ஆசார்யர்களின் ஆக்ஞை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் பெயரில் வந்துள்ள பீடங்களில் இருக்கிற எங்களுக்கு, அவர் இட்டுள்ள முக்கியமான ஆக்ஞை என்னவெனில், நாங்கள் எப்போதும் ஈசுவர தியானம் செய்ய வேண்டும். மற்றவர்களையும் தியானம் செய்யுமாறு பண்ண வேண்டும் என்பதே. ஈசுவர தியானம் என்பது எதற்கு? அந்த ஈசுவரன்தான் நாமாக ஆகியிருக்கிறார். அதாவது நம்முடைய நிஜ ஸ்வரூபம் அவரேதானென்று கண்டுபிடித்துக் கொள்வதுதான் லட்சியம். நாம் என்னவென்று எப்படிக் கண்டுபிடித்துக் கொள்வது? தெரியவில்லையே என்றால், ஈசுவரன் என்று சகல கல்யாண குணநிலையனாக ஒருத்தனைச் சொல்கிறோமே அவனைத் தியானித்துக் கொண்டிருந்தாலே போதும். அவனும் நாமும் ஒன்று என்பதால், அவனே, நமக்கு நம்முடைய—அவனுடைய—நிஜ ஸ்வரூபத்தை அநுக்கிரகித்து விடுவான். அப்படி நாமும் அவனும் ஒன்றாகிறபோது ஸகல குணங்களும் போய் நிர்குணமாகிவிடும்.

குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறோம். அவர்கள் சரியாக நடக்காவிட்டால் உபாத்தியாயர் உபயோகமில்லை என்கிறோம். அப்படியே நீங்கள் சரியாக நடக்காவிட்டால் உங்களுக்கு ‘குரு’ என்று சொல்லப்படும் நான் உபயோகமில்லை என்று அர்த்தம்.

ஒருவனைக் கவனித்து நல்வழிப்படுத்துகிற பொறுப்பு இன்னொருத்தருக்கு இருக்கும்போது, அந்த ஒருவன் தப்புச் செய்தால், அந்தத் தப்பு அவனை நல்வழிப்படுத்தாதவரையே சேரும். ‘குடிகள் செய்யும் பாபம் அரசனைச் சேரும்; மனைவியின் பாபம் கணவனைச் சேரும்; சிஷ்யனின் பாபம் குருவைச் சேரும்’ என்று நீதி சாஸ்திரம் சொல்கிறது. சாதாரணமாக குரு என்றால் ஒரு சில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும். ஒருவர் ஜகத்குரு என்றால் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும்? உலகின் அத்தனை பாபமும் வந்து சேரும்.

பாபம் நீங்க ஒரே வழி பகவத் தியானம்தான். இதனால்தான் பகவத்பாதாள் “ஜனங்களைத் தியானத்தில் ஈடுபடுத்துங்கள். அவர்கள் தியானம் செய்யாவிட்டால் அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார். அந்தக் கடமையை செய்ய என்னால் முடிந்த மட்டும் பிரயத்தனம் செய்து வருகிறேன். உங்கள் எல்லோருக்காகவும் தியானம் செய்ய முயலுகிறேன். ஆனால் நீங்களும், அவரவர்களே எவ்வளவுக்கெவ்வளவு தியானம் செய்கிறீர்களோ அவ்வளவுக்கு என் பாரம் குறையும்.

மனசு சுத்தமாவதற்காக, பழைய பாப கர்மப் பலனைத் தாங்கிக் கொள்வதற்காக, புதிய பாபம் செய்யாமலிருப்பதற்காக, எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும். உறுதியாக சங்கற்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது. அநாவஸ்ய வம்பிலும், நியூஸ் பேப்பர் விமர்ஸனத்திலும் செலவாகிற காலத்தை மட்டுப் படுத்தினால் நித்திய சிரேயஸைத் தருகிற தியானத்திற்கு வேண்டிய அவகாசம் நிச்சயம் கிடைக்கும். தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். ஐசுவரியம் இருந்தாலும், தாரித்திரியம் வந்தாலும், கஷ்டம் வந்தாலும், சுகம் ஏற்பட்டாலும், ஆரோக்யம் இருந்தாலும், வியாதி வந்தாலும்—எப்போதும் எத்தனை நாழிகை முடியுமோ அவ்வளவுக்கு தியானம் செய்ய வேண்டும்.

நாம் செய்வதோடு நம் பழக்கத்துக்கு உட்பட்டவர்களையும் தியானம் செய்யும்படி சொல்ல வேண்டும். செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளக்கூடாது. அன்போடு அவர்களுக்குப் படும்படி சொல்ல வேண்டும். அன்போடு சொன்னால் எப்படிப்பட்ட மனமும் கரையும்.

“தியானம் செய்யுங்கள்; மற்றவர்களைச் செய்யச் சொல்லுங்கள்” என்று பகவத்பாதாள் எங்களுக்கு இட்ட ஆக்ஞையைத் தெரிவித்தேன். உங்களைத் தியானம் பண்ணுமாறு செய்கிறோனோ இல்லையோ, ‘தியானம் செய்யுங்கள்’ என்ற ஆதி ஆசாரியாள் ஆக்ஞையைத் தெரிவித்த அளவுக்காவது என் கடமையைச் செய்தவனாகிறேன். அதைச் சொல்லும் பாக்கியம் எனக்கு உங்களால் கிடைத்தது. ஸ்ரீ ஆசாரியாள் எதைச் சொல்ல ஆக்ஞைச் செய்தாரோ அதைக் கேட்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்களால் என் கடமையில் ஒரு பங்கையேனும் செய்த லாபத்தை அடைந்தேன். நீங்களும் ஆத்ம லாபத்துக்கான உபாயத்தைக் கேட்டுக் கொண்டீர்கள்.நமக்குள் பரஸ்பர லாபம் உண்டாயிற்று.

இதை நன்றாக மனஸில் வாங்கிக் கொண்டு பூரண லாபம் பெறுங்கள். இந்த ஜன்மா முடிகிறபோது, “அப்பாடா, பிறவி எடுத்ததன் பலனை அடைந்து விட்டோம். இனி பயமில்லாமல் போய்ச் சேரலாம்” என்று உறுதியும் திருப்தியும் பெறுகிற அளவுக்கு நல்ல மார்க்கத்தில் நாம் செல்லப் பரமேசுவரன் எல்லோருக்கும் பூரண அநுக்கிரஹம் புரிவானாக!

மனம் கெட்டுப்போய் எவ்வளவோ பாபம் செய்திருக்கிறோம். குழந்தையாக இருந்ததிலிருந்து ஈசுவர தியானம் செய்திருந்தால் இவ்வளவு நாள் எவ்வளவோ பாபம் போயிருக்கும். இப்பொழுதோ மேலேயும் பாபத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை நாட்கள் ஈசுவர சரணாரவிந்த தியானம் செய்கிறோமோ அவ்வளவு நாட்களும் நம்முடைய பிறவிப் பயனை நாம் அனுபவித்தவர்களாகிறோம். இந்த ஜன்மத்தை எடுத்ததற்குப் பலன் அதுதான்.

நாம் எவ்வளவு நாழிகை தியானம் பண்ணுகிறோம் என்று அவரவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். தினந்தோறும் பல காரியங்களைச் செய்து வருகிறோம். ஆனாலும் ஈசுவரத் தியானம் மிகவும் கொஞ்சந்தான் செய்திருப்போம். வம்பு, வீணில் செலவான காலமெல்லாம் ஈசுவரத் தியானத்தில் செலவழித்திருப்போமானால் இப்பொழுது பாப மூட்டைக்குப் பயப்பட வேண்டாம். இப்பொழுது மூட்டை வரவர ஏறிக்கொண்டே இருக்கிறது. நாம் பூலோகத்தில் வந்துவிட்டோம். இனி யாராக இருந்தாலும் போயாக வேண்டும்; இதுவரை இந்த லோகமானது அழுக்கை ஏற்றிக் கொள்வதற்கே இடமாக இருந்துவிட்டது. இப்படியிருந்தது போதும். இனிமேல் இது அழுக்கை அலம்புகிற இடம் என்று ஆக்கிக் கொள்வோம். தேஹம், மனசு, சாஸ்திரம், க்ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகில்தான் இருக்கின்றன. நாம் வாக்கினாலும் மனத்தினாலும் கைகால் முதலியவற்றாலும் பாபம் செய்து இருக்கிறோம். அந்தப் பாபங்களையெல்லாம் வாக்கையும், மனசையும், அவயங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிட வேண்டும். நாம் இந்த உலகை விட்டுப் போவதற்குப் ‘பாப மூட்டை’ இல்லை என்று சொல்லும்படி செய்து கொண்டால், அப்புறம் பஞ்சைப்போல் ஆனந்தமாகப் பறந்து போகலாம். எங்கிருந்து புறப்பட்டோமா அங்கேயே போய்ச் சேர்த்துவிடலாம். அப்புறம் மாறாத ஆனந்தமாகவே இருக்கலாம். ‘பாபிகளையும் பரமாத்மாவாக்குகிறவர்’ என்று கன்னட பாஷையில் நம் ஆசார்யாளைப் பற்றி ஒரு வசனம் இருக்கிறது. துராத்மா என்று நாம் சொல்கிறவனும் அந்தப் பரமாத்மாவைப் தவிர வேறில்லை என்று சொல்லி அந்த நிலையை இவன் அடைவதற்கு ஆசார்யாள் படிகட்டுப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இது கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாகச் சென்று ஞானத்தில் முடிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is த்வைதம் ./. பௌத்தம் = அத்வைதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  தர்மமே தலைக்காக்கும்
Next