சக்ரங்களில் சிவ-சக்தி : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

“மநஸ் த்வம்” ச்லோகத்துக்கு அப்புறம் அந்த மநஸிலிருந்து ப்ருத்வி வரை உள்ள தத்வங்களாக அம்பாள் இருப்பதான குண்டலிநீ சக்ரங்களில் அந்த ஸதி-பதி எப்படியெப்படி இருக்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொரு சக்ரத்திலும் அவர்களுக்கு வேறே வேறே பேர், கார்யம், குணம் எல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால் அத்தனைக்கும் பொதுவாக இருப்பது பரம காருண்யம். ஒன்றிலே (ஆஜ்ஞா சக்ரம் – ச்லோ. 36) “தபந-சசி-கோடி-த்யுதி” என்பதாகக் கோடி ஸூர்ய-சந்த்ர ப்ரகாசத்தோடு தாங்கள் இருந்து கொண்டு பக்தனை ஸூர்யன், சந்த்ரன், அக்னி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட மோக்ஷ ஸ்தானத்துக்குத் தூக்கி விடுகிறார்கள். இன்னொன்றிலே (விசுத்தி சக்ரம் ச்லோ. 37) சுத்த ஸ்படிக ஸங்காசமாக இருந்து கொண்டு சந்த்ரிகை மாதிரி ஜிலுஜிலுப்பைப் பொழிகிறார்கள் – அக இருள் என்கிறார்களே, அந்த அஞ்ஞானத்தைப் போக்குகிற சந்திரிகை! சந்திர கிரணங்களைச் சகோரம் என்ற பக்ஷி சாப்பிடுகிறார்போல உபாஸகர்கள் அதைச் சாப்பிடுகிறார்களாம். அப்புறம் இன்னொரு சக்ரத்தில் (அநாஹத சக்ரம் ச்லோ. 38) ஸ்வாமியும் அம்பாளும் ஹம்ஸ தம்பதியாக இருப்பதாகச் சொல்கிறார். ஹம்ஸர், பரமஹம்ஸர் என்றால் ஸந்நியாஸி, ஞானி, அத்வைத ஸித்தர்கள் என்ற அர்த்தத்தை இங்கே பொருத்திக் கொள்ள வேண்டும் – அவர்களிருக்கும் சக்ரந்தான் ப்ரணவம், தானாகவே பிறக்கிற அநாஹத சக்ரம். ப்ரணவந்தானே ஸகல சப்தங்களுக்கும் மூலம்? அதனால் இந்த ஹம்ஸ தம்பதிகளின் ஸம்பாஷணையே அஷ்டாதச வித்யா ஸ்தானங்களாக ஆயிற்று என்கிறார். (வேதங்கள் நாலு, அதன் அங்கங்கள் ஆறு, உபாங்கங்கள் நாலு – இதுவரைக்கும் மொத்தம் பதினாலு; இதோடு நாலு உபவேதங்கள் சேர்ந்தால் அந்தப் பதினெட்டில் மத சாஸ்திரம் முழுக்க அடங்கிவிடும். அவற்றைத்தான் அஷ்டாதச வித்யாஸ்தானம் என்பது1.) ஹம்ஸங்கள் பேசிக் கொள்வதிருக்கட்டும். அவை நீந்தத் தடாகம் வேண்டுமே! ஹிமய உச்சியிலுள்ள மானஸ ஸரஸில் ஸாதாரண ஹம்ஸங்கள் நீந்துமென்றால் இந்த திவ்ய ஹம்ஸ தம்பதி மஹான்களின் மனஸான மானஸத்தில் நீந்துகிறார்களாம். ‘மானஸம்’ என்றால் ‘மனஸுக்குரியது’ என்றே அர்த்தம். ஹம்ஸம் பத்மத்தில் ஊறும் தேனைக் குடிக்கிற மாதிரி இந்த ஹம்ஸ ஜோடி ஞானத் தாமரையில் ஊறும் ப்ரஹ்மானந்தத் தேனைக் குடிக்கிறார்களாம். ஹம்ஸத்திற்கு ஒரு அற்புத சக்தி சொல்வதுண்டு: பாலில் ஜலத்தைக் கலந்து வைத்து விட்டால் அது ஜலத்தைப் பிரித்துப் பாலை மட்டுமே குடிக்குமாம். அப்படி இந்த தம்பதி நாம் பண்ணுகிற தப்பை எல்லாம் ஜலமாகப் பிரித்து ஒதுக்கிவிட்டு நல்லதையே பாலாக நினைத்து ஸ்வீகரித்துக் கொண்டு அநுக்ரஹம் பண்ணுவார்களாம். ‘நமக்குப் பால் வார்த்தாளே!’ என்று, தப்பையெல்லாம் மறந்து, அநுக்ரஹம் செய்வது! [சிரித்து] ஆனால் முழு ஜலமாகவே, அழுக்கு ஜலமாகவே வைத்தால் அவர்களுக்கு அத்தனை தயை இருந்துங்கூட என்ன பண்ண முடியும்?

ஒரே மாதிரியாகவே அந்த ஸதி-பதி பண்ணினாலும் ஒரு சக்ரத்தில் (ஸ்வாதிஷ்டான சக்ரம் ச்லோ. 39) மட்டும் “என்னதான் இருந்தாலும், தான் அம்மா; தன் கருணை ஸ்வாமிக்கு வராது” என்று அம்பாள் காட்டுகிறாள். பஞ்ச பூதங்களில் அக்னிக்கான அந்த சக்ரத்தில் அவர் அக்னி நேத்ரத்தைத் திறந்து ஸம்ஹாரம் பண்ணுகிறார். அப்போது அந்த அம்மாவோ “தயார்த்ரா த்ருஷ்டி:” என்பதாக தயையினால் அப்படியே குளிர்ந்திருக்கும் பார்வையாலே லோகத்திற்கு சைத்யோபசாரம் [குளிர்விக்கும் உபசாரம்] செய்கிறாள்! “அப்பா இந்த அம்மாவுக்கு ஸமமாவாரா?” என்று நாம் நினைக்கிற இங்கேதான் அவளுக்கு ‘ஸமயா’ என்ற பெயரை போட்டு வேடிக்கை பண்ணியிருக்கிறார்! வேடிக்கையிலேயே பரம தத்வம்! ‘அவர்கள் இரண்டு பேரும் வெளியிலே எத்தனை வித்யாஸமாயிருந்தாலும், உள்ளே ஒன்று தான், ஸமந்தான்’ என்று அந்தப் பேரால் காட்டுகிறார்! அப்புறம் ஸ்வாமியே ஒரு சக்ரத்தில் (மணிபூரக சக்ரம் ச்லோ. 40) குளிர் மேகமாக இருக்கிறார். ஸம்ஹரித்த லோகத்தை மறுபடி ஸ்ருஷ்டி பண்ணுவதற்காக ப்ரளயாக்னியை அணைக்கும் மழை மேகமாக அங்கே ஸ்வாமி இருக்கும்போது அந்த மேகத்தில் ஜ்வலிக்கும் மின்னலாக அம்பாள் இருக்கிறாள்.

இப்படி ஐந்து சக்ரங்களில் சிவ-சக்திகளைச் சொல்லி ஆறாவதான ப்ருத்வீ தத்வமான மூலாதார சக்ரத்தோடு “ஆனந்த லஹரி” என்ற பாகத்தை முடித்திருக்கிறது. மூலாதார தத்வமான மஹா கணபதியோடுதான் ஆரம்பிப்பது வழக்கம். இங்கே அதுவே முடிவாக இருக்கிறது! ஆரம்பமும் முடிவும் ஒன்றானால் அதுதான் அத்வைதம்! அந்த ச்லோகத்தை (ச்லோ. 41) சொல்கிறேன்.


Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is இரு ச்லோகங்களின் ஸாரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஜனக - ஜனனி
Next