வாதாபி விக்கிரஹம் : வெவ்வேறு கருத்துக்கள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஆராய்ச்சிக்காரர்களில் ஒரு சாரார் இன்னொன்றுகூடச் சொல்கிறார்கள். அதாவது, “பெரிய புராணத்தில் பரஞ்ஜோதி வாதாபியிலிருந்து என்னென்ன கொண்டு வந்தார் என்று சொல்கிற இடத்தில் நவரத்னங்கள், பொற்காசுக் குவியல், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைத்தான் சொல்லியிருக்கிறதே* தவிர விநாயக மூர்த்தத்தைக் கொண்டு வந்ததாக இல்லை; அதனால் அவர் அதைக் கொண்டு வந்ததாகச் சொல்வது ஸரியில்லை” என்கிறார்கள். இதை ஆட்சேபித்து இன்னொரு சாரார், இந்த இடத்தில் சேக்கிழார், வாதாபியில் பரஞ்ஜோதி என்னென்ன சேகரம் பண்ணினார் என்று சொல்லவில்லை. அங்கே சேகரித்ததில் என்னென்னவற்றை ராஜாவுக்கு முன்னே கொண்டு வந்து சேர்த்தார் என்றுதான் சொல்கிறார். ரத்னம், காசு, யானை, குதிரைகளை ‘அரசன் முன் கொணர்ந்தார்’, அதாவது அவனுக்கு ஸமர்ப்பித்தார் என்றே சொல்லியிருக்கிறது. விக்நேச்வரரை அவர் தனக்கென்றே வைத்துக்கொண்டு விட்டதால் அதைப் பற்றிப் பிரஸ்தாவமில்லை. என்ன காரணத்தாலோ சேக்கிழார் அதை வெளிப்படையாகச் சொல்ல மறந்து போயிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

பரஞ்ஜோதி வாதாபி விநாயகரைக் கொண்டு வரவில்லை என்ற அபிப்ராயமுள்ளவர்கள் இன்னொரு ஆர்க்யுமென்டும் பண்ணுகிறார்கள். என்னவென்றால், அநேக ராஜாக்கள் தாங்கள் ஜயித்த சத்ரு பட்டணத்திலிருந்து சிலை, தூண் முதலானதுகளைப் பெயர்த்தெடுத்துக்கொண்டு வந்து தங்கள் சீமையிலுள்ள கோவிலில் அவற்றை நாட்டும் வழக்கமிருந்திருக்கிறது. கங்கை வரையில் படையெடுத்துப் போய் பெங்காலில் பால வம்சத்து ராஜாவை ஜயித்து ‘கங்கை கொண்ட சோழன்’ என்று பெயர் பெற்ற ராஜேந்திரன் தஞ்சாவூர் ப்ருஹதீச்வரத்திற்கு ஸமதையாக கங்கைகொண்டசோழபுரத்தில் கட்டின கோயிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் இப்படிப் பல அன்னிய ராஜ்ய விக்ரஹங்களைப் பார்க்கலாம். ‘சளுக்யன் ஆர்ட்’டைச் சேர்ந்த பெரிய மஹிஷாஸுரமர்த்தினி – நம் சீமையில் இல்லாத விதத்தில் அவளுடைய பாதத்திலே முழு மஹிஷாஸுரனே முதுகைத் திருப்பிக்கொண்டு ஓடுகிற நிலையில் இருக்கிறான்; அம்பாள் சூலத்தால் அவன் முதுகைக் குத்திக்கொண்டு, ஒரு கையால் அவன் நாக்கைப் பிடித்திழுக்கிறாள். இப்படியொரு சிற்பம் கங்கை கொண்ட சோழ புரத்தில் ஒரு இடத்தில் இருக்கிறது. மெயின் கோவிலிலேயே அதன் சுற்றுக் கோயில் ஒன்றில் உள்ள துர்க்கையும் ‘சளுக்யன் ஆர்ட்’டில் செய்த சிற்பமாகத்தான் தெரிகிறது. ‘மெயின்’ கோவிலில் கமல யந்த்ர ரூபத்திலிருக்கும் அபூர்வமான நவக்ரஹத்தையும் அன்னியமென்றே சொல்கிறார்கள். அந்த ஊரில் இன்னொரு இடத்தில் சிவப்பு நிறக் கல்லில் உள்ள பைரவ – பைரவிகளைப் பார்த்தவுடனேயே வெளியூர்ச் சரக்கு என்று தெரியும். கலிங்கம் என்கிற ஒரிஸ்ஸாவிலிருந்து ராஜேந்திர சோழன் அதைக் கொண்டு வந்திருக்கிறான். கங்கைகொண்டசோழபுரத்திற்குப் பக்கத்தில் த்ரிலோகி என்ற இடத்தில் ரிஷபத்தின் மேல் பார்வதி பரமேச்வரர்கள் உட்கார்ந்துள்ள ஒரு கல் சிற்பம் இருக்கிறது. அது நுளம்பர்களை ஜயித்து, எடுத்துக்கொண்டு வந்தது. நுளம்பர் என்கிறவர்கள் ராயலஸீமையிலிருந்து கொண்டு ஆட்சி நடத்தியவர்கள். பெங்காலின் பால வம்சத்து சிற்பமான ஒரு விக்நேச்வரர்கூடத் தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறார். ‘கங்கை கணபதி’ என்றே அவருக்குப் பெயர் இருக்கிறது. கும்பகோணம் நாகேச்வர ஸ்வாமி கோயிலில் அவர் இருக்கிறார். பாலர் பாணி சிற்பங்களில் தமிழ் நாட்டுக்குக் கொண்டு வந்ததில் outstanding என்று சொல்வதாக இருப்பது ஒரு நடராஜா. ‘நடராஜா’ என்றாலே தமிழ்நாட்டு ஸொத்து என்று பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த நடராஜா பெங்காலிலிருந்து வந்திருக்கிறார்! தாம்ரவிக்ரஹம். நந்திக்கு மேல் நின்றுகொண்டு ஸ்வாமி தாண்டவமாடுகிறார். ‘நம்’ நடராஜாவின் ப்ரஸித்த அடையாளமாக இடது காலைத் தூக்கி மடித்த ஆட்டமில்லை. இரண்டு கால்களையும் இடைவெளியில் குறுக்காக ஒரு சதுரத்தை வைத்த மாதிரி – மைஸூர்ப் பாகு ‘ஷேப்’பில் இடைவெளி வருகிற மாதிரி – மடித்து வைத்து ஆடுகிற நடராஜா! அவருடைய நடனத்துக்குப் பேர் சதுர நடனம். தமிழ்நாட்டையே சேர்ந்த ப்ராசீன ப்ரதிமைகளிலும் சதுர நடன நடராஜா உண்டு. கூரம், நல்லூர், கொடுமுடி முதலிய இடங்களைச் சேர்ந்த ப்ரஸித்தமான நடராஜ விக்ரஹங்களில் சதுர நடனமாகத்தான் இருக்கிறது. நான் சொன்ன பெங்கால் நடராஜா வேலைப்பாடுள்ள எடுப்பான திருவாசியோடு சிதம்பரத்துக்குக் கிட்டே மேலக் கடம்பூரில் இருக்கிறார்.

சளுக்கியர்களில் மேலைச் சளுக்கியர், கீழைச் சளுக்கியர் என்று இரண்டு வம்சங்கள். வாதாபியிலிருந்து கொண்டு ஆண்டது மேலைச் சளுக்கியர். கீழைச் சளுக்கியர்கள் கல்யாணி என்ற தலைநகரிலிருந்து ஆட்சி செய்தார்கள். ராஜேந்திரனின் பிள்ளை ராஜாதிராஜன் கீழைச் சளுக்கியரைச் ஜயித்து, அவர்கள் நாட்டு ஆலயத் தூண், த்வார பாலகர் ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கிறான். கும்பகோணம் பக்கத்தில் தாராசுரம் என்று இப்போது திரித்துச் சொல்லும் ராஜராஜேச்வரத்தில் அந்த ஊருக்குப் அப்படிப் பெயர் கொடுத்த இரண்டாம் ராஜராஜன் அவற்றை மறுபடி ஸ்தாபித்திருக்கிறான். கல்யாணியை ஜயித்துக் கொண்டு வந்தது என்றும் அடியிலேயே கல்வெட்டில் பொறித்தும் வைத்திருக்கிறான். திருவையாறு பெரிய கோவிலில்கூட நுளம்பர் பாணித் தூண்கள் உண்டு. அந்த பாணியில் ஒரு ஜன்னல் தஞ்சாவூர் ப்ருஹதீச்வரத்திலும் உள்ளது.

முன்னே குறிப்பிட்ட ஆக்ஷேபக்காரர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், – “இப்படி வெளி ராஜ்யங்களை ஜயித்து ஒருத்தர் அங்கேயிருந்து ஒரு விக்ரஹம், அல்லது வேறு ஒரு கலைப் பொருளைக் கொண்டு வந்து தம் ஊரில் நாட்டினால், ஒன்று தாங்களே அதைப் பற்றித் கல்வெட்டில் பொறித்து பிரகடனப் படுத்தியிருக்கிறார்கள்; அல்லது, அவர் காலத்துப் புலவர்களின் உலா முதலான புகழ்க் கவிதைகளில் அதைப் பற்றி ‘ரெஃபரன்ஸ்’ கிடைக்கிறது. அல்லது பிற்கால இலக்கியத்திலாவது சான்று கிடைக்கிறது. திருச்செங்காட்டாங்குடியிலோ கல்வெட்டுமில்லை, இலக்கியச் சான்றுமில்லை. பரஞ்ஜோதியிலிருந்து சிறுத்தொண்டரானவரின் கதையையே விரிவாகச்சொல்லும் பெரிய புராணத்திலும் வாதாபி விக்நேச்வரரைப் பற்றிப் பிரஸ்தாபமேயில்லை. அதனால் அந்த மூர்த்தி அங்கேயிருந்து வந்ததென்பதற்கு ஆதாரமில்லை” என்கிறார்கள்.

ஆனால் இங்கே ஒன்று கவனிக்க வேண்டும். மற்ற ராஜாக்கள் அல்லது ஸேநாதிபதிகள் சத்ரு ராஜ்யத்திலிருந்து ஒன்றைக் கவர்ந்து வந்து தங்கள் ஊரில் நாட்டிய பிற்பாடும் ராஜரீகப் பெருமையோடேயே இருந்தவர்கள். தாங்கள் அடைந்த வெற்றியில் பூரிப்பு, தங்கள் பெயரும் புகழும் சாச்வதமாக இருக்க வேண்டுமென்ற ஆசை ஆகியவை அவர்களுக்கு இருந்தன. அதனால் தங்கள் சாதிப்பைக் கல்வெட்டில் பொறித்து வைத்துக் கொண்டார்கள். பரஞ்ஜோதியாக இருந்தவரோ இதற்கு நேர் மாறாக, மஹா பெரிய வெற்றி அடைந்தவுடன் யுத்த பூமியையும் ராஜாங்க பதவியையும் விட்டுவிட்டு எளிமையாகச் “சிறுத் தொண்டர்” என்று ஆகி, ‘ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்’ என்று மாறி விட்டார். அப்படிப்பட்டவர் தன்னுடைய சாதனை என்று எதையோ கல்லில் வெட்டி வைப்பாரா என்று தோன்றுகிறது.

‘திருச்செங்காட்டாங்குடியில் வாதாபி கணபதி என்று இருக்கும் மூர்த்தி சளுக்கிய பாணியில் இல்லை; தமிழ்நாட்டுப் பல்லவ பாணியைச் சேர்ந்த விக்நேச்வர மூர்த்தங்களைப் போலத்தானிருக்கிறது’ என்று Iconography [விக்ரஹக் கலை] எக்ஸ்பெர்ட்டுகள் இரண்டொருத்தர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். “கிரீடம், மேல் கைகளில் பாசாங்குசம் முதலியவை ‘சளுக்யன் ஆர்ட்’டாகத் தெரியவில்லை. நம் தக்ஷிண பாணியாகத்தான் இருக்கிறது” என்கிறார்கள். உள்ளங்கால் இரண்டும் ஒன்றையொன்று பார்த்தாற்போலக் காலை மடித்துக் கொண்டிருப்பது புதுமையாக இருக்கிறதே!’ என்று கேட்டேன். அதற்கு, ‘பிள்ளையார்பட்டியிலுள்ள ப்ரஸித்தமான பிள்ளையாரும் அப்படித்தான் இருக்கிறார். இதைவிட அதில் உள்ளங்கால்கள் ஒன்றுக்கொன்று இன்னும் கிட்ட இருக்கின்றன. கிரீடத்தின் அமைப்பு இரண்டிலும் ஒரேபோல இருக்கின்றன’ என்று சொன்னார்கள். பிள்ளையார்பட்டி ‘பல்லவன் ஆர்ட்’ என்பது நிச்சயமான விஷயம். அந்தக் கோவில் பல்லவர்களுடைய ‘குடைவரை’ என்கிற குகைக்கோவில்களில் ஒன்று. ஆனால் அந்தப் பிள்ளையாரிடம் அபூர்வமான அம்சம், அவருக்கு இரண்டே கைதான்; அதில் இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டிருக்கிறார்! இந்த வித்யாஸத்திற்கு, எனக்கு தெரிந்த மட்டும் யாரும் காரணம் சொல்லவில்லை.

‘விக்நேச்வர ஸம்பந்தமுள்ள வாதாபிக்குப் போய்ப் பெரிய ஜயம் பெற்ற பரஞ்ஜோதிக்கு அங்கே இருந்த விக்நேச்வர மூர்த்தியிடம் ரொம்பவும் பக்தி ஏற்பட்டிருக்கலாம். அதனால் அப்புறம் தம் ஊரோடு அவர் ‘ஸெட்டில்’ ஆனபோது, அங்கே நம்மூர் சில்பியைக் கொண்டு நம்முடைய பல்லவ பாணியிலேயே மூர்த்தி அடித்துப் பிரதிஷ்டை பண்ணியிருக்கலாம். வாதாபிதான் அதற்குக் காரணமானதால் மூர்த்திக்கு வாதாபி கணபதி என்று பேர் வந்திருக்கலாம்’ என்று அந்த எக்ஸ்பெர்ட்களில் ஒருத்தர் சொன்னார்.

இன்னொனறுகூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். ‘பரஞ்ஜோதி வாதாபியிலிருந்து விக்நேச்வர மூர்த்தி கொண்டு வந்தது வாஸ்தவமாகவே இருக்கலாம். ஆனால் அதைத் திருவாரூர்தான் மூலாதார க்ஷேத்ரம் என்பதால் அங்கே ப்ரதிஷ்டை செய்திருக்கிறாரென்று தோன்றுகிறது. அங்கேயுள்ள வாதாபி கணபதி சளுக்கிய பாணியாகத் தெரிகிறது’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்படி – அப்படி நான் ஜட்ஜ்மென்ட் எதுவும் தரவில்லை. பலவித அபிப்ராயங்களை மட்டும் சொன்னேன்.

[ஷோடச நாமாக்களில்] கபில நாமத்தில் இருக்கிறோம். தேன்மாதிரிச் சிவப்பாயிருப்பவர் கபிலர். அந்த நிறமுள்ள பசுவைத்தான் கபிலை என்று சிறப்பித்துச் சொல்வது. ஸாங்கிய சாஸ்த்ரத்தைக் கொடுத்தவர் ஒரு கபிலர். அவர் பஸ்பம் பண்ணிய அறுபதினாயிரம் ஸகர புத்ரர்களைப் புண்ய லோகம் சேர்ப்பதற்காகத்தான் பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தது. கமண்டலுவைக் கவிழ்த்துவிட்டு காவேரியைப் பாய வைத்தவர் நம்முடைய [விக்நேச்வர] கபிலர்! தமிழில் சங்ககாலப் புலவர்களில் நிறையப் பாடியுள்ள ஒருவரின் பெயர் கபிலர். அவருக்கும் விக்நேச்வர ஸம்பந்தமுண்டு. பாரி வள்ளலின் ஆஸ்தானப் புலவர் அவர். பாரி இறந்துபோன பிறகு அவன் பெண்களுக்கு ‘கார்டியன்’ மாதிரி இருந்திருக்கிறார். அவர்களுக்கு நல்ல அரச குடும்பத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டு தாம் ப்ராயோபவேசம் – ‘வடக்கிருத்தல்’ என்று தமிழில் சொல்வார்கள்; ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ என்கிறார்களே, அது பண்ணி ஆயுஸை முடித்துக்கொள்ள வேண்டுமென்று அவர் உத்தேசம். ஆனால் அநாதைகளான அந்தப் பெண்களை யாரும் கல்யாணம் செய்துகொள்ள முன்வரவில்லை. பாரி இல்லாமல் கபிலராலும் உயிர் வாழ முடியவில்லை. அதனால் ஸத்துக்களான ப்ராம்மணர்களிடம் அந்தக் கன்யாப் பெண்களை ஒப்படைத்து விட்டு ப்ராயோபவேசம் பண்ணி ஆயுஸை முடித்துக் கொண்டு விட்டார். சங்க நூல்களிலிருந்தும் அவற்றின் உரைகளிலிருந்தும் இந்தக் கதை தெரிகிறது. கபிலர் உயிர் விடுவதற்கு முன்னால் விக்நேச்வரரைத்தான் ஸ்தோத்திரம் செய்தார். “மூத்த நாயனார் திரு இரட்டை மணிமாலை” என்று அதற்குப் பெயர். [சைவத் திருமுறைகள் பன்னிரண்டில்] பதினொன்றாம் திருமுறையில் அதைச் சேர்த்திருக்கிறது. ‘கபில தேவ நாயனார்’ செய்ததென்று அதிலிருக்கிறது. இவர் வேறே, சங்கப் புலவரனான கபிலர் வேறே என்றும் அபிப்ராயமிருக்கிறது. அதெப்படியானாலும் கபிலர் என்று பெயர் படைத்த கணபதியைக் கபிலப் பெயரே உள்ள ஒரு கவி ஸ்தோத்ரித்திருக்கிறார். சங்க காலக் கபிலர் ‘போன’ பிறகு பாரி மகளிருக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டு நல்லபடியாகக் கல்யாணம் செய்து வைத்தது விக்நேச்வரரின் பரம பக்தையான ஒளவைதான். கபிலருடைய அந்திம ஆசை விக்நேச்வரர் அருளாலேயே நிறைவேறியிருக்கிறது.


*“பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்

இன்னஎண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்” (3665)

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பிள்ளைக் கறி : அதன் உட்கிடைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  கஜகர்ணகர்
Next