விக்நேச்வரர் ஸுமுகர், சிரித்த முகமுடைய ஆனந்த ஸ்வரூபர். ஆனந்தந்தான் நிறைவு. ஆனந்த பூர்ணம் என்பது வழக்கம். ஆனந்த பூர்வம் போதோஹம் – ஸததம் ஆனந்த பூர்ண போதோஹம், ஸச்சிதானந்த பூர்ண போதோஹம் என்று இரண்டு விதமாக [ஸதாசிவ] ப்ரஹ்மேந்த்ராள் பாடியிருக்கிறார். ஆனந்தம் வந்தால் சிரிப்பும், அதோடு பாட்டும் டான்ஸும் வந்துவிடும். ஒருத்தன் துக்கமாயிருக்கும்போது கொஞ்சம் டான்ஸ் பண்ணு என்றால் பண்ணுவானா?ஆனந்த ஸ்வரூபியானதால்தான் பிள்ளையார் ந்ருத்த கணபதியாக, கூத்தாடும் பிள்ளையாராக இருக்கிறார். அநேக சிவாலயங்களில் மூலஸ்தான வெளிச்சுவரில் கோஷ்ட தேவதைகளாக உள்ளவர்களில் முதல்வர் இந்த நர்தன விநாயகர்தான். ஆனந்தமாகச் சிரித்துக்கொண்டு அத்தநாம் பெரிய தொப்பையைத் தூக்கிக் கொண்டு ஆடுவார்.
அவருடைய ஆனந்தத்திற்கு முகம் மாதிரியே தொப்பையும் இன்டெக்ஸ் என்று சொல்லலாம். வயிறு வெடிச்சிடும் போலச் சிரிக்கிறது என்றுதானே வசனம்?அப்போது வயிறு நன்றாக புஸு புஸு என்று ஊதித் தொப்பையாகத்தானே ஆகனும்.
தொப்பைக்கு அப்புறம் வருவோம். பதினாறு நாமாவில் லம்போதரர் என்கிற நாமா வரும்போது அதைப் பார்ப்போம். இப்போது முகத்தில், ஸுமுகத்தில் அல்லவா இருக்கிறோம்?
முகம் எனறாலே ஆரம்பம் என்று அர்த்தம். புஸ்தகங்களில் கூட முதலில் முகவுரை என்று போடுகிறார்களல்லவா?ஆரம்ப நாமா ஸுமுகர் என்று இருப்பது ரொம்பப் பொருத்தமாயிறுக்கிறது.