ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். தாது வித்தியாசத்தால் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வார். இதற்கும் மாறாக இன்னொறு ‘ஸைகலாஜிகல்’ காரணத்தை இந்நாட்களில் பிரபலமாகி வரும் மனோதத்வ நிபுணர் கூறுவார். மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றால் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பார். தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ பூர்வ கர்ம பலனாகத்தான் வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.
வியாதிக்கு மட்டுமின்றி நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவிதக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒரே விஷயத்துக்கு இப்படிப் பல காரணங்கள் சொன்னால் நமக்குக் குழப்பமாயிருக்கிறது. நம் சுக துக்கங்களுக்கு கிரகங்களின் போக்குத்தான் காரணமா? ஜோதிஷர் சொல்கிறபடி கிரகப் பிரீதி செய்வதா? அல்லது மாந்திரீகர் சொல்கிறபடி குலதெய்வத்துக்கோ அல்லது வேறு தெய்வத்துக்கோ கிராம தேவதைக்கோ செய்த அபசாரம் காரணமா? அந்தத் தெய்வத்துக்கு சாந்தி பரிகாரம் செய்வதா? நோய்நொடி என்றால் வைத்தியமும் செய்யத்தானே வேண்டும்? கடைசியில் எல்லாம் கர்ம பலன் என்றால், அது தீருகிறபோதுதான் தீரும் என்று வெறுமே, இருந்துவிட வேண்டியதுதானா? இப்படியாகக் குழப்பம் ஏற்படுகிறது.
பல காரணங்களில் எது சத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மம்தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது; மழை ஒன்றுதான் – ஆனால் அதிலிருந்தே எத்தனை விளைவுகள் உண்டாகின்றன? பூமி முழுவதும் ஈரம் உண்டாகிறது; ஈசல் உண்டாகிறது; தவளை கத்துகிறது; சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன; வேறு சில அழுகுகின்றன. இத்தனையும் ஒரே மழைக்கு அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதியிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம். இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பலவிதமான பிரச்னைகள்! பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவுசக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்னைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகள், கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ்படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause) இருந்தேயாக வேண்டும்.
ஜகத் முழுதும் காரணம்—விளைவு, செயல்—பிரதிச் செயல் (Action and Reaction) என்ற துவந்தத்துக்குள்தான் கட்டுண்டிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் (Physics) முழுதும் இந்த உண்மையைத்தான் விளக்குகிறது. ஜடப் பிரபஞ்சம் ஜீவப் பிரபஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித வாழ்விலும் உண்டு. நம் செயலுக்கெல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அநுபவிக்கின்ற சுகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் காரணம் நாம் முன்னமே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள்தான். சில சமயங்களில் நம் சொந்த பாப புண்ணிய விளைவோடு, குறிப்பிட்ட வேறு சிலரது பாப புண்ணிய பலனும் நம்மைச் சேருவதாகச் சொல்வதுண்டு. உதாரணமாக, குழந்தைக்கு வியாதி வந்தால், மாதா பிதாவின் பாப பலன் என்பார்கள். அவர்கள் குழந்தைக்கு ஸதா சிசுருஷை செய்வதையும், மனத்தால் அந்தக் குழந்தைக்காக அவர்கள் வேதனைப்படுவதையும் பார்க்கும்போது இதுவும் நியாயம் என்றே தெரியும். எனக்கு இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. அதாவது, நமக்கு ஒரு கெடுதல் வந்தால் அது நம் சத்துருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம்.
பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்திதான். அந்த ஒரே ஈசுவரனுடைய ஆக்ஞைப்படிதான் உலக இயக்கம் முழுதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்பந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்பந்தமில்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான் ஸர்வேச்வரன்.
ஒருவர் செய்கிற கர்மம், அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுக துக்கங்களுக்கு முதற் காரணம். இதற்கே துணைக்காரணமாக—அல்லது அடையாளமாக—கிரகசாரம், தெய்வ குற்றம், ஆரோக்கியக்குறைவு முதலியன அமைகின்றன.
ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால், எல்லாவற்றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிகாரம்; உண்மையான பரிகாரம்.
பூர்வ கர்ம சமாசாரம் எப்படிப் போனாலும் இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதைவிட, புதிய சுமை சேராமல், பாபம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈசுவரனைத் துணைகொள்வதே முக்கியம்.
பூர்வ கர்மத்தால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத்துக்கும் உண்மைப் பரிகாரம் ஈசுவர தியானம்தான்; இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம்தான். துக்கம் தருவதாக இன்னொரு வஸ்துவே இல்லை என்ற அத்வைத அநுபவம் சித்திப்பதே இதன் முடிந்த முடிவான துக்க பரிகார நிலை. அங்கே துக்கமும் இல்லை; சுகமும் இல்லை; இரண்டுக்கும் ஆதாரமான சத்தியம் மட்டும் ஸ்வயம் பிரகாசமாக இருக்கும்.