முதல் பாகமான ‘ஆனந்த லஹரி’ என்ற தலைப்பைப் பார்த்தாலும்….. ‘சிவ’ போட்டு ப்ளஸ் ‘ஆனந்த லஹரி’ = ‘சிவாநந்தலஹரி’ என்று மற்ற ஸ்தோத்ரத்திற்குத் தலைப்புக் கொடுத்த மாதிரி இல்லாமல், நம்முடைய இந்த ஸ்தோத்ரத்தின் முதல் பாகத்திற்கும் அம்பாள் ஸம்பந்தமான அடைமொழி எதுவும் இல்லாமல் வெறும் ‘ஆனந்த லஹரி’ என்றே தலைப்புக் கொடுத்திருக்கிறது. இதற்கும் மேலே சொன்ன காரணத்தையே சொல்லலாம். அதாவது, ஸெளந்தர்யம் என்றாலே அம்பாள்தான் என்பதால் அவள் பேரைச் சேர்க்காமல் ‘ஸெளந்தர்ய லஹரி’ என்று மாத்திரமே சொன்னால் போதும் என்ற மாதிரி ஆனந்தமும் அவளேதான்! பல விதமான ஸெளந்தர்யங்களுக்கும் மூலம் அவள்தான் என்கிறாற் போல அத்தனை விதமான ஆனந்தங்களுக்கும் அவள்தான் தாய்ச் சரக்கு. தாயேயான தாய்ச் சரக்கு! ஆனந்தத்தில் பல வரிசைகளைத் தைத்திரீயம், ப்ருஹதாரண்யகம்1 ஆகிய உபநிஷத்துக்கள் அடுக்கிக் கொண்டே போகின்றன. நாமும் லீலானந்தம், ப்ரேமானந்தம், ஆத்மானந்தம், [சிரித்து] காஃபியானந்தம், ஸினிமானந்தம், கிரிக்கெட்டானந்தம், பேச்சானந்தம் – இதுகளெல்லாம் அடங்கும் இந்த்ரியானந்தம், ச்ரோத்ரானந்தம், நேத்ரானந்தம் என்று பலதைச் சொல்கிறோம். அவற்றிலிருந்து வித்யாஸம் தெரிவதற்காகத்தான் பரமேச்வர பரமான சதகத்தில் ‘சிவானந்தம்’ என்று பிரித்துச் சொல்லவேண்டியிருந்தது.
ஆனால் வெறுமே ஆனந்தம் என்று சொன்னால் அதுவும் அம்பாளுடையதுதான். அம்பாள் என்றால் என்ன? ‘ஸத்’தாக இருக்கிற பரமேச்வரனுடைய ‘சித்’, அதாவது அறிவிலிருந்துதான் அத்தனை ஆனந்த அநுபவமும் உண்டாகிறது. அந்த சித்சக்திதான் அம்பாள். வெறுமே இருக்கிற ஸத், தன்னைத்தானே அறிகிற சித்தினால் பெறுகிற நிறைவான அநுபவம்தான் ஆனந்தம். அந்த சித்தின் ஆபாஸத்தினால் [பிரதிபலிப்பு ஒளியினால்] தான் நாம் பெறுகிற பலவித ஆனந்தங்களும்! இதற்கெல்லாம் முடிவு, நிறைவு அந்தச் சித்திலேயே கரைந்து நாம் ஞானமயமாகிப் பெறுகிற அத்வைத ஆனந்தம்தான். அதிலேயே நிலைத்துவிட்டவள் அம்பாள். ”ப்ரம்மாதியர்கள் பெறுகிற ஆனந்தத்தையும் தன்னுடைய ஆனந்தத்தில் ஒரு துளியாகக் கொண்டவள் – ஸ்வாத்மாநந்த லவீ பூத ப்ரஹ்மாத்யாநந்த ஸந்ததி:” – என்று [லலிதா] ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. அதனால் தான் அம்பாள் பரமான இந்த ‘ஸெளந்தர்ய லஹரி’யின் பூர்வ பாகத்துக்கும் அவள் பெயரைச் சேர்க்காமல் வெறுமே ‘ஆனந்த லஹரி’ என்று பெயர் சொன்னாலே போதும் என்று விட்டிருக்கிறது. ‘ஆனந்த லஹரி’ என்று இன்னொரு ஸ்துதியும் ஆசார்யாள் செய்ததாக தேவீ பரமாகவே இருக்கிறது. ‘சிவ ஆனந்த லஹரி’ என்ற மாதிரி இல்லாமல், இந்த இரண்டிலுமே அம்பாளுடைய பேரைச் சொல்ல வில்லை. ‘சித்’ ஸ்வரூபத்தினால் பெறுகிற பூர்ணானந்தம் என்று தொனிக்கிற முறையில், ‘ஸெளந்தர்ய லஹரி’ பூர்வ பாகத்தில் ஒரு இடத்தில் [8-ம் ச்லோகத்தில்] சிதாநந்த லஹரீம் என்று வருகிறது. ‘சித்’தைச் சொல்லாமல் ‘ஆனந்தம்’ என்று மாத்ரமே சொன்னாலுங்கூட அம்பாள் விஷயமானது என்று ஏற்பட்டுவிடும் என்பதால் அந்த பாகத்துக்கு ‘ஆனந்த லஹரி’ என்று மாத்திரம் பேர் வந்துவிட்டது.
தன்னை மறந்து அப்படியே நிஷ்டையில் கிடப்பது தான் ப்ரஹ்மாநுபவம் என்கிறார்கள். அதுதான் ‘ஸத்’. அது ஒரு தினுஸில் தன்னை மறந்த நிலை என்றால், இன்னொரு தினுஸில் தன்னை அறிந்த நிலையாயிருக்கிறது! ஜீவபாவத்தில் சரீர-இந்த்ரியாதிகளோடு ஸம்பந்தப்பட்டிருக்கும் தன்னை மறந்து, சிவ பாவத்தில் இதற்கெல்லாம் ஆதாரமாகவுள்ள ஒரே ‘தானை’ அறிகிற நிலை அது. அறிகிறவன், அறியப்படுவது, அறிவு என்று மூன்று வேறு வேறாயில்லாமல், மூன்றும் சேர்ந்து அநுபவ ஆனந்த ஸ்வரூபமாக இருக்கப்பட்ட நிலை. வெறும் இருப்பான ஸத் சிவமென்றால் அதிலே இப்படி அறியும் சித்தாகவும், அநுபவிக்கும் ஆனந்தமுமாக இருப்பதே அம்பாள். தான் இருப்பதையே அறிந்தநுபவிக்காத ஒரு ஸத் இருந்தும் செத்த மாதிரிதானே? அப்படியில்லை என்னும்போதுதான் ஸத்தான ப்ரஹ்மத்திற்கு சக்தி இருப்பதாக ஏற்படுகிறது. இந்த சக்தியிருப்பதால் தன்னைத்தானே ஏகமாக அறிந்து ஆனந்திப்பது ஒரு நிலை. இன்னொரு நிலை – இதே சக்தியினால் மாயை பண்ணித் தன்னையே பல மாதிரி ப்ரபஞ்சங்கள், ஜீவர்கள் என்று ஸ்ருஷ்டிப்பது, பரிபாலிப்பது, ஸம்ஹரிப்பது எல்லாம்! தன்னைத் தானே உள்ளூர அறிவதிலிருந்து, தனக்கு வெளி மாதிரி ஸ்ருஷ்டியைப் பண்ணி அதை நிர்வாஹம் செய்வது வரை எல்லாமே கார்யந்தான்.
இந்தக் கார்யங்களில் சேர்ந்ததுதான் ஸத்தாமாத்ரமான சிவமே சிவன் என்று மூர்த்தியாவதும், அப்புறம் அந்த சிவன் அநேக லீலா சரித்ரங்களை நடத்திக் காட்டுவதும். இதவ்வளவும் உள்ளேயிருக்கும் சக்தியின் விலாஸம்தான் – manifestation தான்! ஆனபடியால், சிவானந்தத்திற்குக் காரணமாக சிவசரித்ரம் இருக்கிறது என்று அங்கே, ‘சிவானந்த லஹரி’யில், ஆசார்யாள் சொல்கிறாரே, அப்போதும் சிவம் சிவனாகி, அவனுக்குச் சரித்ரங்கள் ஏற்பட்டதே அம்பாளின் கார்யந்தான்! கார்ய ப்ரபஞ்சம் முழுக்க அவளையே சேர்ந்ததாதலால், சிவனாக, விஷ்ணுவாக, மற்ற மூர்த்திகளாக, அசடுகளான நாமாக இன்னம் புழு, பூச்சி என்று எந்த ரூபத்தில் யாராக இருந்து என்னென்ன செய்கிறதும் அவளைச் சேர்ந்ததுதான்; அவள் பண்ணுவிப்பதுதான்! இதைத்தான் ‘ஸெளந்தர்ய லஹரி’ நூறில் முதல் ச்லோகமே சொல்கிறது. ஆக, நாம் இப்போது வருகிற ‘கன்க்ளூஷன்’, சிவானந்த லஹரியில் சொன்னபடி சிவ சரிதம் ஆனந்த ஸரித்தாக வருகிறதென்றாலும் அதற்குக் காரணம் அம்பாள்தான்; அதன் பெருமையும் அவளைச் சேர்ந்ததுதான். சிவானந்தம் கல்லாகக் கெட்டித்துக் கிடக்காமல் லஹரி என்று வெள்ளமாகப் பெருகுவது அவள் ஸமாசாரந்தான்!
அம்பாள் எல்லாவற்றிலும் வெள்ளம்தான் லஹரிதான்! ஸெளந்தர்ய லஹரியாக, ஆனந்த லஹரியாக இருக்கிற அவளை ‘ச்ருங்கார லஹரி’ [ச்லோ-16] ‘ஆஹ்லாத லஹரி’ [ச்லோ-21] என்றெல்லாமும் சொல்லியிருக்கிறது.
ஜகத் வியாபாரம் செய்வது, இதிலிருந்து விமோசனம் தருவது என்ற இரண்டு காமங்களையும் [ஆசைகளையும்] பரப் பிரம்மத்துக்கு உண்டாக்கி, அதோடு அவன் கூடியிருப்பதைத்தான் பரமேச்வரன் காமேச்வரியோடு தாம்பத்தியம் நடத்துவதாகச் சொல்வது. அந்த காமேச்வரிதான் ஸ்ரீவித்யா அதிதேவதையான லலிதா த்ரிபுரஸுந்தரி. ஈச்வரனுக்கு இப்படிக் காமம் உண்டு பண்ணியதால் ”ச்ருங்கார லஹரி” ஆகிறாள். ஈச்வரனுக்கு ஸ்ருஷ்டித் திறமை ஏற்பட்ட மாதிரிதானே கவிகளுக்கும் கல்பனா ஸ்ருஷ்டித் திறமை ஏற்பட்டிருக்கிறது? ஆகையால், அம்பாள் அநுக்ரஹத்தால் கவிதா ஸாமர்த்யம் பெற்றவர்களிடம் இந்த ச்ருங்கார ரஸ ப்ரவாஹமே பெருகுவதாக இந்த ஸ்தோத்ரத்தில் சொல்லி, அந்த இடத்தில்தான் ‘ச்ருங்கார லஹரி’ என்று போட்டிருக்கிறார்.
‘ஆஹ்லாத லஹரி’ என்றாலும் ‘ஆனந்த லஹரி’ என்று தான் அர்த்தம். மல மாயை நீங்கியவர்கள் குண்டலிநீ யோகத்தின்படி அம்பாளுடைய கலையைக் காணும்போது பரமானந்த வெள்ளத்தில் திளைக்கிறார்கள் என்னும்போது ”பரம ஆஹ்லாத லஹரி” என்கிறார்.
1தைத்ரீயம், ஆனந்தவல்லி 8; ப்ருஹதாரண்யகம் 4.3.33