‘அஹங்கார’மும் அன்பும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இந்தத் தப்பு-‘நான்’தான் நிஜ-‘நானாக’ வேண்டியதாகையால், ப்ரம்மத்திலிருந்து வேறுபட்டு வேறே வேறேயாக ஆன த்வைத லோகத்திலிருந்து அதைத் திருப்பி, ஒன்றுபடுவதற்கு ஸஹாயம் செய்கிற ஒரு வஸ்துவிடம் பிடிப்புப் பெற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. வேறு வேறாகப் பார்க்கிறவைகளிலிருந்து தனக்கென்று வஸ்துக்களை வாங்கி சேர்த்துக்கொண்டேயிருப்பதால் தடிப்பேறியிருக்கிற தப்பு-நானை -அஹங்காரத்தை; அஹங்காரத்தின் அடிப்படை ஏவுதலாலேயே தொழில் செய்கிற மனஸை, புத்தியை; எல்லாவற்றையும் சேர்த்துச் சுருக்கமாக அந்தஃகரணம் என்பதை – ஹ்ருதயத்திலுள்ள ஆத்ம ஸ்தானத்துக்குப் போகப் பண்ண வேண்டியிருக்கிறது. நன்றாகக் தடித்து குண்டாகி விட்ட ஆஸாமியை எப்படிச் சின்னூண்டு வாசல் வழியாக உள்ளே விடமுடியும்? ஸ்தூல சரீரி என்பதற்கு ‘வாசலை இடிச்சுக் கட்டணும்’ என்று வேடிக்கையாகச் சொல்கிறோம்! ஆனால் இந்த வாசலையோ இடித்து, கிடித்து எதுவும் பண்ண முடியாது! ஆஸாமியைத்தான் ஒல்லி பண்ணியாகணும்! எப்படி ஒல்லி பண்ணுவது?

வேறே வேறேயாக, ஒரே த்வைத மயமாகப் பார்த்து அத்தனையிடமிருந்தும் வாங்கி வாங்கி வாரிப் பூசிக் கொண்டுதானே இந்த ஆஸாமி குண்டாகியிருப்பது? அந்த வெளிப் பூச்சையெல்லாம் கரைத்து, அப்புறம் உள்ளேயிருக்கிற தன்னையும், – அதாவது தனி ஜீவனாக த்வைதப்படுத்திக் கொண்டிருக்கிற அஹங்கார அந்தஃகரணத்தையும், ஒல்லியாக்கிக் கொண்டால்தான் ஹ்ருதயத்தின் வழியாக அதற்கும் உள்ளே இன்னமும் சின்னதாயிருக்கும் புள்ளி த்வாரத்திற்குள்ளே போய் அத்வைதப் பேரானந்தமான ஆத்ம நிலையை அடையலாம். எப்படி என்பதுதான் கேள்வி. எப்படி என்றால் ‘அன்பு’, ‘அன்பு’ என்பதை அப்யாஸம் பண்ணுவதால்தான்!

அஹங்காரத் ‘தப்பு நானு’க்கு வாரி வாரி வாங்கிக் சேர்த்துக் கொண்டதை மாற்றித் தன்னை அன்பிலே கொடுத்துக் கொள்ளக் கொள்ள குண்டு நானும் இளைத்து இளைத்து ஒல்லியாகும். அது ஒன்றுதான் அதை ஒல்லியாக்கி ஆத்ம ஸ்தானத்திற்குப் போகப் பண்ண வழி.

வைராக்யம், சமம், தமம் முதலானதில் அந்தஃகரணத்தை தேய்க்கவில்லையா, அதாவது ஒல்லி பண்ணவில்லையா என்றால் – தேய்த்தது மனஸையும் புத்தியையுந்தான். சுத்தப்படுத்தி, தீட்டித் தீட்டி அந்த இரண்டையும் தேய்த்தது வாஸ்தவந்தான். ஆனால் அஹங்காரம் இருக்கிறதே, அது அந்த இரண்டையும்விட ஸூக்ஷ்மமான ஒன்று! அப்படியொன்று இருப்பதாக நமக்குத் தெரியாமலே நம்மைப் பழி வாங்கி த்வைதக் குழியிலே புதைத்துக் கொண்டிருக்கிற ஒன்று! ஆகையினால் நமக்கே வெளிப்பட கர்வமான எண்ணமாக, திமிரான அபிப்ராயமாக, ‘நமக்காக்கும் வைராக்யம் வந்துவிட்டது! சம தமாதிகள் ஸித்தித்து விட்டது!’ என்று தெரியாவிட்டாலும் உள்ளுக்குள்ளே இந்த ஸித்திகளைத் தானே தனக்காகவே ஸாதித்து விட்டதாக அந்தக் கண்டிதமான [பரமாத்மாவிலிருந்து துண்டிக்கப்பட்ட] தனி அஹங்காரம் நினைத்துக்கொண்டு தனக்கே லாபம் பாராட்டிக் கொண்டிருக்கும். அதாவது தான் ஸாதனையிலே பெற்றிருக்கிற லாபங்களையும் ஆத்மாவில் கரைத்து, தன்னையும் கரைத்துக் கொள்ளவேண்டிய தனி-நான் (அஹங்காரம்) அப்படிப் பண்ணாமல் அந்த லாபங்களைத் தனதாகவே பாராட்டிக் கொள்ளும். அதாவது அதன் வாங்கலும் அதனால் பெருத்துப் போவதும் – [சிரித்து] வாங்கலும் வீங்கலும் – தொடரத்தான் செய்யும். அத்தனை எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் முதலாவதாக உள்ள தனி-நான்-எண்ண உணர்ச்சி தன்னை தேய்த்து ஒல்லி பண்ணிக் கொண்டு ஆத்ம ஸ்தானத்திற்குள்ளே போய் ஒடுங்க நினைக்காமலே இருக்கும். அதாவது ஸாக்ஷாத்காரத்திற்கு அதிமுக்ய விஷயமான ego surrender நடக்காமலே இருக்கும்.

அஹங்காரம் என்ற தனி நானுக்கு உத்தமமான ஸாதிப்புக்களெல்லாம் போய்ச் சேர்ந்து அதைக் கொழுக்கப் பண்ணிவிடாமல் இளைக்கப் பண்ணுவதற்கு வழிதான் அன்பு – தன்னைக் கொடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உசந்த பாவம். நல்ல காலமாக அந்த விவேக, வைராக்ய, சம, தமாதி ஸாதிப்புக்களே அந்தஃகரணத்தைப் பண்படுத்தியிருப்பதால், இவன் [ஸாதகன்] மட்டும் கவனமாக ஸங்கல்பம் பண்ணிவிட்டானானால் இப்போது அந்த மாதிரி நிஜமான அன்பை உண்டாக்கிக் கொள்ள முடியும். அஹங்காரத்தை – தனி ஆஸாமியாக இருக்கிறதை – அப்படியே கொடுத்து, ego-வை surrender பண்ணி அன்பு பாராட்ட முடியும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அந்தஃகரணமும் ஹ்ருதயமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஆத்ம ஸாதகனின் அன்புக்கு இலக்கு ஏது ?
Next