நிர்குண, ஸகுண பக்திகள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இப்போது சோதனை பண்ணும் ஆத்மா, தன்னை தெரியப் பண்ணிக்கொள்கிற ஆத்மா, சரணாகதனை அப்படியே ஆட்கொள்கிற காரியத்தைப் பண்ணும் ஆத்மா என்றெல்லாம் சொன்னதால், “அது நிர்குணமாக இல்லாமல் காரியம் பண்ணும் ஸகுணமா என்ன? ஸகுணம் என்றால் அது இல்லையே நம் லக்ஷ்யம்? அது அப்படி இருக்கவும் முடியாதே” என்று கேள்வி வரலாம். இங்கே தான் ச்ரத்தையைக் கொண்டு வரவேண்டும்! அதனால் தான் பரம கவனத்தோடு வழி காட்டும் ஆசார்யாள் அதை (ச்ரத்தையை) முன்னேயே இங்கே நமக்கு bodyguard -ஆக ரக்ஷணத்திற்கு வைத்து விட்டார்! “ஸகுண – நிர்குண கேள்வியெல்லாம் கேட்காதே. நிர்குண ஆத்மாவையே நீள நெடுகச் சொன்ன உபநிஷத் இங்கே இப்படித்தான் சொல்லியிருக்கிறதென்றால், பேசாமல் பூர்ண நம்பிக்கையோடு அதை ஏற்றுக்கொண்டு ஆத்மாவுக்கு உன்னை அன்பினால் கொடுத்துக்கொள்ளு. அப்புறம் அது நிர்குணத்தில்தான் உன்னைச் சேர்க்கிறது என்றே அத்தனை உபநிஷத்துக்களும் சொல்வதால், இங்கே ச்ரத்தையின் மேலேயே போ” என்று தனக்குத்தானே எடுத்துச் சொல்லிக் கொண்டு அந்தப்படி நம்பிப் பண்ணணும்.

நிர்குண ப்ரம்மம் அந்த ஸமயத்தில் மட்டும் ஸகுணமாய் அநுக்ரஹம் பண்ணி உன்னை உள்ளே தள்ளி விட்டு, அந்த உள்ளே நிர்குணமாகவே உன்னை ஐக்யப்படுத்திக் கொள்கிறது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளு. அப்படியெல்லாம் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ச்ரத்தையின் மேலேயே போவதுதான் ச்லாக்யம்.

ஸகுணம் என்று கொஞ்சம் இடம் கொடுத்தாலும் அப்படியே அனந்த கல்யாண குணாநுபவம், லீலானந்தம் என்று மனஸு போய் ஒரே த்வைதத்தில் கொண்டு விட்டு விடும். அது எத்தனை நன்றாயிருந்தாலும் உன் லக்ஷ்யம் அத்வைதமே என்பதை மறந்து போய்விடாதே!

[ஸகுண ப்ரம்மமான] ஈச்வரன் நினைவு வராமலிருக்காதுதான். நினைப்பு என்று ஒன்று இருந்து கொண்டிருக்கும் வரையில் நல்லதாக ஏதாவது எண்ணும்போது அத்தனை நல்லதுகளையும் சேர்த்து வைத்த ஈச்வரன் என்பவனைப் பற்றி எப்படி நினைக்காமலிருக்க முடியும்? அத்வைத ஸித்தாந்தம் ஒன்று தவிர பாக்கி எல்லா மதங்களும் முடிவாகச் சொல்கிற அவனை இவன் [அத்வைத ஸாதகன்] நினைக்காமலே இருக்க முடியுமா? நினைப்பு வரத்தான் வரும். வருகிறபோது, ‘அப்பா, உன் க்ருபையால்தான் எனக்கு அத்வைதத்தில் மனஸ் போயிருக்கிறது. உன் க்ருபையால்தான் அதற்கானதில் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் பண்ணிக்கொண்டு போகிறேன். முடிவாக உன்னுடைய நிர்குண ஸ்வரூபத்தில் இந்தக் குழந்தையை ஒன்றாக்கிக் கொள்ளணுமென்ற பரம க்ருபையால்தான் இதெல்லாம் நடத்துவிக்கிறாய்! ஆகையால் இப்போது உன்னை ஸகுணமாக உபாஸிக்க ஆரம்பித்தேனானால் உன் க்ருபையை, உன் ஸங்கல்பத்தை மறுத்தே அப்படிப் பண்ணுகிறதாகத்தான் தோன்றுகிறது. அப்படி ஆகாமல் மேலே மேலே இந்த வழியிலேயே போகும்படி க்ருபை பண்ணப்பா!” என்று நன்றியோடு ப்ரார்த்தித்துக் கொண்டு நிர்குணத் தத்வத்திலேயே சித்தத்தைத் திருப்ப வேண்டும்.

நன்றி – அது ரொம்ப முக்யம். நம்மைப் பரம உத்தமமான அத்வைதத்தில் செலுத்தியிருப்பது அவனே என்ற நன்றியில் உண்டாகிற இந்த பக்தி அப்பப்போ எழும்புமானாலுங்கூட, எழும்புகிற அதைக் கொஞ்ச காலமே நாம் maintain பண்ணிவிட்டு நம் வழிக்குத்தான் திரும்பணுமானாலுங்கூட, ஆரம்பத்தில் சித்த ஐகாக்ரியத்திற்காகச் செய்த அத்தனை பக்தியுபாஸனையும் இதற்கு உறை போட காணாது! பக்தி என்றே விடாமல் பண்ணிக் கொண்டு போன அப்போது அது ஒரு ‘ரொடீன்’ மாதிரி, ஸாரவத்தாக [ஸாரம் நிரம்பியதாக] இல்லாமலும் அநேக ஸமயத்தில் போயிருக்கும். இப்போது ஞான வழியில் போகிறபோது மாறுதலாகச் சட்டென்று ஒரு பக்தி – அதுவும் நன்றியோடுகூட – பீறிக்கொண்டு வரும்போது அது க்ஷணமே இருந்தாலும் ஸாரஸாரமாக இருக்கும்.

லக்ஷ்யம் நிர்குணமானதால் இதிலிருந்தும் அதில்தான் சித்தத்தைத் திருப்ப வேண்டும்.

இருந்தாலும் ஒரு ஸகுண மூர்த்தியிடம் அன்பு செலுத்தினால் தேவலை என்று ஆரம்ப கட்டத்தில் (அடி ஆரம்பமில்லை; இந்தப் பக்வ திசையின் ஆரம்பித்தில்) இருந்தால் அதற்குத்தான் குரு இருக்கிறாரே! அவரிடம் பக்தியைக் கொட்டு, உன்னையே கொடு! அவர் உன்னை நிர்குணத்திடம் அன்பு பாராட்டும்படித் தூக்கி விட்டு விடுவார். “ப்ரஸாதேந குரோ: ஸேயம் ப்ரவ்ருத்தா ஸூயதே பலம்” என்று ஆசார்யாளே சொல்லியிருப்பதை பார்த்தோமே!

அன்பு என்பது என்ன? அப்படியே போய்ப் பற்றிக் கொள்வதுதானே? ஆனால் பற்றிக் கொள்ளப்படும் வஸ்துவை நம் உடைமையாக்கிக் கொள்வதற்காக இல்லை; நம்மை அது உடைமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தாபத்தோடு கூடின பற்று. ‘தனி-நான்’ சொன்னேனே, அஹங்காரம் என்று, அது போக வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதற்காகவே எந்த ஒன்றிடம் வைக்கும் விடாத பற்றும் அன்புதான், பக்திதான்.

அன்பு, பக்தி என்பது ஒன்றிலேயே ஆழ ஈடுபடுவது தான் என்பதற்காக செஸ்ஸில், கிரிக்கெட்டில் ஒரே ஈடுபாடு; bibliophile – புஸ்தகபித்து – என்று அப்படி ஒரே ஈடுபாடு என்றெல்லாமிருந்தால், அது அன்பா என்றால் இல்லை. ஏனென்றால் அதெல்லாம் தனி-நானின் திருப்திக்காக, அதாவது அதைக் கொழுக்கப் பண்ணுவதற்காக ஏற்பட்ட ஈடுபாடுகளாகவே இருக்கின்றன. அப்படியில்லாமல், ‘ஸ்வயம்’ என்று ஒன்று சொல்கிறோமே, அதற்கு ஆஹாரம் போடுவதில் ஈடுபாடாக இல்லாமல், அந்த ஸ்வயத்தையே ஆஹாரமாகக் கொடுப்பதற்காகக் காட்டும் ஈடுபாடுதான் அன்பு – பக்தி. [சிரித்து] ஆத்மாவை வரிக்கணும் என்றேன். அந்த ‘ஸ்வயம்வரம்’ இப்படி இருக்கிறது! வரன் மட்டுமே வதூவை ஆஹாரம் பண்ணி விட்டு நிற்பதற்கான ஸ்வயம்வரம்!

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஆத்ம ஸாதகனின் அன்புக்கு இலக்கு ஏது ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  உயிர் கலந்த குளுகுளு அன்பு
Next