லதோ கெட்டதோ இருக்கிற ஒன்றேயான ஆத்மாவையேதான் தேடி நாடி எல்லாம் பண்ண வேண்டும்” என்பதில் உறுதிப்பட வேண்டும். அதனால்தான் மனோமய கோசத்தைச் சொல்லும்போது முமுக்ஷுவுக்கான ‘அட்வைஸ்’, ‘வார்னிங்’ எல்லாம் கொடுக்கிறார்.

“முமுக்ஷு முதல் கார்யமாக (“அக்ரே” என்கிறார். “முதலில்” என்று அர்த்தம்; முதல் கார்யமாக) விவேக வைராக்யங்களை த்ருடமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த இரண்டும் ‘அதிரேக’ மாக, அதாவது முழுக்க முழுக்க, excessive-ஆக, இருந்தால்தான் சித்த சுத்தி உண்டாகும்” என்று1 பீடிகை போட்டுவிட்டு, “மனஸ் என்பது பெரிய புலி – மஹாவ்யாக்ரம். போக்ய விஷயங்கள் என்கிற காட்டில் அது உலாவிக் கொண்டிருக்கிறது. முமுக்ஷுவான ஸாது அந்தப் பக்கமே போகக்கூடாது” என்கிறார்2. மனஸ் புலி என்றால் அதையே தள்ளவேண்டுமென்றுதானே அர்த்தம்? [சிரித்து] “நீ அதற்குத் தள்ளியே இரு” என்கிறார். மனஸை வைத்துக் கொண்டு நல்லதை எண்ணுவது, பண்ணுவது ஆகியவையும் கூடாதவை என்று ஆகிவிட்டதல்லவா? இதற்கு விவேக வைராக்யங்களும் அவற்றால் ஏற்படும் பரிசுத்தியும் அவசியம். “போக்தா [போகங்களை அனுபவிப்பவன்] என்பவனாக இருந்து கொண்டிருக்கும் ஒரு மநுஷ்யனுக்கான அத்தனை விஷயங்களையும் அசேஷமாக (மிச்சம் மீதியில்லாமல்) மனஸ்தான் உற்பத்தி செய்கிறது3; கர்மாக்களிலேயும் அவற்றின் பலன்களை அநுபவிப்பதிலுமே ஒருவன் ஸதாகாலமும் சுழன்று சுழன்று வருவதற்கு மனஸ்தான் காரணம்4. சுருக்கமாகச் சொன்னால் அவித்யை (அதாவது, ஞானத்திற்கு நேர் ஆப்போஸிட்டான அஞ்ஞானம்) என்பதே மனஸ்தான்; தத்வம் உணர்ந்த பெரியவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள் – அத: ப்ராஹூர்-மநோ (அ) வித்யாம் பண்டிதாஸ் – தத்வ தர்சின:5. ஆகையினால் மனஸைத்தள்ள வேண்டும். தள்ளுவதற்குப் பூர்வாங்கமாக ஒரு முமுக்ஷு அதைப் பரிசுத்தி பண்ணி லேசாக்கி விடவேண்டும். அசுத்த எண்ணங்களால் அழுக்குப் பிடித்துத் தடித்துப் போயிருப்பதை சுத்தி பண்ணி லேசாக்கணும். அப்புறம் முக்தி உள்ளங்கை நெல்லிக்கனியாகக் கிடைத்துவிடும்6” என்றெல்லாம் சொல்கிறார்.

‘விவேக சூடாமணி’ உபதேசம் முழுதுமே முமுக்ஷுவுக்குத்தான் என்று அந்தப் புஸ்தகத்தை முடிக்கும்போது முத்தாய்ப்பு வைத்திருக்கிறார். அதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், முமுக்ஷுத்வம் என்பது அஸல் முக்தனாகவே ஆகிற க்ஷணம் வரையில் தொடர்கிறது என்று [தெரிகிறது]. ஸாதனை க்ரமத்தில் இதற்கப்புறம் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ச்ரவண, மனன, நிதித்யாஸனங்கள் பண்ணி ஸத்ய ஸாக்ஷாத்காரம் பெற்று முக்தனாக வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி, இதற்கு அப்புறம் ச்ரவண, மனனாதிகளைச் சொன்னாலும் அப்போதெல்லாமும் முமுக்ஷுதை – மோக்ஷம் அடையணும், அடையணும் என்ற தாபம் – தொடர்ந்து இருந்துகொண்டே இருக்க வேண்டும். நிதித்யாஸனத்தில் உச்சிக்குப் போய், ஸாக்ஷாத்காரத்திற்கு ரொம்பக் கிட்ட வந்துவிட்டவனையும் முமுக்ஷுவாக ஆசார்யாள் சொல்கிறார் என்பது அந்த புஸ்தக முடிவில் அவனுக்கு அவர் கொடுத்திருக்கும் லக்ஷணங்களில் இருந்து தெரிகிறது. என்ன சொல்கிறரென்றால்:

ஹிதமிமமுபதேசமாத்ரியந்தாம்
(ஹிதம் இமம் உபதேசம் ஆத்ரியந்தாம்)
விஹித – நிரஸ்த – ஸமஸ்த – சித்ததோஷா: |
பவஸுக-விமுகா: ப்ரசாந்த- சித்தா:
ச்ருதிரஸிகா யதயோ முமுக்ஷவோ யே || 7

யாரை உத்தேசித்து ‘விவேக சூடாமணி’யை எழுதினாரோ அவர்கள் ‘ஹிதமான இந்த உபதேசத்தை ஆதரிக்க வேணும்: ஹிதம் இமம் உபதேசம் ஆத்ரியந்தாம் என்று முதல் பாதத்தில் சொல்கிறார். அடுத்த மூன்று பாதத்தில் அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்று லக்ஷணங்கள் கொடுக்கிறார். ‘விஹித நிரஸ்த ஸமஸ்த சித்த தோஷா:’ என்றால் ‘சாஸ்திர விதிப்படி ஸகல சித்த மலங்களையும் போக்கிக் கொண்டவர்கள்’. ‘பவஸுக விமுகா:’ – ‘ஸம்ஸார ஸெளக்யங்களிலிருந்து மூஞ்சியைத் திருப்பிக் கொண்டவர்கள்’ என்று நேர் அர்த்தம்; அதாவது இந்த்ரிய அநுபோகங்களை வெறுத்துத் தள்ளியவர்கள். ‘ப்ரசாந்த சித்தா:’ நன்றாக அடங்கி சாந்தமான சித்தத்தை உடையவர்கள். ‘ச்ருதி ரஸிகா:’ – வேதத்தின் ரஸமறிந்தவர்கள். ‘யதய:’- யதிகள், அதாவது ஸந்நியாஸிகள். முடிவாக ‘முமுக்ஷவ:’ – முமுக்ஷுக்கள்.

கடைசி கடைசியாக ‘யே’ என்று வருவதற்கு ‘எவர்கள்’ என்று அர்த்தம். ‘எவர்கள் சித்தமலத்தைப் போக்கிக் கொண்டவர்களாக, அநுபோகங்களைத் தள்ளியவர்களாக, பிரசாந்த சித்தர்களாக, வேத ரஸ மறிந்தவர்களாக, ஸந்நியஸிகளாக, முமுக்ஷுக்களாக உள்ளனரோ அவர்கள் இந்த ஹிதோபதேசத்தை ஆதரிக்கட்டும்’ என்று முன் பின்னாகச் சேர்த்து – பின்னாடி வரும் ‘யே’யை எல்லாவற்றுக்கும் முன்னாடிக் கொண்டு வந்து – அர்த்தம் செய்து கொள்ளணும்.

இங்கே முமுக்ஷு என்று முடிக்கிறவனுக்குக் கொடுத்திருக்கும் லக்ஷணங்கள் அவன் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ஸாதனையில் உச்சிக்குப் போனவன் என்று காட்டுவதையே சொல்ல வந்தேன். ப்ரஹ்மாநுபவம் ஸமாதியில் ஏற்பட்டு முக்தனாக – ஜீவன் முக்தனாக – ஒருத்தன் ஆகிற க்ஷணம் வரையில்கூட அவன் முமுக்ஷு தான் என்று தெரிகிறது.

‘விவேக சூடாமணி’ உபதேசத்திற்கு ஒரு கதை – ஸெட்டிங் கொடுத்து [ஆசார்யாள்] அமைத்திருக்கிறார். ஒரு சிஷ்யன் போய் பெரியவராக இருக்கப்பட்ட ஒருவரை குருவாக வரித்து, “கோ நாம பந்த:? கதமேஷ ஆகத:? கதம் ப்ரதிஷ்டா (அ)ஸ்ய? கதம் விமோக்ஷ:?”– “ஸம்ஸார பந்தம் என்கிறது என்ன? அது எப்படி வந்து சேர்ந்தது? எப்படி நிலைப்பட்டது? அதிலேயிருந்து எப்படி விமோசனம்?” என்று கேட்கிறான் 8. அதற்கு அந்த குரு சொல்கிற பதிலாகத் தான் நம்முடைய ஜகத்குரு ஆசார்யாள் ‘விவேக சூடாமணி’ உபதேசத்தைக் கொடுத்திருக்கிறார். நிஜமான முமுக்ஷுதையுடனும், நல்ல குரு பக்தியுடனும் அந்த சிஷ்யன் கேட்டுக் கொண்டதால் உபதேச முடிவின் போதே அதனால் ஏற்பட வேண்டிய ஞானம், அநுபவம் – உசந்ததிலெல்லாம் உசந்த பிரம்ம ஞானமும் பிரம்மாநுபவமும் – அவனுக்கு உண்டாகி, எந்த பந்தத்தைப் பற்றி அடி முதலில் கேள்வி கேட்டானோ அதிலேயிருந்து விடுபட்டு – “நிர்முக்த பந்தன:” என்று [மூலத்தில்] இருக்கிறது 9 – குருவை நமஸ்காரம் பண்ணிவிட்டுக் கிளம்பினான்; குருவும் அவருக்காக எங்கேயும் போகணும் வரணும் என்ற ஆசை இல்லாவிட்டாலும் லோகத்தைப் புனிதப்படுத்தணுமென்பதற்காகக் கிளம்பி அப்படியே ஸஞ்சரிக்க ஆரம்பித்தார் – என்று கதை ஸெட்டிங்கைப் பூர்த்தி பண்ணுகிறார். அதற்கப்புறம், “இப்படியாக குரு- சிஷ்ய ஸம்வாத ரூபத்தில் ஆத்ம லக்ஷணம் என்னவென்பது முமுக்ஷுக்களுக்கு ஸுலபமாக ஞானம் உண்டாவதற்காக – முமுக்ஷுணாம் ஸுக போத உபபத்தயே – விளக்கிச் சொல்லப்பட்டது” என்று ஆசார்யாள் தம்முடைய வாக்காகவே சொல்கிறார். இதற்கு அடுத்ததுதான் ‘சித்த மலத்தைப் போக்கிக் கொண்டவர்கள்’ என்று ஆரம்பித்து ‘யதிகள்’ என்ற வரையில் முமுக்ஷுக்களை வர்ணிக்கும் ச்லோகம்.

முமுக்ஷுக்களிலும் அவர் மந்த, மத்யம, உத்தம அதிகாரிகளை ஒப்புக் கொண்டதில், லேசாக ஒரு மோக்ஷ இச்சை கொண்ட நம் மாதிரியானவர்களிலிருந்து நிஜமான ஸந்நியாஸிகளாகிப் பிரசாந்த சித்தர்களாகி விட்டவர்கள் வரை எல்லாவிதமானவர்களும் அடங்கி விடுகிறார்கள். ரொம்பவும் விசால ஹ்ருதயத்தோடு இப்படி அவர் முமுக்ஷப் பட்டத்தை ஜனங்களுக்கு வாரி வழங்கியிருக்கிறார்! ஆனாலும் அப்படி வாரி வழங்கும்போதே மந்த மத்யமர்களையும் உத்தமர்களாக உசத்துவதில் கவனம் வைத்து அவர்களும் வைராக்யம், சமாதி ஷட்க ஸம்பத்து ஆகியவற்றை நன்றாக அபயாஸம் பண்ணி, குரு சொல்கிறபடி ஒழுங்காக நடந்து கொண்டு அவருடைய பிரஸாதத்தை நன்றாக ஸம்பாதித்துக் கொண்டாலே அவர்களுடைய முமுக்ஷுதையும் பூர்ணமாக அபிவிருத்தியாகும் என்று வழிகாட்டியிருக்கிறார் – முன்னேயே சொன்ன விஷயம்.

ஸாதகனுக்குத் தீவிரமான முமுக்ஷுதா பலம், குருவுடைய அநுக்ரஹ பலம் இரண்டும் இருந்தால்தான் அவன் ஆத்மாவை அடைய முடியும் என்ற அபிப்ராயத்திலேயே, “ஆத்மாவை பலஹீனனால் அடைய முடியாது” என்று ஒரு உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது.10

குருவின் அநுக்ரஹம் என்று சொன்னால் ஈச்வராநுக்ரஹம் என்றே அர்த்தம். ஈச்வரன்தான் குருவாக வருவது என்ற நினைவு சிஷ்யனுக்கு மறக்கவே கூடாது. அதுவும் குறிப்பாக அத்வைத ஸாதனை பண்ணுகிறவனுக்கு ஈச்வரன் என்பவனின் ஸகுணமான உபாஸனை இல்லாமல் நிர்குண ஞான ஸமாசாரமாகவே போவதால், ‘குரு’, ‘குரு ப்ரஸாதம்’ என்கிறவற்றை ஸாக்ஷாத் ஈச்வரனின், ஈச்வராநுக்ரஹத்தின் இடத்தில் அவன் தனக்குள்ளே வேர் பிடிக்க விட்டுக் கொள்ள வேண்டியது ரொம்ப அவச்யம். இந்த விஷயத்திற்குக் கொஞ்சம் அப்புறம் வருகிறேன். அதற்கு முந்தி முமுக்ஷுத்வ ஸமாசாரத்தை முடித்து விடலாம்.

பலஹீனனால் ஆத்மாவைப் பிடிக்க முடியாது என்று சொன்ன அந்த உபநிஷத்தில் அதற்கு முந்தின மந்திரங்களிலும் ஒரு விதமாக முமுக்ஷு லக்ஷணமே சொல்லியிருக்கிறது. கொஞ்சங்கூட வேறே காமனைகளே இல்லாமல் எவர்கள் தீரர்களாக இருந்துகொண்டு ஆத்மா ஒன்றையே வரிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஆத்மா தன்னைப் பிரகாசிப்பித்துக் கொள்கிறது என்று அங்கே இருக்கிறது.

“ஆத்மாவை மாத்திரமே வரிப்பது” என்று இங்கு சொல்லியிருப்பதுதான் முமுக்ஷுதாவின் பாஸிடிவ் ரூபம். ஸம்ஸாரத்தை வெறுத்து விடுபடுவது என்பதற்கு நேர் மாறாக , ப்ரியத்தோடு நமக்கு வேண்டியது இதுதான் என்று நாம் சேர்வதற்காக ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குத்தான் வரிப்பது என்று பேர். ‘ஸ்வயம் வர’மாக இங்கே ஒருத்தன் அநாத்ம வஸ்து அத்தனையையும் ஒதுக்கிவிட்டு ஆத்மாவை வரிக்கிறான்! அழகான, ஆனந்தமான பாஸிடிவ் அபிப்ராயமாக இங்கே Goal-ஐயும், அதில் நாட்டத்தையும் உபநிஷத் சொல்கிறது.

“ஆத்மேச்சா வ்ஸவஸீயதாம்” என்று முமுக்ஷுதையின் இதே பாஸிடிவ் ரூபத்தை ஆசார்யாளும் சொல்லியிருக்கிறார்11. ஆத்ம இச்சையை, அதாவது ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைய வேண்டும் என்ற இச்சையைத் தீர்மானமாகப் பழகிக்கணும் என்று அர்த்தம். கர்மா- பக்திகளிலிருந்தே ஆரம்பித்து படிப்படியாக ஸாக்ஷாத்காரம் வரை அவர் கொண்டு போகிற “ஸோபான பஞ்சக”த்தில், க்ருஹத்தைத் துறந்து ஸந்நியாஸியாகப் புறப்படுவதைச் சொல்வதற்கு முன் படியாக முமுக்ஷுதையைச் சொல்ல வேண்டிய இடத்தில், “மோக்ஷத்தில் இச்சை வை” என்று தள்ள வேண்டியதைச் சொல்லாமல், பெற வேண்டியதான ஆத்மாவில் பிரியம் வைப்பதையே சொல்லியிருக்கிறார்.

விட வேண்டியதைச் சொல்லாமல் பெற வேண்டியதைத் தேடிக் கொண்டே போவதை உபநிஷத்துக்களில் அநேக இடங்களில் சொல்லியிருக்கிறது – ‘என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்’ என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்ன மாதிரி12! “ப்ரஹ்ம பரர்”களான (ப்ரம்மமே லக்ஷ்யமென்று கொண்டவர்களான) , “ப்ரஹ்ம நிஷ்டர்”களான (ப்ரம்ம விஷயமாகவே பற்றுதல் வைத்தவர்களான – இந்த இடத்தில் ‘நிஷ்டை’ என்பது அநுபவப்பூர்வமாக ஸமாதியில் நிலைத்து நிற்பதில்லை; அந்த அநுபவத்திற்காக ஆர்வம் கொண்டவர்களைப் பற்றியே இங்கே பேச்சாகையால் ‘நிஷ்டை’ என்பதற்கு பற்றுதல், ‘டெடிகேஷன்’ என்று இருக்கும் அர்த்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்) , “ப்ரஹ்ம அன்வேஷமாணர்”களான (ப்ரஹ்மத்தையே தேடிக் கொண்டிருப்பவர்களான) ஆறு பேர் மஹர்ஷியான ஒரு ஆசார்யனிடம் போனார்களென்று “ப்ரச்னோபநிஷத்” ஆரம்பிப்பதிலும் முமுக்ஷுக்களான அந்த ஆறு பேரைத்தான் பாஸிடிவாக வர்ணித்திருக்கிறது. இங்கே பரமாத்மாவைத் தேடிக் கொண்டிருக்கும் முமுக்ஷுக்களை “அன்வேஷ்மாணர்” என்று சொல்லியிருக்கிறதற்கேற்க சாந்தோக்யத்தில் அந்தப் பரமாத்மாவை “அன்வேஷ்டவ்யன்” (தேடிக் கண்டுபிடிக்கப் பட வேண்டியவன்) என்று இருக்கிறது13.

கடோபநிஷத் நசிகேதஸைப் பற்றிச் சொல்வது ஒரு ‘ஐடியல்’ முமுக்ஷுவை லோகத்துக்குக் காண்பிப்பதாகவே இருக்கிறது. ஆத்மாவைப் பற்றிய ஸத்யத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது ஒன்றே அந்தச் சின்னப் பையனுடைய ஒரே ஆசையாக, ஒரே குறியாக இருந்தது. ஏதோ ஸந்தர்ப்பத்தில் அப்பா ஏதோ கோபத்தில், “உன்னை யமனுக்குத் தந்துட்டேன்!” என்று அவனிடம் சொன்னார். உடனே அவன் பித்ரு வாக்ய பரிபாலனமாக டக்கென்று யமபுரிக்கே போய்விடுகிறான். செத்துப் போனவிட்டு உயிரை யமன்தானே எடுத்துக் கொண்டு போகிறவன்? ஆகையாலே உயிருடைய உண்மை நிலையான ஆத்ம தத்வம் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று நசிகேதஸுக்கு ஒரு நிச்சயமான நம்பிக்கை. யமபுரியில் அதைப்பற்றி யமதர்ம ராஜாவிடமிருந்து உபதேசம் பெற்று விட வேண்டுமென்று தீர்மானம் பண்ணிக் கொள்கிறான். எவரானாலும் நினைத்தாலே நடுங்குகிற யமபுரியை குருகுலமாக நினைத்து அந்தப் பையன் போனானென்றால் காரணம் அவனுக்கு இருந்த நிஜமான முமுக்ஷுதைத்தான்! இவன் போன ஸமயம் அவன் [யமன்] க்ருஹத்தில் இல்லை. மூன்று நாள் கழித்துத்தான் அவன் வந்தான். அந்த மூன்று நாளும் அங்கே இருந்தவர்கள் என்ன உபசாரம் பண்ணியும் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் நசிகேதஸ் பூர்ண உபவாஸம் இருந்தான். “பெற வேண்டிய உபதேசத்தைப் பெறாமல் சாப்பாடாவது, இன்னொன்றாவது?” என்று லக்ஷ்யத்திலேயே தாபமாக இருந்தான்.

அப்புறம் யமன் – லோகத்தையெல்லாம் கிடுகிடுவென்று நடுங்க வைக்கிறவன் – வந்து, “அக்னி மாதிரி தாபத்தோடு இப்படியரு பிரம்மசாரிப் பிள்ளை நம் க்ருஹத்தில் முழுசாக மூன்று நாள் வயிறு எரிய இருந்து விட்டானே! அது நம்மை எரித்துவிடப் போகிறதே! என்று அந்தச் சின்னப் பையனிடம் நடுங்கிக் கொண்டு, நாளுக்கு ஒன்றாக மூன்று நாளுக்கு மூன்று வரம் கொடுக்கிறான்.

அதிலே முக்யமான மூன்றாவது வரமாக நசிகேதஸ் கேட்டது ஆத்ம தத்வத்தைப் பற்றிய உபதேசந்தான்.

அந்தப் பரமோபதேசத்தைத் தருவதற்கு முன்னாடி அதிலே இவனுடைய முமுக்ஷுதா தீவிரத்தை இன்னும் நன்றாகத் தெரிந்து கொண்டு நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக – அல்லது அது அவனுக்கு [யமனுக்கு] அப்போதே நன்றாக நிச்சயப்பட்டிருக்கலாம்; ஆனாலும் ஒரு ஐடியல் முமுக்ஷு எப்படியிருப்பான் என்று லோகத்திற்குக் காட்டுவதற்காக – அவனுக்குப் பரீக்ஷை வைத்தான்.

“ஆத்ம தத்வம் என்பது தேவர்களையுங்கூட நிச்சயப் படுத்திக் கொள்ள முடியாமல் குழம்ப வைக்கிற விஷயமாக்கும்! அதனால் வேறே வரம் கேளு!” என்றான்.

“நீ இப்படிச் சொல்கிறதாலேயே அப்பேர்ப்பட்ட தத்வத்தை தெரிந்து கொண்டுதானாக வேண்டுமென்ற ஆர்வம் ஜாஸ்தியாகிறது. அதனால் நான் கேட்ட அந்த வரத்துக்கு வேறே எந்த வரமும் துல்யமாகாது என்றும் ஆகிறது. அதைத்தான் நீ உபதேசிக்கணும் . உன்னை விட்டால் உனக்குத் துல்யமாக அதை எடுத்துச் சொல்கிறவர் யார் இருக்கிறார்கள்?” என்று நசிகேதஸ் விடாப்பிடி பிடித்தான்.

“ஆனை, குதிரை, ஸ்வர்ணம், பூமி, ஆதிபத்தியம், புத்ர பௌத்ராள், இஷ்டப்பட்டவரை ஆயுஸ் – அத்தனையும் தருகிறேன். நீ என்னவெல்லாம் ஆசைப்பட்டாலும் பூர்த்தியாக அநுக்ரஹம் பண்ணுகிறேன். மநுஷ்யர் எவருக்குமே கிடைக்கமாட்டாததாக, என்னுடைய பரிவாரங்களையே உனக்கு ரத ஸாத்தியம் பண்ணவும், கீத வாத்யங்கள் வாசிக்கவும் அனுப்பித் தருகிறேன். நீ கேட்ட அந்த வரத்தை மட்டும் ‘ப்ரெஸ்’ பண்ணாதேயப்பா! வேறென்ன வேண்டுமானாலும் கேட்டுக்கொள்” என்று யமன் தினுஸு தினுஸாகச் சொல்கிறான். டெஸ்ட் வைக்கிறான். ஸ்வர்ணஹாரத்தை அவனிடம் திணிக்கிறான்.

நசிகேதஸ் கொஞ்சங்கூட சலிக்கவில்லை. “நீ கொடுக்கிற அத்தனையும் எத்தனை காலத்திற்கு அப்புறமானாலும் ஒரு காலத்தில் உன் கைக்கே திரும்புகிறவை தானே? எனக்கு எது என்றைக்கும் சாச்வதமோ அதுதான் – அது ஒன்றுதான் வேண்டும். இந்த நசிகேதஸ் வேறே ஒன்றை கேக்கமாட்டானாக்கும்” என்று அடித்துச் சொல்லி விடுகிறான். ஸ்வர்ணஹாரத்தையும் விரலால் கூட சீண்டாமல் ஒதுங்கி விடுகிறான்.

யமனுக்குப் பரமதிருப்தியாகிவிடுகிறது. “அப்பா, குழந்தே! அத்தனை ஆசையும் அல்பமென்று ஒதுக்கினவன் நீ! வித்யை [ஞானம்] ஒன்றிலேயே மனஸை வைத்தவன் நீ! உன் மாதிரிக் கேட்கிறவனே இனியும் எனக்குக் கிடைக்கட்டும்! (இப்படிச் சொன்னால் அந்த மாதிரி கிடைப்பது அஸாத்தியம் என்று அர்த்தம்!) நீதான் தீரன்! பிரம்ம லோக வாசல் உனக்குத் திறந்தாயிற்று! (பிரம்ம லோகம் என்றால் இங்கே சதுர்முக பிரம்மா இருக்கிற லோகமில்லை. பிரம்மம் என்ற ஸத்யத்தைத் தெரிந்து கொள்வதற்கான வழி திறந்தாயிற்று என்பதையே இப்படி அலங்காரமாகச் சொல்கிறான்)” – இப்படியெல்லாம் கொண்டாடிவிட்டுத் தத்வோபதேசம் பண்ணுகிறான்.

உபநிஷத் முடிவில், முமுக்ஷுவாக வந்த நசிகேதஸ் முக்தனாகவே ஆனதைச் சொல்லியிருக்கிறது. அதோடு அவன் மாதிரித் தத்வத்தைத் தெரிந்து கொண்ட (“ஏவம் வித்” என்று இருக்கிறது; “இம்மாதிரி தெரிந்து கொண்ட” என்று அர்த்தம். அப்படித் தெரிந்து கொண்ட) எவருமே முக்தராவார்கள் என்று பூர்த்தி பண்ணியிருக்கிறது.

‘நசிகேதஸ் மாதிரி’ என்றால் ‘தீவிர முமுக்ஷுதையோடு’ என்று அர்த்தம்.

சதுஷ்டயம் என்று நாலங்க [நான்கு அங்க] அமைப்பாகச் சொன்ன ஸாதனைக் கிரமம் முமுக்ஷுத்வத்தோடு முடிகிறது.


1 175 (அ) 176

2 176 (அ) 178

3 177 (அ) 179

4 178 (அ) 180

5 180 (அ) 182

6 181 (அ) 183

7 நூற்சிறப்பைக் கூறும் கடைசி ச்லோகமான ‘க்ரந்த ப்ரசம்ஸா’வுக்கு முந்தைய ச்லோகம்.

8 ச்லோ 49 (அ) 51

9 ச்லோ 576 (அ) 577

10 முண்டகோபநிஷத் III.2.4

11 ஸோபான பஞ்சகம், ச்லோ. 1

12 திரு அங்கமாலை, கடைசி அடி.

13 VIII.7.1

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is குருப் ப்ரஸாதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஆன்மியமான நால்வகைப் படை
Next