முதல் ச்லோகம் மங்கள ச்லோகம் மாதிரியானது. இரண்டாவதில்தான் ஸ்தோத்ரம் – ‘டெக்ஸ்ட்’ – ஆரம்பிக்கிறதென்று சொல்லலாம் பாததூளி மஹிமையோடு ஆரம்பித்திருக்கிறது.
‘புருஷ தெய்வ வர்ணனையில்தானே பாதத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும்? ஸ்திரீ தெய்வத்திற்கு சிரஸில் அல்லவா ஆரம்பிப்பது ஸம்பிரதாயம்? ஏன் வித்யாஸமாகப் பண்ணியிருக்கிறது?’ என்று தோன்றலாம்.
அங்க அங்கமாக ஒரு ஆர்டரில் முழு ஸ்வரூபத்தையும் வர்ணித்துக் கொண்டு போகும்போது தான் [புருஷ தெய்வத்திற்குப்] பாதாதி கேசம், [பெண் தெய்வத்திற்கு] கேசாதி பாதம் என்பது. இங்கே, இந்த ‘ஆனந்த லஹரி’ ஸெக்ஷனில், அப்படிப் பாதத்திலிருந்து ஆரம்பித்து மேல் வரிசையில் வர்ணித்துக் கொண்டு போவதாக ச்லோகங்கள் இல்லை. ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றே சொல்லப்படும் பின் ஸெக்ஷனில்தான் வரிசைக் கிரமமாக அங்க வர்ணனை வருவது. அங்கே எப்படி ஸம்பிரதாயமோ அப்படி சிரஸிலுள்ள கிரீடத்தில் ஆரம்பித்திருக்கிறார்; அப்புறம் இறங்கு வரிசையாகப் பாதம் வரை கொண்டு முடித்திருக்கிறார்.
பூர்ணமான ஸ்வரூப வர்ணனைக் கிரமம் என்று எடுத்துக் கொள்ளாதபோது எந்தத் தெய்வமானாலும் முதலில் அதன் பாதத்தைப் பிடிக்கத்தான் போக வேண்டும். சரணாகதி என்று விழுவது பாதத்தில்தான். பக்தனின் சிரஸில் பாதத்தை வைத்துத்தான் குரு ரூபமாக தெய்வம் தீக்ஷைகொடுப்பதும். அம்பாள் அம்மாவுக்கு அம்மா; குருவுக்கு குரு. அதனால் ”அம்மா!” என்று அவள் காலைக் கட்டிக் கொள்வதானாலும் சரி, குரு என்று தீக்ஷை கேட்டாலும் சரி பாதத்தைத்தான் பிடிக்கணும். ஆகையால் [ஸ்தோத்திரத்தை] இப்படி ஆரம்பிப்பது முறையானதுதான்.
இன்னொன்றுகூட. சிவன் சக்தியுக்தன் என்றால் சக்தியும் சிவயுக்தைதான். அவர்கள் அர்த்தநாரீச்வரர்களாக இருப்பதால் சிவனைப் பற்றிக் கேசாதிபாத வர்ணனையும் பண்ண நியாயமுண்டென்று அப்படி ஒரு ஸ்துதி ஆசார்யாள் செய்திருக்கிறார். அதே நியாயத்தில் அம்பாளைப் பாதாதிகேசமாகக்கூட வர்ணிக்கலாம்தான். இங்கே அப்படி வர்ணனை தொடர்ந்து போகாவிட்டாலும் பாதத்தில் ஆரம்பித்ததிலேயே சிவாபின்னையாக [சிவனிடமிருந்து பிரிவற்றவளாக] அம்பாள் இருப்பதையும் காட்டிய மாதிரி வைத்துக் கொள்ளலாம்.
எந்த விஷயத்திற்கும் ஆரம்பத்தை ‘அடி’ என்று சொல்வது வழக்கம் – ‘அடியிலிருந்து நுனிவரை’ என்று சொல்கிறோம். அந்த ரீதியிலும் அம்பாளின் ‘அடி’யில் ஆரம்பித்துக் கொண்டு போவதுதானே முறை?
அடுத்த இரண்டு ச்லோகங்களுங்கூட அம்பாளுடைய பாதமஹிமையைத்தான் சொல்கின்றன. திருவடிக்கும் அடியிலுள்ள தூளியின் மஹிமையை முதலில் சொல்லிவிட்டு அப்புறம் திருவடி மஹிமையைச் சொல்கிறார்.