தாய்

தாய்

இந்த உலகில் எந்தவொரு உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் ஆண், பெண் என இரண்டு வகை இருக்கும். ஆண், பெண் இருவருக்கும் ஒவ்வொரு காரியத்திலும் சமமான பொறுப்பு இருந்தாலும் தாயைப் பற்றித்தான் (பெண் இனத்தைத்தான்) அதிகமாக, விசேஷமாக, கௌரவமாக எல்லா அறநூல்களிலும் சொல்லப்படுகிறது. (நம்முடைய அறநூலான வேதத்தை எடுத்துக் கொண்டால் "வேத மாதா" என்றுதான் அதை நாம் கூறுகிறோம். அந்த வேதத்திலும் பல உபதேசங்கள் அருளியிருந்தாலும், முதன் முதலில் 'மாத்ருதேவோ பவ' என்று மாதாவை முதன்மையாகச் சொல்லிவிட்டு, அடுத்ததாகத்தான் 'பித்ரு தேவோ பவ' என்று தகப்பனாரைச் சொல்லுகிறது, தேவாரப்பாடல்களிலும் இறைவனைப்பற்றிப் பாடும் போது. அம்மையே. அப்பா. ஒப்பிலா மணியே என்று முதன்முதலில் அம்மாவைத்தான் குறிப்பிடுகிறது, அன்னையும். பிதாவும் முன்னறி தெய்வம் என்று அன்னையைத் தான் முதலில் குறிப்பிடுகிறது, 'தாயிற் சிறந்த தயாபரத் தத்துவனே' என்று சிவ புராணம் கூறுகிறது, தாயுமானவராக இறைவன் திருச்சியில் விளங்குகிறார்.

ஆணையிடும் போது கூடச் சிலர் தாயின் மேல் ஆணை என்றுதான் கூறுவார்கள், கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள் என்பது பழமொழி, ராமர் காட்டுக்குப் போகும் போது தாயான கௌஸல்யை முதலியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றதாக வரலாறு, மகாபாரத்தைத் தொடங்கும் போது துரியோதனன் தன் தாயான காந்தாரியிடம் ஆசி பெற்று சென்றதாகவும் வரலாறு. பொதுவாக வீரர்கள் யுத்தத்திற்குச் செல்லும் போது ஆண்களுக்கு பெண்கள்தான் வீரத் திலகமிட்டு அனுப்புவார்கள். பெண் குழந்தையைத் தான் நாம் கன்னிகா பூஜை என்று பூஜை செய்கிறோம், வயதான பிறகு சுவாசினி பூஜை என்ற இல்லறத் தாயக்குத்தான் பூஜை செய்கிறோம், இந்து மதத்தில் புருஷர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் பூர்த்தி அடைய வேண்டும் என்றால் கடைசியாக இல்லத்தரசிகள் ஜலத்தைப் புருஷன் கையில் விட்டால்தான் பூர்த்தியடைகிறது.

இந்தக் காலத்தில்தான் ஆண். பெண் இருவரும் சம்பாதிக்கிறார்கள் கொஞ்ச காலம் முன்பு வரை ஆண்கள் சம்பாதிப்பதற்கு மாத்திரம் உரிமையுள்ளவராகக், சம்பாதிக்கும் பணத்தை இல்லத்தரசிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகத்தான் வாழ்க்கைக்குத் தேவையான அவ்வளவும் வரவு. செலவு செய்யப்பட்டன. வீட்டிலுள்ள புருஷன் எவ்வளவோ தவறான வழிகளில் சென்றாலும், இல்லத்தரசிகள் பொறுமையுடன் இருந்து தங்களுக்கு என்று சொந்த எண்ணங்கள், ஆசைகள் இருந்தாலும் அவைகளைக் காட்டிலும் தன்னுடைய கணவனுடைய வாழ்க்கையே பெரிதென மதித்துக் கணவனை நல்வழிப்படுத்துவதில், கணவனைத் திருப்தி செய்விப்பதில். பல பெண்மணிகள் எடுத்துக்காட்டாக இருந்தார்கள்.

சைவ சமயத்தைச் சேர்ந்த அப்பர் பெருமான். ஒரு சமயத்தில் சமண சமயத்தைச் சார்ந்த பொழுது, திரும்பவும் தங்களுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்கு அப்பர் பெருமானைக் கொண்டு வருவதற்காக இறைவனிடம் பலவித

பிரார்த்தனைகளெல்லாம் செய்து- தவமிருந்து சோதனைகள் எல்லாம் கடந்து, தம்முடைய சொந்தச் சகோதரரான அப்பர் பெருமானைச் சைவ சமயத்திற்குத் திருப்பிய பெருமை, அவரது சகோதரியான திலகவதியாரையே சாரும்.

இதே போல் மதுரையில் கூன்பாண்டியன் சொந்த சமயமான சைவ சமயத்தை விட்டுச் சமண சமயத்திற்குச் சென்ற போது ரகசியமாகவும். பக்தியோடும் உறுதியோடும் தன் கணவனுக்காக இறைவனைப் பிரார்த்தனை செய்து, தவமிருந்து தன்னுடைய சொந்த சமயமான சைவ சமயத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்தது, கூன்பாண்டியனின் இல்லத்தரசியான மங்கயைர்க்கரசியாரே ஆகும்.

ஒரு சமயம் காரைக்கால் அம்மையாரிடம் அவரது கணவன் இரண்டு உயர்ந்த மாங்கனிகளைக் கொடுத்தனுப்ப அவைகளிலே ஒன்றை அம்மையார் வீட்டீற்கு வந்த விருந்தாளிக்குக் கொடுக்.க மற்றொரு கனியை. சாப்பிடும் சமயத்தில் தன் கணவனுக்குக் கொடுத்தாள். அந்த மாங்கனியின் சுவையை அனுபவித்த அவள் கணவன் மற்றோரு மாங்கனியையும் கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் மிகவும் பயந்து போய்க் கணவன் கேட்பதைக் கொடுக்க முடியாமல் இருக்கிறதே என வருந்தி, எப்படியும் கணவனின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என இறைவனிடம் கெஞ்சிப் பிரார்த்தித்தாள். இறைவனும் காரைக்கால் அம்மையாருக்கு கணவனிடம் உள்ள பக்தியும், மரியாதையும், இறைவனிடமுள்ள நம்பிக்கையும் பார்த்துப் பூரித்து ஓர் மாங்கனியை அளித்தார். அந்த மாங்கைனியைப் பெற்ற காரைக்கால் அம்மையார். அதைக்கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வணங்கி. கணவனது இஷ்டத்தை மாங்கனி கொடுப்பது மூலம் நிறைவேற்றினாள்.

அப்பொழுது கணவன் "முன்பு சாப்பிட்ட பழத்தைக் காட்டிலும் இது வேறாகவும் அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறதே. இது எப்படி வந்தது?" என்று கேட்டான். அப்பொழுது காரைக்கால் அம்மையார் "தாங்கள் அனுப்பிய பழத்தில் ஒன்றை விருந்தாளிக்குக் கொடுத்தேன். தாங்கள் மற்றுமொரு பழம் கேட்டதும் இறைவனிடம் பக்தி செய்து மனமுருகி இறைவன் மூலம் பெற்றேன். ஆகவே இது வேறு கனியாகவும், அதிக ருசியுள்ளதாகவும் இருக்கிறது" என உண்மை நிலையை விளக்கினார். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் கூடக் கணவன் மனைவியரிடையே புரிந்து கொள்ளும் தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வரவேண்டும். மனைவி கணவனுக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் பக்தியையும், மன உறுதியையும் கொள்ள வேண்டும், உயர்ந்த தாய் ஸ்தானத்தில் பெண்மணிகள் அன்றும், இன்றும், என்றும் போற்றும் வகையிலே விளங்கி வருகிறார்கள்.


  Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  திருமணம்
Next