கேரள நாட்டிலே சிவகுரு, ஆர்யாம்பா என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்து, எட்டு வயதிலே சந்நியாசம் ஏற்று, மத்தியப்பிரதேசத்திலே... ஒங்காரேஸ்வர ஷேத்திரத்திலே சந்நியாசம் பெற்று, காசி சென்று, அங்கே பல நல்ல படிப்புகளும் வித்தைகளும் கற்று, வாதங்களெல்லாம் செய்து எல்லாவற்றிலும் வென்று, பத்ரி நாராயணம் சென்று அந்த பத்திரி நாராயண ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்வித்து, நாடு முழுவதும் பலமுறை யாத்திரை செய்து, கடைசியாக நகரேஷ§ காஞ்சி என்று போற்றப்படும், ஏழு முக்கிய ஷேத்திரங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வந்து, அங்கே சர்வக்ஞபீடம் ஏறி காமகோடி பீடத்தின் வரிசையைத் தொடங்கி வைத்தார், ஆதிசங்கரர். அன்றைக்கு நாடு முழுவதும் உள்ள அநேக, தவறான வழிகளையெல்லாம் காண்பிக்கும் மதங்களையெல்லாம் கண்டித்து, சரி செய்து ஷண்மத ஸ்தாபனம் செய்தார். ஆறு வகை வழிபாட்டு மூர்த்தியை ஏற்பாடு செய்தார். பிரம்ம தத்துவம் ஒன்றுதான் நிலையானது, மற்றதெல்லாம் உலகிலே மாறக்கூடியது என்ற அத்வைத தத்துவத்தை உபதேசம் செய்தார்.
வேற்றுமையிலே ஒற்றுமை என்ற சித்தாந்தத்தை ஏற்பாடு செய்தார். ஆன்மீகத்தின் அடிப்படையிலே நாடு முழுவதும் ஒன்று என்பதை நினைவுபடுத்தினார். இல்லாவிட்டால் இத்தனை கோயில்களும் குளங்களும் நம்முடைய சமயத்துக்கு என்றுமே இருந்திருக்க முடியாது! அந்த வகையிலே ஆன்மீகத்தின் மூலம் நிலையான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர். பல நூல்களெல்லாம் எழுதியுள்ளார். நமக்கெல்லாம் பாமர மக்களும் கடைப்பிடிக்கும் வகையிலே உபதேசங்களெல்லாம் பண்ணியிருக்கிறார்.
இன்றைக்கு ஏழைகளுக்கு உதவிகளெல்லாம் செய்யவேண்டும் என்கிறோம். அதை அன்றைக்கே அவரும் சொல்லியுள்ளார். வழிபாட்டு முறைகளைச் செய்ய வேண்டிய முறைகளையெல்லாம் சொல்லியுள்ளார்.
இப்படி மனிதனுடைய வாழ்க்கை முறையையெல்லாம் சொல்லி எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று நினைவு படுத்தியதோடும்கூட, உடல் தூய்மையாய் இருக்க வேண்டும் உடை தூய்மையாய் இருக்க வேண்டும் என்று நாமெல்லாம் முயற்சி செய்கின்றோம். உள்ளத் தூய்மைக்கும் வழிகாட்டியாக வழிபாட்டு முறைகளை ,உருவ வழிபாட்டு முறைகளையெல்லாம் ஏற்படுத்தியிருக்கிறார். உள்ளம் தூய்மையாய் இருந்தால்தான் ஆன்மாவின் தத்துவத்தை நாமெல்லாம் அறிந்துகொள்ள முடியும் என்பதை உணர்த்தியவர் ஆதிசங்கரர்.
கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால் எப்படி நம்முடைய உருவத்தை அதில் நாம் சரியாய்ப் பார்க்க முடியாதோ, அதுபோல் நம்முடைய உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டால்தான் நம்முடைய ஆன்மாவை அதில் நாம் பார்க்க முடியும் என்பதை நினைவு படுத்தினார்.
அப்படிப்பட்ட ஆதிசங்கர மகானுக்கு ஆண்டு தோறும் வைசாக சித்த பஞ்சமியன்று நாடு முழுவதும் ஜெயந்தி உற்சவம் கொண்டாடப்படுகிறது. நம்முடைய பாரத நாட்டில் திருவடியாகப் போற்றப்படும் கன்யாகுமரியிலே, அன்னையின் திருவடியிலே இந்த ஜெயந்தி நடப்பது மிகவும் போற்றத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் வைசாக சுத்த பஞ்சமியன்று, வைகாசி மாசத்திலே வரும் பஞ்சமியன்று, அவரது அவதார தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கன்யாகுமரி புனிதமான ஷேத்திரம் மட்டுமல்ல, நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக குறிப்பிடும் ஷேத்திரத்திலே, ஒருமைப்பாட்டுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஆதிசங்கரர் ஜெயந்தி கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தமானது என்ற எண்ணத்தோடு நாங்கள் இந்த இடத்தை விழாவுக்காக ஏற்பாடு செய்தோம். இன்றைக்கு உள்ள நிலையிலே நாட்டு மக்களுக்கிடையே உள்ள வேற்றுமைகள் எல்லாம் அகன்று, மனதிலே புகுந்த தீய சக்திகள் எல்லாம் அகன்று, நல்ல எண்ணங்கள் ஒங்க வேண்டுமென்றால், ஆதிசங்கரரின் போதனைகள் எல்லாம் ஒவ்வொருவர் மனதிலும் பதிய வேண்டும். அப்பொழுத தான் நல்ல மனிதனாய் வாழ முடியம்.
இதற்காக நாங்கள் குழந்தைகள் பெரியவர்கள் எல்லோருக்கும் போட்டிகள் எல்லாம் வைத்திருந்தோம். கதைப்போட்டி, கட்டுரைப்போட்டி ஒவியப்போட்டி, கவிதைப்போட்டிகள் எல்லாம் வைத்தோம்.
ஜெய ஜெய சங்கர எழுதவேண்டும் என்று சொல்லியிருந்தோம். பலரும் எழுதியனுப்பியிருக்கிறார்கள். பரிசெல்லாம் பெற்றார்கள். இப்படிப் பல வகைகளிலே மக்களுடைய மனத்திலே ஆதிசங்கரருடைய போதனைகளை எவ்வளவு தூரம் ஏற்றிக்கொள்ள முடியுமோ அவ்வளவு ஏற்றினால்தான் மக்களுடைய மனது நல்வழிப்பட்டு நாமே நல்வழிப்படுவதற்கு வாய்ப்பாக அமையும்.
அப்படிப்பட்ட ஒரு நன்னாள் இன்றைக்கு இன்றியமையாதது. பலவிதக் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிற இந்த நிலையிலே, ஆதிசங்கரரின் போதனை ஒன்றுதான் நம்மையெல்லாம் ஒருமைப்படுத்தி, தூய்மைப்படுத்தி, நல் நிலைப்படுத்தி, தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தை அறிந்து கொள்வதற்கு வழிவகை கொடுத்து, எல்லோருக்கும் நன்மையளிக்கக்கூடிய ஒரு பாதை. இது உலகத்தில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் சொல்லக்கூடிய ஒரு நிலை. இந்த அத்வைத சித்தாந்தத்தை அறிவதற்காகவே பல மக்களும் வெளி நாட்டிலிருந்தெல்லாம் இந்தியாவுக்கு வருகிறார்கள். உலகிற்கு அமைதியும் சாந்தியும் கிடைப்பதற்கு ஆதி சங்கரருடைய உபதேசமான அத்வைத வேதாந்தம் தான் வழிவகுக்கிறது. அந்த நிலையை நம்முடைய இந்திய மக்களும் உணர்ந்து கொண்டு, வாழ்க்கையிலே நல்ல கர்ம யோகத்தைச் செய்துகொண்டு, அதன் மூலம் வாழ்க்கையிலும் நல்ல திருப்பம் வர வேண்டும். ஆன்மாவிலும் மனதிலும் நல்ல எண்ணங்கள் ஏற்பட்டு, நாடு முழுவதிலும் உள்ள எல்லா மக்களுக்கும் ஆதிசங்கரருடைய அருளாலே அமைதியும் சாந்தமும் ஒருமைப்பாடும் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்க வேண்டுமாய் ப்ரார்த்தித்து, ஆதிசங்கரருடைய திருவடியிலும், கன்யாகுமரி தேவியினுடைய திருவடியிலும் பிரார்த்தித்து, அனைவருடைய நெஞ்சிலும் உள்ளத்திலும் ஆதி சங்கரருடைய போதனைகள் நன்றாக நிறைந்து, அதன் மூலம் நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் நல்வழி வர வேண்டுமென பிரார்த்தித்து, அனைவரையும் ஆசீர்வதிக்கிறோம்.