அத்வைத மாயையும், சைவ-சாக்தங்களின் சக்திகளும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

சாக்த சாஸ்திரங்கள் சொல்கிற ஸ்ருஷ்டி க்ரமத்திலும் மாயை இருக்கிறது. இந்த க்ரமத்தில் சாக்த சாஸ்திரங்களும் சைவ சாஸ்திரங்களும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன. ஆனால் அத்வைதத்தில் ‘ப்ரஹ்மம் என்று ஒன்று, மாயை என்று ஒன்று. மாயையால் ப்ரஹ்மம் மறைந்து அதனிடத்தில் அதன் ஆதாரத்தில் ப்ரபஞ்சம் தோன்றுகிறது’ என்று முடிந்துபோய்விடுவது போல இங்கே இல்லை. சக்தி உள்கலந்த சிவமான ப்ரஹ்மத்தில் ஆரம்பித்து ஐந்து சுத்தமான தத்வங்களைச் சொன்ன அப்புறமே சாக்தத்தில் மாயா தத்வம் ஆறாவதாக வருகிறது. காஷ்மீர சைவத்திலும் அப்படித்தான். அவற்றில் முதலில் ஐந்து சுத்த தத்வங்கள் என்பவற்றைச் சொல்லி, அப்புறமே மாயையில் ஆரம்பித்து முப்பத்தோரு அசுத்த தத்வங்களைச் சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டில் வழங்கும் சைவ ஸித்தாந்தத்திலும் மொத்தம் முப்பத்தாறு தத்வங்கள்தான் என்றாலும் அதில் முப்பத்தாறையும் மாயையோடு ஸம்பந்தப்படுத்தி, ஆனாலும் முதல் ஐந்து தத்வங்கள் சுத்த மாயை என்றும், மீதி முப்பதொன்று அசுத்த மாயை என்றும் பாகுபடுத்தியிருக்கிறது. நாம் அஸல் சாக்தத்தையே பார்ப்போம்.

அதில் சித்தாகிற ஞான சக்தியை உள்ளே வைத்துக் கொண்டு செயலில்லாமலிருக்கும் சிவ தத்வம் முதலில் அடுத்ததாக நன்றாக வெளிப்பட்டுவிட்ட சக்தி தத்வம். மூன்றாவதாக, இச்சா சக்தியுடன் கூடிய ஸதாசிவ தத்வம். நாலாவதாக ஞான சக்தியோடு கூடிய ஈச்வர தத்வம். ஐந்தாவதாக, க்ரியா சக்தியோடு கூடிய சுத்த வித்யா தத்வம். அதற்கப்புறந்தான் ஆறாவது தத்வமாக மாயை வருகிறது.

முதல் தத்வமான சிவனோடேயே சித் சக்தி இருப்பதாகச் சொன்னேன். சித் சக்திதான் ஞான சக்தி என்றேன். மறுபடி நாலாவதான ஈச்வர தத்வம் ஞான சக்தியோடு சேர்ந்திருப்பதாகவும் சொன்னேன். இரண்டாவது தத்வமாக சக்தி என்றே சொன்னதும் சித் சக்திதான். இப்படிப் பல தினுஸாகச் சொன்னால் எப்படிப் புரிந்து கொள்வது என்றால்,-

‘ஸத்’தான இருப்பு நிலையாகிய சிவன் முக்யமாயிருந்தது, அதில் அந்தர்கதமாக [உள்ளுறை வஸ்துவாக] சித் சக்தி இருப்பதை முதல் தத்வமாகவும், சித் சக்தி முக்யமாயிருந்து ஸத் [சிவ] தத்வம் அதற்கு back-ground-ஆக [பின்னணியாக] இருப்பதை இரண்டாம் தத்வமாகவும் காட்டி வித்யாஸப்படுத்தியிருக்கிறது. சித் என்னும் இந்த ஞானம் அறிவு என்று சொல்லும் knowledge மட்டுமில்லை. இது உணர்ச்சியாக, உயிராக உள்ள அறிவு. ஜடம், சேதனம் என்று ஒரு பாகுபாடு கேள்விபட்டிருப்பீர்கள். இதில் ‘சேதனம்’ என்பது ‘சித்’திலிருந்து வந்ததுதான். உயிரும், உணர்ச்சியும் அறிவுமில்லாத வஸ்துக்களை ஜடம் என்பது. கல், மண், தங்கம், வெள்ளி முதலியவை கூடப் ஜடப் பொருட்கள். ஜடம் என்பதை அசேதனம் என்றும் சொல்வதுண்டு. உயிருள்ள, உணர்ச்சி படைத்த, அறிவு கொண்ட ஜீவராசிகளைச் சேதனம் என்பது. நாமெல்லாம் சேதனம். பசு, பக்ஷிகள் சேதனம். சேதனத்திலிருந்து ‘சைதன்யம்’ என்ற வார்த்தை வந்திருக்கிறது. ‘சைதன்ய ஸ்வரூபிணி’ என்று அம்பாளைச் சொல்வது. மூலப் பரம்பொருளின் உயிர் சக்தியாக இருப்பவள் அவள். அப்படி ப்ராண சக்தியாக இருப்பதன் அங்கந்தான் அறிவாகவும் உணர்ச்சியாகவும் இருப்பது. அறிவதே உணர்வதாக, அதாவது அறிவதே அநுபவிப்பதாக இருப்பதுதான் அந்த ஞானம்; சித் என்பது. சர்க்கரை தித்திக்கும் என்று புஸ்தகத்தில் படித்து அறிவது ஞானமில்லை. அதைத் தின்று பார்த்து ருசியை அநுபவித்து அறிவதே ஞானம். உயிரிருந்தால்தான் அறிய முடியும் அந்த ப்ராண சக்தியும் சேர்ந்தே சித். ப்ராணன்தானே ஆதார சக்தி? அதனால் சக்தி என்றாலே சித் சக்திதான்; ப்ரஹ்மத்தின் உயிரான, ஸ்வாநுபவ அறிவான சித்சக்தி தான்.

அறிவுக் கார்யமாக மாத்திரமில்லாமல், உயிர் வாழ்வது என்பதாகவும், உணர்ந்து அநுபவிப்பது என்பதாகவும் ‘ஞானம்’ இருப்பதால் இங்கிலீஷில் அழகாகப் பத ப்ரயோகம் பண்ணுகிறவர்கள் அதை knowledge என்று சொல்லாமல் Consciousness என்கிறார்கள். ஒன்றைப் பற்றி நாம் conscious-ஆக இருக்கிறோமென்றால் அதில் ஸ்வாநுபவம் இருக்கிறதென்று அர்த்தம். ஸ்வாநுபவம் நாம் ஜீவசக்தியோடு இருந்தால்தானே ஏற்படும்?

சிவன் முதலாவது தத்வம், சக்தி – அதாவது சித்சக்தி- இரண்டாவது தத்வம் என்று ஏன் வைத்தது, என்றால்: ஒரு ஸாண்டோ இருக்கிறானென்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் தூங்கும்போதும் அவனுடைய பலம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் முழித்துக் கொண்ட பின்னால்தான் அந்த பலம் தெரிவது; அதைக் காட்ட முடிவது. சிவ தத்வம் தூங்குகிற ஸான்டோ மாதிரி. சக்தி தத்வம் முழித்துக்கொண்ட ஸான்டோ மாதிரி. முழித்துக்கொண்ட ஸான்டோவுக்குத் தன் பலத்தைக் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. அதாவது அப்படி அவனுடைய இச்சை. இதுதான் மூன்றாவதான இச்சா சக்தி, அதை உடையவன் ஸதாசிவன்.

நாலாவதாக ஈச்வரன் என்று சொல்லி அவனும் ஞான சக்தியோடு சேர்ந்தவன் என்று சொன்னது குழப்பமாக இருக்கலாம். முதல் தத்வத்திலேயே சித் என்று ஞான சக்தியைச் சொல்லி விட்டு இப்போது மறுபடி நாலாவதுடனும் ஞானசக்தி என்கிறேனே என்று குழப்பம் தோன்றலாம். முதலில் சொன்ன சித் என்பது ஏகமான மூலப்பொருளின் ஏகமான ஞானம்; உள்ளே அடங்கியிருந்த ஞானம். இரண்டாவது ஸ்டேஜில் அது முழித்துக் கொண்டு தன்னைத்தானே அறிவதாக, உணர்வதாக இருந்தது. மூன்றாவது ஸ்டேஜில் தன் வீச்சை வெளிப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று இச்சைப்பட்டது. அப்புறம் நாலாவது ஸ்டேஜில் தன்னுடைய ஏகமான உள்முக ஞானத்தை அநேகமாக விரியப்போகும் ப்ரபஞ்சமாக வெளிப்படுத்த ‘ப்ளான்’ போட்டது. அநேக ப்ரபஞ்சத்தை ப்ளான் பண்ணிற்று என்றால் அப்போது அதன் ஞானமும் ஏகமாக உள்ளே இல்லாமல் அநேக விதமாக வெளிப்படுவதற்கு அஸ்திவாரமாயிருக்கிறது என்றுதானே அர்த்தம்? ஏகஞானமாயிருந்ததையே முதலில் ‘சித்’ என்றும் அநேக ஞானங்களுக்கு அடிப்படையாக அதுவே ஆன நாலாம் ஸ்டேஜில் அதையே ‘ஞானம்’ என்றும் வித்யாஸம் தெரியும்படி வேறு வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறது.

நாலாவது ஸ்டேஜில் ‘ப்ளான்’ போட்டதையடுத்து, ஐந்தாவதில் அதன் ‘எக்ஸிக்யூஷன்’. அறிவால் போட்ட திட்டம் கார்யமாகிறது. அதுதான் க்ரியா சக்தியுடன் சேர்ந்த சுத்த வித்யா தத்வம். இப்படிச் சொன்னதால் பிரம்மம் ப்ரபஞ்சமாக வெளிப்படுவதற்கே ஆரம்பித்து விட்டது என்று அர்த்தமில்லை. அப்படி ஆரம்பிக்கத் தன்னைத் தானே முஸ்தீபு பண்ணிக் கொள்வதுதான் இந்த ஐந்தாவது ஸ்டேஜ். தூங்கி முழித்துக் கொண்டவுடன் வெளிக் கார்யம் பண்ணுவதற்கு முன்னாடி, அப்படிப் பண்ணுவதன் பொருட்டே, நம் உடம்பையே சோம்பல் முறித்துக் கொள்கிறோமல்லவா? அது மாதிரியான நிலை. ஸான்டோ கோதாவிலே இறங்கி இன்னொருத்தனோடு மல்யுத்தம் பண்ணுவதற்கு முன்னாடி, அதற்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்காகத் தன்னுடைய தோள், தொடைகளையே தட்டிவிட்டுக் கொள்கிற நிலை! ப்ரஹ்மத்திற்கு வெளியிலே ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி என்ற க்ரியை இன்னம் ஆரம்பமாகவில்லை. ஆரம்பிப்பதற்காகத் தன் க்ரியா சக்தியை அது திரட்டிக் கொள்வதே ஐந்தவாது ஸ்டேஜ். வெளியிலே வேறே மாதிரி ஆகாமல் சிவ-சக்தியான ப்ரஹ்மத்திற்குள்ளேயே க்ரியா சக்தி திரண்டிருப்பது. ஆனாலும் வெளியாவதற்கு ஸங்கல்பித்து, திட்டம் போட்டு, ஸித்தமும் ஆகியாயிற்று. ஏகமான தான் த்வைதமாக [அநேகமாக] ஆகப்போகிறோம் என்பதாகத் ‘தான்’, தன்னுடைய manifestation [வெளிப்பாடு] என்ற இரண்டையும் ஸம எடை கட்டிப் பார்க்கும் அறிவோடு, உணர்ச்சியோடு அது இப்போது இருக்கிறது. இந்த ஞானத்தைத்தான் ”சுத்த வித்யா” என்பது.

வித்யா, ஞானம், சித் மூன்றுக்கும் ஒரே அர்த்தமானாலும் மூன்று ஸ்டேஜில் சித்தின் மூன்று வித பரிணாமங்கள் ஏற்படுவதால் ஒரே வார்த்தையைச் சொல்லிக் குழப்பக் கூடாது என்றே அத்விதீயமாயுள்ள [ஏகமாயுள்ள] சிவ சக்தி விஷயத்தில் என்றும், அது த்வைத அறிவுகளுக்கு மூலமாக இருக்கும்போது ஞானம் என்றும், கார்ய ரூபத்தில் த்வைதத்தைச் செய்வதற்கு முன் தன்னுடைய அத்வைத நிலையையும் தான் manifest செய்யப் போகும் த்வைத ப்ரபஞ்சத்தையும் ஸரிஸமனாக உணர்ந்தறியும் போது வித்யா [சுத்த வித்யா] என்றும் சாக்த, சைவ சாஸ்த்ரங்களில் வெவ்வேறு பேர் கொடுத்துச் சொல்லியிருக்கிறது……..

இப்போது நான் சொன்னவற்றிலிருந்து இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி என்று ஒன்றையடுத்து ஒன்றாக மூன்று தெரிகிறது. அந்த ஆர்டர்தான் ஸரி என்பதற்கு நடைமுறை த்ருஷ்டாந்தம் காட்டுகிறேன். ஒரு குழந்தை பிறக்கிறது. உடனே அதற்குப் பால் குடிக்கணும் என்ற இச்சை உண்டாகிறது. அந்த இச்சை இல்லாவிட்டால் அது குடிக்காது. இச்சை இருப்பதால்தான் ‘வீல் வீல்’ என்று கத்துகிறது. அப்புறம் வாயைச் சப்பினால்தான் குடிக்க முடியும் என்ற அறிவு, அதாவது ஞானம், அதற்கு உண்டாகிறது. அந்த ஞானமில்லாவிட்டால் அது எப்படிச் சப்பிக் குடிக்க முடியும்? ‘சப்பணும்’ என்ற ஞானம் அதற்கு உண்டாவது இதிலிருந்து ‘ப்ரூவ்’ ஆகிறது. அதற்கும் அப்புறம் க்ரியையாகவே வாயினால் சப்பிக் குடிக்கிறது.

அத்வைதம் மாதிரி இல்லாமல் சாக்தத்தில் (சைவத்திலுந்தான்) ப்ரஹ்மத்திற்கு நாலு ஸ்டேஜ் தாண்டி ஐந்தாவது தத்வமான சுத்த வித்யைக்கும் அப்புறந்தான் ஆறாவது தத்வமாக மாயை வருகிறதென்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

த்வைதமாக வெளிப்படுவதற்கு முஸ்தீபு முடித்தபின் அஸலான த்வைத ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி. இந்த ஆறாவது ஸ்டேஜில்தான் ஜீவர்கள் வருவது. இதுவரைக்கும் ஏகமான சிவ-சக்திதான். அது எங்கேயாவது மாயையால் பாதிக்கப்படுமோ? ஜீவர்கள் என்று தன்னிடமிருந்தே ‘மானிஃபெஸ்டேஷன்’களை [வெளிப்பாடுகளை] உண்டாக்கின அப்புறந்தான் விளையாட்டுப் பார்ப்பதற்காக, ஒளிஞ்சு-‘ப்ளே’ விளையாடி ஸந்தோஷப்படுவதற்காக ஜீவர்களை மாயையால் கட்டுவது; கட்டி அவர்களுக்குத் தாங்களும் அந்த ஏக வஸ்துதான் என்று தெரியாதபடி செய்வது; தாங்கள் தேஹமும் இந்த்ரியாதி அந்தஃகரணமுந்தான் என்று ப்ரமை ஏற்படும்படிச் செய்வது.

சக்தி வீச்சின் அற்புதம் எப்படிப்பட்டது என்பதை ஸந்த்யா கால மேகங்கள், ஹிமோத்கிரி மாதிரியான பர்வதங்கள், ஸப்த ஸாகரங்கள் – இத்தனை பெரிசு பெரிசாகத்தான் இருக்கணுமென்றில்லை, ஒரு புல் நுனியிலே சூரிய வெளிச்சம் சிதறி வைரமாக மினுக்குகிற ஒரு பனித்துளியிலேகூடத்தான் – இப்படியெல்லாம் ஜட ப்ரபஞ்சமாக விரித்துப் பார்த்து மட்டும் சிவ-சக்திக்கு லீலா நாடக ரஸிப்பு பூர்ணமாக ஏற்படாததாலேயே சேதனமான ஜீவர்களைப் பண்ணி அவர்களுக்குச் சைதன்யம் இருந்துங்கூட தங்களுடைய மூலம் தெரியாமல் மயக்கி மாயக் கூத்தடிக்கிறது!

‘அது ஸரி, இப்படிப் பண்ணுவது அம்பாளுக்கு ரஸமாக இருக்கலாம்; அவள் ரஸித்து ஆனந்தப்படலாம். ஆனால் நமக்கு மாளாத அவஸ்தையாயல்லவா இருக்கிறது? அவளுக்குக் கொண்டாட்டம் என்பது நமக்குத் திண்டாட்டமாக அல்லவா இருக்கிறது? மாயைக்கு மேலே சுத்தமான நாலைந்து ‘ஆஸ்பெக்ட்’கள் அவளுக்கு இருக்கிறதென்றால், அதனால் நமக்கென்ன லாபம்? ஜீவர்கள் என்று இருக்கிற நம்மை மாயை நன்றாக இறுக்கிக் குறுக்கிப் போட்டிருப்பதுதானே நம் வாழ்க்கையில் அச்சு முளையாக இருக்கிறது?’ என்று கேட்கலாம்.

வாஸ்தவம். அதனால்தான் மாயைக்கே முக்யம் கொடுத்து, அதாவது அதை ஒழிப்பதற்கே முக்யம் கொடுத்து ஆசார்யாள் அத்வைதம் என்று ஃபிலாஸஃபி பண்ணினார். சாக்த தர்சனங்களும் மாயை ஆறாவதாக வந்தாலும் அதன் முக்யத்வத்தை ஒப்புக் கொள்ளாமலில்லை. எந்த தர்சனமானாலும் அது ஜீவனுக்கு வழி காட்டுவதற்காகத்தான். அப்போது அவனுக்கு முக்யமான ‘ப்ராப்ள’த்தைத்தானே அதுவும் முக்யமாகக் கவனிக்கணும்? அம்பாள் வேறே சுத்த தத்வங்களாக மாயைக்கு மேலே இருந்தாலும் ஜீவனுக்குத் தெரிவது அவள் மாயையாகத் தன்னை ஸம்ஸாரத்தில் பந்தப்படுத்தியிருப்பதேயாதலால் இதை சாக்தமும் ‘அன்டர்லைன்’ பண்ணாமலிருக்க முடியவில்லை. அதனால்தான் பரப்ரஹ்ம தத்வத்துக்கு ப்ரணவம் மாதிரி சக்தி தத்வத்துக்கென்று இருக்கிற பீஜாக்ஷரத்துக்கு ‘சக்தி பீஜம்’ என்று பெயர் கொடுத்ததோடு ‘மாயா பீஜம்’ என்றும் பெயர் கொடுத்திருக்கிறது. ஜீவன்- centre பீ-ஆகத்தான் [ஜீவனை மையப்படுத்தினான்] ஜீவர்களுக்கு சாஸ்திரம் சொல்ல வேண்டுமென்பதால் அம்பாளை மாயை, மஹாமாயை என்றேதான் அதிகம் சொல்வது. [‘துர்கா] ஸப்தசதீ’யில் அதற்குத்தான் அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கும். [முத்துஸ்வாமி] தீக்ஷிதரும் ”மாயே!” என்றே பாடியிருக்கிறார்.

”அதெல்லாம் ஸரி. அம்பாள் மாயையாக நம்மை மயக்கிக் கட்டிப்போட்டிருக்கிறாள் என்று சாக்த சாஸ்த்ரமே ஒப்புக்கொண்ட பிறகும் அந்த சக்தியைக் கொண்டாடி உபாஸிப்பது என்றால் எப்படி ஸரி? நம்மை நம்முடைய நிஜ ஸ்வரூபமே தெரியாமல் மறைத்து, மனஸையும் இந்திரியங்களையும், லோகத்தையும், லோக வஸ்துக்களையும் கொடுத்து ஒரேயடியாக ராக-த்வேஷ [விருப்பு-வெறுப்பு] இழுபறியில் இழுத்து விட்டிருக்கும் ஒரு ‘பவ’ரை ஆசார்யாள் அத்வைதத்தில் கரித்துக் கொட்டின மாதிரிப் பண்ணுவதுதானே நியாயமாகத் தோன்றுகிறது? அதற்கு என்ன பூஜை, கொண்டாடிக்கொண்டு ஸ்தோத்ரம்? அதே ஆசார்யாள் இப்படியும் பண்ணினாரென்றால் எப்படி?”

மாயா சக்தியாக மாத்திரம் மஹா சக்தி தீர்ந்துபோய் விட்டால் இந்தக் கேள்வி ஸரிதான். ஆனால் அவளே ஞான சக்தியாயும் இருக்கிறாளே! நமக்கும் ஞானத்தை தந்து மாயையிலிருந்து விடுவித்து அருள்கிற அநுக்ரஹ சக்தியாயும் இருக்கிறாளே! முன்னேயே சொன்னேன் – ஜீவாத்மா என்று ஒன்றை அவள் மாயையால் பந்தித்து, தள்ளினாற்போல் வைக்கிறாளென்றால் அதுவும் பிரித்து வைத்துச் சேர்த்துக் கொள்வதில் ஏற்படும் ‘எக்ஸ்ட்ரா’ ஆனந்தத்திற்காகத்தான்! ஆக, மாயா சக்தியாக மாத்திரமில்லாமல் ஞான சக்தியாக, அநுக்ரஹ சக்தியாக, ப்ரேம சக்தியாக, ஸெளந்தர்ய சக்தியாகவும் இருந்து நம்மை ரக்ஷிப்பவள் அவள்.

”சித்தில் ஆரம்பித்து முன்னே சொன்ன சக்திகளில் இல்லாததாக இதென்ன புதிசு புதிதாக ப்ரேம சக்தி, அநுக்ரஹ சக்தி, ஸெளந்தர்ய சக்தி என்றெல்லாம்?” – என்றால் இதெல்லாமும் இச்சா சக்தி என்றேனே அதில் அடக்கந்தான். இச்சையென்பது ஆசை. அன்பாக, ப்ரேமையாக இருப்பது என்றால் என்ன? அதுவும் ஆசைதானே? ஜீவர்களாகத் தன்னையே விரித்துக் கொள்ள வேண்டும், பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற முதல் இச்சை அதோடு தீர்ந்து போய்விடவில்லை. அந்த ஜீவர்களிடமும் அவளுக்கு இச்சை, அதாவது ப்ரேமை, தாய்க்குக் குழந்தையிடமுள்ள வாத்ஸல்யம் என்ற மிக உயர்ந்த அன்பு உண்டு. தன்னிடமிருந்தே உண்டான ஜீவர்களிடம் அம்பாளுக்கு எப்படி அன்பு இல்லாமலிருக்கும்? தாய், குழந்தை, வாத்ஸல்யம் என்று லோகத்தில் ஏற்பட்டதே அப்புறம்தான்; அவளுடைய மூல வாத்ஸல்யத்தின் ஆபாஸமாகத்தான் [பிரதிபலிப்பு ஒளியாகத்தான்]! இப்படி ஜீவர்களிடம் அவளுக்கு இச்சை இருந்துந்தான், பிரிந்திருந்து அப்புறம் சேருவதன் எக்ஸ்ட்ரா ஆனந்தத்திறாகாக அவர்களை மாயை பண்ணித் தள்ளினாற்போல் வைப்பது. இப்படி மாயா மோஹம் பண்ணவேண்டும் என்பதும் ஒரு இச்சை. அப்புறம் மாயையிலிருந்து அவர்களை விடுவிக்கணும் என்ற அநுக்ரஹ இச்சை. இதற்காகக் கொஞ்சங் கொஞ்சமாக மாயையிலிருந்து அவர்களைத் தன் பக்கமாகத் திருப்பிக் கொள்ள வேண்டுமென்று இச்சை. அப்படி ஜீவ லோகத்தை ஆகர்ஷிப்பதற்காகவே ஸெளந்தர்ய ஸ்வரூபமாகி – ரூப ஸெளந்தர்யம், குண ஸெளந்தர்யம் இரண்டும் படைத்தவளாகி – லீலைகள் பண்ணுவது. இப்படி ஆகி, இப்படி பண்ணணும் என்று முதலில் இச்சை; அப்புறமே அது கார்யமாவது. எந்தக் கார்யமானாலும் அதற்கு வித்து அதைப் பண்ணவேண்டுமென்று இச்சிப்பதுதான். நாம் வேண்டுமானால் இச்சையில்லாமலே ஏதோ கெடுபிடிக் கட்டாயத்தின் மேலோ, அல்லது நம்மை மீறிய ப்ரக்ருதி வேகத்திலோ சில கார்யங்கள் பண்ணலாம். ஸாக்ஷாத் பரப்ஹ்ம சக்தியானவள் இஷ்டப்பட்டு இச்சித்துத்தான் எதுவும் பண்ணுவது. இப்படி இச்சா சக்தியின் பல ரூபங்களாகத் தோன்றுவதுதான் ப்ரேம சக்தி, அநுக்ரஹ சக்தி, ஸெளந்தர்ய சக்தி ஆகிய எல்லாமும். அன்பு என்று பொதுவாக இருப்பட்ட ப்ரியத்தை ப்ரேமை என்றும், அன்பினால் செய்யக்கூடிய சிகரமான கார்யமாக ஒரு ஜீவனை மாயையிலிருந்து விடுவித்து மோக்ஷம் தருவதையும் அதற்கு மார்க்கம் காட்டுவதையும் அநுக்ரஹம் என்றும் சொல்வது. நமக்கு ஒரு பரீக்ஷை பாஸாவதற்குக்கூட அவள் அநுக்ரஹம் பண்ணுகிறாளென்றாலும், நிஜமான அநுக்ரஹம் என்றால் அது மாயையின் அக்னிப் பரீக்ஷையில் நாம் பாஸ் பண்ணி, [சிரித்து] ஞானத்துக்குப் பாஸ் பண்ணுவதுதான்; அப்படி அவள் பண்ணுவிப்பதுதான். துக்கக் கலப்பேயில்லாத சாச்வத ஆனந்தத்தை அளிக்கிற பேரருள் அது.

அநுக்ரஹமென்றால் ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே நம்மை ஆக்குவதுதான். ஆனாலும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மறைத்து, அதை நாம் மறந்து, ஜீவாத்மாவாக இருக்கிறபோது நமக்கு உள்ள உடம்பு, உடம்பைக் கார்யத்தில் ஏவும் அந்தஃகரணம் (அதாவது மனஸு என்று வைத்துக கொள்ளலாம்), நாம் கார்யம் பண்ணுகிற லோகம், அதிலே நம் மனஸாலும் உடம்பாலும் செய்யும் கார்யத்தால் நாம் பெறும் அநுபோகம் இவற்றை நமக்குக் கொடுத்திருப்பதையே ‘அநுக்ரஹம்’ என்று சாக்த-சைவ சாஸ்திரங்கள் சொல்வதுமுண்டு. இதை, தநு-கரணம்-புவனம்-போகம் என்ற நாலை ஜீவனுக்கு அநுக்ரஹிப்பது என்று சொல்லியிருக்கும். தநுதான் உடம்பு, கரணம் அந்தஃகரணமான மனஸ், புவனம் என்பது லோகம். போகம் என்பது ஜீவாத்மா அடையும் அநுபோகங்கள். ”இதென்ன அநியாயம்? நம்முடைய நிஜமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மறந்து நாம் ஜீவாத்மாவாகத் திண்டாடுவதற்குக் காரணமான நாலையும் தருவதையா அநுக்ரஹமென்பது? இந்த நாலும் தொலைந்தாலல்லவா மோக்ஷம்?” என்று கேட்டால், அதற்கு அந்த சாஸ்திரங்கள், ”ஜீவாத்மா என்று எப்படியோ நீ ஆன அப்புறம் உன்னைக் கர்மா பிடித்துக் கொண்டுவிடுகிறதோல்லியோ? கர்மா தீர்ந்தாலொழிய மோக்ஷம் இல்லையோல்லியோ? கர்மா எப்படித் தீரும்? அநுபவித்துத்தானே அதைத் தீர்த்தாகணும்? எப்படி பழைய கர்ம பலனை அநுபவிக்கிறது? மறுபடி ஜன்மா எடுத்து, மனஸினால் நல்லதை நினைத்து, உடம்பால் நல்ல கார்யத்தைப் பண்ணித்தானே! அப்படிப் பண்ணுவதற்கு லோகம் (புவனம்) என்பது இருக்கத்தானே வேண்டும்? புவனத்தில் தநு கரணங்களைக் கொண்டே கார்யம் பண்ணிப் பலவித அநுபோகம் பண்ணித்தானே கர்மாவைத் தீர்த்துக் கொள்ள முடியும்? அதனால்தான் இவற்றைத் தருவதை அநுக்ரஹம் என்பது” என்று பதில் சொல்கிறது. கர்ம பந்தத்தில் நாம் சிக்கிக் கொள்ளக் காரணமான நாலுமேதான் அதிலிருந்து நாம் விடுபடவும் ஸாதனமாகிறது என்பதால் அப்படிப்பட்ட ஸாதனங்களைக் கொடுப்பதை அநுக்ரஹம் என்கிறது. ஆனாலும் இந்த நாலை நாம் நல்லபடியாகப் ப்ரயோஜனப்படுத்திக் கொள்வதென்பது எத்தனை கஷ்டமாயிருக்கிறது? அதற்கான நல்லறிவை அவள் தந்து, நாம் கர்மாவை நாசம் பண்ணிக் கொள்ள வைத்து, அப்புறம் மோக்ஷானந்தம் தருவதான நிஜமான அநுக்ரஹம்.

மோக்ஷானந்தம் – ஆனந்தம்! கர்மா நாசமான பின் ஜீவாத்மா ஒரு உணர்ச்சியுமில்லாமல் போய் விடாமல், நிறைந்த வஸ்து என்று தன்னைத் தெரிந்து கொள்ளும் ஆனந்தம்! அதை அவள் அருள்வதே நிஜ அநுக்ரஹம்.

இப்போது நான் சொன்ன சக்திகளோடு அத்தனையையும் சேர்த்துப் பிடித்து இன்னொரு சக்தியையும் சொல்லப்போகிறேன். அதாவது ஆனந்த சக்தி. தானாக இருக்கிற ஆத்மானந்தத்திற்கு மேலே எதுவுமே இல்லை. அதைத்தான் மோக்ஷத்தில் அவள் நமக்குத் தருவது. ஆனால் அவள் ஸமாசாரத்தை எடுத்துக் கொண்டால் ஆத்மானந்தத்தில் சிவ ஸ்வரூபமாக இருந்ததோடு அவள் நிற்கவில்லை. நமக்குத் நிறைந்த நிறைவான அந்த நிலையோடு அவள் நின்று விடாமல், தன் சக்தியை மலர்த்தி லோக விளையாட்டு விளையாடுகிறாள். தானே ஆனந்தகனமாக இருப்பவள். வெளிக்கார்யமாகவும் ஆனந்தமாக விளையாடுகிறாள். தான் தானாக ஆத்மானந்தம் அநுபவித்துக் கொண்டே, விளையாட்டாக அதே தன்னை த்விதீயமாகவும் – தனக்கு வேறாக, வேறான மாதிரி – ஆக்கி த்வைத ப்ரபஞ்சமாக manifest பண்ணிக் கூத்தடிக்கிறாள். ஆனந்தம் ஜாஸ்தியானால் நாம் கையிலகப்பட்டதை உயரப் போட்டுப் போட்டுப் பிடித்து விளையாடுகிறோம்! கட்டையிலே பலகையிலே மிருதங்கம் வாசிக்கிறோம், விளையாட்டாக! ஒரு குழந்தையிடம் இது இன்னும் நன்றாகத் தெரியும். ஆனந்தத்தில் அது என்ன விளையாட்டெல்லாமோ விளையாடுகிறது! ப்ரஹ்மத்தின் மஹா சக்தியும் ஆனந்தம் பொங்குவதில் விளையாடுகிறாள்.

விளையாட்டு [திருவிளையாடல்], லீலை என்று அதை ஏன் சொல்வதென்றால் வேறே ஒரு காரணமும் இல்லாமல், ஒரு பயனும் இல்லாமல் வெறும் ஆனந்த மேலீட்டிலேயே ஒன்று பண்ணுவதை வேறே எப்படிச் சொல்வது? ஏற்கெனவே அவள் ஆனந்த பூர்ணமாயிருப்பதால் த்வைத ஸ்ருஷ்டியால்தான் அவளுக்கு ஆனந்தம் உண்டாகி, அதற்காக வெளிப்படுகிறாள் என்று காரணம் சொன்னால் அது தப்பாகிறது; ஆனந்தம் என்ற பயனை அடைவதற்காக ஸ்ருஷ்டி பண்ணுகிறாள் என்றால் தப்பாகிறது. அவள் அடைய வேண்டியதாக எதுவுமே இல்லை. எதன் தேவையும் இல்லாத நிறைவான நிறைவு அவள். அப்படிப்பட்டவள் ஸ்ருஷ்டி பண்ணுகிறாள் என்றால் அது நாம் ஆனந்த உத்ஸாஹத்தில் ஒரு காரணமுமில்லாமல் விளையாடுகிற மாதிரிதான். அப்படி விளையாடுவதிலும் நமக்கு ஆனந்தம் ஏற்படுகிறது. அதனால் தொடர்ந்து விளையாடிக் கொண்டே போகிறோம். அப்படித்தான் அவளும் பண்ணுகிறாள். த்வைத லீலையைத் தொடர்ந்து கொண்டே போகிறாள். [சிரித்து] நாம் பண்ணுகிற மாதிரி அவள் பண்ணுகிறாள் என்று சொல்வது பிரதிபிம்பம் மாதிரி பிம்பம் பண்ணுகிறது என்கிறாற்போலத்தான் – தலைகீழாகச் சொல்வது! அவளுடைய ஸ்ருஷ்டி லீலா விநோதத்திலிருந்துதான் நமக்கு விளையாட்டு இன்பம் என்ற ஒன்று உண்டாவது. இதற்குக் காரணமில்லை. பலனை உத்தேசித்து அதைப் பண்ணவில்லை. ”விளையாட்டுக்குச் சொன்னேன்” என்கிறோமல்லவா? காரணம், பலன் ஆகியவற்றின் ஸம்பந்தமில்லாமல் பண்ண ஆரம்பித்தாலும், ஆரம்பித்த பின் அது கொடுக்கும் ஆனந்தத்தினால் ஸ்ருஷ்டி லீலையைத் தொடர்ந்து கொண்டு போகிறாள். மொத்தத்தில், விளையாட்டு என்பது ஆனந்த ஸமாசாரம். அதனால்தான் ஆனந்த பூர்ண வஸ்து ஒரு காரணமுமில்லாமல் காரிய ரூபத்தில் ஸ்ருஷ்டி என்று செய்வதை விளையாட்டு என்று, லீலை என்று சொல்வது.

இத்தனாம் பெரிய ப்ரஹ்மாண்ட விளையாட்டு கல்பகோடி காலமாக நடக்கிறது, இன்னும் அப்படியே நடக்கப் போகிறது என்றால் அதன் ஆதார ஊற்றான அவள் எப்பேர்ப்பட்ட ஆனந்த சக்தியாக இருக்க வேண்டும்! ”அலகிலா விளையாட்டு”1 அது! அதாவது அளவு கடந்தது – என்றால் விளையாடுகிறவள் அலகிலா ஆனந்த ரூபிணியாயிருக்க வேண்டும். ஆனந்தத்துக்கு நேர் விரோதமான சோகம், பயம், கோரம், க்ரூரம் ஆகியவையும் லோக வாழ்க்கையில் அலகிலாமல் இருந்துங்கூட, அவள் பாட்டுக்கு அந்த விளையாட்டைப் பண்ணி கொண்டிருக்கிறாளென்பதைப் பார்க்கும்போது, அவளுக்கு வேறே எத்தனையோ வித சக்திகளைச் சொன்னாலும் எல்லாவற்றையும்விடப் பெரிசாக ஆனந்த சக்தியே இருப்பதாகத் தோன்றுகிறது. அவளுடைய மஹா பெரிய ஆனந்தப் பொங்கலின் – பொங்குதலின் மட்டுமில்லை; சர்க்கரைப் பொங்கலின் – ருசி மாற்றத்திற்குத் துளியூண்டு ஊறுகாய் மாதிரிதான் இத்தனை க்ரூரம், அழுகை, பயம் எல்லாமே என்னும்படியாக அத்தனை சக்திகளையும் சேர்த்துப் பிடித்த ஆனந்த சக்தியாக அம்பாள் இருக்கிறாள்! நமக்குச் சின்னச் சின்ன ஆனந்தங்களிலிருந்து, ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஆனந்தத்திலிருந்து அகண்ட ஆனந்தமான ஆத்ம ஸாக்ஷாத்காரம் வரையில் சிற்றின்பங்கள், பேரின்பம் அத்தனையும் தருகிற ஆனந்த சக்தி அவள்.

பரப்ரஹ்ம தத்வத்தை ராதா-கிருஷ்ண தம்பதியாகப் பார்ப்பவர்கள் ராதையைக் கிருஷ்ணனுடைய ஹ்லாதினீ சக்தி என்றே சொல்வார்கள். ‘ஹ்லாதம்’ என்றால் ஆனந்தந்தான். ஆனந்தம் என்றால் என்ன அடையாளம்? சிரிப்பு, ‘laugh’ பண்ணுவது. ‘Laugh’ என்ற வார்த்தைக்கு மூலம் ஜெர்மன் வழியாக இந்த ஸம்ஸ்கிருத ‘ஹ்லாத்’ தான்.

உயிரின் ஸ்வபாவமே ஆனந்தத்தான். ப்ரேமையும், ஸெளந்தர்யமும் ஆனந்தம் தரத்தான்; ஆனந்தம் பெறவுந்தான். உயிரும் உணர்ச்சியும் அறிவுமாக இருக்கிறதைத் தானே ‘சித்’ என்று சொன்னது? [லலிதா] ஸஹஸ்ரநாமத்தில் ‘சித்கலா’ என்றவுடனேயே அடுத்த பேர் ‘ஆனந்த கலிகா’ என்று வருகிறது. [‘கலிகா’:மொட்டு.] அதற்கு அடுத்த பேர் ‘ப்ரேமரூபா’. ஒன்றுக்கொன்று inter-linked.


1 கம்ப ராமாயணம், கடவுள் வாழ்த்து.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is திறந்த மனத்துடன் செய்த துதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  மாயா உபகரணங்களாலேயே ஞான நிலை அடைய
Next