கர்ம யோகம் சுத்தமாக அநுஷ்டித்து முடித்தால் அதன் பலனாகச் சித்த சுத்தி உண்டாகி ஞான யோகத்தில் போவதற்கான யோக்யதை ஸித்திக்கும் என்று பல தடவை சொன்னேன். அப்படி ஒரு கர்ம யோகி இந்த ஜன்மாவிலேயே, அல்லது அடுத்த ஒன்றிரண்டு ஜன்மாக்களிலோ சுத்தி பெற்று ஞான யோகம் ஆரம்பித்தால், அந்த ஜன்மாவோடேயே அத்வைத முக்தி பெற்றுவிடுவான். அப்படியிருக்க, இப்போது கர்ம யோகத்தையும் உபாஸனைகளில் ஒன்றாக்கி, அவன் ஞான யோகத்திற்குப் போவதற்குப் பதில் ப்ரஹ்ம லோகத்திற்குப் போவதாகச் சொல்லி, ஆத்யந்திக ப்ரளயம் ஏற்படும் வரையிலான எத்தனையோ கல்ப கோடி காலம் கழிந்த பிறகுதான் அத்வைத முக்தி பெறுவான் என்று சொன்னால் எப்படி?
எப்படியென்றால்: அது அவன் உத்தேசத்தை, லக்ஷ்யத்தைப் பொறுத்தது. அவனுக்கு அத்வைத லக்ஷ்யத்தில் குறியிருந்து, ஆனாலும் ஞான யோகத்திற்கான பக்வமில்லாததால் அதில் பிரவேசிப்பதற்கான யோக்யதை ஸம்பாதித்துக் கொள்ளவே கர்ம யோகம் அநுஷ்டிக்கிற உத்தேசம் இருந்தால், அது இருந்தாலே, சித்த சுத்தி ஏற்பட்டவுடன் ஞான வழியில் ஆரம்பிப்பான்; அப்புறம் அத்வைத முக்திக்கும் சுருக்கவே போவான். ஆனால் அந்த [ஞான] வழியில் அவனுக்கு அபிருசி, அபிநிவேசங்கள் [சுவையும், ஈடுபாடும்] இல்லாமல், “ஸம்ஸாரத்திலிருந்து விடுபடணும். அதற்கு நம்மால் முடிந்தது கர்மாநுஷ்டானந்தான். அதைப் பண்ணுவோம்” என்று புஷ்களமாகக் கர்ம யோகம் பண்ணி அதோடு நிறுத்திக் கொண்டானானால் ப்ரஹ்மலோக ப்ராப்திதான் கிடைக்கும். முன்னேயே சொன்னாற்போலக் கேட்காத பெரிய லக்ஷ்யத்தை பகவானாக வலிந்து தரமாட்டான்.
இந்த ஸமாசாரங்களெல்லாம் எதற்கு வந்ததென்றால் “ஞான வழியில் பக்தி உண்டா என்ன? அது ‘கரீயஸீ ஸாமக்ரி’ என்றது எப்படி?” என்ற அலசலில் வந்திருக்கிறது! இந்த்ரியங்கள், மனஸ், புத்தி இவற்றை அடக்கி அழிக்க வழி சொன்னபின், ஜீவபாவத்திற்கே ஆதாரமான அஹங்காரத்தை அடக்கி அழிப்பதற்காகத்தான் பக்தியை வைத்தது; அடிவேரையே வெட்ட அதுதான் ஆயுதமாயிருப்பதால் ‘கரீயஸி ஸாமக்ரி’யாகச் சொன்னது-என்று பார்த்துக் கொண்டு போனோம். ஹ்ருதயம்தான் அஹங்கார ஸ்தானம்; அதை பக்தி என்கிற அன்பின் ஸ்தானமாக்கி, அந்த பக்தியாலேயே அஹங்காரத்தைக் கரைத்துக் கரைத்து மெல்லிசு பண்ணினால் அது ஹ்ருதயத்தின் மத்தியிலுள்ள ஆத்ம ஸ்தானமான த்வாரத்திற்குள்ளே போய் ஜீவ பாவம் அடியோடு போய் ஆத்மாவாக நிற்கும் என்று பார்த்தோம்.
அந்தப் பேச்சில், ‘ஞானி இப்படி ஆகிறானென்றால் மற்றவர்கள் என்ன ஆகிறார்கள்? அவர்களுக்கும் ஹ்ருதயத்தில்தானே அஹங்காரம் இருக்கிறது? அது ஆத்ம ஸ்தானத்திற்குள் போகாவிட்டால் வேறே என்ன பண்ணும்?’ என்ற கேள்வி வந்தது. ‘ஹ்ருதயத்திலிருந்து அநேக நாடிகள் போகின்றன. சரீரத்தின் நவத்வாரங்களில் முடிகிறவையும் அவற்றிலே உண்டு. கர்ம பந்தம் கத்தரித்துப் போகாத ஸாதாரண ஜீவர்களின் மனஸ், புத்தி, அஹங்காரம் எல்லாமே கடைசி மூச்சு வரை மெல்லிசு படாமல் பெருத்துத்தான் இருக்கும். அந்தக் கடைசி மூச்சு அப்பேர்ப்பட்ட பருமனான அந்தஃகரணத்தைத் தூக்கிக் கொண்டு ஒன்பது நாடிகளின் ஒன்றின் வழியாக வெளியே போகும். பிற்பாடு இன்னொரு ஜன்மா ஏற்படும்போது அந்த சரீரத்திற்குள்ளே பிரவேசிக்கும். இந்த ஒன்பதைத் தவிர சிரஸுக்குப் போகிற நாடி ஒன்று உண்டு. ஞான வழியில் போகாமல், ஆனாலும் ஸம்ஸார பந்த நிவ்ருத்தியை லக்ஷ்யமாகக் கொண்டு பலவித உபாஸனை பண்ணுபவர்களுக்கெல்லாம் அந்த நாடி வழியாக உயிர் வெளியிலே போய் ப்ரஹ்ம லோகத்தை அடையும்’ என்ற ஸமாசாரங்களெல்லாம் [பதிலில்] வந்துவிட்டன.