விஷ்ணுவை விட்டதேன்? : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ப்ரஹ்மா, இந்திரன் முதலான எல்லா தேவலோக வாஸிகளும் அழிகிறார்கள்: “விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா: திவிஷத:” என்று இங்கே சொல்லியிருக்கிறது. ‘விதி’ என்றால் ப்ரஹ்மா. ‘சதமகன்’ என்றால் நூறு அச்வமேதம் பண்ணினவரான இந்த்ரன். முன்னே ‘முகுந்த-ப்ரஹ்ம-இந்த்ர’ என்று விஷ்ணுவைச் சேர்ந்து கிரீட நீராஜனம் கொடுப்பவர்களைச் சொன்னார். அங்கே ருத்ரனை மட்டும் சொல்லாமல் விட்டார். இங்கே மஹா ஸம்ஹாரத்தில் அழிபவர்களைச் சொல்லும்போது விஷ்ணுவையும் விட்டிருக்கிறார். “மஹா ஸம்ஹாரே அஸ்மின்” என்ற இரண்டு, மூன்று ச்லோகம் முந்திச் சொல்லி1 அப்போது யாரார் அழிகிறார்கள் என்று லிஸ்ட் கொடுக்கும்போது “ஹரிராப்னோதி விரதிம்” என்பதாக மஹாவிஷ்ணுவுக்கும் அப்போது முடிவு ஏற்படுவதைச் சொன்னாலும், இங்கே அவரைச் சொல்லவில்லை. அம்பாளின் ஸஹோதரரான அவரை மறுபடி மறுபடி அப்படி சொல்ல மனஸ் வரவில்லை போலிருக்கிறது! அதுவுந் தவிர –

அம்ருதத்தைச் சாப்பிட்ட தேவர்களைப் பற்றித்தான் இங்கே பேச்சு. “ஸுதாமப்யாஸ்வாத்ய…… திவிஷத:” என்று வருவதற்கு “அம்ருதத்தையே சாப்பிட்ட தேவர்களும்” என்று அர்த்தம். மஹாவிஷ்ணு அம்ருத மதனத்தின் போது பண்ணாத ஒத்தாசையில்லை. அம்ருதம் கடைந்து சாப்பிட்டால் அமரமாயிருக்கலாமென்று தேவர்களுக்கு யோஜனை சொன்னதே அவர்தான். அப்புறம் அவரும் அவர்களோடு சேர்ந்து கடைந்தார். மத்தாயிருந்த மந்தர மலை கடைக் கயிற்றிலிருந்து நழுவித் ‘ததிங்கிணதோம்’ போட்டபோது அவர்தான் கூர்மாவதாரம் பண்ணி அதை முதுகுமேலே ஸ்டெடியாகத் தாங்கிக் கொண்டார். கடைசியில் அம்ருதம் வந்தபோதும் அவர்தான் அதை ஸமுத்ரத்திற்குள்ளிருந்து தன்வந்த்ரி ரூபத்தில் ஒரு கலசத்தில் கொண்டு வந்தது. அதற்கப்புறம் அவரே மோஹினி ரூபம் எடுத்துக் கொண்டு அஸுரர்களுக்குக் கிடைக்காமல் தேவர்களுக்கே ஸாமர்த்யமாக பறிமாறினதும்! அவர்தான் பரிமாரினார் என்பதாலேயே பந்தியில் அவர் உட்காரவில்லை என்று ஆயிற்று. ஆகவே மற்ற எல்லா தேவர்களுக்குந்தான் அவர் அம்ருதம் போட்டாரே தவிர அவர் சாப்பிடவில்லை. பாகவதத்தில் அப்படி [அவர் அம்ருதம் சாப்பிட்டதாக] இல்லை. அதனால்தான் அவரை இங்கே சேர்க்கவில்லை.2

நித்ய ஸுமங்கலியாக அம்பாள் இருப்பதால் பரமசிவனை சேர்க்கவில்லை. ருத்ரன்-மஹேச்வரன்-ஸதாசிவன்-காமேச்வரன் என்ற எல்லாரையும் பரமசிவனுடன் ஸம்பந்தப்படுத்தியே நினைப்பதால் அந்த மூர்த்திகளில் எவரையுமே இங்கே சேர்க்கவில்லை. ‘மங்களம்’ என்று அர்த்தம் கொடுக்கும் சிவனையும் தான் ‘ஸுமங்கலி’யாக இருப்பதாலேயே காத்துக் கொடுப்பவளான தாயாரின் நித்ய கல்யாண ஸெளந்தர்யத்தைக் காத்துக் கொடுப்பதில் ஆசார்யாளுக்கு அத்தனை கவனம்!


1இரண்டு ச்லோகங்கள் முந்தி; ச்லோ 26-ல்

2 விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அவருக்கு ‘அமுதமுண்டவர்’ எனப் பொருள்படும் ‘அம்ருதபஹா’, ‘அம்ருதாசஹா’ என்ற இரு நாமங்கள் இருப்பது ஸ்ரீசரணர்களிடம் விஞ்ஞாபிக்கப்பட்டது. அவர்கள் இவ்விரு நாமங்களுக்குமே ஆச்சார்யாள் தமது பாஷ்யத்தில் முதற்கண் “தனது ஆத்மாவாகிய அமுத ரசத்தைப் பருகுபவன்” என்று பொருள் கொடுத்துவிட்டு பிறகே ஸ்தூலமான அமுதத்தை உண்டதாக கூறியிருப்பதை எடுத்துக்காட்டி, முதற்பொருளையே நாம் ஏற்க வேண்டுமென்றும், விஷ்ணு ஸ்தூல அமுதம் உண்டது யதார்த்தமல்லவாயினும் உலக வழக்கில் அப்படி வந்து விட்டதாலேயே அதையும் மதித்து இரண்டாம் பொருளாக கொடுத்திருப்பதாக கொள்ள வேண்டுமென்றும் தெளிவித்தார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அம்பாளின் தாடங்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அம்பாளுடைய திருட்டு
Next