ஞான வழியில் லக்ஷ்ய ஸித்தியை அடைவிக்கிற முடிவான நேர்ஸாதனத்திற்கு நிதித்யாஸனம் என்று பேர். அது த்யான யோகத்தைச் சேர்ந்ததுதான்1. அப்படிச் சொல்கிறபோது உயிர், உறவோடு வரணம் என்கிற அபிப்ராயங்களில்லாமல் தத்வமாகவே வைத்து அதே சிந்தனையாக இருப்பதாகத்தான் நினைக்கப்படுகிறது. அப்படியில்லை; உயிரோடு உறவு கொண்டாடி ஆத்ம ஸமர்ப்பணம் செய்வதான பக்தி யோகத்தையும் கரைத்துக் கொண்ட த்யான யோகமாகத்தான் அதை அப்யஸிக்க வேண்டும். ‘விவேக சூடாமணி’யிலேயே இதை இன்னொரு இடத்தில் ஆசார்யாள் ஸ்பஷ்டமாகத் தெரிவித்திருக்கிறார். தாம்தான் தெரிவிக்கிறோமென்றில்லை; வேதத்தின் கட்டளையே அப்படியிருக்கிறதென்றும் சொல்லியிருக்கிறார்.
ச்ரத்தா-பக்தி-த்யான-யோகாந் முமுக்ஷோ:
முக்தேர்-ஹேதூந் வக்தி ஸாக்ஷாச்-ச்ருதேர்கீ : | 2
அடிப்படை ச்ரத்தை. அதோடு பக்தி யோகம், த்யான யோகம் இரண்டையும் கலந்து பண்ணுவதே – த்யான யோகத்திலேயே பக்தி பாவத்தையும் கரைத்துப் பண்ணுவதே – முமுக்ஷுவாக இருப்பவன் முக்தியைப் பெறுவதற்கு ஹேது. அதாவது உபாயம். “இப்படி ஸாக்ஷாத் வேத வாக்கியமே சொல்கிறது: ஸாக்ஷாத் ச்ருதே: கீ: வக்தி” என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். ‘ச்ருதே: கீ:’ என்றால் வேதத்தின் வாக்கியம்.
“அப்படியா? வேதத்திலேயேவா ஞான வழியிலும் த்யானம் மட்டுமில்லாமல் பக்தியும் உண்டு என்று சொல்லியிருக்கிறது? எந்த இடத்தில்? என்றால், ‘கைவல்ய உபநிஷத்’ என்பதில் அப்படி இருக்கிறது. க்ருஷ்ண யஜுர் வேதத்தில் வருகிற உபநிஷத் அது. அதில் உபதேச ஆரம்பமே “ச்ரத்தா-பக்தி-த்யான-யோகாதவைஹி” [சிரத்தையாலும் பக்தியாலும் த்யான யோகத்தாலும் (ப்ரம்ம ஞானத்தை) அடைவாயாக!] என்பதுதான். அந்த ச்ருதிசிரோ வாக்யங்களையே வைத்துத்தான் இங்கே ஆசார்யாளும் “ச்ரத்தா பக்தி த்யான யோகான்” என்று ஆரம்பித்திருக்கிறார்.
1 லக்ஷணம் வகுக்கப்பட்ட ஒன்றை லக்ஷ்யமாகக் கொண்டு அதையே ஒருமுகமாகச் சிந்திப்பதே பொதுவில் ‘த்யானம்’ எனப்படுவது. லக்ஷணம் வகுக்கவொண்ணாத ப்ரம்மம் குறித்த ஒருமுக சிந்தனையே அத்வைத ஸாதனையில் வருவதால் இதற்கு ‘நிதித்யாஸனம்’ எனத் தனிப் பெயர் சொல்வது. ஆயினும் ஒருமுக சிந்தனையே இதற்கும் கருவாதலால் இதையும் த்யான யோகமாகவே கூறுவதுண்டு.
2 ச்லோ 46 (அ) 48