‘மஹாமாத்ரர்’ என்பது தமிழில் மாமாத்திரர் என்று ஆயிற்று. வைதிகத் தொழிலை விட்டு வைத்யத் தொழிலுக்கும், போர்த் தொழிலுக்கும் போய்விட்ட ப்ராம்மணர்களை ஜாதி ப்ராம்மணர்களிலிருந்து வேறுபடுத்தி மஹாமத்ரர்களென்று வைத்ததற்கு நிறைய ஆதாரமிருக்கிறது. ராஜீய விஷயங்களில் அவர்கள் ரொம்பவும் உசந்த ஸ்தானம் வஹித்து இன்னின்னவற்றில் பெரிய அளவு, அதாவது பெரிய பங்கு பெற்றிருந்ததால்தான் ‘மஹாமாத்ரர்’ என்று பேர் என்று ச்லோகமிருக்கிறது. மஹா-பெரிய; மாத்ரா-அளவு, என்னென்னவற்றில்?
மந்த்ரே, கர்மணி, பூஷாயாம், வித்தே, மாநே, பரிச்சதே |
மாத்ரா ச மஹதீ யேஷாம் மஹாமாத்ராஸ்து தே ஸ்ம்ருதா: ||
‘மந்த்ரே’ என்றால் இந்த இடத்தில் ‘மந்திர சாஸ்திரத்தில்’ என்றில்லாமல் ராஜாவின் ‘மந்திராலோசனையில்’ என்று அர்த்தம் செய்து கொள்வதே பொருத்தம். மஹாமாத்ரருக்கு மந்த்ராலோசனையில் பெரிய பங்கு உண்டு. அப்புறம் ‘கர்மணி’ – ராஜ கார்யங்களிலெல்லாம் அவருக்கு நிறையப் பங்கு உண்டு. ‘பூஷாயாம்’ – பூஷணங்கள்; அவருடைய ஆபரணங்களும் ராஜரீக தடபுடலோடு இருக்கும். ‘வித்தே’ – செல்வத்திலும் பெரிய அளவு பெற்றவர். ‘மாநே’ – மரியாதை; ராஜாவுக்கு அடுத்தாற்போல் குடிபடைகளின் மரியாதைகளைப் பெறுபவர். ‘பரிச்சதே’ – பரிவாரம்; ராஜாவுக்குப் பரிவாரம் இருக்கிறாற்போல இவருக்குமுண்டு. ‘பரிச்சதே’ என்பதற்கு வஸ்திரங்கள் என்றும் அர்த்தம். உயர்ந்த ரக உடுப்பு மஹாமாத்ரர்களுக்கு உண்டு என்று அர்த்தம்.
மந்த்ராலோசனை, ராஜீய கார்யங்கள், ஆபரணங்கள், செல்வம், மரியாதை, பரிவாரம் எல்லாவற்றிலும்,
‘மாத்ரா ச மஹதீ யேஷாம்’ – எவர்களுடைய அளவு மஹத்தானதாக இருக்கிறதோ; மேலே சொன்னவற்றிலெல்லாம் எவர்கள் ‘ஹை லெவ’லில் இருக்கிறார்களோ,
‘மஹாமாத்ராஸ்து தே ஸ்ம்ருதா:’ – அவர்கள் ‘மஹா மாத்ரர்கள்’ என்று கருதப்படுகிறார்கள்.
இங்கே சொல்லியுள்ள ஸமாசாரங்கள் அந்தக் கால ‘ஸெட்-அப்’பில் வேளாளர்களுக்குப் பொருந்துவதற்கில்லை.
ஸம்ஸ்கிருத அகராதிகளில் முதல் ஸ்தானம் பெற்றுள்ள ‘அமர’த்தில் மஹாமாத்ரர்களைச் சொல்லியிருக்கிறது. ராஜாக்களில் சக்ரவர்த்தி, ஸார்வபௌமன், மண்டலேச்வரன், ஸம்ராட் என்ற பல வகைகளைச் சொல்லிவிட்டு அவனுடைய பரிவாரத்தைச் சொல்லும்போது ‘மஹாமாத்ரா:’ என்று வருகிறது. “மந்த்ரி ப்ரதானி” என்று பொதுவாகச் சொல்கிறோம். “ப்ரதானி” என்றால் ராஜாங்கத்தில் மந்த்ரிக்கு அடுத்தபடிப் பிரதானமாயிருக்கும் நிர்வாஹ அதிகாரி. இந்த ப்ரதானிக்கு முன்னதாகவே, மந்த்ரி மண்டலத்தைச் சொன்னவுடனேயே “அமர”த்தில் மஹாமாத்ரர்களைச் சொல்லிவிட்டு அப்புறந்தான் ப்ரதானியையும், அதற்கும் அப்புறம் புரோஹிதரையும் சொல்லியிருக்கிறது.
மநுஸ்ம்ருதி ரொம்பப் புராதனமான புஸ்தகம். தர்ம சாஸ்த்ரங்களுக்குள்ளே அதற்குத்தான் தலைமை ஸ்தானம். அதிலேயே மஹாமாத்ரர்களைப் பற்றிக் குறிப்பு இருக்கிறது.1 ஆனால் இதில் ஒரு விசித்ரம், நல்ல படியாக நடக்கிற மஹாமாத்ரர்களைப் பற்றி இல்லாமல் கெட்டுப்போன மஹாமாத்ரர்களைப் பற்றியே அதில் வருகிறது. ஒரு ராஜா எப்படி தண்ட நீதியை நடத்த வேண்டுமென்று சொல்லிக்கொண்டு போகிறபோது நீதித் தண்டத்திற்கு ஆளாக வேண்டிய விதவிதமான குற்றவாளிகளைப் பற்றி [மநு] சொல்கிறார். அப்போது வெளிப்பட அக்ரமம் என்று தெரியும்படிச் செய்யும் திருடர் முதலானவர்கள் மட்டுமில்லாமல், அப்படித் தெரியாமல், ஸமூஹத்தில் கௌரவ ஸ்தானத்திலிருப்பவர்கள் வஞ்சகமாக அக்ரமம் செய்வதையும் சொல்லியிருக்கிறார். யார் யாரென்றால், முதலில் மஹாமாத்ரர்கள், அப்புறம் வைத்தியர்கள், மூன்றாவதாகச் சில்பிகள், கடைசியாக நாட்ய ஸ்திரீகள். ஒரு ராஜாவுக்கு, ராஜ்யத்துக்கு இந்த நாலு பேர் முக்கியம். நிர்வாஹத்திற்கு மஹாமாத்ரர், தேஹாரோக்கியத்திற்கு வைத்யர். ராஜாவின் ஒரு முக்யமான் கடமை கோயில்கள் கட்டி ஜனங்களின் பக்தியை வளர்ப்பது – அதற்கு அவசியமானவர் சில்பி. அந்தக் கோயிலில் ஸ்வாமி ஸமர்ப்பணத்திற்கு பூஜோபசாரமாக நாட்யமாடுவதற்காக தேவதாஸிகள். ராஜ ஸதஸிலும் பொழுது போக்குக்கு நாட்யம் ஆடுவதற்கு அவர்கள் வேண்டும். தங்கள் ‘பொஸிஷ’னை துஷ்பிரயோகம் பண்ணக்கூடிய இந்த நாலு விதமான குற்றவாளிகளை மநு சொல்லி, இவர்களை தேசத்திற்கு முள்ளாக (“லோக கண்டக” என்று இருக்கிறது; ‘கண்டக’ என்றால் முள்; அப்படி) ராஜா கருதித் தண்டிக்கணும் என்கிறார். இங்கே நிர்வாக இலாகாவின் முக்யமான அதிகாரிகளுக்கு ப்ரதிநிதியாக அவர் மஹாமாத்ரர்களையே சொல்லியிருப்பதால் அவர்களுடைய ஸ்தான விசேஷம் தெரிகிறது.
பிராம்மணர்களின் உயர்ந்த வைதிகாசாரங்களை விட்டு விட்டவர்கள் என்றாலும், வைத்திய சேவையோ, ராணுவ சேவையோ எதுவானாலும் தாங்கள் எடுத்துக் கொண்டதைத் திறம்பட ஆற்றியதாலேயே அவர்களுக்கு ‘மஹாமாத்ரர்’ என்ற பெயர் உண்டாயிருக்கிறது. ‘மாத்ரர்’ என்றால் அளவுகோலாக இருப்பவர்கள். ஜனஸமூஹம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உயர்ந்த, பெரிய அளவுகோலாக இருந்தவர்களை ‘மஹாமாத்ரர்’ என்கலாம்.
அவர்கள் வேத அத்யயனம் விசேஷமாகப் பண்ணாவிட்டாலும் சாஸ்திர புஸ்தகங்கள் நன்றாகப் படித்தவர்கள். பரஞ்ஜோதியைப் பற்றிச் சேக்கிழார் [பெரிய புராணத்தில்] சொல்கிறபோது அவர் ஆயுர்வேதம் நன்றாக கற்றுக் கொண்டார். ஏராளமாக ஸம்ஸ்கிருதத்தில் இருக்கும் சாஸ்த்ரங்களும் படித்தார் என்று சொல்லியிருக்கிறார்.2 ஆயுர்வேதம், தநுர்வேதம் இரண்டுமே மாமாத்ரர்கள் அப்பியாஸம் பண்ணியதற்கேற்க இவரும் யுத்த சாஸ்த்ரங்கள் படித்துத் தங்கள் ஜாதியார் அதில் குறிப்பாக ஸ்பெஷலைஸ் செய்திருந்த கஜ சாஸ்திர, அச்வ சாஸ்திரங்களில் ரொம்பவும் கெட்டிக்காரராக விளங்கினார் என்றும் சொல்லியிருக்கிறார்; அதாவது, யானைப்படை, குதிரைப்படை நிர்வாகத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார் என்கிறார்.3
திருஞானஸம்பந்தர் திருச்செங்காட்டாங்குடிக்கு வந்தபோது பரஞ்ஜோதிக்கு அந்தப் பேர் போய் அவர் சிறுத் தொண்டர் என்ற நாயனாராகி விட்டார். நாயன்மாரில் ரொம்பப் பேர் க்ருஹஸ்தர்களாக இருந்த மாதிரி இவரும் க்ருஹஸ்தராகத்தான் இருந்தார். இவர் அந்தத் தெய்வக் குழந்தையை தம்முடைய க்ருஹத்துக்கு எழுந்தருளப் பண்ணியதைச் சேக்கிழார் வர்ணிக்கும்போது தம்முடைய பூணூல் போட்டுக் கொண்டுள்ள மார்பில் ஞானஸம்பந்தருடைய பாதங்களைப் பதித்துக் கொண்டாரென்று ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார்.4 அதனால் அவர் நிச்சயம் வேளாளராக இருந்திருக்க முடியாது.
சிறுத்தொண்டரின் பிள்ளை சீராளன் பிறந்தவுடன் அவர் பத்து நாள் சடங்குகள் பண்ணினாரென்று பெரிய புராணத்தில் சொல்லியிருப்பதும் பிராம்மண ஆசாரத்தைத்தான் உறுதிப்படுத்துகிறது. அந்த இடத்தில் ‘உரிமைச் சடங்கை தச தினத்தில் செய்தார்’ என்று வருகிறது.5 ஜாதிப் பிராமணர்களிலிருந்து மாமாத்திரர்களைப் பிரித்து வைத்திருந்தாலும் அவர்களுடைய சடங்கு, ஸம்ஸ்காரங்களில் அநேகம் இவர்களுக்கும் குல உரிமையாகக் கொடுத்திருந்தால்தான் ‘உரிமைச் சடங்கு’ என்று போட்டிருக்கிறார். பிரஸவ தினத்தையும் சேர்த்துப் பதினோராம் நாள் ஒரு பிராம்மணக் குழந்தைக்குப் புண்யாஹவாசனம் பண்ணி நாமகரணம் செய்யப்படுகிறது. பிரஸவ தினத்தைச் சேர்க்காமல் அதைப் பத்தாம் நாளென்றே ஆபஸ்தம்ப ஸூத்ரத்தில் சொல்லியிருக்கிறது. ‘தசம்யாம்’ என்று அதிலிருக்கிறது. அதே ப்ரகாரம் சேக்கிழாரும் ‘தச தினத்தில்’ என்று சொல்லியிருக்கிறார்.
குழந்தைக்கு ‘நெய்யாடல் விழா’ செய்தார்களென்றும் இங்கே வருகிறது.6 அது என்னவென்று ஸரியாகத் தெரியாவிட்டாலும், நல்ல வைதிக ப்ராம்மண ஜாதியில் கௌண்டின்ய கோத்திரத்தில் (‘கௌணியன்’ என்று அவரே தம்மைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்) பிறந்த ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளின் ஜனனோத்ஸவத்தைச் சொல்கிற இடத்திலும் சேக்கிழார் இதே நெய்யாடல் நடந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.7
அப்புறம் சீராளனின் மூன்றாம் வயஸில் அவனுக்கு சாஸ்திரப் பிரகாரம் சௌள ஸம்ஸ்காரம், அதாவது குடுமிக் கல்யாணம், பண்ணினார்களென்று வருகிறது.8
இதுகளிலிருந்து ஜாதி ப்ராம்மணர்களுக்கு அடுத்தாற்போன்ற ஸ்தானம் மாமாத்ரர்களுக்கு இருந்தாகத் தெரிகிறது. அதை ‘கன்ஃபர்ம்’ செய்வதாக ஒரு பெரிய ‘எவிடென்ஸ்’ இருக்கிறது.
‘சேக்கிழார் சுவாமிகள் புராணம்’ என்று அறுநூறு வருஷங்களுக்கு முற்பட்ட ஒரு பழைய நூல் இருக்கிறது. அது சித்தாந்த சைவத்தில் ஒரு ஆசார்ய புருஷராகப் போற்றப்படுகிற உமாபதி சிவாசாரியார் செய்தது. உமாபதி சிவம் என்ற வேறே ஒரு புலவர் பண்ணினது என்றும் ஒரு அபிப்ராயமிருக்கிறது. எப்படியானாலும் பழைய நூல்; ‘அதாரிடி’ உள்ளதாகக் கருதப்படுவது. அதில் 63 நாயன்மாரில் என்னென்ன ஜாதியில் எத்தனையெத்தனை பேர் இருந்தார்களென்று கணக்குக் கொடுத்திருக்கிறது. அதில் முதலில் சுத்த வைதிக பிராமணர்களைக் குறிப்பிட்டு, நாயன்மார்களில் அந்த ஜாதியார் 13 பேர் இருந்தார்களென்றும், அப்புறம் ஆகம தீக்ஷை பெற்ற குருக்கள் என்றும் சிவ ப்ராமணர் என்று சொல்கிறோமே, அந்த வகுப்பைச் சேர்ந்த ஆதி சைவர்கள் இரண்டு பேர் என்றும் சொல்லிவிட்டு, மூன்றாவதாக ‘குரை கழல் மாமாத்திர வகுப்பில் ஒருவர்’ என்று குறிப்பிட்டிருக்கிறது. ‘குரை கழல்’ என்பது சப்திக்கின்ற வீரக்கழல் அணிந்தவர் என்று காட்டுகிறது. ஸாதாரணமாக அது க்ஷத்ரியர்களுக்கே உரிய அணியானாலும், இங்கே வைதிக ப்ராமணரையும், சிவ ப்ராமணரையும் சொன்னவுடன் வருகிற மாமாத்திரருக்கு அதைச் சொல்லி, அப்புறம் அஸல் க்ஷத்ரியர்களைச் சொல்லியிருக்கிறது. இதிலிருந்து ப்ரம்ம-க்ஷத்ரியர்களுக்கு இடைப்பட்ட ஸ்தானம் மாமாத்ரருக்கு இருந்தது தெரிகிறது. அப்புறம் க்ஷத்ரிய ஜாதியில் இடம் பெறுகிறவர்களில் பெரிய ராஜாக்களாக ஆறு நாயன்மார், குறுநில மன்னர்களாக ஐந்து பேர்; பிரம்ம – க்ஷத்ரியர்களுக்கு அப்புறம் வைச்ய ஜாதியில் ஐந்து நாயன்மார்; அதற்குப் பிறகுதான் வேளாளர் என்றே குறிப்பிட்டு 13 பேர் என்று ‘லிஸ்ட்’ போகிறது.9 மாமாத்திரர் என்று பரஞ்ஜோதியாயிருந்து சிறுத்தொண்டரான ஒருவரைத்தான் பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிறது. சேக்கிழார் புராண லிஸ்டிலும் மாமாத்திரர் ஒருவரே என்று இருக்கிறது. அதிலிருந்து பிரித்து 13 வேளாள நாயன்மார்களைச் சொல்லியிருக்கிறது. முதலில் சுத்த வைதிக ப்ராமணர், அடுத்தாற்போல் ஆதி சைவ ப்ராமணர், அதை அடுத்து மாமாத்திரர், அப்புறம்தான் க்ஷத்ரியர், வைச்யர் என்று லிஸ்ட் போவதையும் கவனிக்கணும்.
ஆறுமுக நாவலர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ராமலிங்க ஸ்வாமிகளுக்கு ஸம காலத்தவராகிய அவர் தமிழிலும் சைவத்திலும் மஹா பண்டிதர். நல்ல சிவ பக்தர். பட்டை பட்டையாக விபூதி போட்டுக்கொண்டு, தலையில் கூட ருத்ராக்ஷம் கட்டிக்கொண்டு இருப்பார். யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூரைச் சேர்ந்தவர். தமிழ் நாட்டிலும் நிறைய வாஸம் செய்திருக்கிறார். தமிழ் ஆரம்ப பாடத்திலிருந்து ஆழமுள்ள ஆராய்ச்சி நூல்கள் வரை அநேகம் எழுதியிருக்கிறார். மத விஷயமாக, எல்லோருக்கும் புரியும்படி பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலியவற்றை வசன நடையில் செய்திருப்பதிலிருந்து சைவ சாஸ்திர விஷயங்களை அலசி விமர்ச்சிப்பது வரையில் பலது (பல) எழுதியிருக்கிறார். தமிழுக்கென்று பாடசாலைகள் வைத்துத் தாமே பாட புஸ்தகங்களும் அச்சுப் போட்டுக் கொடுத்திருக்கிறார். வேத பாடசாலை ப்ரம்மச்சாரிகள் அன்ன பிக்ஷை எடுத்தார்களென்றால், இவர் தாமே தமிழ்ப் பாடசாலைகளுக்காக வீடு வீடாகப் போய் அரிசி பிக்ஷை எடுத்திருக்கிறார்.
தமிழுக்கும் பக்திக்கும் உயர்ந்த தொண்டு செய்திருக்கும் அவர் பெரிய புராண வசனம் எழுதியிருக்கிறாரென்றேன் அல்லவா? அதிலும் அறுபத்து மூவரில் எந்த ஜாதியில் எத்தனை பேர் என்று ‘லிஸ்ட்’ கொடுத்திருக்கிறது. இதற்கும் உமாபதி சிவத்தின் லிஸ்டுக்கும் சில வித்யாஸங்கள் இருக்கின்றன. ஆனால் அது நமக்கு விஷயமில்லை. நமக்கு என்ன விஷயமென்றால், அந்தப் புஸ்தகத்தின் முகவுரையில் (அது நாவலரே எழுதியதா, அல்லது அச்சுப் போட்டவர் எழுதியதா என்று தெரியவில்லை) சிவாகம தீக்ஷை பெற்றுக் கொண்ட ஆதி சைவர்கள்தான் மிகவும் உயர்ந்தவர்களென்றும், அப்படியிருக்கும்போது சைவர்களுங்கூட வைதிக ப்ராமணர்களுக்கு முதல் ஸ்தானம் கொடுத்து மரியாதை செய்வது தப்பு, பாபமே என்றும் காரஸாரமாகச் சொல்லியிருக்கிறது. அதாவது தனிப்பட்ட ப்ராம்மண த்வேஷமில்லாவிட்டாலும் ஆதி சைவர்களுக்கு அப்புறந்தான் வேத ப்ராம்மணர்கள் என்ற அபிப்ராயத்தைச் சொல்லும் புஸ்தகம் அது. அப்படிப்பட்ட புஸ்தகத்தில் ப்ராம்மணர்தானா என்று ஸந்தேஹமாயிருக்கிற ஒரு நாயனாரை அப்படிச் சொல்லியிருக்காதுதானே? அந்தப் புஸ்தக ஜாபிதாவில் முதலில் ஸுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் முதலான நாலு ஆதி சைவ நாயன்மார்களையும், அப்புறம் ஞானஸம்பந்தர், ஸோமாசி மாற நாயனார், ருத்ர பசுபதி நாயனார் முதலான பன்னிரண்டு வைதிக ப்ராம்மண நாயன்மார்களையும் சொல்லிவிட்டு, அடுத்தாற்போல சிறுத்தொண்டர் ஒருத்தரை மாத்திரம் மாமாத்திரப் பிராமணர் என்று போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதற்கப்புறம் சேரமான் பெருமாள், நெடுமாற பாண்டியன், கொச்செங்கட் சோழன் முதலான மூவேந்தர்களை க்ஷத்ரிய நாயன்மார்கள் என்று குறிப்பிட்டு விட்டு, மற்ற அரச நாயன்மார்களையும் சொல்லிவிட்டு, பிற்பாடு வைச்யர் (காரைக்கால் அம்மாள், இயற்பகை நாயனார் போன்றவர்கள்) வேளாளர் (அப்பர் ஸ்வாமிகள் முதலிய பதின்மூன்று பேர்) , குயவர் (திருநீலகண்ட நாயனார்) ஏகாலியர் (திருக்குறிப்புத்தொண்ட நாயனார்) என்று போய் புலையர் என்று திருநாளைப் போவாரை – அவர்தான் நந்தனார் – சொல்லி முடித்திருக்கும்.
1 9-வது அத்தியாயம், 259-வது ச்லோகம்:
அஸம்யக்காரிணச்சைவ மஹாமாத்ராச்-சிகித்ஸகா: |
சில்போபசாரயுக்தாச்ச நிபுணா: பண்யயோஷித: ||
2 “ஆயுள்வே தக்கலையும் அலகில் வட நூற்கலையும்”
(பெ.பு. 3662)
3 தூயபடைக் கலத்தொழிலும் துறைநிரம்பப் பயின்றவற்றாற்
பாயுமதக் குஞ்சரமும் பரியுமுகைக் கும்பண்பு
மேயதொழில் விஞ்சையினு மேதினியின் மேலானார்
(மேற்படி)
4 ………… முந்நூல்சேர்
பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகா வலனார்தம்
நன்னாமச் சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார்
(பெ. பு. 3682)
5 தங்கண்மர பினிலுரிமைச் சடங்குதச தினத்தினிலும்
பொங்குபெரு மகிழ்ச்சியுடன் புரிந்துகாப் பணிபுனைந்தார்.
(பெ. பு. 3678)
6 – திருமலிநெய் யாடல்விழாச் செங்காட்டங் குடியெடுப்ப (பெ. பு. 3677)
7 – மீதணியு நெய்யணி விழாவொடு திளைப்பார் (பெ. பு. 1933)
8 – வந்துவளர் மூவாண்டில் மயிர்வினைமங் கலம்செய்து (பெ. பு. 3681)
9 – திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவே-
தியர் அரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு,
குரைகழல்மா மாத்திரரொன்(று), அறுவர் முடிமன்னர்,
குறுநிலமன் னவர்ஐவர் வணிகர்குலத் தைவர்,
இருமைநெறி வேளாளர் பதின்மூவர்……