காமனுக்குச் சக்தியும் பதவியும் தந்தவள் காமேச்வரியாகிய லலிதாம்பாளே யாகையால் நம்முடைய ஸ்தோத்ரம் அவளைக் குறித்ததே என்று இந்த ச்லோகம் ஓரளவுக்கு நன்றாகவே தெரியப்படுத்திவிடுகிறது. இருந்தாலும் முழுக்க உடைத்துச் சொல்லவில்லை. பொதுப்படையாக, காமன் ஜகத்தை ஜயிக்கிறான் — “ஜகதிதம் அநங்கோ விஜயதே” — என்று சொல்லியிருக்கிறதே தவிர ஈச்வரனை ஜயித்ததாக இல்லை. அந்தப் பெரிய வெற்றியையும் அவனுக்கு ஏற்படுத்தித் தந்ததுதான் காமேச்வரியின் முக்யமான லீலை. அதைச்சொல்லவில்லை. காம தஹனம் நடந்த ஸமயத்தில், அதாவது அவன் ஈச்வரனிடம் தோற்று, தோற்று மட்டுமில்லாமல் உயிரையே இழந்து பஸ்மமான ஸமயத்தில் அம்பாளுக்கு ஏற்பட்டிருந்த பார்வதி அவதாரத்தைத்தான் ‘ஹிமகிரிஸுதே’ என்கிற பேர் காட்டுகிறது. பிற்பாடு ஸ்வாமி அவளிடம் ப்ரேமை கொண்டு கல்யாணம் பண்ணிக் கொண்டாரென்றாலுங்கூட அதைக் காமனின் கார்யமாக, அவனுடைய வெற்றியாக, சொல்வதில்லை. அம்பாளுடைய சுத்தமான ப்ரேமையும், அவள் பண்ணிய அத்புதமான தபஸுந்தான் தக்ஷிணாமூர்த்தியையும் இளக்கிக் கல்யாண ஸுந்தரராக ஆக்கிற்று என்றே அந்தக் கதை போகிறது. ‘ஸ்காந்த’த்தில் சொல்லி, காளிதாஸனும் ‘குமார ஸம்பவ’த்தில் ‘அடாப்ட்’ பண்ணியிருக்கிற விருத்தாந்தம் இதுதான். முந்தைய ச்லோகத்திலும் காமன் மஹா முனிவர்களையும் மோஹிக்கச் செய்கிறானென்று இருக்கிறதே தவிர ஈச்வரனையே அவன் ஜயித்து மோஹிக்கச் செய்ததாகச் இல்லை. மஹாவிஷ்ணு மோஹினி ரூபமெடுத்து அந்தக் கார்யம் செய்ததைத்தான் அங்கே சொல்லியிருக்கிறது. அவர் [விஷ்ணு] இவனுடைய பிதா. மானஸிக புத்ரனாக அவருடைய மனஸிலிருந்தே இவன் தோன்றியதால் இவனுக்கு மனஸிஜன் என்ற பெயருமுண்டு. அவர் க்ருஷ்ணாவதாரம் பண்ணியபோதும் மன்மதன் அவருக்கு ப்ரத்யும்னன் என்ற பிள்ளையாகப் பிறந்தான். ஆக அப்பாக்காரரான அவரே நேராகப் பரமசிவனை மோஹிக்கப் பண்ணினார் என்றும், மற்ற அத்தனை பேரையும், மஹா முனிவர்களையுங்கூட மன்மதன் மோஹிக்கப் பண்ணுகிறான் என்றுந்தான் பிரித்து வைத்தாற்போல அங்கே சொல்லியிருக்கிறது. ‘ஸெளந்தர்ய ஸஹரி’ என்றே உள்ள உத்தர பாகத்தில்தான் மன்மதனே ஸ்வாமியை ஜயித்ததைச் சொல்லியிருக்கிறது. அம்பாளின் குண்டலங்கள் இரண்டு, அவை அவளுடைய கண்ணாடி மாதிரியான கன்னத்தில் காட்டும் பிரதிபிம்ப குண்டலங்கள் இரண்டு என்பதாக இந்த நாலையுமே நாலு சக்கரமாகக் கொண்ட அவளுடைய முகம் என்ற ரதத்தில் ஏறிக்கொண்டு மன்மதன் ஈச்வரனிடம் சண்டைக்குப் போகிறானென்று ஒரு ச்லோகத்தில் [59] வருகிறது. அம்பாள் ஈச்வரனைப் பார்க்கும் ப்ரேம வீக்ஷணம் ஈச்வரனின் மேல் மன்மதன் செய்யும் பாண ப்ரயோகமே என்று ஒரு ச்லோகத்தில் … [சற்று யோசித்து] இரண்டு ச்லோகங்களில் [52, 58] வருகிறது. ரதத்தில் கிளம்பியது, பாண ப்ரயோகம் பண்ணியது மட்டுமில்லாமல் ஸ்வாமியை அவன் ஜயித்தேவிட்டு ஜயகோஷம் போடுவதையும் ஒரு ச்லோகத்தில் [86] சொல்லியிருக்கிறார் – அம்பாளுடைய சலங்கை கிலுங், கிலுங் என்று சப்திப்பது மன்மதன் போடும் ஜயகோஷந்தான் என்கிறார். ஆனால் இந்தப் பூர்வபாகத்தில் அந்த விஷயம் [பரமசிவனை மன்மதன் ஜயித்த விஷயம்] சொல்லவில்லை. காவ்யரஸம் அதிகமுள்ள பின் பாகத்திற்கே அதை ரிஸர்வ் செய்து விட்டாற்போலிருக்கிறது!
என்ன சொல்ல வந்தேனென்றால், நம் ஸ்தோத்ரத்தின் தேவதை காமேச்வரி என்பதை இன்னமும் உடைத்துச் சொல்லாமல், ஆனாலும் நன்றாகவே ஊஹித்துவிடும்படி இதுவரை ச்லோகங்கள் கொடுத்துவிட்டார். இனிமேலும் காக்க வைக்கவேண்டாமென்று தோன்றி, அடுத்தச்லோகத்தில் த்யான ச்லோகம் மாதிரி ஸ்பஷ்டமாகவே காமேச்வரி ரூபத்தை வர்ணித்துவிடுகிறார்.