தனிப் பெயரில்லாத யந்திரம், தந்திரம், தலைநகரம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அம்பாள் பக்தர்கள் பெருமையாக ஒன்று சொல்லிக் கொள்வார்கள். மற்ற ஸ்வாமிகளின் யந்த்ரங்களுக்கு அந்தந்த ஸ்வாமியின் பெயரையோ வேறே அந்த ஸ்வாமிக்கு உள்ள அடையாளத்தையோ சேர்த்து சிவசக்ரம், மேதா தக்ஷிணாமூர்த்தி யந்த்ரம், ஸுதர்சன யந்த்ரம், ஷடக்ஷர சக்ரம் என்றிப்படிப் பெயர் சொல்ல வேண்டியிருக்கிறது. லலிதா த்ரிபுரஸுந்தரியின் யந்த்ரதிற்கு மட்டும் இப்படி ஒரு பெயரும், அடைமொழியும் கொடுக்காமல், பூஜிதமானது மங்களமானது என்பதால் ‘ஸ்ரீ’ மட்டும் போட்டு ‘ஸ்ரீசக்ரம்’ என்றே சொல்லியிருக்கிறது. சக்ரம் என்றாலே இதுதான், தனியாகப் பெயர் கொடுக்க வேண்டாம் என்கிற மாதிரி இருக்கிறது.

அதேபோலத்தான் அவளுடைய உபாஸனா மார்க்கந்தான் மார்க்கம் என்று காட்டுகிற மாதிரி அதற்கும் ‘ஸ்ரீவித்யை’ என்றே பெயர் கொடுத்திருக்கிறது. இங்கேயும் ‘ஸ்ரீ’ என்பது பூஜிதமான அடைமொழியே தவிர ஸ்ரீதேவி என்ற லக்ஷ்மியைக் குறிப்பிடுவதில்லை. உபாஸனா மார்க்கங்களை வித்யை என்றும் தந்த்ரம் என்றும் சொல்வது. அப்படிச் சொல்லும்போது மற்ற ஸ்வாமிகளின் உபாஸனைக்கு அந்த ஸ்வாமியின் பெயரையோ அல்லது அதன் ப்ரவர்த்தகரான ரிஷியின் பெயரையோ வைத்துப் பெயர் கொடுத்திருக்கும். ஆனால் த்ரிபுரஸுந்தரி வித்யைக்கு மட்டும் தனிப்பெயர் வைக்காமல் ஸ்ரீவித்யா என்றே சொல்வதாக இருக்கிறது.

அந்த ஸ்ரீவித்யா மந்திரத்திலேயே சிலசில வித்யாஸங்களோடு பல தினுஸான மந்திரங்கள் இருக்கிறது. இங்கே மட்டும் எப்படி ஸ்ரீவித்யா மந்திரம் என்று ஒரே பேரைச் சொல்வது? வித்யாஸம் தெரியும்படியாக வேறே வேறே பேர் சொன்னால்தானே ஸரியாயிருக்கும்? அதனால் அந்த மந்திரத்தின் முதலெழுத்தை வைத்தோ, அதன் ப்ரவர்த்தகரான ரிஷியின் பெயரை வைத்தோ, காதி வித்யா, ஹாதி வித்யா, லோபாமுத்ரா வித்யா, துர்வாஸ வித்யா என்று சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்துப் பொதுவாக லலிதா தந்த்ரம் என்பதை ‘ஸ்ரீவித்யா’ என்றே சொல்லியிருக்கிறது.

யந்த்ரம், தந்த்ரம் மட்டுமின்றி அவள் இருக்கிற ராஜதானிக்கும் தனிப் பெயரில்லை! ‘ஸ்ரீபுரம்’ அல்லது ‘ஸ்ரீநகரம்’ என்றே அந்த இடத்திற்குப் பெயர். புரம், நகரம் என்றால் வெறுமே ஊர் என்றுதான் அர்த்தம். அப்படிச் சொன்னாலே போதும், அது அத்தனை ஊர்களும் இருக்கும் ஜகத்துக்கு ஜனனியாக இருக்கப்பட்ட அவளுடைய தலைநகரந்தான் என்று தெரிவிப்பதாக இப்படி ஸ்ரீபுரம், ஸ்ரீநகரம் என்றே பேர் இருக்கிறது!

நித்யஸ்ரீயை, [அதாவது] என்றும் அழியாததான ஆத்மானந்தச் செல்வத்தை தருகிறவள் அம்பாள் என்பதால் அவளுக்கு [ஸஹஸ்ரநாமத்தில்] முதல் பேரே ‘ஸ்ரீமாதா’ என்று சொல்கிறோம். அதற்கேற்க, ஸ்ரீவித்யை, ஸ்ரீசக்ரம், ஸ்ரீபுரம் என்றே அவளுடைய ஸம்பந்தமான விஷயங்களெல்லாம் இருக்கின்றன……

ஸ்ரீசக்ரம் என்ற ஸ்ரீயந்த்ரத்தைப் பற்றி ஸெளந்தர்ய லஹரியில் ச்லோகம் வருவதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆறு ஆவரணங்களாக உள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையொன்று ‘கட்’ பண்ணிக்கொண்டு நாற்பத்து நாலு முக்கோணம் ஏற்படுவதாகச் சொன்னேனல்லவா? இந்த ஒன்பதிலே நாலு சிவ சக்ரங்கள் என்று ஐந்து சக்தி சக்ரங்கள் என்றும் சொல்லப்படும். பிந்துவைச் சுற்றியிருக்கும் நடு முக்கோணம் சக்தி சக்ரங்களில் சேர்ந்ததுதான். அகங்களில் பூஜிக்கும் போது அது பூஜிப்பவருக்கு அபிமுகமாக இருக்க வேண்டும்*. (* ‘ஸ்ரீசக்ரம் : அதன் சிறப்புக்கள்’ என்ற தலைப்பில் வரும், ‘பூஜா மூர்த்திகளைக் கிழக்கு..’ எனும் பின்குறிப்பைப் பார்க்க).

சிவ சக்திகளின் ஐக்யமான அத்வைதத்தைக் காட்டுவதாக ஸ்ரீ சக்ரத்தில் இரண்டு பேருடைய சக்ரங்களையும் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னி வைத்திருக்கிறது. அதனால் ஏற்படும் கோணங்கள், அவற்றுக்கு வெளிச் சுற்றுக்களில் உள்ள பத்ம தளங்கள், வட்டக்கோடுகள், சதுரக் கோடுகள் ஆகியவற்றுக்கெல்லாம் இந்த [11-வது] ச்லோகம் கணக்குக் கொடுக்கிறது.

இதெல்லாம் ஏதோ நாவல் படிக்கிற மாதிரியோ, அல்லது academic interest-காகவோ தெரிந்து கொள்கிற விஷயமில்லை. குருமுகமாக உபதேசம் பெற்று குப்தமாக [பஹிரங்கப்படுத்தாமல்] ரக்ஷிக்கப்பட்ட வேண்டிய விஷயம். அடியோடு சொல்லாமல் விடவேண்டாமென்று கொஞ்சம் சொன்னேன். அதனால் ‘லைட்’டாக நினைத்துவிடக்கூடாது!

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸ்ரீசக்ரம் :அதன் சிறப்புக்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  உவமிக்கவொண்ணாத உருவழகு; காண்பதற்கொண்ணாத காட்சி!
Next