மோக்ஷ காரண ஸாமக்ர்யாம் பக்திரவே கரீயஸி | ஸ்வஸ்வரூபாநுஸந்தாநம் பக்திரித்யபிதீயதே ||1
முமுக்ஷு மோக்ஷத்தை விரும்புபவன். அந்த மோக்ஷத்தை அடைவிக்கப் பல ஸாதனங்கள், உபகரணங்கள் இருக்கின்றன. ச்ரவண-மனன-நிதித்யாஸனங்கள் அப்படிப்பட்டவைதான். இதுவரை சொன்ன ஸாதனா சதுஷ்டயத்தின் அங்கங்களெல்லாமும் மோக்ஷம் ஏற்படக் காரணமான உபகரணங்கள்தான். அவற்றையெல்லாம் ‘ஸாமக்ரீ’ என்று சொல்வது. ‘ஸாமக்ரியை’ என்று தப்பாகச் சொல்கிறோமே அது! க்ரியை (kriyai) க்கும் இதற்கும் ஒரு ஸம்பந்தமுமில்லை. க்ரீ (gree) என்று முடியும் வார்த்தையாக ‘ஸாமக்ரீ’ (saamagree ) என்று சொல்ல வேண்டும். ஒரு விஷயத்தில் பிரயோஜனப்படுகிற எல்லா அவசியமான வஸ்துக்களையும் சேர்த்து ஸாமக்ரீ என்பது. உபகரணம் என்ற அர்த்தத்தில் அதையே சொல்வது வழக்கம்.. இங்கே “மோக்ஷகாரண ஸாமக்ர்யாம்” என்கிற இடத்தில் ‘மோக்ஷம் உண்டாகக் காரணமான உபகரணங்களில்’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். ‘கரீயஸீ’ என்றால் ‘கனம் வாய்ந்தது’. அஷ்டமா ஸித்திகளில் ஒருவர் அப்படியே கல்லு மாதிரி கனத்துப் போகும் ஸித்திக்கு ‘கரிமா’ என்று பேர். ‘கரீயஸீ’ என்றால் கனமானது. கனமானது என்றால் முக்யமானது, ச்ரேஷ்டமானது என்று உள்ளர்த்தம். ‘கனவான்’ என்ற இடத்தில் அப்படித்தானே அர்த்தமாகிறது? ‘மோக்ஷத்திற்குக் காரணமான உபகரணங்களில் ச்ரேஷ்டமானது’ என்று எதைச் சொல்கிறாரென்றால்,
இங்கேதான் ‘பக்தி’யைக் கொண்டுவந்து விடுகிறார்!
இந்த ஆசார்யாளே வகுத்துக் கொடுத்த கிரமத்தில் ஸாதன சதுஷ்டயம், அப்புறம் ச்ரவண, மனன, நிதித்யாஸனங்கள்; அதோடு அந்த வழி பூர்த்தி என்று பொதுவாக நினைக்கபட்டாலும், இங்கேயோ அவர் அதிலில்லாத பக்தியை ‘திடுதிப்’பென்று கொண்டு வந்து விட்டு அதுதான் முக்யமான உபகரணம் என்கிறார்!
பக்தி, ஞானம் என்று வெவ்வேறாகவே வைத்த இரண்டு வழிகளில் ஞான வழியை உபதேசிக்கும் அத்வைத ஆசார்யராகத்தான் அவர் இந்த ‘விவேக சூடாமணி’யை எழுதி, அதில் ஸாதனா க்ரமம் சொல்கிறார். அப்படியிருந்தும், பக்திக்கு இவ்வளவு முக்யத்வம் தந்திருக்கிறார்! மோக்ஷத்திற்கு முக்ய ஸாதனம் பக்தி என்கிறார்!
அவர் வழக்கமாகச் சொல்வதாக லோகத்திற்கு ஸுப்ரஸித்தமாகத் தெரியும் ஞானமார்க்கத்திலும் பக்திக்கு அடியோடு இடமில்லாமலில்லைதான். ஆனால் எங்கே இடம் என்றால் ரொம்பவும் ஆரம்பத்தில், அடி நிலையில் தான். அதாவது ஸாதன சதுஷ்டயம் ஆரம்பிப்பதற்கும் முன்னாடி! அவருடைய ஞான காலேஜில் அட்மிஷன் கேட்பதற்கு முந்தியே முடித்திருக்க வேண்டிய ஸ்கூலில் தான் கர்மாவும், பக்தியும் ஸப்ஜெக்டுகள்! ஞான மார்க்கத்தில் போவதற்குத் தகுதி சுத்தமான, ஒருமுகப்படக் கூடிய சித்தம். அதை ஸம்பாதித்துக்கொண்ட அப்புறந்தான் இந்த வழியில் பிரவேசிக்கலாம். அந்த ஸம்பாதனைக்காகவே சித்தத்தை சுத்தி பண்ணிக்கொள்ள நிஷ்காம்ய கர்மாவையும், ஒருமுகப்படுத்த பக்தியுபாஸனையையும் வைத்தார். அதாவது பக்தி என்பது [அத்வைத] ஸாதனையில் ரொம்பவும் தள்ளி, ‘பஹிரங்க ஸாதனம்’ எனப்படுவதாகவே நினைக்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது.
ஸாதனங்களில் அந்தரங்கம், பஹிரங்கம் என்று இரண்டு. அந்தரங்கம் [என்பது] லக்ஷ்யத்தை அடைவிப்பதில் நேரடியாக, டைரக்டராக உதவுவது; ‘Internal’ என்று படைப்பாளிகள் சொல்கிறார்கள். பஹிரங்கம் மறைமுகமாக, தள்ளி அப்படி இருப்பது; ‘external’ என்பது. ஒரு விருந்து நடக்கிறதென்றால் அதற்கு நேர்க் காரணம் விருந்தை நடத்துகிறவரும், அந்த விருந்துக்குக் காரணமான வைபவமும். இவை ‘அந்தரங்கம்’. அதில் பிரயோஜனமாகும் சாப்பாடு தினுஸுகள் கிடைப்பதற்கு, பயிர் பண்ணிய விவஸாயி, ப்ரொக்யூர் பண்ணிய ஆபீஸர், விற்பனை பண்ணிய கடைக்காரர்கள், சமைத்துப் போட்ட பரிசாரகர், பாத்திரம் கொடுத்தவர் எல்லாம் காரணம் தானே? இவர்களில் பரிசாரகரை – பாத்திரக்காரரை வேண்டுமானாலும் – ‘அந்தரங்க’ லிஸ்டில் சேர்க்கலாம். மற்றவர்கள் மறைமுகக் காரணமான ‘பஹிரங்க’த்தில் வருபவர்களே.
இப்படி மோக்ஷத்திற்கு அந்தரங்க ஸாதனம் என்று ஞானத்தையே சொல்லி, அந்த ஞானம் உண்டாக ரொம்பவும் அந்தரங்க ஸாதனமாக ச்ரவண, மனன, நிதித்யாஸனங்களையும், அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அந்தரங்கம் என்றே சொல்லும்படியாக ஸாதனா சதுஷ்டயத்தையும் வைத்து, இதற்கெல்லாம் தள்ளி பஹிரங்க ஸாதனமாகத்தான் கர்மாவையும் பக்தியையும் அத்வைத ஸம்பிரதாயத்தில் வைத்திருக்கிறதென்று பிரஸித்தம்.
அப்படியிருக்க இங்கே அந்த அத்வைத ப்ரதிஷ்டாபனாசார்யாளே பஹிரங்க ஸாதனமான பக்தியை ‘ஸாமக்ரீகளில் கரீயஸி’ என்று ரொம்பவும் அந்தரங்க ஸ்தானத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார்! எப்படி? என்ன அர்த்தம்?
நான் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டு போவதில் – ‘அத்வைத பீடத்து ஸ்வாமிகள் அத்வைதம் சொல்லப்படாதா?’ என்று நினைத்ததுப்போக, ‘நிறுத்த மாட்டாரா?’ என்கிற அளவுக்கு தொணப்பிக் கொண்டு போவதில் – முதலிலே சொன்ன ஒரு விஷயம் சில பேருக்காவது ஞாபகமிருக்கலாம். ச்ரத்தையிலேயும் பக்தியிலேயும் ‘லோயர்’, ‘ஹையர்’ என்று இரண்டு க்ரேட் சொன்னதுதான். ஸ்கூல் ஸப்ஜெக்டாகச் சித்த ஒருமுகப்பாட்டுக்கு பக்தியை ஸாதனமாகச் சொன்னது ‘லோயர் க்ரேட்’; அங்கேதான் பக்தி பஹிரங்க ஸாதனமாக இருப்பது. இப்போது காலேஜ் முடித்து பிஹெச்.டி. சேரவேண்டிய ஸமயத்தில் ‘ஸாமக்ர்யாம் கரீயஸீ’ என்று சொல்லும் பக்தி ‘ஹையர் க்ரேட்’; அந்தரங்க ஸாதனமாகவே இருப்பது. இதற்கும் மேலே ‘ஹையஸ்ட்’ ஆகவும் ஒரு ஒரு பக்தி உண்டு. அது அத்வைத ஸித்தியே அடைந்துவிட்ட ஞானி பண்ணுவது. அதைப்பற்றி, ஏன் எதற்காகப் பண்ணுகிறான், எப்படிப் பண்ணுகிறான் என்பது அவனுக்குத்தான் தெரியும்! அல்லது அவனுக்குங்கூடத் தெரியாமல், அவனை அப்படி ப்ரேமையில் உருகப் பண்ணுகிற ஈச்வரனுக்குத்தான் தெரியும்! அது நம்முடைய பிரஸங்கத்திற்குள் வராத விஷயம்.
[பிரஸங்கத்திற்குள்] வருவது மோக்ஷத்திற்கு அந்தரங்கமான, ‘கரீய’ஸான உபகரணமாகச் சொல்லும் பக்திதான்.
இதை ஏன் இங்கே கொண்டு வந்துவிட்டார் என்று தெரிந்து கொள்வதற்கு, பக்தி என்றால் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
1 31 (அ) 32