புழு குளவியாவது; புழுவைக் குளவியாக்குவது : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ப்ரம்மத்தையே நினைத்துக் கொண்டிருக்கிற கார்யத்திலிருந்து அப்புறம் ப்ரம்மமே ஆகிக் கார்யமில்லாமல் இருந்துவிடும் நிலை ஸித்திக்கும்.

‘ப்ரமர – கீட ந்யாயம்’ என்று ஒன்று. கூட்டுப்புழு ஸதா ஸர்வ காலமும் “குளவியாகணும், குளவியாகணும்” என்று நினைத்துக் கொண்டேயிருக்குமாம். அந்த ஸதா கால நினைப்பாலேயேதான் அப்புறம் அது ரூபம் மாறி இறக்கையெல்லாம் முளைத்துக் கூட்டைப் பிளந்து கொண்டு போய் விடுகிறதாம்! கீடம் என்றால் புழு. ப்ரமரம் – குளவி. புழு நிதித்யாஸனம் பண்ணியே குளவியாவது ப்ரமர-கீட நியாயம். அந்த மாதிரிதான் ஜீவன் ப்ரம்மமே நினைப்பாக, தான் அதுவாக ஆகணும், இப்பவுங்கூடத் ‘தான் அதுதான்’ என்றே அல்லும் பகலும் அனவரதமும் நிதித்யஸித்தால் அப்படி ஆகிவிடுகிறான் என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்1.

ஸகுண ப்ரம்மத்தின் பக்கம் ஞான வழிக்காரனை திசை திருப்ப வேண்டாமென்பதற்காக அவர் அப்படிச் சொல்வது. அதாவது, இவனுடைய ஸதாகால நினைப்பின் சக்தியாலேயே ஆடோமேடிக்காக இவன் ப்ரஹ்ம ஸ்வரூபமாகிவிடுகிறதாகக் கதையை முடித்திருப்பது. வாஸ்தவத்தில் அது வாய்ப்பது ஈச்வராநுக்ரஹத்தில்தான்! அவன் ப்ரஸாதமாகத்தான் ஜீவாத்மா பரமாத்மாவாக ஆவது! இது ஆசார்யாளுக்குத் தெரியாததில்லை; நன்ன்ன்றாகத் தெரியும்! ‘எந்தக் கார்யமும் அதுவே பலன் தராது; ஈச்வரன் தான் பலனைத் தருபவன்’ என்பதுதான் ஆசார்யாள் கர்ம மீமாம்ஸகர்களை ஜயிப்பதற்காகப் போட்ட ப்ரம்மாஸ்திரமே. அப்படியிருக்கும்போது, நிதித்யாஸ நினைப்புக் கார்யமே ஆடோமாடிக்காக மஹா பெரிய பலனான ப்ரம்ம நிர்வாணத்தைத் தரும் அவர் நினைத்திருக்கவே மாட்டார்.

மாயையின் மறைப்புக் கார்யத்திற்குத் ‘திரோதானம்’ என்று பேர். இப்போது நமக்கு நிஜ நாமான பிரம்மம் அப்படி மறைபட்டுத் ‘திரோஹித’மாகியிருக்கிறது. மறைந்த அந்த வஸ்து பரமாத்ம த்யானத்தால் வெளிபட்டுவிடும் என்று ‘ப்ரஹ்மஸுத்ர’த்தில் சொல்லி, உடனேயே, இது ஏதோ ஆடோமேடிக் கார்யமென்று நினைத்துவிடப் போகிறார்களே என்று, ‘இப்படி மறைத்து பந்தப் படுத்தியதும் ஈச்வரன்தான். நாம் நிதித்யாஸனம் பண்ணினால் மறைப்பை நீக்கி ஸத்யத்தை ஆவிர்பவிக்கச் செய்து மோக்ஷம் தருவதும் அவன் தான்’ என்று உடைத்தே சொல்லியிருக்கிறது2. இதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது, இன்னும் வெளிப்படையாக, “எவருக்கு வேண்டுமானாலும் ஸ்வாபாவிகமாக, அதாவது இயற்கையாக, ஆடோமேடிக்காக இந்த ஆவிர்பாவம் ஏற்பட்டு விடாது; நன்றாகப் பிரயத்னம் செய்து நிதித்யஸிக்கிற எவனோ ஒருத்தனுக்குத்தான் ஈச்வர ப்ரஸாதத்தால் அப்படி ஏற்படுகிறது’ என்று சொல்லியிருக்கிறார். ‘ந ஸ்வபாவத ஏவ ஸர்வேஷாம் ஜந்தூனாம்: எல்லாருக்கும் இயற்கையாக ‘ரெவலேஷன்’ ஏற்படாது; ஈச்வர பிரசாதாத் ஸம்ஸித்தஸ்ய கஸ்யசித் ஏவ ஆவிர்பவதி: ஈச்வர கிருபையால் உசந்த ஸித்தி பெற்ற எவனோ ஒருவனுக்குத்தான் ‘ரிவீல்’ ஆகிறது” என்கிறார்3.

அத்வைத சாஸ்திரங்களில் ஈச்வராநுக்ரஹத்தைப் பெரும்பாலும் குரு அநுக்ரஹமாகவே காட்டிவிடுவது வழக்கம்4 ஆனால் ஆசார்யாளோ தம்முடைய ப்ரகரணங்களில் சிரோமணியாக அநுக்ரஹித்துள்ள ‘விவேக சூடாமணி’யில் குரு க்ருபைக்கும் மேலே ஈச்வர க்ருபையைச் சொல்லியிருக்கிறாரே என்று ஒருத்தர் கேட்டார். ‘ஸம்ஸார ஸாகரத்தில் எப்படி நீச்சலடித்துக் கடப்பது என்பதற்கு குருமார்கள் கரையிலிருந்து கொண்டேதான் வழிமுறையெல்லாம் சொல்லித் தருவார்கள். சிஷ்யனேதான் ஸ்வயமாக ஸத்ய அறிவான ப்ரஜ்ஞா என்பதைப் பெற்று, அதைப் படகாக வைத்துக் கொண்டு ஸமுத்ரத்திலேயே போய்க் கடக்கணும்’ என்று ஆசார்யாள் சொல்லி அந்த ப்ரஜ்ஞையை ஈச்வரனே அநுக்ரஹிக்கிறான் என்கிறார்5. இதைப்பற்றித்தான் அவர் கேட்டார்.

‘வரப்போகிற காலங்களில் [அத்வைத] ஸித்தி கண்ட ஞான குருக்கள் அதிகம் கிடைக்காமல் போகலாம். ஆனாலும் சிஷ்யர்களைப் பொறுத்தமட்டில் அப்படிப் பட்டவர்களுக்குள்ளிருக்கிருந்தும் ஈச்வரனே உய்வு தருவான்’ என்று நினைத்தே குருமார்களைக் கரைகடக்காதவர்களாகச் சொல்லி, ஆனாலும் ஈச்வராநுக்ரஹத்தில் சிஷ்யர்கள் கடப்பதாகச் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது.

இன்னொரு காரணமும் சொல்லலாம். தன்னைப் பரிபூர்ணமாக குருவிடமே ஒப்படைத்து, ‘அவர் என்ன செய்தாலும் செய்யட்டும்’ என்று விட்டுவிட்டுக் கிடக்கிற உண்மையான சரணாகத புத்தி ஒரு சிஷ்யனுக்கு வந்தால் அப்போது அவருடைய க்ருபையே படகு, அநுகூலமான காற்று எல்லாமாக இருந்து அவனை அக்கரைக்குக் கொண்டு தள்ளி விடும். ஆனால் அப்படி [பூர்ணமாக சரணாகதி] பண்ணுவது எல்லோருக்கும் முடியாது. ஆனாலும், தான் சரணாகதி பண்ணாவிட்டாலும், “எப்படியும் அவர் குருதானே? உபதேசம் தந்தவர்தானே? அப்படி இருக்கும்போது அவர் க்ருபையே நம்மை உபதேச லக்ஷ்யத்தில் கொண்டு சேர்க்காமல் விட்டுவிடுமா? என்று இவன் ஸாதனையின் கொஞ்சம் ஏனோதானோ என்று இருந்துவிட்டால் என்ன ஆவது? சரணாகதியும் ஸரியாகப் பண்ணாமல், ஸாதனையின் ‘பெர்ஃபெக்’டாகப் பண்ணாமல், ‘குரு பார்த்துக் கொள்வார்’ என்று மெத்தனமாக இருந்துவிட்டால்? அது கூடாது என்றுதான், அப்படிப் பட்டவனை உத்தேசித்தே – குரு க்ருபையை ஒருத்தன் ஸால்ஜாப்புக் காட்டி ஸ்வய ப்ரயத்தனத்தை விட்டுவிடக் கூடாது என்று தெரிவிப்பதற்காகவே – ‘குரு கரையிலிருந்துதான் வழி காட்டுவது. நீதான் அஸலே ஸமுத்ரத்தில் படகு ஓட்டிக் கொண்டு போகணும்’ என்று சொல்லியிருப்பார்.

இப்படி “நீயே பண்ணிக்கணும்” என்றாலும் ‘கடைசியில் நம் யத்னத்திற்கேதான் அந்த சக்தி இருக்கிறதா?” என்று ‘ஈகோ’ வந்துவிடப் போகிறதே என்பதையும் [ஆசார்யாள்] கவனித்திருக்கணும். அதனால்தான் நீ பண்ணுகிறாய் என்றாலும், அதுவும் ஈச்வராநுக்ரஹம் அதற்கு அநுகூலமாக உன்னைத் தூண்டிவிட்டு, துணையாக வந்து கொண்டிருப்பதால்தான் என்றும் சொல்லியிருக்கிறார்.

பகவான் கீதையில் சொல்லியிருக்கிறதைப் பார்த்தால் அதையேதான் ஆசார்யாளும் சொல்லியிருக்கிறாரென்று தெளிவுபடும். [கீதையை] முடிக்கும்போது ஸ்வாமி, “எங்கிட்ட சரணாகதி பண்ணிட்டுக் கிடடா! நான் பார்த்துக்கிறேன்!” என்கிறார்6. அதற்குக் கொஞ்சம் முன்னாடி, “ஈச்வரன் கிட்டே ஸர்வபாவ சரணாகதி பண்ணு. அவனருளால் உத்தம சாந்த லக்ஷ்யம் ஸித்தித்து விடும்” என்றும் சொல்லியிருக்கிறார்7. அவரே இன்னோரிடத்திலே, “உத்தரேத் ஆத்மநாத்மாநம்”8 – “தானேதான் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்” என்று ஸ்வய முயற்சியைப் பெரிசாகச் சொல்லியிருக்கிறார். ‘டோட்டல் ஸரண்ட’ரானாலொழிய தன் முயற்சி பண்ணித்தான் ஜயித்தாகணும் என்பதே தாத்பர்யம். இதுகளுக்கு உள்ளேயெல்லாமும் ஈச்வராநுக்ரஹம் ஒளிந்து கொண்டுதானிருக்கிறது!

‘டீப்’பாக நிதித்யஸிக்கிறவன் அப்பப்போ தன்னை மறந்து பிரம்மத்திலே சொருகிக் கொள்வதும் விடுபடுவதுமாக இருக்கிறானென்றால் அவற்றைப் பண்ணுவிப்பது ஈச்வரன்தான். நித்யாநித்ய வஸ்து விவேகம் என்று ஒருத்தன் ஆரம்பிப்பதிலிருந்தே – இன்னும் அடியிலே ஒழுங்காகக் கர்மா செய்வது, பக்தி பண்ணுவது என்று பொட்டில் குட்டிக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்தே – ஒருவனுடைய முயற்சிக்குப் பலனாக அவனை இஞ்ச் இஞ்சாக முன்னேற்றிக்கொண்டு போவது ஈச்வரன்தான். ஆனால் கொஞ்சங்கூட அவன் பண்ணுவதாக வெளிப்படக் காட்டிக் கொள்ள மாட்டான். ‘நமக்கும் சித்தே [சிறிதே] சித்த சுத்தி வந்திருக்கே, வைராக்யம் வந்திருக்கே, மனஸைத் துளியாவது நிறுத்த முடியறதே’ என்றிப்படி ஸாதனைக்காரன் தெரிந்துகொண்டு அதிலிருந்து ஊஹமாகத்தான் ஈச்வரக் கிருபையை அநுமானிக்க முடியும்! ஆனால் நிதித்யாஸனம் என்று இவன் பண்ண, இவன் ஒன்றும் பண்ணாமல் சொக்கிச் சொருகிக் கிடக்கிறதோ அவனேதான் நேராகச் செய்விக்கிறது! இதற்கு முந்தியெல்லாம் முன்னேறுகிற கார்யம், மேலும் மேலும் பக்வமாகிற கார்யம் ஜீவனுக்கு இருந்தது. இப்போது கார்யமில்லாத ஸ்திதிக்குப் போக அவன் என்ன கார்யம் செய்வது? அதைப்பற்றி நினைக்கலாமே தவிர அதாகவே ஆகிறதை ஒரு கார்யமாக அவன் எப்படிப் பண்ண முடியும்?

“பரீக்ஷை பாஸ் பண்ணினேன்” என்கிறோம். வாஸ்தவத்தில் ‘பாஸ்’ நாமா பண்ணினோம்? நாம் பண்ணினது பரீக்ஷை எழுதினதுதான். அதை நன்றாகப் பண்ணினோம். ஆனால் நாமே பாஸ் போட்டுக் கொள்ள முடியுமா என்ன? பரீக்ஷாதிகாரி போட்டுத்தானே அது கிடைக்கிறது? பரீக்ஷை எழுதுவதோடு நாம் சும்மா இருக்க வேண்டியதுதான். பாஸ் அவர்தான் போடணும். (ஸ்வதந்திர யுகத்திற்கு முன் கால நடப்புப்படி சொல்கிறேன்! பாஸ் போடப் பண்ணுவதற்காக ‘மூட்டை’ நகர்த்துவதோ, மிஞ்சிப் போனால் துப்பாக்கியைக் காட்டுவதோ தெரியாத காலம்!) கார்ய லோக்திலேயே இப்படி – பரீக்ஷை எழுதும் காரியந்தான் நம் வசம், அதற்குப் பலன், பாஸ் வாங்குவதற்கு பலதாதா பரீக்ஷாதிகாரி என்று இருக்கிறது! கார்யமில்லாமல் நின்று போகிற லோகத்திற்குள் நாம் ‘பாஸ்’ பண்ண – ஸாதனா என்று பரீக்ஷையில் ‘பாஸ்’ பண்ண – பலதாதாவான ஈச்வரனின் அநுக்ரஹமே மூலதனமாகவும் செய்விக்கும் கருவியாகவும் இருக்கிறது.

நாம் எழுதுகிற பரீக்ஷையில் பாஸ் பண்ணுவது வெறுமனே ஒரு வார்த்தையாக இருக்கிறது. அதற்கப்புறம் மேலே படிப்பதில் அல்லது உத்யோகம் பிடிப்பதில் அதற்கு வால்யூவே தவிர, அதற்கென்றே எதுவுமில்லை. ஸாதனையில் அதன் முடிவான நிதித்யாஸனத்தில் பாஸ் என்பதோ அதுவே மஹாநுபவமாக இருக்கிறது! அதற்குமேலே எதுவுமே கிடையாது. ப்ரம்ம நிர்வாணமாக, அத்வைத மோக்ஷமாக, நித்யானந்தமாக அது இருக்கிறது!

ஜீவாத்மாவின் ஸதாகால நினைப்புக்குப் பலனாக ஈச்வரன்தான் அவனைப் பரமாத்மாவாக்கிவிடுகிறான் என்பதே ஸத்யம்.

தமிழில் ப்ரமர – கீட நியாயத்தைவிடப் பொருத்தமாக ஒன்று சொல்வார்கள். “கொட்டிக் கொட்டிக் குளவி தன் நிறம் ஆக்கிற்றாம்” என்று! புழு தானாகவே குளவியாய் ஆவதாக இல்லை; வண்டாகணும் என்று தபஸிருக்கும் புழுவை ஒரு குளவியே கொட்டிக் கொட்டி அதையும் தன் ரூபமாக மாற்றிவிடுவதாக இந்த வசனம் காட்டுகிறது. அதே மாதிரிதான், ஈச்வரனே நிதித்யஸிக்கும் ஜீவாத்மாவைப் பண்ணுகிறான்.

இப்படிச் சொல்வதிலேயும் ஒரு வித்யாஸம்! ரூப மாற்றம் பண்ணுபவன் ஸகுண ப்ரம்மமான ஈச்வரன். அவன் பண்ணும் ரூப மாற்றமோ அரூபமான நிர்குணப் ப்ரம்மமாக! ஜீவன் த்யானிப்பதும் அப்படி ஆகத்தானே ஒழிய, ஈச்வரனாகனும் என்றில்லை! ஆக, உபமானமே சொல்வதற்கில்லாத விஷயமாக இது உயர்ந்து நிற்கிறது!

ஆரம்பத்திலிருந்தே தன்னைக்காட்டிக் கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தை அநுக்ரஹித்துக் கொண்டு போன ஈச்வரன் இப்போதும் தன்னைக்காட்டிக் கொள்ளாமல்தான் கண்ணாமூச்சியாக அவ்வப்போது ஸமாதியில் ஆழ்த்திக் கொண்டுபோய், அப்புறம் சாச்வதமாகவே ஜீவன் முக்தனென்றும் விதேஹ முக்தனென்றும் ஆக்கிவிடுகிறான். ஆனாலும் பெரிய வித்யாஸம் என்னவென்றால், முன் ஸ்டேஜ்களில் அவன் இவனுடைய சித்தத்திலேயே ஏற்படும் சுத்தி, மெருகு, நகஸ்களுக்குக் காரண பூதனாக இருந்தான். இப்போதோ இவனுடைய சித்தத்தை அழித்தே விடுகிறான்! சித்தம் அழிந்த பின் இவனால் அவனை – அதாவது ஸகுண ப்ரம்மத்தை – எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அதனால்தான் இப்போதும் ஜீவனுக்குத் தெரியாத கண்ணாமூச்சியாக ஈச்வரனுடைய கார்யம் இருக்கிறது! கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அதைவிட கோடி மடங்கு அத்யந்தமாகத் தானும் அவனும் ஒன்றே என்பதாக நிர்குணத்தில் ஐக்யம் பண்ணிக்கொண்டு விடுகிறான். ஜீவனை இல்லாமல் பண்ணுகிற ஈச்வரன் [ஸகுணமான] தன்னையும் இல்லாமல் பண்ணிக் கொண்டு ஸத்யம், ஞானம், அனந்தம் என்றிருக்கிற ப்ரம்ம தத்வம் மட்டுமே பிரகாசித்துக் கொண்டிருக்கச் செய்கிறான்! [சிறிது நேரம் தமக்குத் தாமே சிரித்துக் கொண்டு] ‘பிரகாசம்’ என்றால் என்ன? ஆயிரம் ‘வாட்’பல்பு போட்ட மாதிரி வெளிச்சமாகவா இருக்கும்? என்னவோ நம்ம பாஷையில், நம்முடைய எண்ணத்தின் லெவலில் புரிந்து கொள்வதற்காக இப்படியெல்லாம் சொல்வது!

வாக்கால் வர்ணிக்க முடியாத, மனஸால் பிடிக்க முடியாத – அதைவிட ஆனந்தமில்லை, சாந்தமில்லை, ஞானமில்லை, ஸ்வதந்திரமில்லை என்றிருக்கும் – அகண்டமான ஏக வஸ்துவாக இருக்கும் ஸத்ய ஸத்யமான, நித்ய நித்யமான நிலை! அதுதான் ஆசார்யாள் ஞானவழி என்றும், அத்வைத ஸாதனை க்ரமம் என்றும் அற்புதமாக மராமத்துப் பண்ணிக் கொடுத்திருக்கும் பாட்டை நம்மைக் கொண்டு சேர்க்கும் முடிவான இடம்.

அவருடைய அநுக்ரஹத்தால் அதைப் பற்றிப் பேசி, கேட்டு, நினைக்கும்படியான பாக்யம் கிடைத்தது. அந்த வழியிலேயே அடியெடுத்து வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னே போகவும் அவரையே ப்ரார்த்திக்க வேண்டியது.


1 விவேக சூடாமணி 358-9 (அ) 359-60

2 III.2.5

3 “தெய்வத்தின் குரல்” – நான்காம் பகுதியில் “போர் தீர்ந்து அமைதி காண” என்ற பேருரையில் “ஆதி சங்கரரும் கூறும் ஈசனது ஞான அருள்“, “கர்ம பந்தமும் ஈசனால்; ஞான ஸித்தியும் அவனாலேயே!” என்ற பிரிவுகளும் பார்க்க.

4 முந்தைய அடிக்குறிப்பில் கூறிய பேருரையில் “குரு என்ற த்வைதம் இடருவதில்லை” என்ற பிரிவு பார்க்கவும்.

5 476 (அ) 477

6 XVIII.66

7 XVIII.62

8 VI 5

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is மனன - நிதித்யாஸனங்களின் பெருஞ்சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  உடன் செய்ய வேண்டியது
Next