ஸித்திக்கு முன்னிலையில் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஆத்மாவைப் பற்றியதாக மனனத்தின்போது பல விஷயங்கள் தெளிவுபட்டு, அதுவே ஏகமான ஆத்மாவை மாத்திரம் தியானிப்பதான நிதித்யாஸனத்தில் கொண்டு விடும்.

Deep-ஆன மனன-நிதித்யாஸனங்களில் ஈச்வரனுக்கும், [ஸாதகன் என்ற] அந்த ஒரு ஜீவனுக்குமே தெரிந்ததாக அநேகம் நடக்கும்; நடக்கலாம். ஜீவனுக்குங்கூடப் புரியாததாகவும் சிலது நடக்கலாம். இங்கே அவன் புரியவில்லையே என்று குழம்பிக்கொண்டு நிற்கக் கூடாதென்றுதான் முந்தியே ஆசார்யாள் ச்ரத்தா பக்திகளை அவனுக்குள்ளே நன்றாக இஞ்ஜெக்ட் பண்ணி விட்டது! அதனால் அவன் தனக்கு ஒன்று புரியவில்லை என்று எதைப் பற்றியும் குழம்பிக் கொண்டிருக்காமல் குரு காட்டிக் கொடுத்த வழியிலேயே தான் பாட்டுக்குத் தொடர்ந்து போய்க் கொண்டிருப்பான். ஈச்வரனும் அவனை முடிவான லக்ஷ்ய ஸ்தானத்தில் கொண்டு போய் நிறுத்துவதற்கு முன்னாடி என்னவெல்லாம் பண்ணி அவனிடம் இன்னமும் ஒட்டிக்கொண்டுள்ள கர்மாவையும், வாஸனைகளையும் ஒட்டப் பிழிய வேண்டுமோ அதையெல்லாம் பண்ணுவான். அதெல்லாம் தொலையத் தொலையத்தான் அந்தஃகரணம் ஹ்ருதயத்துக்குள் போவது, அந்த ‘ப்ராஸஸி’ல் மற்ற ஹ்ருதய நாடிகளிலும் இந்தப் பிழிச்சல் கார்யம் – ‘நாடி மதனம்’ – நடந்தே அந்தஃகரணம் நன்றாக [ஹ்ருதய] அந்தரங்கத்தில் தோய்வதாக இருக்கும்.

இதையெல்லாம் சொல்வதே ஸரியில்லையோ என்றுகூடத் தோன்றுகிறது. இவனுடைய ஒரே எண்ணம் ப்ரம்மாநுபவம் என்பதாகத்தான் இருக்கவேண்டுமானதால், நாடி, ஹ்ருதயம், மதனம் என்றெல்லாம் சொன்னால் அதுகளைப் பற்றி எண்ண ஆரம்பித்து, ‘இதில் [நாடியில்] கடைசல் உண்டாகிறதா? அதில் [ஹ்ருதய மத்தியில்] ஒடுங்குகிறதா?’ என்ற அநாவச்ய ஆப்ஸர்வேஷன்கள் ஏற்பட்டு ஏக சிந்தனை தாரையைப் பிசிற வைத்துவிடும். இதெல்லாம் ஒருத்தனுக்குத் தெரியாமலே நடப்பதால் ஒன்றும் நஷ்டமில்லை. போகிற வழியிலிருக்கிற தோட்டத்தை அழகு பார்த்துக் கொண்டேயிருந்து, உள்ளேயிருக்கிற வீட்டுக்குப் போகாமலிருக்கிற மாதிரியான காயந்தான் இது [நாடி மதனம் முதலியவற்றில் கவனம் செலுத்துவது].

அதுவுமில்லாமல் ஈச்வரன் எல்லாருக்கும் ஒரே மாதிரிச் செய்யாமல் பல தினுஸாகச் செய்வதாக இருக்கலாம். எல்லாருக்கும் ஒரே மாதிரி பழம் பாக்கி இல்லாததால் அதை ஈச்வரன் தீர்த்து வைக்கிறதும் பல தினுஸாக இருக்கலாம் அல்லவா? அதோடு அவனோ வித விதமாக விளையாடி ஸந்தோஷப்படுகிறவன்! இவனை [ஸாதகனை] லக்ஷ்யத்தில் சேர்ப்பித்த பிறகு தன் விளையாட்டு எதற்கும் இவனிடம் ‘ஸ்கோப்’பே இல்லை என்பதால் இப்போது ஒவ்வொருத்தருக்கும் நூதனமாக என்னென்ன பண்ணுவானோ? சிலபேருக்கு இந்தப் பிழிச்சல், கடைசல்கள் இல்லாமலேகூட இருக்கலாம். ஏன், ஆத்ம ஸ்தானமென்றே, “எது மூச்சு மூலம் மாதிரித் தெரிகிறது?” என்று முதலில் கண்டுபிடித்து அந்த ஹ்ருதய [மத்ய] பாயின்டில்தான் சித்தத்தை ஒருமுகப் படுத்தணுமென்றுகூட இல்லாமல், சில பேரால் [ஆத்மாவை] அகண்டமாகவே நினைத்துக் கான்ஸென்ட்ரேட் பண்ணக்கூட முடியலாம்.

இதையெல்லாம் கவனித்துத்தான் ஆசார்யாள் ஒருத்தன் ஸ்வயமாக உத்தேசித்துப் பண்ணும் நிதித்யாஸனத்தைச் சொல்லி, “அதுவே நினைப்பாக ஆழ த்யானம் பண்ணிக் கொண்டே போ!” என்று சொல்லி, அப்புறம் டக்கென்று முடிவாக ஏற்படுகிற பிரம்ம ஸாக்ஷாத்காரத்தை மாத்திரமே தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார் ……

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ச்ரவண - மனன- நிதித்யாஸன லக்ஷணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  சிற்றறிவு கடந்த மனனம் ; மனவுணர்ச்சி கடந்த நிதித்யாஸனம்
Next