நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஷோடச நாமாக்களில் விக்நேச்வரர் சிவனுடைய புத்ரரென்றோ அம்பாளுடைய புத்ரரென்றோ காட்டப் பெயர் எதுவுமில்லை. அதாவது, இன்னாருக்குப் பிள்ளை என்று பேரில்லை. இன்னாருக்குப் பதி என்றும் [பேர்] இல்லை. அவருக்கு ப்ரஹ்மசாரியாகப் பல உருவ பேதங்கள் இருக்கிற மாதிரியே பத்னி ஸமேதமாகவும் இருக்கின்றன. வல்லபை என்பவளோடு வல்லப கணபதியாக இருக்கிறார். ஸித்தி, புத்தி என்பவர்களுக்கு அவர் பதி என்றும் கேள்விபட்டிருக்கலாம். ஸித்தி-புத்திகளிடம் அவருக்குப் பிறந்த புத்ரர்களும் உண்டு. அவர்களுக்குத் தகப்பனார் என்று தெரிவிப்பதாகவும் பேரைக் காணோம். ஆனால் பேர் வரிசையைப் பூர்த்தி பண்ணுமிடத்தில், மங்களமான ஸ்தானத்தில் ‘ஸ்கந்தனுக்குத் தமையன்’ என்று மட்டும் உறவு முறையைச் சொல்லும் ஒரு பெயர் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஏன் அப்படி?
பொதுவாக, சின்ன வயஸுக்காரரொருத்தரை அவரைவிட வயசில் பெரியவரைச் சொல்லி, அவருக்கு இவர் இன்ன உறவு – பிள்ளை, மருமான், மாப்பிள்ளை, தம்பி என்று ஏதோ ஒன்று சொல்கிறதுதான் முறை. இங்கேயோ வித்யாஸமாகத் தம்பி பேரைச் சொல்லி, அவருக்கு அண்ணா என்று இருக்கிறது. ஏன் இப்படி?
ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் சரித்திரத்தோடு விக்நேச்வரருக்கு அவ்வளவு நெருங்கிய ஸம்பந்தம் இருப்பதால்தான்! தம்பியுடைய ஜனனம், விவாஹம், ஸந்நியாஸம் என்ற மூன்று ரொம்ப முக்யமான வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் அண்ணன்காரருக்கு முக்யமான ‘பார்ட்’ இருக்கிறது. அதனால்தான்!