அநாதி – அபௌருஷேயம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

அநாதியாக என்றால் என்ன அர்த்தம்? வேதத்துக்குக் காலமே சொல்ல முடியாது; அதற்கு முந்தையதாக, அதற்கு ஆதியாக எதுவும் இல்லை என்பதுதான் ‘அநாதி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம். அப்படியானால் அது என்றுமே இருந்திருக்கிறது என்று அல்லவா அர்த்தமாகும்? இப்படிச் சொன்னால் எப்படிப் பொருந்தும்? ஒரு புஸ்தகம் என்றால் அதை ஒருவரோ பல பேரோதான் எழுதியிருப்பார்கள். “ஓல்ட் டெஸ்ட்மென்டில்” பல ப்ராஃபெட்கள் சொன்னதைச் சேர்த்துப் போட்டிருக்கிறது. “நியூ டெஸ்ட்மென்டி”ல் கிறிஸ்துவின் உபதேசங்களைச் சொல்லியிருக்கிறது. முகமது நபி சொன்னதைத் குரான் தெரிவிக்கிறது. இவர்கள் யாவரும் ஏதோ ஒரு காலத்தில் இருந்தவர்கள்தான். அவர்களுக்கு முந்தி அந்த உபதேசம் இல்லை. இப்படியே வேதத்தையும் யாரோ ஒருத்தரோ, பல பேரோ எழுதியிருக்கவேண்டும். அவர்கள் ஒவ்வொரு காலத்தில் இருந்திருப்பார்கள். அது ரொம்ப ரொம்ப முந்தைய காலம், பதினாயிரம் வருஷத்துக்கு முந்தயை காலம், அல்லது லக்ஷம், பத்து லக்ஷம் வருஷத்துக்கு முந்தயை காலம் என்று வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனாலும் ‘அநாதி’ என்று சொல்லிவிட்டால் தப்புத்தானே? அந்தப் பத்து லக்ஷம் வருஷத்துக்கு முந்தி வேதம் இல்லாமல்தானே இருந்திருக்க வேண்டும்?

இந்த மாதிரி கேள்விகள் எழும்புகின்றன.

வேதங்களை யாரோ மநுஷ்யர்கள் எழுதினார்கள் என்றால் இப்படிக் கேட்பது நியாயம்தான். அதை அநாதி – ஆதியற்றது – என்பது தப்புத்தான். ஆனால் இது சரிதானா?

சரியாகத்தானே இருக்கவேண்டும்? ஒரு புஸ்தகம் என்றால் அதை யாரோ மநுஷ்யர்கள்தான் எழுதியிருக்க வேண்டும். அவர்கள் ஏதோ ஒரு காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் அநாதி என்பது சரியில்லைதான் – இப்படித் தோன்றுகிறது.

வேதத்தை ரிஷிகள் என்ற மநுஷ்யர்கள் பண்ணினார்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் படித்த சரித்திர புஸ்தகத்தில் அப்படித்தான் போட்டிருக்கிறது. அதில் போட்டிருப்பது மட்டுமில்லை.

வேதம் என்பது பல ஸூக்தங்களைக் கொண்டது. ஞானஸம்பந்தரின் தேவாரம் என்றால் அதில் பல பதிகங்கள் இருக்கிற மாதிரி வேதத்தில் பல ஸூக்தங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பதிகத்திலும் பத்துச் செய்யுள்கள் இருக்கிற மாதிரி, ஒவ்வொரு ஸூக்தத்திலும் பல மந்திரங்கள் இருக்கின்றன. ஸு+உக்தம் என்பதே ‘ஸுக்தம்’. ‘ஸு’ என்றால் ‘நல்ல’ என்று அர்த்தம். ‘ஸுகுணம்’ , ‘ஸுலோசனா’ என்றெல்லாம் சொல்லுகிறோம் அல்லவா? ‘உக்தம்’ என்றால் ‘சொல்லப்படுவது’, அதாவது வாக்கு. ஸுக்தம் என்றால் நல்லவாக்கு என்று அர்த்தம்.

சாஸ்திரோக்தமாக வேதத்தைச் சொல்கிறபோது, அதிலிருக்கிற ஒவ்வொரு ஸுக்தத்துக்கும் இன்னார் ரிஷி, அது இன்ன மீட்டரில் (சந்தஸ்) இருக்கிறது, அது இன்ன தேவதையைக் குறித்தது என்று சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். இப்படி அநேகம் ரிஷிகளின் பெயர்களிலேயே வேத மந்திரங்கள் இருப்பதால், இந்த ரிஷிகள்தான் இவற்றைப் பண்ணியிருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஒவ்வொரு ரிஷியும் இன்னார் பிள்ளை, இன்ன கோத்திரம் என்று அவர்களுடைய மூதாதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறது. “அகஸ்த்யோ மைத்ராவருணி:” என்றால், மித்ரா வருணர்களின் பிள்ளையான அகஸ்தியர் என்று அர்த்தம். “மதுச்சந்தா வைச்வாமித்ர:” என்றால், விச்வாமித்ர கோத்திரத்தில் வந்த மதுச்சந்த ரிஷி என்று அர்த்தம். இப்படி ஒவ்வொரு ரிஷியின் பேரில் மந்திரங்கள் இருக்கின்றன என்றால், அகஸ்தியர் பேரில் இருப்பது அவரது தகப்பனாரான மித்ரா வருணர்கள் காலத்தில் இல்லை, மதுச்சந்தரின் பேரில் இருப்பது விச்வாமித்ரர் காலத்தில் இல்லை என்று தானே அர்த்தமாகும்? அப்படியானால் அநாதி என்பது சரியில்லைதானே?

இப்படியெல்லாம் கேட்கிறபோது, ஒவ்வொரு ரிஷியின் பேரில் வேத மந்திரங்கள் இருப்பதால் அந்த ரிஷியே அதைச் செய்தார், இயற்றினால், compose பண்ணினார் என்று தப்பாக நினைத்து விடுகிறோம். உண்மையில் அந்த ரிஷிகள் மந்திரங்களைத் தாங்களே இயற்றவில்லை.

வேதத்துக்கு “அபௌருஷேயம்” என்றுதான் லக்ஷணம் சொல்லியிருக்கிறது. ஒரு புருஷன் அல்லது மநுஷ்யன் செய்திருந்தால் அது பௌருஷேயம். எந்த மனிதருமே செய்யாததனால் வேதம் அபௌருஷேயம். ரிஷிகள் இயற்றியிருந்தாலும் அது பௌருஷேயமாகிவிடும். ஆனால் அபௌருஷேயம் என்பதால் ரிஷிகளும் வேத மந்திரங்களைப் பண்ணவில்லை என்று ஆகிவிட்டது. மந்திரங்களை ரிஷிகள் இயற்றியிருந்தால் அவர்களுக்கு “மந்த்ரகர்த்தா” என்றே பெயர் இருக்கும். ஆனால் வாஸ்தவத்தில் அவர்களுக்கு “மந்த்ரத்ரஷ்டா” என்றுதான் பெயர் இருக்கிறது. இதற்கு “மந்திரங்களைக் கண்டவர்கள்” என்றே அர்த்தம்; செய்தவர்கள் என்று அர்த்தமில்லை.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்றால் என்ன அர்த்தம்? அமெரிக்காவை அவரா உண்டு பண்ணினார்? இல்லை. ஏற்கெனவே இருந்த அமெரிக்காவை அவர் உலகுக்குத் தெரியும்படியாகப் பண்ணினார். இப்படியே தான் நியூடன், ஐன்ஸ்டீன் முதலிய எந்த விஞ்ஞானியும் புதுசாகச் சொல்கிற விதிகளை அவர்கள் செய்யவில்லை. நியூடன் சொல்லித்தானா ஒரு வஸ்துவை எறிந்தால் அது பூமியில் விழுகிறது? இல்லை. ஏற்கெனவே இருக்கிற விதிகளை இவர்கள்தான் புரிந்துகொண்டு லோகத்துக்குத் தெரிவித்தார்கள். அதே மாதிரி ஏற்கெனவே இருந்த மந்திரங்களைத்தான் அத்தனை ரிஷிகளும் கண்டுபிடித்து லோகத்துக்குக் கொடுத்தார்கள். அந்த மந்திரங்கள் இவர்களுடைய அப்பா, தாத்தா காலத்துக்கும், அதற்கும் முந்தியுங்கூட இருக்கத்தான் செய்தன. ஆனால் அப்போது அவை உலகுக்குத் தெரியவில்லை. இவர்கள்தான் அவற்றைக் கண்டுபிடித்தார்கள். அதனால் இவர்கள் பேரிலேயே அவற்றைச் சொல்வது வழக்கமாகிவிட்டது. ஒருத்தன் புஸ்தகம் எழுதுகிறான். இன்னொருவன் பப்ளிஷ் பண்ணுகிறான்; ஒருத்தன் ஸினிமா எடுக்கிறான்; இன்னொருத்தன் ரிலீஸ் பண்ணுகிறான். இப்படி மந்திரங்களை லோகத்துக்கு வெளியிட்டவர்கள் மட்டுமே தான் ரிஷிகள். ஏற்கெனவே அவை இருந்தாலும், நமக்குப் ப்ரயோஜனமாகிறபடி வெளிப்படுத்தி பரம உபகாரம் பண்ணினது ரிஷிகள்தான். அதனால் அவர்கள் பெயரைச் சொல்லி நமஸ்காரம் பண்ணுவது நியாயம்தான்.

ரிஷிகள் மந்திரங்களைக் கண்டார்கள் என்றால், அதற்கு முந்தி அவை எங்கே இருந்தன? அநாதி என்றால் சிருஷ்டியின் போதே அவையும் தோன்றினவா? மநுஷ்யர்கள் தோன்று முன்பே தோன்றி விட்டனவா? எப்படித் தோன்றின? இவர்கள் கண்டுபிடிக்கிற வரையில் எங்கே இருந்தன?

வேத மந்திரங்கள் சிருஷ்டியின் ஆரம்பத்தில் தோன்றின என்றால், பரமாத்மா லோகத்தில் சிருஷ்டி பண்ணுகிறபோதே இதையும் தாமே பண்ணிவிட்டார் என்று அர்த்தம் ஆகும். பரமாத்மாவே வேதங்களை எழுதி எங்கேயாவது போட்டுவிட்டாரா? அப்புறம் ஒவ்வொரு ரிஷிகள் அதில் ஒவ்வொரு பாகத்தைக் கண்டெடுத்தார்களா? ஆனால் இப்படி சிருஷ்டி ஆரம்பத்திலேயே வேதம் இருந்ததாகச் சொன்னால்கூட அது அநாதியாகிவி்டாது. ஏனென்றால் இப்போதிருக்கிற பிரம்ம சிருஷ்டி எப்போது உண்டாயிற்று என்பதற்கே கணக்கு இருக்கிறது. க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என்று ஒவ்வொன்றுக்கும் இத்தனை வருஷங்கள் என்று சொல்லியிருக்கிறது. இம்மாதிரி ஆயிரம் சதுர்யுகம் கொண்டது பிரம்மாவுக்கு ஒரு பகல்; ஆயிரம் சதுர்யுகம் ஒரு இரவு. இந்தக் கணக்குப்படி அவருக்கு இப்போது ஐம்பது வயசுக்கு மேல் ஆகிவிட்டது என்று திருத்தமாக இன்றைய வயசை சொல்லியிருக்கிறது. எந்தக் கர்மாவுக்கும் சங்கல்பம் செய்து கொள்ளும்போது, ஒரு பத்திரம் எழுதினால் அதில் தேதி போடுகிற மாதிரி, அன்றைய தினத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இப்படிச் சொல்லும்போது பிரம்மாவின் இத்தனாவது வயசில், இத்தனாம் மாசத்தில், இன்ன பக்ஷத்தில், இன்ன நாளில், இன்ன யாமத்தில் என்று சொல்கிறோம். இதிலிருந்து என்ன ஏற்படுகிறதென்றால் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மா எப்போது உண்டானார் என்பதற்கே கால வரையறை இருக்கிறது. இத்தனை கோடி கோடி வருஷங்களுக்கு முந்தி பிரம்மா உண்டானார் என்றால் அவரே அநாதியில்லை. அதனால் அவரால் உண்டான லோக சிருஷ்டியும் அநாதியில்லை. சிருஷ்டியே அநாதியில்லை என்று சொல்லிவிட்டு வேதம் அநாதி என்றால் என்ன அர்த்தம்?

சிருஷ்டி தோன்றுவதற்கு முன்பும் பரமாத்மா இருந்தார். பிரம்மா இல்லை. ஆனால் பிரம்மம் என்று சொல்லப்படுகிற பரம்பொருள் அல்லது பரமாத்மா எப்போதுமே இருந்திருக்கிறது. அதுதான் அநாதி. பிரபஞ்சம், ஜீவ ஜந்துக்கள் எல்லாம் அதிலிருந்துதான் உண்டாயின. பரமாத்மா தாமே நேரே இவற்றைப் பண்ணாமல் பிரம்மா மூலமாகப் பண்ணினார். விஷ்ணு மூலமாக பரிபாலித்தார். ருத்ரன் மூலம் ஸம்ஹாரம் பண்ணினார். அப்புறம் அந்த பிரம்ம, விஷ்ணு, ருத்ரர் எல்லாரையுங்கூட ஸம்ஹாரம் பண்ணிவிடுகிறார். இதனால் தான் பிரம்மாவுக்கும் ஆயுஸ் சொல்லியிருக்கிறது. இப்போதிருக்கிற பிரம்மாவுக்கு நூறு வயஸானபின் அவர் பரமாத்மாவோடு சேர்ந்துவிடுவார். அவர் ஆயுஸ் முடிந்துவிடும். மறுபடி இன்னொரு பிரம்மா வருவார். அவர் மறுபடியும் சிருஷ்டியை ஆரம்பிக்க வேண்டும். இம்மாதிரி இன்னொரு பிரம்மாவை உண்டு பண்ணுவதற்கு முந்தியே பரமாத்மா வேதங்களை உண்டு பண்ணி விடுவாரா?

சிருஷ்டிக்கு முந்தியே வேதம் இருந்தது என்று சாஸ்திரங்களிலிருந்து தெரிகிறது. ஏனென்றால், பிரம்மாவே வேத மந்திரங்களைக் கொண்டுதான் சிருஷ்டியே செய்தார் என்று சொல்லியிருக்கிறது. வெறும் சப்தங்களேயான மந்திரத்தைக் கொண்டு சிருஷ்டி பண்ணினார் என்றால் என்ன என்று பிறகு சொல்கிறேன். இங்கே சொல்ல வந்தது, ரிஷிகளுக்கு முந்தி, லோகமே ஏற்படுவதற்கு முந்தி, வேதங்கள் இருந்தன என்பதுதான். பிரம்மாவே வேதங்களின் உதவி கொண்டுதான் சிருஷ்டி பண்ண முடிந்தது என்று பாகவதாதி புராணங்களில் ஸர்க (சிருஷ்டி) வர்ணனை பண்ணும் இடங்களில் சொல்லியிருக்கிறது.

இதனால்தான் வேதத்தை அநாதி என்கிறார்களா? வேதம், ஈச்வரன் என்று இரண்டுமே அநாதி என்றால் இப்படி அர்த்தம் பண்ணிக்கொள்ளலாமா? யோசித்துப் பார்த்தால் இதுவும் தப்புதான்! சிருஷ்டி தோன்றா விட்டாலும், ஈச்வரன் வேதத்தை உண்டு பண்ணினார் என்று சொல்லி விட்டாலே அது உண்டாகாத ஒரு காலமும் உண்டு என்று அர்த்தமாகும். லோகமும் ஜீவஜந்துக்களும் சிருஷ்டியாகா விட்டாலும், பரமாத்மாவிடம் காலம் என்ற தத்துவம் உண்டான பிற்பாடுதான் வேதம் உண்டாயிற்று என்று அர்த்தமாகிவிடும். அதாவது அது அநாதி என்பது பொய்யாகிவிடும்.

வேதமும் அநாதி, ஈச்வரனும் அநாதி என்றால் இதை அவரும் பண்ணயிருக்கக் கூடாது. ஈச்வரன் வேதத்தை உண்டு பண்ணினார் என்றால் அது ஆதியுடையதாகிவிடும். ஈச்வரனிலிருந்து தோன்றியதுதான் ஸகலமும். அவருக்குப் புறம்பாக எதுவுமே கிடையாது. ஆகையால் வேதம், ஈச்வரன் என்று இரண்டு அநாதிகள் இருந்தன என்றாலும் தப்பு. இப்படி ஒரே குழப்பமாயிருக்கிறது.

ஈச்வரனாலும் பண்ணப்படாமல், ஈச்வரனுக்கு தனியாகவும் இல்லாமல், வேதம் அநாதியாக இருக்க வேண்டும் என்றால் அது எப்படி?

இந்தப் பெரிய ஸந்தேஹத்துக்கு வேதமே பதில் சொல்லியிருக்கிறது. வேதத்தில் ஒரு பகுதியான ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் (II.4.10) “ரிக் -யஜுஸ்-ஸாம-அதர்வ வேதங்கள் ஈச்வரனின் சுவாஸமாகும்” என்று சொல்லியிருக்கிறது. “நிச்வஸிதம்” – மூச்சுக்காற்று – என்ற வார்த்தையை இந்த இடத்தில் போட்டிருக்கிறது.

நமக்கு ச்வாஸமில்லாவிடில் நாம் உயிரோடு இருக்க முடியுமா? முடியாதல்லவா? அப்படித்தான் பரமாத்மாவுக்கு உயிராக இருக்கிற ச்வாஸமே வேதம். அநாதியான அவர் என்றென்றும் உயிரோடு இருந்திருக்கிறார் என்பதால், வேதமே அவருடனேயே, அவரது ச்வாஸமாக, அநாதியாக இருந்திருக்கிறது என்று ஆகிவிடுகிறது!

இதிலே கவனிக்க வேண்டிய விஷயம், ஈச்வரனைக்கூட வேதத்தை உண்டாக்கினவர் என்று சொல்கிற வழக்கமில்லை. நம்முடைய ச்வாஸத்தை நாம் உண்டாக்கினதாகச் சொன்னால் தப்புத்தானே? நாம் எப்போதிலிருந்து இருக்கிறோமோ அப்போதிலிருந்து ச்வாஸமும் இருக்கத்தானே செய்கிறது? இப்படியேதான் ஈச்வரனும் வேதமும். அவரும் அதைப் பண்ணினார் என்று சொல்ல முடியாது.

வேதங்களுக்கு பாஷ்யம் [விரிவுரை] எழுதிய வித்யாரண்ய ஸ்வாமிகள், தம் குருவையே ஈச்வரனாக பாவித்து ஸ்தோத்திரம் பண்ணும்போது,

யஸ்ய நி:ச்வஸிதம் வேதா:

என்கிறார்1. ‘எவருக்கு வேதங்கள்தான் சுவாஸமோ’ என்று அர்த்தம். உபநிஷத்தில் போட்ட அதே ‘நிச்வஸிதம்’ இங்கே வந்திருக்கிறது. வேதத்தைப் பண்ணினார் என்று இங்கேயும் இல்லை.

பகவானும் கீதையில் சொல்கிறபோது2, “நானே எல்லா வேதங்களாலும் அறியப்படுகிறவன் (வேதைச்ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய:) ” என்று சொல்லிவிட்டு தன்னை “வேத க்ருத்” (அதாவது வேதத்தை பண்ணினவன்) என்று சொல்லிக் கொள்ளாமல், “வேதாந்த க்ருத்” என்றே, அதாவது வேதங்களுக்கு முடிவான தத்வத்தை உண்டு பண்ணினவன் என்றே சொல்லிக் கொள்கிறார். தன்னை வேதம் அறிந்தவனாக (வேதவித்) சொல்லிக் கொள்கிறாரே அன்றி “வேத க்ருத்” என்று சொல்லவில்லை. வேதாந்தம் என்கிற தத்வ ரூபத்தில் ஜீவர்களுக்குப் பிரயோஜனமாகப் பிரகாசிப்பதற்கு முந்தியே, ஜீவ சிருஷ்டிக்கு முன்னாலுங்கூட சப்த ரூபத்தில் இந்த வேதங்கள் ஈச்வரனோடு ஈச்வரனாக அவனது மூச்சாக இருந்திருக்கின்றன.

கீதையில் சொன்ன மாதிரியே பாகவதத்திலும் வேதங்களை பகவான் பண்ணினதாகச் சொல்லவில்லை. அவனுடைய ஹ்ருதயத்தில் வேதங்கள் ஸ்புரித்ததாகத் தான் சொல்லியிருக்கிறது. ஏற்கெனவே உள்ள ஒரு ஸத்தியம் நமக்குள் தானாகப் பளீரென்று வெளியிடப்படுவதுதான் ஸ்புரணம் என்பது. இல்லாத ஒன்றைப் புதிதாகப் பண்ணினால் அதை “ஸ்புரித்தது” என்று சொல்ல முடியாது. ‘ஸகல மந்திரங்களையும் கண்டுகொண்ட ஆதிரிஷி பிரம்மா. அவருக்குப் பரமாத்மாதான் இவற்றைக் காண்பித்துக் கொடுத்தார். எப்படி? வாயினால் சொல்லி உபதேசம் பண்ணினாரா? இல்லை, ஹ்ருதயத்தினால் வேதங்களைக் கொடுத்தார்’ – “தேனே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதி கவயே” என்று பாகவதத்தின் முதல் ச்லோகம் சொல்கிறது. அதனால் பரமாத்மாவின் ஹருதயத்தில் எப்போதுமே வேதம் இருந்து கொண்டிருக்கிறது, அதை அவர் இயற்றவில்லை என்று தெரிகிறது. அவர் சங்கல்பம் பண்ணின மாத்திரத்தில் பிரம்மாவுக்கு அத்தனை வேதங்களும் தெரிந்துவிட்டன. அந்த சப்தங்களை வைத்துக் கொண்டு அவர் ஸ்ருஷ்டி பண்ண ஆரம்பித்து விட்டார்.

தேவாரம் ஈச்வரனை “வேதியா, வேதகீதா” என்கிறது. “சந்தோக ஸாமம் ஓதும் வாயானை”, “பௌழியின் காண்” என்று வேதசாகைகளின் (வேதக் கிளைகளின்) பெயர்களைச் சொல்லி, அவற்றை பகவான் பாடிக் கொண்டிருக்கிறான் என்கிறது. பாடுகிறான் என்றால் என்ன? மூச்சு விடுவதே பெரிய பாட்டுத்தான். நாம் விடுகிற மூச்சை “ஹம்ஸ கீதம்” என்று சொல்லியிருக்கிறது. இப்படி ஈச்வரனுடைய ச்வாஸ ஸங்கீதமாக இருப்பதுதான் வேதம். ஈச்வரன் பூணூல் போட்டுக் கொண்டு, விபூதி இட்டுக் கொண்டு, ஓயாமல் ஸ்நானம் பண்ணிக் கொண்டு, வேதத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். என்று தேவாரம் சொல்வதைப் பார்த்தால், பரமசிவன்தான் பெரிய கனபாடிகள் என்று தோன்றுகிறது! “பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்”, “வெண்ணூல் உண்டே, ஓதுவதும் வேதமே” என்றெல்லாம் அப்பர் ஸ்வாமிகள் வர்ணிக்கிறார்! இங்கேயும், “வேதம் ஓதுகிறார்”, “வேதம் இசைக்கிறார்”, என்றுதான் இருக்கிறதே தவிர, வேதத்தை இயற்றுகிறான் என்று ஓரிடத்தில் கூட இல்லை.

வேதங்களைப் பற்றியும், வைதிகமான யாக, யக்ஞாதிகளைப் பற்றியும் தேவாரத்தைப் போலவே வைஷ்ணவர்களின் திவ்யப் பிரபந்தங்களிலும் நிறையச் சொல்லியிருந்தாலும், எதனாலோ பெருமாள் வேதம் ஓதுவதாக எங்கும் சொல்லியிருக்கிறதாக எனக்கு நினைவில்லை.

புகழேந்தி புலவர், கஜேந்திர மோக்ஷத்தின் போது யானை ‘ஆதிமூலமே’ என்று அழைத்தவுடன் ‘என்ன?’ என்று கேட்டு வந்த மஹாவிஷ்ணுவை,

வேதத்தின் முன் நின்றான்; வேழம் முதலே என அழைப்ப என் என்றான் எங்கட்கிறை

என்று சொல்கிறார். இங்கே “வேதத்தின் முன்” என்றதால், “காலத்திலே வேதத்துக்கு முந்தி”, என்று அவர் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை. ஒருவர் வீட்டு வாசலில் நின்றால் “வீட்டின் முன் நின்றான்” என்றுதானே சொல்வோம்? அப்படிச் சகல வேதங்களுக்கும் ஆரம்பத்தில் அவன் இருக்கிறான் என்பதையே “வேதத்தின் முன் நின்றான்” என்று சொல்லியிருப்பார். இன்னொன்று தோன்றுகிறது. பெருமாள் புறப்பாடு எப்படி நடக்கிறது? முதலில் திருவாய்மொழி கோஷ்டிக்காரர்கள் வருகிறார்கள். அப்புறம் பெருமாள் (உத்ஸவர்) வருகிறார். அவருக்குப் பின்னால் வேத பாராயணக்காரர்கள் வருகிறார்கள். இங்கேயும் ஸ்வாமி வேதத்தின் முன்னே நிற்கிறார்.

வைஷ்ணவமான ஆகமங்களின்படியும், புராணங்களின் படியும் மஹாவிஷ்ணுவையே விசேஷமாக யக்ஞ ஸ்வரூபி, வேதஸ்வரூபி என்று சொல்லியிருக்கிறது; கருடனை வேத ஸ்வரூபம் என்றும், அதன்மேல் பகவான் இருப்பதாகவும் சொல்கிறதும் உண்டு. ஆனால் வேதத்தைப் படைத்ததாகச் சொன்னதாகத் தெரியவில்லை.

வேதத்திலேயே இருக்கப்பட்ட “புருஷ ஸூக்தம்” ஒன்றில் தான் வேதங்கள் பிறந்தன (அஜாயத) என்ற வார்த்தையே வந்திருக்கிறது. ஆனால் “புருஷ ஸூக்த”மானது ரொம்பவும் symbolical-ஆகவும், allegorical – ஆகவும் [உருவக அணி கொண்டதாகவும், ஆழ்ந்த உள்ளுறைபொருளை சம்பவம் போல் சொல்லுவதாகவும்] இருப்பதால், அதிலே, “வேதம் பிறந்தது” என்று சொல்லுவதை அப்படியே நேர் அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியாது. பரம புருஷனையே பசுவாக பலி கொடுத்த ஒரு யக்ஞத்தில்தான் ஸ்ருஷ்டியெல்லாம் உண்டாயிற்று என்று சொல்லி, அப்போதுதான் வேதங்களும் உண்டானதாக அதில் சொல்லியிருக்கிறது. பரமபுருஷனை யக்ஞ பசுவாகப் பலி கொடுப்பது என்றால் என்ன? அதை நேர் அர்த்தம் பண்ணிக் கொண்டால் சரியாகாது அல்லவா? இந்த யாகத்திலே வஸந்த காலத்தை நெய்க்கு பதில் ஆஹூதியாக விட்டார்கள், கோடைக்காலம் ஸமித்துக் கட்டாயிற்று, சரத்காலம் ஹவிஸ் ஆயிற்று என்றெல்லாம் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறதா? இதெல்லாம் மந்திர அர்த்தத்தைத் தியானம் பண்ணி, அதிலேயே ஊறினவர்களுக்குத்தான் அநுபவ ரூபத்தில் அர்த்தமாகும். நாம் வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் வேதங்கள் பிறந்ததாக அதில் சொன்னதையும் அப்படியே பொருள் கொள்வதிற்கில்லை.

மொத்தத்தில் சாஸ்திர அபிப்பிராயம், வேதம் அநாதி; அது அநாதியாக ஈச்வரனின் சுவாஸமாக இருக்கிறது என்பதுதான்.

ஈச்வரனின் சுவாஸம் இந்த மாதிரி சப்த ரூபத்தில் இருக்கிறது என்றால், இந்த சப்தங்களைக் கொண்டுதான் பிரம்மா சிருஷ்டி பண்ணினார் என்றால், நாகரிக மூளைக்கு “இதெல்லாம் சுத்த நான்-ஸென்ஸ்” என்று தோன்றுகிறது.

நன்றாக ஆராய்ந்து பார்த்தால், பெரிய விஞ்ஞான உண்மையே இதில் இருக்கிறதென்று தெரிகிறது.

இப்படிச் சொல்லும்போது இன்றைய விஞ்ஞானத்துக்கு acceptable- ஆக (ஏற்புடைத்தாக) இருந்தால்தான் மத விஷயங்களை நாம் ஒப்புக் கொள்ளலாம் என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை. நம் ஸயன்ஸும், ஸயண்டிஸ்டுகளும் எங்கே போக முடியாதோ அந்தப் பரமாத்ம தத்துவத்தைச் சொல்கிற வேதத்தை, ஸயன்ஸின் லிமிட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதிலுள்ள அநேக விஷயங்கள் ஸயன்ஸுக்கு ஒத்துவராமல்கூட இருப்பதாகத் தோன்றலாம். அதனால் அவை தப்பு என்று ஆகிவிடாது. ஆனால் இங்கே எடுத்துக் கொண்ட விஷயம் – மூச்சு எப்படி சப்தகோவைகளான மந்திரமாக இருக்க முடியும், அதை வைத்துக் கொண்டு எப்படி லோக ஸ்ருஷ்டி உண்டாக முடியும் என்ற விஷயம் – ஸயன்ஸுக்கும் ஒவ்வியதாகவே இருக்கிறது என்று மட்டும் சொன்னேன்.


1.ஜீவன்முக்தி விவேகம் முதல் ச்லோகம்

2.XV 15

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is மதத்தின் மூலாதாரம் வேதமே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஒலியும் படைப்பும்
Next