ஹ்ருதய நாடிகள்; ஞானியின் உயிர் அடங்குவதும் ஏனையோர் உயிர் பிரிவதும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

வேடிக்கை! ப்ரேமையின் ஸம்பந்தமேயில்லாத ஸமாசாரங்களும் ஹ்ருதயத்திலிருந்தே நடக்கின்றன! அதுதான் ஈச்வரனுடைய அதி விசித்ரமான மாயா சக்தி! ஹ்ருதயமே அஹங்கார ஸ்தானம் என்று இருப்பதில்தான் இப்படி!அத்தனை ஜீவர்களின் தனி வாழ்க்கை விஷயங்களையும் நடத்தி வைத்து, கன்ட்ரோல் செய்கிற நாடிகள் அதிலிருந்தே புறப்பட்டு மற்ற அவயங்களுக்கு ஜீவஸத்தைத் தருகின்றன என்று பார்த்தோமே, அதனால் இப்படி!

இந்த ஹ்ருதயத்திலிருந்து பல ஸெமி-மாம்ஸ நாடிகள் நாலா பக்கங்களிலும் ஓடுகின்றன. அவற்றிலே நவத்வாரம் என்று உடம்பிலுள்ள ஒன்பது ஓட்டைகளில்1 போய் முடிகிறவைகளும் இருக்கின்றன. மநுஷ்யர்கள் மரணமடைகிறபோது, அவர்களுடைய கர்மாவையொட்டி மறுபடி ஜன்மா எடுக்க வேண்டிய அத்தனை பேருக்கும் – அதாவது, ஜன ஸமூஹத்தில் முக்காலே மூணுவீசம் பேருக்கு – இந்த த்வாரங்களில் ஒன்றின் வழியாகத்தான் ப்ராணன் போவது. இந்த ஒன்பதைத் தவிர உச்சந்தலையில் ஒரு த்வாரம் அணுமாத்ரமாக இருக்கிறது. ஸகல ஜனங்களுக்குமே கருப் பிண்டமாயிருக்கும்போது உயிர் உள்ளே ப்ரவேசிப்பது அதன் வழியாகத்தான். ஆனால் சாகிறபோது புனர்ஜன்மாக்காரர்கள் அத்தனை பேருக்கும் உயிர் போவது அது தவிர மற்ற த்வாரங்களின் வழியாகத்தான்! புனர்ஜன்மா இல்லாதவர்களில் ஞானி தவிர பாக்கி அத்தனை பேருக்கும் இந்த ஒன்பதில் சேராத சிரஸின் த்வாரம் வழியாக ப்ராணன் வெளியில் போகிறது. கபால மோக்ஷம் என்பது அதைத்தான்.

‘ஞானி தவிர என்றால் அவன் ஸமாசாரம் என்ன? அவனைத் தவிர உள்ள மற்ற ‘புனர்ஜன்மா இல்லாதவர்கள்’ என்கிறவர்கள் யார்?

ஞானியின் பிராணன் தேக வியோகத்தின்போது வெளியில் எங்கேயும் போகிறதில்லை. எங்கேயோ போய் அடைய வேண்டிய மோக்ஷம் என்ற ஒன்று அவனுக்குக் கிடையாது. அதே மாதிரி, எங்கேயோ ஒரு காலத்தில், மரணம் என்பது ஏற்படும் காலத்துக்கு அப்புறந்தான், அவனுக்கு மோக்ஷம் என்பதுமில்லை. என்றைக்கு ஞானம் வந்ததோ, அதாவது ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்பட்டதோ அப்போதே பந்தப்படுத்தும் ஜீவ மனஸ் [அந்தஃகரணம்] நசித்து, அவன் மாயையிலிருந்து விடுபட்டுவிடுவதால் முக்தனாக – ஜீவன்முக்தனாக – ஆகிவிடுகிறான். இப்படி சரீரத்திலுள்ள போதே அவன் முக்தனாகிவிட்டதால், சரீரம் விழுவதற்கப்புறம் ப்ராணன் எங்கேயோ போய் முக்தி பெறணும் என்று இல்லைதானே?

அவன் உயிராக, பேருயிராக, ஆத்மாவை நினைத்து – பக்தி என்று தெரியாமலே, பரம உத்தமமான பக்தி பாவத்துடன் – தன்னுடைய அஹங்காரத்தைக் கரைக்கும் உத்தேசத்துடன் ஸாதனை பண்ணிக் கொண்டே போகும் போது அது கரைந்து கரைந்து ரொம்ப ரொம்ப ஒல்லியான நிலைக்குப் போனவுடன், ஆத்ம ஸ்தானமான ஹ்ருதய த்வாரத்திற்குள்ளேயே போய், அப்படியே ஆத்மாவில் ஒடுங்கி, ஐக்யப்பட்டு அற்றுப் போய்விடுகிறது. உடனேயே அவன் முக்தனாகி விடுகிறான்.

ஆனாலும் அதற்காக அவனுடைய உயிர் போய் விடுவதில்லை. உயிர் வாழ்கிறபோதே அவன் முக்தி நிலையிலிருப்பதால்தான் ஜீவன் முக்தன் என்பது. அப்புறம் ஒருநாள் அவனுடைய உடம்புக்குச் சாவு வருகிறது. ஏன் முக்தி அடைந்த பிறகும் அவன் உயிரோடு இருக்க வேண்டும், அப்புறம் அவன் உயிர் பிரிவது எப்போது என்பதைப் பற்றியுள்ள அபிப்ராயங்களில் இப்போது நாம் இறங்க வேண்டாம். முக்யமான அபிப்ராயம் ‘ப்ராரப்தம்2 தீர்வதற்காகவே அவன் [முக்திக்குப் பிறகும்] உயிரோடு இருக்கிறான்; அது தீர்ந்தவுடன் உயிரும் போய்விடுகிறது’ என்பது. அதையே வைத்துக்கொள்ளலாம். ஆக, ஆத்ம ஸாக்ஷாத்காரம் [முக்தி] அடைந்த பிறகும் அவனுக்கு உயிர்-ப்ராணன்- இருக்கிறது. செத்துப் போகிறபோது அந்த ப்ராணன் என்ன ஆகிறது என்றால் ஏற்கெனவே எப்படி அஹங்காரம் [மனஸ், புத்திகளும் அப்போது அஹங்காரத்தில் ஒடுங்கி விடுவதால் ‘அந்தஃகரணம்’ என்றே சொல்லலாம், எப்படி அந்த அந்தஃகரணம்) ஹ்ருதய த்வாரத்திற்குள் போய் ஆத்ம ஸ்தானத்தில் ஒடுங்கிப் போயிற்றோ, அப்படியே இப்போது மரணம் நேர்கிறபோது ப்ராணனும் அதற்குள்ளேயே போய்த்தான் ஒடுங்கிப் போய்விடுகிறது. அதாவது ஞானியின் சரீரம் சாகிறபோது அவனுடைய ப்ராணன் எந்த நாடி வழியாகவும் எங்கேயும் வெளியிலே போகவில்லை. உபநிஷத்திலும், ப்ரஹ்ம ஸூத்ரத்திலும் ‘க்ளிய’ராக அப்படி இருக்கிறது3.

பொது வழக்கில்கூட ஞானியின் உயிர் போனதாகச் சொல்லாமல் அடங்கினதாகத்தான் சொல்வது.

அவனைத் தவிர மறுபடி இந்த லோகத்தில் ஜன்மா இல்லாமல் பண்ணிக்கொண்ட மற்றவர்கள் யாரென்றால், பொதுவாக அவர்களை ‘உபாஸகர்கள்’ என்று சொல்வது. அவர்களில் பல வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் பொதுவாக இருப்பது: இந்த லோகத்தோடு, தேஹத்தோடு எல்லாம் தீர்ந்து போய்விடவில்லை என்று அந்த எல்லோருக்கும் தீர்மானமிருக்கிறது. ஆதார ஸத்யம் ஒன்று இருக்கிறது என்பதில் அத்தனை பேருக்கும் நிச்சயமான நம்பிக்கை இருக்கிறது. லோகமும் தேஹமும் பந்தப்படுத்துகிற தங்கள் உயிரை விடுவித்து மோக்ஷமடைய வேண்டுமென்ற எண்ணம் அவர்கள் எல்லாருக்கும் இருக்கிறது. இதோடு பொதுவான அபிப்ராயம் முடிகிறது. இதற்கப்புறம் எல்லாம் தனித்தனி அபிப்ராயங்கள்; அவற்றை அநுஸரித்து வேறு வேறான அனுஷ்டானங்கள்.

ஒரு அபிப்ராயக்காரன் அத்வைதி மாதிரியே ஆதார ஸத்யத்தை நிர்குணமாக நினைக்கிறான். ஆனாலும் [அத்வைதிக்கு மாறாக] ஒவ்வொரு ஜீவனுக்கும் அப்படியொரு தனி ஆதாரம் இருப்பதாக நினைக்கிறான். நிர்குணமானாலும் அது ஸச்சிதாநந்த பூர்ணம் என்று அத்வைதி நினைக்கிறார்போலவும் அவன் நினைப்பதில்லை. அது பாட்டுக்கு ஏதோ வெறிச்சென்று இருப்பதாக நினைக்கிறான். ‘ஆதார ஸத்யமே இல்லை; எல்லாம் சூன்யம்’ என்றும் [பௌத்தர் போல] நினைக்கவில்லை. மனோ நிக்ரஹம் பண்ணி அந்த வெறுமையான, ஆனாலும் ‘இருக்கிற’ நிலையில் சேர்ந்துவிடுவதற்காக யோகாநுஷ்டானம் என்பதைப் பண்ணுகிறான். அவனை யோகி என்கிறோம். இவன் தனி ஜீவபாவம் – அஹங்காரம் நசித்தே போக வேண்டுமென்று நினைப்பவன்தான். ஆனாலும் ஏகமாக இருக்கிற பரம ஸத்யமான ஸ்திதியைப் பற்றி ஸரியாகத் தெரிந்து கொள்ளாதவன். மனோ நிக்ரஹத்தையும் அவன் நேரே அப்படிப் பண்ணிக் கொள்ளாமலிருக்கிறான். ‘நாம் மனஸு இல்லையே! ப்ரம்மம் அல்லவா? இல்லாத வஸ்துவால் ஏன் இழுபறிப் படுகிறோம்? இருக்கிற ப்ரம்மமமே நாம் என்கிற ச்ருதி வாக்யமே நினைப்பாக இருந்து அதனாலேயே இதை ஒழித்துக் கட்டுவோம்’ என்று [ஞான மார்க்கக்காரனைப் போல] நினைத்து அப்படிப் பண்ணிக் கொள்ளவில்லை. நேராக மனோ நிக்ரஹம் பண்ணுவது கஷ்டமாயிருக்கிறதேயென்று ச்வாஸ நிக்ரஹத்துக்கு ரொம்பவும் முக்யம் கொடுத்து, பண்ணி, அதைத் துணைக்குக் கூப்பிட்டு வைத்துக் கொண்டேதான் மனோ நிக்ரஹம் பண்ணுகிறான்.4

இப்படிப் பண்ணுவதில் ரொம்பவும் விசித்ரமாக, இவனுடைய லக்ஷ்யமான ஸத்யம் வெறிச்சான கைவல்யமாயிருந்தபோதிலும், ச்வாஸ சக்தி அதன் மூலமான ப்ராண சக்தியில் சேர, அந்த ப்ராண சக்தி ஸகல ஜீவ வர்க்கத்தின் மூலமான மஹா ப்ராண சக்தியில் சேர அந்த சக்தி ப்ரபாவத்தினால் இவனுக்கு அற்புத சக்திகளெல்லாம் வருகின்றன. அவற்றில் இழுபட்டு லக்ஷ்யத்தைக் கோட்டை விடாமலிருக்கிற கஷ்டமான பொறுப்பு வேறு அவனுக்கு வாய்க்கிறது.

இன்னொரு அபிப்ராயக்காரன் ஆதார ஸத்யம் ஸகுணந்தான் என்று நினைக்கிறான். ‘அதைப் போய்ச் சேர வேண்டும். சேர வேண்டுமே தவிர அதோடேயே ஐக்யமாகி விடக்கூடாது. ஏனென்றால் ஐக்யமாகிவிட்டால் அதன் குணகணங்களை அநுபவித்து ஆனந்திப்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும். அதைப் பல பாவங்களில் ஏதோ ஒன்றில், அல்லது பலவற்றிலுமே அநுபவிப்பத்தில்தான் ஜீவாத்மாவின் நிறைவான ஆனந்தம் இருப்பதால் [அதோடு ஐக்யமாகி விடாமல்] வெளியிலிருந்தே அப்படி சாச்வதமாகப் பண்ணிக் கொண்டிருப்பதுதான் முக்தி’ என்று அவன் நினைக்கிறான். ஒன்றிடம் அன்பு வைத்தால்தானே அது எப்படி இருக்கிறதோ, என்ன பண்ணுகிறதோ அவற்றை அநுபவித்து ஆனந்திக்க முடியும்? ஆகையினால் அத்தனை பாவத்திற்கும் அடிப்படையாக அவன் அன்பைச் சொல்லி, அதை அப்யாஸம் செய்கிறான். அவனை பக்தன் என்கிறோம். ‘ஸகுணமான பரமாத்மாவோடு நாம் ஐக்யமாக வேண்டாம்’ என்று அவன் நினைப்பதோடு மட்டுமில்லை; ‘அப்படி ஐக்யமாக முடியாது. பரமாத்மா அப்படிப்பட்ட அத்வைத நிலை என்று ஒன்றை வைக்கவேயில்லை’ என்பது அவன் கக்ஷி.

இன்னொரு அபிப்ராயக்காரனால் மனஸை, மூச்சை அடக்கி ஸாதனை பண்ண முடியவில்லை. அல்லது அதில் நாட்டமில்லை. மனஸை திறந்து கொட்டி பக்தி பண்ணவும் அவனுக்கு வரவில்லை. ஆனால் இவனும் ஸம்ஸாரத்திலிருந்தும் சிற்றின்ப வாழ்க்கையிலிருந்தும் விடுபட ஆசைப்படும் ‘உபாஸகர்’ கோஷ்டியில் வருகிறவன்தான். ஸ்வாமி இருக்கிறார் என்று நம்புகிறவன்தானென்றாலும் அவரை உணர்ச்சிப் பூர்வமாக பக்தியாலோ, அறிவுப் பூர்வமாக ஞானத்தாலோ, ஸகுண நிர்குணங்களில் எதுவாகவும் பிடித்துக் கொள்ள முடியாதவனாயிருக்கிறான். ஆகையினால் விடுபடுகிற வழியாக இவன் பலனில் பற்றில்லாமல் ஸ்வதர்ம கர்மாக்களை நன்றாகப் பண்ணிக் கொண்டே போகிறான். வேதத்தில் ஒரு ஜீவனைப் பரிசுத்தி செய்வதற்காகச் சொல்லியிருக்கும் ஸகல ஸம்ஸ்காரங்களையும் செய்கிறான். நிகழ்கால நடைமுறை லோகத்தில், ஸொந்த லாப எண்ணம் இல்லாமல் தொண்டு செய்து கொண்டே போகிறவர்களையும் இந்த கோஷ்டியில் சேர்க்கலாம். ஆனால், வைதிக கர்மாவோ, ஸோஷல் ஸர்வீஸோ எது செய்பவனாயிருந்தாலும் ஸம்ஸார நிவிருத்தியை-பந்த மோக்ஷத்தை- இச்சிப்பவனாக இருக்க வேண்டும். அதோடுகூட, ஸொந்தப் பலனை நினைக்காமலிருப்பதோடு மாத்திரமில்லாமல், தான் செய்கிற கர்மாவினால் தொண்டினால் மற்ற எவருக்கும் ஏற்படக்கூடிய பலனையுங்கூட நினைக்கக்கூடாது. அதாவது அந்தப் பலன் ஏற்பட்டே தீரணும் என்ற பிடிவாதத்துடன் பண்ணக்கூடாது. ‘ஈச்வரன் ஒருத்தன் இருக்கிறான். அவனுடைய சித்தப்படி, தர்ம நியாயத் தீர்ப்புப்படிதான் யாருக்கும் எதுவும் நடக்கும். இப்படித்தான் நடக்கணும் என்று அவனிடம் பிடிவாதம் பிடிக்க நமக்கு உரிமை இல்லை. நல்லது என்று தெரிகிறதை நாம் பாட்டுக்குப் பண்ணிக் கொண்டே போவோம். பலன் அந்த பலதாதாவின் இஷ்டப்படி என்று விட்டுவிடுவோம்’ என்ற தீர்மானத்துடன் இவன் பண்ணவேண்டும். இவனைக் கர்மமார்க்கி, கர்ம யோகி என்பது.

இப்போது நான் சொன்னதிலிருந்து ஞான மார்க்கக்காரன் தவிர மற்ற மூன்று பிரதான மார்க்கக்காரர்களான யோகி, பக்தன், கர்மி ஆகிய மூன்று பேரும் ‘உபாஸகர்’கள் என்று தெரிகிறது. வேதத்தை ஆக்ஷேபிக்காமலும், ‘ஆதார ஸத்யமென்பதே கிடையாது, சூன்யந்தான்’ என்று சொல்லாமலும் உண்டான அநேக தர்சனங்களை-அதாவது ஃபிலாஸஃபிகளை-நன்றாக அநுஷ்டிக்கும் எல்லாரையுங்கூட இந்த கோஷ்டியில் சேர்த்துவிடலாம்.

இவர்கள் எல்லாரும் செத்துப்போன பிறகு ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள்; மறுபடி பிறப்பதில்லை. ஆனாலும் உடம்பிலிருந்து பிரிந்த அவர்களுடைய உயிர் உடனே பரமாத்மாவுடன் அபேதமாக ஐக்யமாகிவிடுவதில்லை. ஏனென்றால் இவர்களில் யாருமே அந்த அத்வைத ஐக்யத்தை லக்ஷ்யமாக நினைக்க வில்லையே! அதை ஸரியாகப் புரிந்து கொள்ளவில்லையே! அதற்கானதைச் செய்யவில்லையே! அது வேணுமென்று கேட்கவில்லையே! [சிரித்து] கேட்டாலே கிராக்கி பண்ணிக் கொண்டுதான் கொடுக்கிற பரமாத்மா கேட்காதவர்களுக்கு எதற்குக் கொடுக்கப் போகிறார்?

ஆனாலும் இவர்களெல்லாம் ஸம்ஸார நிவிருத்தி, ஜனன நிவிருத்தி கேட்டு நல்ல நல்ல வழிகளிலேயே போவதால் அவர்கள் கேட்ட அந்த நிவிருத்தியான விடுதலையை மட்டும் கொடுத்துவிடுகிறார்.

எப்படியென்றால், சரீரத்திலிருந்து பிரிந்த அவர்களுடைய உயிர் மறுபடியும் இந்த லோகத்திற்குத் திரும்பாமல் ப்ரம்ம லோகத்திற்குப் போகும்படிப் பண்ணுகிறார். அதோடு இஹலோக ஸம்ஸாரத்தில் அவதிப்படுவதிலிருந்தும், பிறவிகள் எடுப்பதிலிருந்தும் விடுதலைதான் – அதாவது, மோக்ஷந்தான்.

ப்ரம்ம லோகம் என்றால் ப்ரம்மத்தின் லோகம் இல்லை என்று இத்தனை கதை கேட்ட பின் நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆமாம், ப்ரம்மத்திற்கு லோகம் எதுவும் கிடையாது. இந்த ப்ரம்ம லோகம் ப்ரம்மா என்ற தெய்வத்தின் லோகம்.

சதுர்முக ப்ரம்மாவின் லோகம் என்று வைத்துக் கொள்வதைவிட அதை ஸகுண ப்ரம்ம லோகம் என்றே வைத்துக் கொள்ளவேண்டும். [ப்ரம்மா என்கிறவரை] விஷயம் தெரிந்தவர்கள் ஹிரண்யகர்பன் என்றும் அந்த லோகத்தை ஹிரண்யகர்ப லோகம் என்றும் சொல்வார்கள்.

ஸூக்ஷ்ம தரமான நிர்குண ப்ரம்மமாக இருக்கிற நிலைக்கும், அது மாயா விநோதத்தினால் ஸ்தூல ஸ்ருஷ்டியை உண்டாக்கியிருக்கிற நிலைக்கும் இடைப்பட்ட நிலையைதான் ஹிரண்யகர்பன் என்று மூர்த்தமாகச் சொல்வது. ஸ்தூலமாக ஸ்ருஷ்டி வெளிப்படாவிட்டாலும் [மாயா ஸஹிதமான] ஸகுண ப்ரம்மம் ஸங்கல்ப ரூபத்தில் ஸ்ருஷ்டியைத் தனக்குள்ளே கர்ப்பம் மாதிரி வைத்துக் கொண்டிருக்கும் நிலை. ஹிரண்யம் என்றால் ஸ்வர்ணம். அவித்யை எனப்படுகிற மாயை இருட்டு மாதிரியானதானாலும் ப்ரம்ம சைதன்யத்தின் ப்ரதிபலிப்பாலேயே அது இந்த அற்புதமான ஸ்ருஷ்டியைப் பண்ணுவதால், ப்ரதிபலிக்கிற அந்த தத்வத்தை ஹிரண்யமாகச் சொல்வது.

வெளியிலே போகிற வாசல்தான் உள்ளே நுழைகிற வாசலும் என்ற உதாரணப்படி ஹிரண்யகர்பன் வழியாக வெளியிலே வந்த ஸ்ருஷ்டி அவன் வழியாகவேதான் உள்ளே போவதும். எப்போது உள்ளே போகுமென்றால், ஹிரண்யகர்பனுக்கு நூறு வயஸு முடிந்து அவனுடைய ஆயுஸ் பூர்த்தியாகி, அவன் நிர்குண ப்ரஹ்மத்திற்கு உள்ளே போய் ஐக்யமாகிறபோது. நம்முடைய கணக்கில் ஆயிரம் சதுர்யுகம் அவனுக்கு ஒரு பகல்; ஆயிரம் சதுர்யுகம் ஒரு ராத்ரி; அவனுடைய ஒரு முழு நாள் நமக்கு இரண்டாயிரம் சதுர்யுக காலம். இந்த மாதிரி ஒரு நாள் கொண்ட வருஷத்தின் கணக்கில் அவன் நூறு வருஷம் இருப்பான். அவ்வுளவு காலமும் ஸ்ருஷ்டியும் நடந்து கொண்டிருக்கும். நூறு வயஸானதும் அவன் ப்ரம்மத்தின் உள்ளே வாங்கிக் கொள்ளப்படுவான். அப்போது அவனோடு கூட லோகங்கள், ஜீவர்கள் முதலான ஸகல ஸ்ருஷ்டியும் ஜாடா [ப்ரம்மத்தின்] உள்ளே போய் ஐக்யமாகிவிடும். ப்ரம்மம் கேவலமாக [தனித்து] நிற்கும். எத்தனை ஆயிரங்கோடி வருஷம் ஸ்ருஷ்டி நடந்ததோ அத்தனைக் காலம் ஸ்ருஷ்டியில்லாமல் ப்ரம்மம் மாத்திரமே இருக்கும். அதற்கப்புறம் மறுபடி ஸ்ருஷ்டி.

ஹிரண்யகர்பனின் ஆயுஸ் முடிந்து அவன் ஸ்ருஷ்டி முழுவதோடும் பரமாத்மாவில் சேர்வதற்கு ‘ஆத்யந்திக ப்ரளயம்’ என்று பெயர். (நடுவிலேயே அந்த வார்த்தையைச் சொல்லி, ‘அப்புறம் அர்த்தம் சொல்கிறேன்’ என்று சொன்னேன்.)

நிறையக் கர்மா பாக்கி இருந்து அதைத் தீர்த்துக் கொள்ள கர்மமோ, பக்தியோ, யோகமோ, ஞானமோ எந்த வழியிலும் போகாமல் திரும்பப் திரும்பப் பிறந்து செத்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான ஜீவன்கள் அந்த ப்ரளயம் ஏற்படுகிறவரை இஹலோகத்திலேயே லக்ஷக்கணக்காக ஜன்மாக்கள் எடுத்து அலைபடத்தான் வேண்டும். ஞானவழியில் போனவன் இந்த ஜன்மாவிலேயே ப்ரம்மத்துடன் ஐக்யமாகி விடுகிறான். மற்ற வழிக்காரர்கள் – ‘உபாஸகர்’ எனப்படுகிறவர்கள்-ஜனன மரணங்களிலிருந்து தப்பித்து, ஆனாலும் அத்வைத முக்தி அடையாமல், ப்ரம்மலோகத்திற்குப் போய், அப்புறம் அங்கேயிருந்து ஆத்யந்திக ப்ரளயத்தின் போது ப்ரம்மாவோடுகூட ப்ரம்மத்திலேயே போய்க் கரைந்து விடுகிறார்கள்.

அந்த ப்ரம்மலோகம் எப்படி இருக்குமென்றால்: அங்கே போய்ச் சேர்ந்தவனுக்கு காம க்ரோதாதி உட்பகைகளோ, வியாதி, வக்கை, அஸுரர் முதலான வெளிப்பகைகளோ எதுவும் இல்லாமல் ஆனந்தமாக, சுத்தமாக இருக்கும். இது பொதுவாக அங்கே போகிற அத்தனை தினுஸு உபாஸகர்களுக்கும்.

அது தவிரத் தனித் தனியாக ஒவ்வொரு தினுஸுக்காரர்களுக்கும் அது ஒவ்வொரு தினுஸாக இருக்கும்.

கர்மாக்காரன் தோஷமில்லாததாக என்னென்ன ஆசைப்பட்டாலும் அதெல்லாம் பூர்த்தியாகிற இடமாக அது இருக்கும்.

பக்திக்காரன் எந்த இஷ்ட தெய்வத்தைச் சேர நினைத்தாலும் அந்த இஷ்ட தெய்வம் உள்ள லோகமாக அது இருக்கும். ப்ரம்மலோகம் என்றதால் ப்ரம்மாதான் அங்கே இருப்பதாக அர்த்தமில்லை. அதற்கும் தாண்டி, உச்சியில் தங்களுடைய வைகுண்டம், கைலாஸம் என்று அந்தந்த பக்தர்கள் சொன்னாலும் இதுவேதான் அவரவருக்கும் அப்படியப்படித் தெரிவது. ஒரே பரமாத்மா தான் அந்தந்த லோகத்தில் விஷ்ணு, சிவன் என்றெல்லாம் தெரிவார்.

இப்படிப் பார்த்தால் ப்ரம்மா யாருக்குமே இஷ்ட தெய்வம் இல்லை! பின்னே ஏன் அவர் பேரில் சொல்லியிருக்கிறதென்றால், அவர் அப்படி இல்லாததேதான் காரணம் என்கலாம்! என்ன இப்படிச் சொல்கிறனே என்றால்: முக்யமாக, வைதிக கர்மாநஷ்டானங்களைப் பலனில் இச்சையில்லாமல் மோக்ஷ மார்க்கமாக அநுஷ்டிக்கிறவனுக்குத்தான் இந்த ஹிரண்யகர்ப்ப லோக ப்ராப்தியை சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது. ஆத்ம சாஸ்திரமான உபநிஷத்துக்களில் மட்டுமில்லாமல் தர்மசாஸ்திரமான மநுஸ்ம்ருதி முதலியவற்றிலும் அவனை முக்யமாகக் குறிப்பிட்டே ப்ரம்மலோக ப்ராப்தி சொல்லியிருக்கிறது. அவனுக்கு இஷ்ட தெய்வம் என்று பக்திப் பிடிப்போடுகூட எதுவும் இல்லை. அதனால் ஸ்ருஷ்டியிலிருந்து மூலத்திற்கு அவன் திரும்புகிறான் என்பதை வைத்து இதற்கும் அதற்கும் நடுவே வாசலாக இருப்பதை ஸ்ருஷ்டி கர்த்தாவின் பெயரில் சொன்னது. [சிரித்து] இஷ்ட தெய்வங்களாக இருக்கப்பட்ட மற்ற தெய்வங்கள் எதன் பெயரிலும் அதைச் சொல்லி, அந்த தெய்வம் தவிர இருக்கிற பாக்கியுள்ள தெய்வங்களின் பக்தர்கள் சண்டைக்கு வராமலிருக்கவும் இது ஸௌகர்யமாயிருக்கிறது!

கொஞ்சம் ‘தாராளமாக’ இன்னும் சில பேரைக்கூட ‘உபாஸகர்’கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஆதியில் வேதந்தான் ஜக்த பூரா வியாபித்திருந்தாலும் அப்புறம் தேசாந்தரங்களில் ஏதேதோ விதத்தில் அது திரிந்து வீணாகப் போய், பிற்பாடு வேத வழி என்று ஒன்று இருப்பதாகவே தெரியாமல் போனபோது அங்கங்கே ஒவ்வொரு பெரியவர்கள் ஒவ்வொரு மதத்தை, ஃபிலாஸஃபியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்; தெய்வ பக்தி, நல்லொழுக்கம், ஆத்ம சிந்தனை ஆகியவற்றை விருத்தி செய்வதாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த மதாந்தரங்களை, சாஸ்திராந்தரங்களை [அன்னிய மதங்களை, அன்னிய சாஸ்திரங்களை] ச்ரத்தையோடு அநுஸரிக்கிற எல்லாரையும் ‘உபாஸகர்’களாக வைத்துக்கொள்ளலாம். அவர்களும் ப்ரம்மலோகம் போவார்கள் என்றும், அவர்களுடைய நம்பிக்கைப்படி லக்ஷ்யமாயுள்ள பரலோகமோ, விடுபட்ட நிலையோ எதுவாயிருந்தாலும் அதுவாக ப்ரம்மலோகம் அவர்களுக்கு இருக்கும் என்றும் வைத்துக் கொல்ளலாம். இன்னுங்கூட தாராளமாகப் போனால், ஆதியில் வேதத்தைக் கண்டித்தே வேறே மதங்களை ஸ்தாபித்த மூலபுருஷர்களின் விஷயம் எப்படியானாலும் ….. ஒரு ஸ்திதிக்கு மேலே போய்விட்டால் ஒருத்தனுக்கு வேதம் வேதமில்லை என்று அந்த வேதமே சொல்லியிருக்கிறதே5, அப்படி வேத அநுஷ்டானத்திற்கும் மேலே தங்களளவில் அவர்களில் இரண்டொருத்தர் போயுமிருக்கலாம்; அந்தத் தனி மநுஷ்யர்களைப் பற்றி நமக்கு ஒரு அநுமானமும் வேண்டாம்; ஆனால் வேதத்தை பற்றித் தெரியாததால் தேசாந்தரங்களில் ஏற்பட்ட அவைதிக மதங்கள் மாதிரி இல்லாமல், வேத மதம் இருந்து வந்திருக்கும் நம் தேசத்திலேயே அதை ஆக்ஷேபித்து அவர்கள் ஏற்படுத்திய மதங்களில் பிற்காலங்களில் பிறந்தவர்களைப் பற்றித்தான் சொல்ல வந்தேன் …… அவர்களெல்லாம், நாம் வேதத்தை வைத்துக் கொண்டிருக்கிறதுபோல, தாங்கள் பிறந்த மதமாகிய அவைதிக மதத்தையே தங்கள் வேதமாக வைத்துக்கொண்டு அந்த மத ஸ்தாபகரையும் மற்ற முக்ய புருஷர்களையும் நாம் நம்முடைய ரிஷிகள், ஆசார்யாள் முதலியவர்களை நினைக்கிற மாதிரி நினைத்து பக்தி விச்வாஸத்துடன் அதையே அநுஸரித்துக் கொண்டு போனால் அது பிசகு என்று தோன்றவில்லைதானே? அப்படிப்பட்டவர்களுக்கும் ப்ரஹ்மலோகம் கிடைக்கலாம். அவர்கள் லக்ஷ்யமாக நினைக்கும் சூன்யமோ, வேறே என்னவோ அதுவாக அந்த ப்ரஹ்மலோகம் இருக்கலாம். [சிரித்து] ஈச்வரன் அவர்களுக்கு ப்ரஹ்மலோக ப்ராப்தி தருகிறானோ இல்லையோ, நான் கொடுத்து broad- minded பட்டம் வாங்கிக்கொள்கிறேன்! கண்டிப்பான வைதிகர்களைக் கேட்டால், அவைதிக மதஸ்தர்கள் தங்கள் மதத்தை நல்லபடி அநுஷ்டித்தால் அதன் பலனாக அடுத்த ஜன்மாவில் வைதிக மதத்தில் பிறந்து அதிலுள்ள உபாஸனைகளில் ஒன்றை நன்றாக அநுஷ்டித்துத்தான் ப்ரஹ்மலோகம் போகமுடியும் என்று சொல்லக்கூடும்…..

மோக்ஷ விஷயமாக இன்னும் ஒன்றிரண்டு விஷயங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

பக்தி மார்க்கம் என்றே இருப்பதில் கடைசிவரை போகிற எல்லாருக்குமே இஷ்டதெய்வ லோகத்தில் த்வைதமான மோக்ஷந்தான் கிடைக்கிறது என்று நினைத்துவிடக் கூடாது. அத்வைதமாக இல்லாத ஒரு ஃபிலாஸஃபியால் கரை கட்டி வைத்து, அதற்குள்ளாகவே போகிற பக்தர்களை குறித்துத்தான் அப்படிச் சொன்னது. ஆனால் ஸ்வாபாவிகமாக ஹ்ருதயத்தைப் பொங்கவிட்டு பக்தி பண்ணுகிறபோது அதை ஒரு கரையாலும் கட்டி வைக்க முடியாது. அப்படிப்பட்ட பக்தர்கள்-ஆழ்வார்கள், நாயன்மார்களைப் போன்றவர்கள் – விசிஷ்டாத்வைதத்தையும் சைவ ஸித்தாந்தத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்ணனும் என்றில்லாமல், உசந்த பக்தி உணர்ச்சி எப்படியெப்படித் தங்களைக் கொண்டு போகிறதோ, அடித்துக்கொண்டு போகிறதோ, இன்னும் என்னென்ன அநுபவங்கள் வேண்டும் என்று தங்களைத் தவிக்கப் பண்ணுகிறதோ அப்படியே இருக்கட்டுமென்று ‘ஃப்ரீ’யாக விட்டுவிடுவார்கள். அப்படி விட்டுவிடுவதில் பல பக்தர்களுக்கு, ‘இப்படி வெளியிலிருந்துகொண்டு பக்தி பண்ணுவது போதாது. அவனுக்கு வேறேயில்லை என்று ஒன்றாகியேவிட வேண்டும்’ என்ற தவிப்பு வந்து அதைப் பாட்டிலும் கொட்டியிருக்கிறார்கள். வாஸ்தவமாகவே அந்த அத்வைத நிலை தங்களுக்கு வாய்த்ததைக்கூடப் பாடியவர்கள் உண்டு. இப்படி பக்தியிலேயே பராபக்தி என்ற ஐக்யாநுஸந்தானத்திற்குப் போனவர்கள் ப்ரம்ம லோகத்தில் ஸகுண ப்ரம்மத்துடன் சேராமல் ப்ரம்மமாகவே ஆகிற அத்வைத ஸாக்ஷாத்கார முக்தி அடைந்துவிடுவார்கள்.

தான் ஞான யோக ஸாதனை என்று பண்ணாமல் ஈச்வரனே தனக்கு அத்வைத மோக்ஷம் தரவேண்டுமென்று ஸதாவும் ஒருவன் பிரார்த்தித்து பக்தி பண்ணிக் கொண்டிருந்தாலே அந்த பக்தனுக்கும் பகவான் ப்ரஹ்ம லோகத்திற்கு மேற்பட்ட ப்ரஹ்ம நிர்வாணத்தை [அத்வைத முக்தியை] அநுக்ரஹித்துவிடுவான். ஈச்வர ப்ரஸாதம் என்று நேரே தெரியாமல் ஸாதனைமூலம் ஞானவழிக்காரன் பெறுவதையே இந்த மாதிரியான பக்தன் ப்ரார்த்தனை மூலம் ஈச்வர ப்ரஸாதமாகத் தெரிந்துகொண்டு பெற்று விடுவான். அவனுக்கு அப்படியே அத்வைத மோக்ஷத்தை பகவான் தூக்கிக் கொடுக்கமாட்டானென்றும், அவனையும் ஞான வழியில் திருப்பிவிட்டே அந்த லக்ஷ்ய ஸித்தி பெறும்படியாகத்தான் செய்வானென்றும் நம்முடைய [அத்வைத] ஸம்பிரதாயத்துப் பெரியவர்கள் சில பேர் அபிப்பிராயப்படுகிறார்கள்.

இப்படியே, அநேக விதமான யோகங்கள் இருப்பதில் ஒன்றில் ஆதார சக்தியைப் பிடித்து ஸுஷும்னா நாடியில் சக்ரம், சக்ரமாக ஏற்றிக் கொண்டே போய் முடிவிலே, அந்த சக்தியின் மூலம் அதற்கும் ஆதாரமான ப்ரம்மமாகிற சிவத்தில் இரண்டறக் கலப்பதற்கு வழி சொல்லியிருக்கிறது. அங்கே அத்வைதமாகத்தான் முக்தியைச் சொல்லியிருக்கிறது. ஆகையால் அந்த உபாஸகர்களுக்கும் ப்ரஹ்ம லோக ப்ராப்தி என்றில்லாமல் அத்வைத முக்தியே கிடைப்பதாகத் தீர்மானிக்கலாம்.

நிர்குணமான தத்வத்தில் ஸமாதி அடைவதை லக்ஷ்யமாக சொல்லும் அஷ்டாங்க யோக ஸித்தர்களும் ப்ரம்ம நிர்வாணமே (அத்வைத முக்தி) அடைவதாக ஒரு அபிப்ராயம் இருந்தாலும் கீதா வசனம் அதற்கு ஆதரவாக இல்லை. கிருஷ்ண பரமாத்மாவின் தீர்ப்புக்கு மேலாக, மாறாக இன்னொன்றை ஒப்புக் கொள்வதற்கில்லை. அவர் ஞானிகளைத்தான் ஸாங்க்யர் என்றும் ஸந்நியாஸி என்றும் சொல்கிறாரென்பது எல்லா ஸம்ப்ரதாய வித்வான்களுக்கும் தெரிந்த விஷயம். அத்வைத வழியில் போகிற இவர்கள் மட்டுந்தான் இஹத்தில் இருக்கும்போதே ‘ப்ரஹ்மபூதர்’களாகி, தேஹம் விழுந்தவுடன் ‘ப்ரஹ்ம நிர்வாணம்’ அடைகிறார்களென்று அவர் சொல்லியிருக்கிறார்.6 ‘ப்ரஹ்ம பூதராவது’ என்பதும் ப்ரஹ்ம நிர்வாணந்தான். தேஹமுள்ள போதே அப்படி ஜீவன் முக்தியிலிருப்பதால் சும்மா ஒரு வித்யாஸம் காட்டத்தான் ப்ரஹ்மபூதர்’ என்று சொன்னது. இதைத் தெளிவு செய்வதாக ஒன்றிரண்டு ச்லோகம் தள்ளி “அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே”7: “இரண்டு இடத்திலும், அதாவது இஹம் பரம் இரண்டிலுமே ஞானிக்கு ப்ரஹ்ம நிர்வாணம் கிடைக்கிறது” என்றும் சொல்லியிருக்கிறார்.

யோக மார்க்கம் என்றே பொதுவாகச் சொல்கிறோமே, அஷ்டாங்க யோகம் முதலானதுகளை, அவற்றில் போகிறவர்களுக்கு என்ன ஸித்திக்கிறது என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அவர் சொல்கிற யோகி அஷ்டாங்க யோகத்தை சுத்தமாக அப்யஸித்து நன்றாக ச்வாஸக் கட்டுப்பாடு, மனஸ் கட்டுப்பாடு இரண்டையும் பண்ணினவன். அதோடு கூடுதல் சிறப்பாக, அவன் நல்ல பக்தியுள்ளமும் படைத்தவன். யோக சாஸ்திரத்தில் சொன்னபடி கான்ஸென்ட்ரேஷனுக்காக ஏதோ கொஞ்சம் ஈச்வர ப்ரணிதானம் (பகவத் பக்தி த்யானங்கள்) பண்ணுவது என்று மட்டுமில்லாமல் பகவானையே எப்போதும் தொடர்ந்து ஸ்மரிக்கிறவன். “மாம் அநுஸ்மரன்”8 “ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யச:”9 என்றெல்லாம் அவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட பக்தியும் சேர்ந்த அந்த யோகி வேதங்களிலெல்லாம் சப்த ப்ரஹ்மமாகச் சொல்லியிருக்கும் ப்ரணவத்தின் த்யானத்திலேயே தேஹத்தை விட்டால்கூட அவனுக்கு உடனே அத்வைத முக்தி கிடைக்கவில்லை என்றுதான் ‘அக்ஷர ப்ரஹ்ம யோகம்’ என்கிற [எட்டாவது] அத்யாயத்தில் பகவான் தெரிவித்திருக்கிறார். உத்தராயண ஸூர்ய கதியில் அவனுடைய உயிர் ப்ரஹ்மலோகத்திற்குப் போய்ச் சேருவதாகவே சொல்லியிருக்கிறார்.10


1 இரு கண்கள், இரு செவிகள், இரு நாசித் துவாரங்கள், வாய், கருக்குழி, எருக்குழி ஆகிய ஒன்பது.

2 ஒருவரது பூர்வ கர்மத்தில் எந்தப் பகுதி நிகழ் பிறவியில் பலன் தந்தாக வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு அவ்வாறு பலன் தரத் தொடங்கிவிட்டதோ அதுவே ப்ராரப்தம்.

3 (உ-ம்) ப்ருஹதாரண்யகம் III.2.11;IV.4.6. ப்ரஹ்ம ஸூத்ரம் IV.2.12-16.

4 மனத்திற்கும் மூச்சுக்கும் வேர் ஒன்றேயாக இருப்பதால் இது இயல்கிறது.

5 ப்ருஹதாரண்யகோபநிஷத் IV.3.22

6 கீதை V.24

7 கீதை V.26

8 கீதை VIII. 13

9 கீதை VIII. 14

10 சாந்தோக்யம் VIII.6.5.லும் ஓங்காரத்தை உபாஸித்து உயிர் துறக்கும் ஜீவன் ஸகுண ப்ரம்ம லோகம் சேர்வதாகவே கூறியுள்ளது. ப்ரச்னோபஷத்தின் ஐந்தாவது பிரச்னத்தில் ஓங்கார உபாஸகனுக்குக் கூறப்பட்டுள்ள முக்தியும் இவ்விதமே ஆசார்யாளால் பாஷ்யம் செய்யப்படுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பக்தியும் ஹ்ருதயமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  உத்தராயண மரணம் : அதன் சரியான பொருள்
Next