அன்னை-தந்தையர் பெருமை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இப்படிச் சொன்னதால் அம்மா, அப்பா உபயோகமில்லை என்று தள்ளிவிடக் கூடாது. முதலில் அவர்களைச் சொல்லி “தேவோ பவ” என்ற அப்புறந்தான் வேதம் “ஆசார்ய தேவோ பவ” சொல்கிறது.*1 இன்னொன்று கூட — அம்மா அப்பாவும் முதலில் ஒவ்வொரு விதத்தில் குருமார்களாக இருந்துதான் உபநயனத்தின் போது குரு என்றே சொல்லப்படுபவரிடம் பிள்ளையை ஒப்படைக்கிறார்கள். அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.

‘ஆசார்யவான்’ என்று ஒரு வார்த்தை உண்டு. ‘நல்லாசிரியனை உடைய ஸச்சிஷ்யன்’ என்று அதற்கு அர்த்தம். “ஆசார்யவான் புருஷோ வேத” என்று சாந்தோக்யத்திலிருக்கிறது.*2 ‘நல்லாசானை உடைத்தாயுள்ள மனிதனே ஞானம் அடைகிறான்’ என்று அர்த்தம். ‘ஆசார்யவான்’ என்ற இந்த வார்த்தைக்கு முன்னாடி ‘மாத்ருமான்’, ‘பித்ருமான்’ என்ற இரண்டு வார்த்தையையும் போட்டு ப்ருஹதாரண்யத்தில் மந்த்ரங்கள் இருக்கின்றன.*3 யாஜ்ஞ்யவல்க்ய மஹரிஷியிடம் ஜனகர் தமக்குப் பல குருமார்கள் செய்த உபதேசங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு போகிறார். அப்போது அந்த ஒவ்வொரு குருவும் உபதேசித்தது ஸரிதான் என்று யாஜ்ஞ்யவல்க்யர் ‘அப்ரூவ்’ பண்ணும்போது, அந்த ஒவ்வொருத்தரைப் பற்றியும், ‘மாத்ருமானாகவும், பித்ருமானாகவும் ஆசார்யவானாகவும் இருக்கப்பட்ட ஒருவர் எப்படி உபதேசிக்க வேண்டுமோ அப்படி இவர் உபதேசித்திருக்கிறார்’ என்று பாராட்டிச் சொல்வதாக அந்த உபநிஷத்தில் இருக்கிறது. இதற்கு ஆசார்யாள், ‘ஒரு தாயாரால் ஸரியானபடி புத்திமதி கற்பிக்கப்படுபவனே மாத்ருமான்’ என்றும் அப்படிக் குழந்தையாயிருக்கும் போது தாயார் செய்த பிறகு கொஞ்சம் விவரம் தெரிகிற ஸமயத்தில் தகப்பனாரால் அதேபோல் நல்வழியில் செலுத்தப்படுபவன் ‘பித்ருமான்’ என்றும் அதற்குப் பிறகு உபநயனத்திலிருந்து குருகுல வாஸம் முடியும்வரை ஆசார்யரால் நல்வழி கற்பிக்கப்படுபவனே ‘ஆசார்யவான்’ என்றும் பாஷ்யம் செய்திருக்கிறார். இப்படி மூன்று காரணபூதர்களால் பரிசுத்தி செய்யப்பட்ட ‘சுத்தித்ரய ஹேது ஸம்யுக்தன்’தான் பிற்காலத்தில் தானும் ‘ஸாக்ஷாத் ஆசார்யன்’ என்னும்படி அவ்வளவு யோக்யதையுடன் கூடிய குருவாகிறான்; அவன்தான் சாஸ்த்ர ப்ரமாணத்திலிருந்து வழுவாமல் சொல்லிக் கொடுப்பான் என்று ஏற்றம் கொடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆக, எட்டு வயஸில் குருகுலவாஸத்தில் சேர்க்கிறதற்கு முன்னாலேயே ரொம்பப் பிஞ்சாக இருக்கிற குழந்தையை நயமாகவும் பயமாகவும் நல்ல வழியில் நடத்தும் ஆசார்ய பொறுப்பை தாய் தந்தையர்களும் வஹிக்கிறார்கள் இதுவே ப்ருஹதாரண்யகத்தில் லேசாகக் காட்டப்பட்டு ஆசார்யாள் ப்ரகாசம் பண்ணி எடுத்துச் சொல்லியுள்ள விஷயம்.

கடோபநிஷத்தில் இதைவிடவும் லேசாக, ‘ஹின்ட்’ பண்ணுவதாக மட்டும், இந்த விஷயம் வருகிறது. அக்னி வித்யையை யமதர்மராஜா நசிகேதஸுக்கு உபதேசம் செய்கிறார். செய்து விட்டு, ‘மூன்று தடவை இந்த க்ரியையைப் பண்ணி, மூன்றுடன் ஸம்பந்தப்பட்டு முத்தொழில் புரிபவன் ஜனன மரணங்களைக் கடக்கிறான்’ என்று சொல்கிறார்.*4

ஸாதாரணமாக ப்ராம்மணனை ஆறு தொழில்கள் சிறப்பாகச் செய்யும் ‘ஷட்கர்ம நிரதன்’ என்றே சொல்வது. திருவள்ளுவர் போன்றவர்களும் ‘அறு தொழிலோர்’ என்று சொல்லியிருக்கிறார்கள். தான் வேதம் ஓதுவது – பிறருக்கு ஓதுவிப்பது, தான் யாகம் பண்ணுவது – பிறருக்கும் பண்ணுவிப்பது, ஸத்பாத்திரத்திடமிருந்து தான் தானம் வாங்குவது – ஸத்பாத்திரத்திற்குத் தான் தானம் கொடுப்பது என்று ஆறு தொழில்கள். இதில் தான்-பிறர் என்று வரும் இரட்டைக் காரியங்கள் ஒவ்வொன்றையும் ஒன்றாக வைத்துக் கொள்ளும்போது ஆறு தொழிலே முத்தொழிலாகி விடுகிறது. அதைத்தான் இங்கு சொல்லியிருக்கிறது. ஆனால் நமக்கு விஷயம் இந்த முத்தொழில் இல்லை.

“மூன்றுடன் ஸம்பந்தப்பட்டு”, “த்ரிபிரேத்ய” என்று [மூலத்தில்] இருப்பதுதான் நமக்கு விஷயம். யமன் உபதேசித்த அக்னி காரியத்தை எந்த மூன்றுடன் ஸம்பந்தப்பட்டவன் மூன்று தடவை பண்ணி, ஷட்கர்ம நிரதனாயிருந்து ஜனன மரணங்களை கடக்கிறான்? வெறுமே மூன்று என்று சொல்லி உபநிஷத் விட்டிருக்கிறது. இதற்கு பாஷ்யம் பண்ணும்போது ஆசார்யாள், ‘மாதா, பிதா, ஆசார்யன் ஆகிய மூன்று பேருடன் ஸம்பந்தப்பட்டு – அதாவது அந்த மூன்று பேராலும் நல்ல வழி கற்பிக்கப்பட்டு’ என்பதுதான் “த்ரிபிரேத்ய” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். சான்றாக “மாத்ருமான், பித்ருமான், ஆசார்யவான்” என்று ப்ருஹதாரண்யத்தில் வருவதையும் காட்டியிருக்கிறார். வேறே இரண்டு, ‘மூன்று’ களையும் சொல்லி, யமன் சொல்வது அதுவாகவுமிருக்கலாம் என்கிறார். ஆனால் முதலில் அவர் சொல்வது தாய், தந்தை, குரு மூன்று பேராலும் நல்வழி கற்பிக்கப்படுவதைத்தான்.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் அம்மா சரணமில்லை, அப்பா சரணமில்லை, குருதான் சரணம் என்று ஆசார்யாள் சொல்கிறாரென்பதால் நாம் குருவுக்கு சரணாகதி பண்ணாவிட்டாலும், அம்மா அப்பாவை கழித்துக் கட்டுவதையாவது பண்ணி விடலாம் என்று யாரும் புறப்படாமலிருப்பதற்குத்தான்! ஏற்கெனவே லோகத்தில் மாத்ரு பக்தி, பித்ரு பக்திகள் ரொம்பவும் க்ஷீணமாகி விட்டிருக்கிறது. Generation gap, அது இது என்று ஸமாதானமும் சொல்லியாகிறது! இந்த நிலைமையில், ‘ஆசார்யாள் சொன்னதில் நாமும் ஒன்றையாவது செய்ததாக இருக்கட்டும்’ என்று யாராவது அம்மா அப்பாவை கழித்துக் கட்ட அவர் வாக்கை ஆதாரமாக எடுத்துக் கொண்டுவிடப் போகிறார்களே என்பதற்காகச் சொன்னேன்.

ஆத்ம லோகத்தில் கை தூக்கிவிட அம்மா அப்பாவிடம் முட்டிக் கொண்டு ப்ரயோஜனமில்லை என்ற அர்த்தத்தில் அவர் சொன்னதை, இந்த லோக விஷயமாகப் பண்ணிக் கொண்டால் அது அடியோடு தப்பாகி விடும். தாய் தந்தையிடம் எந்நாளும் பக்தி, விச்வாஸம், நன்றிகளோடுதான் இருக்க வேண்டும். ஆனாலும் ஆத்மாவை ரக்ஷித்து அதைப் பரம லக்ஷ்யத்தில் சேர்ப்பிப்பதற்கு அவர்களிடம் போய் நிற்காமல், குரு சரணத்தில் தான் போய் விழ வேண்டும்.

சரீரத்தை வளர்ப்பதையே அம்மா-அப்பா முக்யமாகப் பண்ணி, கொஞ்சம் நல்ல வழியும் சொல்லிக் கொடுப்பார்கள். நல்ல வழியேஏஏஏ சொல்லிக் கொடுப்பவர், ஆத்மாவையேஏஏஏ கவனித்து அதற்கான நல்ல வழியே சொல்லிக் கொடுப்பவர் ஆசார்யன்தான்!

அப்படி நல்ல வழி உபதேசித்து, கூடவே அவரும் guide -ஆக அந்த வழியில் வருகிற பரமோபகாரத்தை வைத்து அவருக்குக் கொடுத்துள்ள பேர்தான் தேசிகன்.

அப்பா-அம்மா நமக்காக எத்தனையோ செய்தாலும் நம் ஆத்ம விஷயத்தில் அவர்களுடைய ஆசாபாசத்தினால் நம்மையும் திசை தவறுமாறுகூடப் பண்ணுவதாகவே நிறையப் பார்க்கிறோம். ‘கல்யாணம் பண்ணிக் கொள்வதில்லை. ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று தங்கள் ஸந்ததி இருந்தால் அவர்களுக்கு ஏற்பதேயில்லை. பிள்ளை நிறைய ஸம்பாதிக்கணும் அவனுக்குத் தங்கள் நிறைய ஸொத்து வைத்துவிட்டுப் போக வேண்டும் என்றெல்லாம் ஆத்மாபிவ்ருத்திக்கு ஹானியான ஸமாசாரங்களையே அவனுக்குச் சேர்த்துக் கொடுக்கிறார்கள். ஒரு விரதம், உபவாஸம் பிள்ளை இருந்தால்கூட, “இப்பவே பிடிச்சு ஏதுக்கு இதெல்லாம்?” என்று கலைக்கிற மாதா பிதாக்கள் பலபேர். ஆகையால் அவர்களுடைய வாத்ஸல்யம், தியாகம் முதலியவற்றுக்காக நாம் அவர்களிடம் எந்நாளும் நன்றிக் கடன் பட்டு நமஸ்காரம் பண்ணத்தான் வேண்டுமென்றாலும், அவர்கள் நம்மிடமுள்ள ஆசையாலேயே ஆத்ம மார்க்கத்தில் நம்மை திசை தவறச் செய்வதால் இங்கே தேசிகனைத்தான் ஒரே பிடி என்று பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஆசை, திசை என்று சொன்னதில் வேடிக்கையாக ஒன்று நினைவு வருகிறது. ‘திச்’சுக்கு இரண்டு இரண்டு அர்த்தமுண்டு என்றேனல்லவா? அப்படியே ‘ஆசா’ என்பதற்கும் இரண்டு அர்த்தமுண்டு. ஒரு அர்த்தம் எல்லோருக்கும் தெரிந்தது – ‘ஆசா பாசம்’ என்று சேர்த்துச் சொல்லும் அஞ்ஞானமான ப்ரியம். இன்னொரு அர்த்தம் ‘திசை’ என்பதே. ‘ஆசா’ என்றால் ‘திசை’ என்றும் அர்த்தம். இதை வைத்து ராஜ கவியான போஜன், ‘ராமாயண சம்பூ’வில் ஒரு சிலேடை பண்ணியிருக்கிறான். அகஸ்திய மஹர்ஷி ஹிமய மலையிலிருந்து தெற்கு திசைக்கு வந்து அங்கேயே நித்யவாஸம் செய்வது தெரிந்திருக்கலாம். இதைப் பற்றி சொல்லும்போது போஜன், “அபாஸ்த ஸமஸ்தாசம் அப்யுபகத தக்ஷிணாசம்” என்று சிலேடை செய்கிறான் – ‘எல்லா ஆசைகளையும் துறந்தவராயினும் அகஸ்தியர் தக்ஷிண ஆசையை அடைந்தார்” என்கிறான்! ‘தக்ஷிண ஆசை’ என்னும் இடத்தில் ‘ஆசை’ என்றால் ‘திசை’ என்று அர்த்தம்.

ஒரு ப்ராம்மணன் ஏதோ வைதிக கார்யம் பண்ணினானாம். பண்ணி வைத்த வைத்தியர் சும்மா சும்மா தக்ஷிணை தக்ஷிணை என்று பிடுங்கியெடுத்தாராம். ப்ராம்மணனுக்குக் கோபம் வந்ததாம். “தாக்ஷிண்யம் காட்டணும்;தாக்ஷிண்யம் காட்டணும்” என்று வாத்யார் சிலேடை பண்ணினாராம். “தாக்ஷிண்யம்” என்பதை “தக்ஷிணை கொடுக்கும் குணம்” என்றும் அர்த்தம் செய்யலாம். அப்படித்தான் அவர் சிலேடை செய்தது. அதை ரஸித்து ப்ராம்மணன் மறுபடி தக்ஷிணை கொடுத்தானாம். ஆனால் அதற்கப்புறமும் வாத்யார் பிடிக்குப் பிடி கேட்டுக் கொண்டே போனபோது பொறுக்கமுடியாமல் “உம்ம தக்ஷிணை ஆசைக்கு முடிவேயில்லையா?” என்றானாம். “எப்படி முடிவு இருக்கும்? ஆனானப்பட்ட அகஸ்த்யரே ‘தக்ஷிணாசா’வில் முடிவில்லாமல் இருக்கிறாரே! (சிரஞ்சீவியாயிருக்கிறாரே!’)” என்று வாத்யார் மறுபடி சிலேடை பண்ணினார் என்று கதை –

ஸ்வய ஆசா பாசமுள்ளவர்களால் ஆத்ம மார்க்கத்தில் ‘ஆசை – திசை – காட்ட முடியாது; திசை காட்டவே ஏற்பட்ட தேசிகன்தான் அதைச் செய்ய முடியும்.

அம்மா, அப்பா காட்டும் ப்ரியத்திற்கு, அவர்கள் செய்யும் த்யாகத்திற்கு குறைச்சலில்லாமல் சிஷ்யனிடம் அவரும் ஸ்வயக் கலப்பில்லாத ப்ரியம் காட்டுகிறார். த்யாகம் பண்ணுகிறார் –


*1 தைத்திரீயோபநிஷத்-சீக்ஷாவல்லி I.11.2

*2 vi. 14.2

*3 iv. 1.2 முதலியன.

*4 முதல் வல்லி, மந்திரம் 17

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஆசாரிய தர்மம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஞானியின் ' வெள்ளரிப்பழ முக்தி '
Next