கால ஆராய்ச்சி சரியல்ல : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வெள்ளைக்காரர்கள் விஷயத்துக்கு ஏன் வந்தேன் என்றால், வேதம் அநாதி என்பதைப் பற்றிச் சொல்லும்போது, வெள்ளைக்காரர்களின் அபிப்ராயத்தைச் சொல்ல வந்தேன். வேதம் அநாதி என்றால் அவர்களுடைய மனப்பான்மைக்கு அது ஏற்கும்படியாக இல்லை. என்னதான் நடுநிலைமை, scientific research என்றாலும், ‘இந்த ஹிந்துக்களின் புஸ்தகத்துக்கு இப்படி ஒரு ஏற்றம் தருவதா? என்று அவர்களில் சிலருக்கு மனஸுக்கு ஸம்மதப்படவில்லை. இன்னம் சில பேர் இப்படியில்லாவிட்டாலும் பகுத்தறிவுப்படி, ஸயன்டிஃபிக்காக ஆராய்ச்சி பண்ணித்தான் எதையும் ஒப்புக்கொள்ளலாம் என்ற அபிப்ராயத்தில் ரிஸர்ச் செய்திருக்கிறார்கள். அநாதி என்கிற வாதத்தை ஏற்கமுடியாமல், இதே ரீதியில் அநேகம் படித்த ஹிந்துக்களும் ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார்கள்.

இவர்கள் ஆராய்ச்சி மூலம் காலம் கணிப்பதில் முக்யமாக இரண்டு தினுசு இருக்கிறது. ஒன்று வானசாஸ்திர ரீதியில் (astronomical -ஆகப்) பண்ணுவது. இன்னொன்று பாஷையின் ரூபத்தை வைத்து நிர்ணயம் பண்ணுவது. இப்படிச் செய்து வேதத்துக்கு கால நிர்ணயம் பண்ணுவதில் முடிந்த முடிவாக ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கிறார்களா என்றால், அதுதான் இல்லை. ஒவ்வொரு அறிஞர் ஒவ்வொரு அபிப்ராயத்தைச் சொல்கிறார். திலகர் கி.மு.6000-ல் வேதம் உண்டாயிற்று என்கிறார். வேறு சிலர் கி.மு. 3000 என்கிறார்கள். அதைவிடக் கிட்டத்தில் கி.மு. 1500-க்கு வேதகாலத்தை இழுத்து விட்டிருக்கிறவர்களும் உண்டு.

மற்ற மதப் புஸ்தகங்களைப் பற்றி இப்படி அபிப்ராய பேதம் இல்லை. பௌத்தர்களின் த்ரிபிடகத்தை எடுத்துக் கொண்டால் அது அசோகன் காலத்தில் எழுதப்பட்டது என்றும், ஆனாலும் அதிலுள்ள புத்தரின் உபதேசங்கள் அசோகருக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முந்தி, அதாவது இன்றைக்கு 2500 வருஷத்துக்கு முன் புத்தர் சொன்னவை என்றும் ஏகமனதாக அபிப்ராயப்படுகிறார்கள். பைபிளின் ந்யூ டெஸ்ட்மென்ட் உண்டாகிக் கிட்டத்தட்ட 2000 வருஷம் ஆகிறது என்பதிலும் ஏகோபித்த அபிப்ராயம் இருக்கிறது. குரான் உண்டாகி சுமார் 1300 வருஷம் ஆகிறது என்று ஸகலரும் ஒப்புக் கொள்கிறார்கள். நம் வேதத்தின் விஷயத்தில் மட்டும் இப்படி ஒரு முடிவான தீர்மானம் ஏற்படாமலிருக்கிறது.

இரண்டு தினுசான காலக்கணக்கு என்று சொன்னேனே, அதைக் கொஞ்சம் விளக்க வேண்டும். வேதத்திலே சில இடங்களில், அப்போதிருந்த கிரஹங்களின் நிலைமை பற்றிச் சொல்லியிருக்கிறது. இப்படிப்பட்ட astrological conjunction (கிரஹச் சேர்க்கை) எப்போது ஏற்பட்டிருக்கும் என்று வான சாஸ்திரப்படிக் கணக்குப் பண்ணி கி.மு. 6000, அல்லது வேறு ஏதோ ஒரு வருஷம் என்ற கணக்குக்கு வருகிறார்கள்.

ஆனால் இந்த மாதிரியான கிரஹச் சேர்க்கை ஒரே ஒரு தடவை கி.மு. 6000-ல் தான் ஏற்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? அதற்கு முந்தியும் பல தடவை இதே மாதிரி இருந்திருக்கும். இந்த சிருஷ்டியில் மட்டுமில்லாமல், இந்த சிருஷ்டிக்கு முற்பட்ட பிரளயத்துக்கு முந்தியிருந்த சிருஷ்டிகளிலும் இதே கிரஹ நிலைமைகள், planetary positions எத்தனையோ தடவை இருந்திருக்கும். வேதத்திலே குறிப்பிட்டிருப்பது இவற்றில் எது என்று எப்படித் தீர்மானமான முடிவு பண்ணுவது? ஆகையால், காலத்தையெல்லாம் துளைத்துக் கொண்டு பார்க்கக்கூடிய அதீந்திரிய சக்தி வாய்ந்த ரிஷிகள் சேர்த்துக் கொடுத்த வேதங்களில் இப்படிப்பட்ட கணக்குகள் பொருந்தாமல்தான் இருக்கின்றன. வேதத்திலேயே இருக்கப்பட்ட உட்சான்று (internal evidence) என்று ஆராய்ச்சிக்காரர்கள் பெரிதுபடுத்துகிற வானசாஸ்திரக் கணக்கு, வாஸ்தவத்தில் விஷயத்தைத் தெளிவுபடுத்தவேயில்லை.

இன்னொரு, கணக்கு, பாஷையை வைத்துச் செய்வது என்று சொன்னேன். பாஷையில் மொழி, லிபி (script) என்று இரண்டு இருக்கின்றன.

இப்போது நம் தேசத்தில் இருக்கப்பட்ட லிபிகளுக்கெல்லாம் ஆதிமூலமாக பிராம்மி லிபி இருக்கிறது. இப்போது பார்த்தால் தமிழ் எழுத்துக்கும், தேவநாகரி [ஸம்ஸ்கிருத] எழுத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கிறது. ஆனால் – பல நூற்றாண்டுகளாக வந்திருக்கிற சாஸனங்களை ஆராய்ச்சி பண்ணிப் பார்த்து, நூற்றாண்டு வாரியாக பிராம்மி லிபியில் ஏற்பட்ட மாறுதல்களுகளுக்கு சார்ட் (chart) போட்டிருக்கிறார்கள். அதைப் பார்த்தால் மூலமான பிராம்மியிலேயே தான் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு காலத்தில் ஒருவிதமான மாறுதல்கள் ஏற்பட்டு, இப்போது பார்த்தால் ஒன்றுக்கொன்று ஸம்பந்தமேயில்லாமல் தோன்றும் லிபிகள் எல்லாம் அந்த ஒரே மூலத்திலிருந்து வந்திருக்கின்றன என்று தெரிகிறது. இப்போது இருப்பதெல்லாம் பிராம்மியில் மீசை போட்டுக் கொண்ட எழுத்துக்கள், கொம்பு முளைத்த எழுத்துக்கள் என்றுதான் எனக்கு வேடிக்கையாகத் தோன்றும். சார்ட்டைப் பார்த்தால் உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும். சில சமயங்களி்ல் பிராம்மி எழுத்தின் நடுவிலே மீசை மாதிரி ஒன்று சேர்கிறது. தேவநாகரி உ, ஊ எல்லாம் இப்படித்தான் இருக்கின்றன. தமிழ் எழுத்துக்கள் அநேகம் கொம்பு போட்டுக்கொண்டு தோன்றியிருக்கின்றன. இம்மாதிரியான ஒவ்வொரு மாறுதலும் ஏற்பட இத்தனை காலம் ஆகிறது என்று நன்றாக நிர்ணயமான சரித்திர காலச் சாஸனங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த அடிப்படையில் கணக்குப் பண்ணியே இதுவரை காலம் தெரியாதிருக்கிற ஒரு சமயத்தைச் சேர்ந்த சாஸனத்தின் லிபியைப் பார்த்து, அது இன்ன காலத்தைச் சேர்ந்தது என்று நிர்ணயம் பண்ணுகிறார்கள்.

வேதத்தைப் பொறுத்தமட்டில் அதை எங்கேயும் கல்வெட்டில் எழுதிவைக்கவில்லை. ஆனபடியால் லிபியைப் பார்த்து காலநிர்ணயம் பண்ண வேண்டிய பிரச்சனை இல்லை.

பாஷை ரீதியில் உள்ள இன்னொரு விதமான அடிப்படையில்தான் வேத காலத்தை ஆராய்கிறார்கள். அது என்னவென்றால் : வார்த்தைகளில் ரூபம், ஒலிகளின் வடிவம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. சங்க காலத்தில் இருந்த அநேக தமிழ் வார்த்தைகள் இப்போது ரொம்பவும் உருமாறியிருக்கின்றன. ஒவ்வொரு பாஷையிலும் இப்படியேதான். சில சப்தங்கள் தேய்ந்து, உதிர்ந்து போகின்றன. சப்தம் மட்டுமின்றி அர்த்தமும் மாறுகிறது. இப்போது ‘வெகுளி’ என்றால் ‘அப்பாவி’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். ஆனால் ஆதியில் ‘வெகுளி’ என்றால் கோபம், கோபிஷ்டன் என்று அர்த்தம் இருந்தது. இப்போதுங்கூட ‘வெகுண்டு எழுந்தான்’ என்கிறபோது பழைய அர்த்தத்தில் தான் சொல்கிறோம். பழைய காலத்தில் ‘மாண்ட’ என்றால் ‘செத்துப் போன’ என்ற அர்த்தமே கிடையாது; ‘புகழுடைய’ என்பதே அதன் அர்த்தம் என்று ஒரு தமிழ்ப் புலவர் சொன்னார். இதே மாதிரி ஸம்ஸ்க்ருதத்திலும் உண்டு. பிற்கால காவியங்களைப் புரிந்து கொள்கிற மாதிரி வேதங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லா பாஷையிலுமே இப்படி உண்டு. இதில் நம் தேச பாஷைகள் எவ்வளவோ தேவலை. இங்கிலீஷ் பாஷையில் ஒரு ஆயிர வருஷத்துக்கே உட்பட்ட Anglo-Saxon என்கிற ஓல்ட் இங்கிலீஷில் ஒரு வரிகூட இன்றைய வெள்ளைக்காரர்களுக்குப் புரியாது. ஒரு முந்நூற்று சொச்சம் வருஷத்திலேயே அமெரிக்காவில் இங்கிலீஷ் ரொம்பவும் மாறி ‘அமெரிக்கன் இங்கிலீஷ்’ என்று தனியாகப் பெயர் வைக்கிற அளவுக்கு ரூபபேதம் அடைந்திருக்கிறது.

சிறுகச் சிறுக ஒரு ஒலி ஜனங்களிடத்தில் புழக்கத்தால் தேய்ந்து தேய்ந்து உருமாறுவதற்கு எத்தனை காலமாகிறது என்று கணக்கு பண்ணியிருக்கிறார்கள்.

அர்த்தம் மாறுவதற்கு எத்தனை காலமாகிறது என்பதை ஆராய்ச்சியின் மூலம் இவ்வளவு தெளிவாக நிர்ணயம் பண்ணியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆகையால் சப்த ரூபத்தைப் பார்க்கிற ரீதியிலேயே வேதவாக்யங்களைப் பார்த்துக் காலம் கணிக்கிறார்கள். “ஒவ்வொரு இருநூறு வருஷத்துக்கும் ஒரு சப்தம் இப்படியிப்படி மாறுகிறது. இதன்படி பிற்கால சப்தமொன்று வேதத்தில் இப்படி இருக்கிறதென்றால் அது இத்தனை முறை மாறியிருக்க வேண்டும்; இத்தனை mutation ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். வேத சப்தம் ஒன்றுக்கும் பிற்கால சப்தத்துக்கும் நடுவே பத்து மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றால் 10 * 200 = 2000 வருஷத்துக்கு முந்தி வேதம் உண்டாயிற்று என்று அர்த்தம். ரொம்பவும் அதிகமாகப் போனால் இன்னொரு சப்தம் முப்பது தரம் மாறியிருப்பதாகத் தெரிகிறதென்றால், வேதம் உண்டாகி 30 * 200=6000 வருஷம் ஆகிறது என்று அர்த்தம். அதாவது கி.மு. 4000-க்கு முந்தி வேதம் இல்லை” – என்கிற மாதிரி பல அபிப்ராயங்களைச் சொல்கிறார்கள்.

இந்த அடிப்படை தப்பு என்பதை ஒரு திருஷ்டாந்தத்தால் புரியவைக்க முடியும்.

நம் அகங்களில் அநேக விதமான பாத்திரங்கள் இருக்கின்றன. சிலவற்றை ஜாஸ்தி உபயோகிப்போம். சிலதை அவ்வளவுக்கு உபயோகிக்க மாட்டோம். வெண்கலப் பானையில் தினம் தினம் சாதம் வடிக்க வேண்டும். தினமும் அதை இரண்டு வேளையும் நன்றாகத் தேய்க்க வேண்டும். அதனால் அது சீக்கிரத்தில் தேய்ந்து போகிறது. இன்னொரு பெரிய அண்டா இருக்கிறது. அது சாமான் ரூமிலேயே புழங்காமல் கிடக்கிறது. அதற்கு தினப்படி உபயோகமேயில்லை. எப்போதாவது ஒரு கல்யாணம், கார்த்திகை வந்தால்தான் அதற்கு உபயோகம். அதைத் தேய்ப்பதும் அப்போதுதான். ஆகையால், வெண்கலப் பானை தேய்கிற மாதிரி இந்த அண்டா தேயுமா? வெண்கலப் பானை போன வருஷம்தான் வாங்கியிருக்கலாம். ஆனாலும் ஏகமாகத் தேய்ந்திருக்கும். அண்டா நம் பாட்டிக்குச் சீராகக் கொடுத்ததாக இருக்கலாம். ஆனாலும் கொஞ்சம்கூடத் தேயாமலே கிண்டாக இருக்கிறது. இதைப் பார்த்து வெண்கலப்பானைதான் முந்தி வாங்கினது, அண்டா பிந்தி வாங்கினது என்று முடிவு பண்ணலாமா? கல்யாணத்தின்போது ஒரே ஸமயத்தில் தான் சாப்பிடுகிற தட்டு, பன்னீர்ச்செம்பு இரண்டும் சீராகக் கொடுத்திருப்பார்கள். பத்து வருஷத்தில் தட்டு நசுங்கி, தேய்ந்து, மறுபடி அழித்துப் பண்ணுகிற அளவுக்கு வந்துவிடுகிறது. பன்னீர்ச் செம்போ புதுக் கருக்கே போகாமல் மெருகோடு இருக்கிறது.

இப்படித்தான் அன்றாடம் பழக்கத்தில் புழங்குகிற லௌகிக சப்தங்களும், வேத சப்தங்களும் இரண்டு வகையான பாத்திரங்களைப் போல் வித்யாஸமாக இருக்கின்றன. தினந்தினமும் பேசிக்கொண்டிருக்கிற வார்த்தைகளின் சப்தங்கள் பல விதங்களில் தேய்கினறன, மாறுகின்றன. வேதமும் தினம் தினம் ஓதப்படுவதுதான். ஆனாலும் அதன் மூல சப்தம் மாறாமலே ஓதப்படுவதுதான் அதன் தனிச்சிறப்பு. வேதத்தின் அங்கங்களில் சிக்ஷை, வியாகரணம் என்பவை பற்றிப் பிற்பாடு நான் சொல்லும்போது, ஒவ்வொரு வேத அக்ஷரத்தையும் மூல ரூபம் சிதையாமல் ரக்ஷித்து அப்படியே சுத்தமாக கொடுப்பதற்கு எத்தனை கட்டுத்திட்டமான ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வீர்கள். ஆகையினால் நித்யப்படி புழக்கத்திலுள்ள பாத்திரங்கள் தேய்கிற மாதிரி அன்றாட வழக்குச் சொற்கள் மாறுகிறதென்றால், வேத சப்தம் மாறாது; மாறவுமில்லை. அது கல்யாண காலங்களில் மட்டும் உபயோகமாகிற அண்டா மாதிரி இருக்கிறது.

“வேதங்களுக்குள்ளேயே ரிக்வேதம் முந்தியது; அப்புறம் யஜுஸ் வந்தது; கடைசியிலே அதர்வம்; ஒவ்வொரு வேத சாகையிலும் ஸம்ஹிதா பாகம் முந்தையது; பிராம்மணம் அதற்குப் பின்னாலும், ஆரண்யகம் கடைசியாகவும் வந்தது” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இவற்றுக்கிடையே உள்ள பாஷா வித்யாஸங்களைப் பார்த்து, மேலே சொன்ன மாதிரி காலக் கணக்கு போடுகிறார்கள். எத்தனைதான் ஆராய்ச்சி பண்ணினாலும் நான் சொன்ன அடிப்படை வித்யாஸத்தைக் கவனிக்காததால், இது எதையும் சரியென்று ஒப்புக் கொள்வதற்கில்லை. எத்தனையோ கட்டுத் திட்டங்கள் பண்ணியும் வேத சப்தங்கள் கொஞ்சம் மாறி இருக்கின்றன என்றால், அந்த மாறுதல் 200 வருஷத்துக்கு ஒரு தரம் ஏற்படும் மாறுதலாக இருக்காது என்பதையும், பல ஆயிரம் வருஷத்தில் தான் இப்படிப்பட்ட மாறுதல் ஏற்பட்டிருக்க முடியும் என்பதையும் கவனிக்கவேண்டும். Wear and Tear என்று சொல்வது [புழக்கத்தினால் ஏற்படும் தேய்மானம்] வேதத்தின் விஷயத்தில் மற்ற இலக்கியம் அல்லது பேச்சு மொழிக்கான மாதிரி இல்லை என்பதைப் புரிந்துகொண்டால், இந்தக் கால நிர்ணயமும் தப்புதான் என்று புரியும்.

ஹிந்தி என்று ஒரு பாஷையாக ஏற்படுத்தி வைத்தே சில நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. ஆனாலும் அது ஒரு பெரிய பிரதேசத்தில் பரவியிருப்பதாலும், அதில் ஸம்ஸ்கிருதம், அராபிக், பெர்ஷியன், இங்கிலீஷ் முதலிய பல பாஷைகள் கலப்பதாலும் இந்தச் சிறிது காலத்துக்குள்ளேயே அது ரொம்பவும் மாறிவிட்டது. ஒரு சின்னப் பிரதேசத்திலேயே வளர்ந்த தமிழ், இப்படி அதிவேகமாக மாறவில்லை என்றாலும் தாயுமானவர் பாடல் புரிகிற அளவுக்குக் கம்ப ராமாயணம் புரியாது, கம்ப ராமாயணம் புரிகிற அளவுக்கு ஞானசம்பந்தர் தேவாரம் புரியாது, தேவாரம் புரிகிற அளவுக்குத் திருமுருகாற்றுப்படை புரியாது என்கிற ரீதியில், தமிழ் பாஷையும் மாறிக் கொண்டேதான் வந்திருக்கிறது. ஸம்ஸ்கிருதம் ஹிந்தியைப் போல, ஹிந்தியை விடவும், விரிவாக தேசம் பூராவிலும் பரவியிருந்தாலும், அது ஹிந்தியைப் போலவும், தமிழ் போலவும் பேச்சு மொழியாக இல்லாமல் இலக்கிய பாஷையாகவே நெடுங்காலமாக இருந்திருப்பதால் தமிழின் அளவுக்குக்கூட மாறவில்லை. அதிலும் காவியங்களை விடப் பரம ஜாக்ரதையுடன் ரக்ஷிக்கப்பட்ட வேதங்களில் மாறுதல் ஏற்படுவது ரொம்பவும் அபூர்வம்தான். ஆகையால் இப்போது ஆராய்ச்சிக்காரர்கள் மற்ற பாஷைகளின் விஷயத்தில் ஆயிரம் வருஷம் என்று கணக்குப் பண்ணும் மாறுதல், வேதத்தில் ஏற்படுவதற்கு லக்ஷம் வருஷம் வேண்டியிருக்கும்!

அக்ஷர சுத்தத்தால்தான் மந்திரங்களுக்கு சக்தியே ஏற்படுகிறது என்ற கொள்கையின் பேரில் வேத சப்தங்கள் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன. அதில் தவறுதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே தனியாக ஒரு ஜாதி உட்கார்ந்து கொண்டு, அதைத் தலைமுறை தலைமுறையாக மூல ரூபத்திலேயே காப்பாற்றிக் கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பெரிய உண்மையைக் கவனிக்காமல் பண்ணுகிற ஆராய்ச்சிகளினால் யதார்த்தம் ஒரு நாளும் தெரியாது.

வேதம் அநாதியில்லை என்று இந்த ஆராய்ச்சிகள் நிரூபிக்கவேயில்லை. அத்யயனத்தில் எத்தனை விதங்களை வைத்து வேத சப்தத்தை உள்ளபடி காப்பாற்றியிருக்கிறார்கள் என்பதை ஆலோசித்தோமானால் இது புரியும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வெள்ளையர் ஆராய்ச்சி - நல்லதும் கெட்டதும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  அத்யயன முறைகள்
Next