உலகம் பரவிய மதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

இப்போது ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற நமது மதம் ஒன்றே ஆதியில் லோகம் முழுதும் பரவியிருந்தது! அந்த ஒரே மதம் இருந்ததால்தான் அதற்குத் தனியாகப் பெயர் வைக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதனால்தான் நம் ஆதார நூல்களில் ஹிந்து மதத்துக்குப் பெயரே இல்லை — என்பது என் அபிப்பிராயம்.

மிக மிகப் பழங்காலப் புதைபொருள் ஆராய்ச்சிகளைப் பார்த்தால் எல்லா அந்நிய தேசங்களிலுமே நமது வேத சமய சம்பந்தமான அம்சங்களை நிறையப் பார்க்கிறோம். உதாரணமாக, கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 1300 வருஷங்களுக்கு முன்னால் எகிப்து தேசத்தில் இரண்டு அரசர்கள் செய்து கொண்ட உடன்படிக்கை சாஸனம் பூமிக்கடியிலிருந்து கிடைத்திருக்கிறது. அதில் ‘மித்ரா வருண’ சாட்சியாக இந்த உடன்படிக்கை செய்யப்படுவதாகச் சொல்லியிருக்கிறது. மித்ரா-வருணர்கள் நமது வேதத்தில் சொல்லப்பட்ட தேவதைகள். மடகாஸ்கரில் உள்ள ஊர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் ஸம்ஸ்கிருத மூலத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது.* ராமேஸஸ் என்ற ராஜப் பெயருக்கும் நம் ராமனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

பூகோளத்தின் கீழ்ப் பாதியிலும் இத்தகைய அடையாளங்களே உள்ளன. மெக்ஸிகோவில் நமது நவராத்திரிப் பண்டிகையின்போது ஓர் உற்சவம் நடக்கிறது. அதற்கு ‘ராம ஸீதா’ என்று பெயர். அங்கே பூமியே வெட்டும் இடங்களிலெல்லாம் பிள்ளையார் விக்கிரம் அகப்படுகிறது.** ஸ்பெயின் தேசத்தார் புகுந்து அந்த நாட்டை வசப்படுத்துமுன் அங்கிருந்த பழங்குடிகள் ஆஸ்டெக்ஸ் (Aztecs) இது ஆஸ்திக என்பதன் திரிபே. பெருவில் சரியாக விஷு புண்ணிய காலத்தில் சூரியாலயத்தில் பூஜை செய்கிறார்கள். இவர்களுக்குப் பெயரே இன்காஸ். ‘இனன்’ என்பது சூரியனுடைய பெயர். ‘இனகுல திலகன்’ என்று ராமனைச் சொல்கிறோமே!

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் நிர்வாணமாக ஆடுகிற படங்களை ஒரு புஸ்தகத்தில் பார்த்தேன். (ஸ்பென்ஸர், கில்லன் என்பவர்கள் எழுதிய Native Tribes of Central Australia என்கிற புத்தகத்தில் 128, 129 என்ற எண்ணுள்ள படங்கள்). அதன்கீழ் சிவா டான்ஸ் என்று போட்டிருந்தது. நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். ஆடுகிற ஒவ்வொருவர் நெற்றியிலும் மூன்றாவது கண் வரைந்திருக்கிறது.

போர்னியோ தீவில் பிரம்ம சிருஷ்டி முதல் யாருமே உள்ளே நுழையாத காடு (Virgin Forest) என்று பெரிய ஒரு காட்டைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதில் உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்தபோது, நம் கிரந்த லிபியில் எழுதியதுபோல் ஒரு சாஸனம் அகப்பட்டது. அதில் இன்ன மஹாராஜா, இன்ன யக்ஞம் செய்தான். இன்னவிடத்தில் யூபஸ்தம்பம் நட்டான். பிராமணர்களுக்கு கற்பக விருட்ச தானம் செய்தான் என்று கண்டிருக்கிறது. இதை Yupa inscription of Mulavarman of Koeti என்கிறார்கள். நம் மதத்தை ரொம்பப் பரிகாசம் செய்த இங்கிலீஷ்காரர்கள்தான் இத்தனை விஷயங்களையும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இவையெல்லாவற்றையும்விட, எனக்குத் தோன்றுகிற ஒன்று சொல்கிறேன். வேடிக்கையாக இருக்கும். ‘ஸகரர்கள் யாகக் குதிரையைத் தேடிப் பாதாளத்துக்குப் வெட்டிக் கொண்டே போனார்கள். அப்போது உண்டான கடலே ஸகரர் பெயரில் ‘ஸாகர’ மாயிற்று. கடைசியில் கபில மகரிஷியின் ஆசிரமத்துக்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள். அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை ஹிம்சித்தார்கள். அவர் திருஷ்டியினாலே அவர்களைப் பொசுக்கிச் சாம்பலாக்கிவிட்டார்’. இது ராமாயணக் கதை. நம் தேசத்துக்குக் நேர் கீழே உள்ள அமெரிக்காவைப் பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம்—(மதுரை என்பது மருதை என்கிற மாதிரி) கலிபாரண்யமாக-கலிபோர்னியாவாக-இருக்கலாம். அதற்குப் பக்கத்தில் குதிரைத் தீவு (Horse island) , சாம்பல் தீவு (Ash island) இவை உள்ளன.

ஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது. ஸஹாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்கிறார்கள். ஸாகரம்தான் ஸஹாராவாயிற்றோ என்று தோன்றுகிறது.

இப்படி உலகம் முழுக்க நம் மதச் சின்னங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘நம்மவர்களில் சிலர் இங்கேயிருந்து அங்கே போனார்கள். அந்தத் தேசத்தவர்கள் இங்கே வந்தார்கள், பலவித பரிவர்த்தனை ஏற்பட்டது’ என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். எனக்கோ எல்லாவிடத்திலும் ஒரே தர்மம்தான் இருந்தது; இந்தச் சின்னங்கள் அங்கங்கேயே ஆதியில் இருந்தவர்களால் ஏற்பட்டவை என்றுதான் தோன்றுகிறது.

சரித்திர காலம் என்று சொல்லப்படுகிற ஒரு இரண்டாயிர மூவாயிர வருஷத்துக்கு உட்பட்ட சான்றுகள் மற்ற தேசங்களில் கிடைப்பதைப் பார்த்து, இந்தியர்கள் அங்கெல்லாம் சென்று அங்குள்ள பழைய நாகரிகத்தை அகற்றிவிட்டு அல்லது அதற்குள்ளேயே ஊறிப் போகிற மாதிரி, ஹிந்து நாகரிகத்தைப் புகுத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் நாலாயிரம் வருஷம், அதற்கும் முற்பட்ட காலங்களில்கூட வைதிக சின்னங்கள் பல தேசங்களில் இருக்கின்றன. அதாவது அந்த தேசங்களில் நாகரிக வாழ்வு (Civilization) தோன்றின போதே இந்த வைதிக அம்சங்கள் அங்கே இருந்திருக்கின்றன. இதற்குப் பிற்பாடுதான் அந்தத் தேசத்துப் பழங்குடிகளுக்கென்று ஒரு மதமே தோன்றுகிறது. கிரீஸில் இப்படி ஒரு பூர்வீக மதம், பல தெய்வங்களுக்குப் பிறகு பெரிய பெரிய கோயில் கட்டி வழிபடுகிற மதம் உண்டாயிற்று. அதிலும் வைதிக சம்பந்தமான அம்சங்கள் இருக்கின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்த பகுதிகளில் இருந்த ஸெமிடிக், ஹீப்ரு மதங்களிலும் வேத மதத்தில் இருக்கிற அம்சங்கள்—ஒரு மாதிரி வர்ணாசிரமப்பிரிவினை உள்பட—இருந்திருக்கின்றன. மெக்ஸிகோ போன்ற தேசங்களின் பழங்குடிகளுக்கு (aborgines) ஒவ்வொரு மதம் உண்டு—அவர்களும் வேதத்தில் சொல்லியிருக்கிற மாதிரி இயற்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் தெய்வத்தன்மையைப் பார்த்து அவற்றை ஒவ்வொரு தேவதையாக வழிபட்டிருக்கிறார்கள். இந்த மதங்களில் எல்லாம் ஏகப் பட்ட சடங்கு (ritual) களும் உண்டு.

இப்போது நாகரிகத்தின் உச்ச ஸ்தானத்தில் இருந்த கிரீஸின் (ஹெல்லெனிக்) மதம் உள்பட இவை எதுவுமே இல்லை. இங்கெல்லாம் அநேகமாக கிறிஸ்துவ மதமே இருந்திருக்கிறது. ஜப்பான் வரை மத்திய ஆசிய, கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் பரவியிருக்கிறது. சில இடங்களில் இஸ்லாம் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க வனாந்தரம் மாதிரியான பகுதிகளில் மட்டும், அந்தந்த தேசத்து ஆதி (original) மதம் என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிற மதங்கள் காட்டுக்குடிகளிடையில் (tribal) மட்டும் இருக்கிறது. இப்படிப்பட்ட மிகப் பூர்வீக மதங்களிலேயே வைதிக அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

அதற்கு முன்னால் ஒரு விஷயம். தத்துவங்களை விளக்குகிற போது கதாரூபம் (கதை உருவம்) கொடுப்பதுண்டு—அப்போதுதான் அவை சுலபமாகப் பாமர ஜனங்களுக்குப் புரியும். தத்வம் அப்படியே பொது ஜனங்களிடம் ஏறாது. ஒன்று, கதாரூபம் தர வேண்டும். அல்லது, ஒரு சடங்காக அதை ஆக்கிக் காரியத்தில் செய்யும்படியாகப் பண்ண வேண்டும். இம்மாதிரி சமய கர்மானுஷ்டானங்களைச் செய்யும் போதே அவற்றின் உள்ளே ‘ஸிம்பாலிக்’காக இருக்கிற தத்வங்கள் புரியும். ‘சடங்குகள் எல்லாமே ரூபகம் (ஸிம்பல்) தான்; உள்பொருளைப் புரிந்து கொண்டாலே போதும். சடங்கே வேண்டாம்’ என்று சொல்லுகிறவர்களோடு நானும் சேர்ந்து கொண்டு இதைச் சொல்லவில்லை. தனிப்படச் சடங்கு என்று வைத்துக் கொண்டாலே அதற்குச் சக்தி உண்டுதான். இம்மாதிரியே, ‘புராணக் கதைகள் தத்வ விளக்கம் மட்டுமேதான்; அவற்றையே நிஜம் என்று நம்பக்கூடாது’ என்றும் நான் சொல்ல வரவில்லை. வாஸ்தவத்திலேயே, நடந்த உத்தமமான சரிதங்கள்தான் இவை. அதே சமயத்தில் தானாகவே தத்வங்களையும் நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன. அதேபோல் காரியமாகச் செய்கிறபோதே நமக்கு ஒரு பலனைத் தந்து, பிறகு எந்தப் பலனும் கோராத சித்த சக்தியைத் தந்து, சிரேயஸைத் தருகிற சடங்குகளுக்குள் தத்வார்த்தங்களும் இருக்கின்றன.

ஆனால் நாள்பட்ட வழக்கத்தில் இப்படிப்பட்ட கதைகள் அல்லது சடங்குகள் அவற்றின் உள்ளுறை பொருளாக (inner meaning) இருக்கப்பட்ட தத்வங்களிலிருந்து விலகி விடக் கூடும்; அல்லது அதை மறந்தே போகக் கூடும்.

வெளி தேசங்களில் எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் மூலமான வேத மதத்தோடு சம்பந்தமேயில்லாமல் புதிய மதங்கள் வளர்ந்தபோது இப்படித்தான் வைதிக தத்துவங்கள் உருமாறியிருக்கின்றன.

நான் சொல்ல வந்த உதாரணத்துக்கு வருகிறேன். ஹீப்ரு மதங்களில் ஆதம்-ஈவாள் கதை (Adam and Eve) என்று கேட்டிருப்பீர்கள். ‘அறிவு மரம்’ (Tree of Knowledge) என்று ஒன்று இருந்தது. அதன் பழத்தைப் புசிக்கக்கூடாது என்பது ஈஸ்வராக்ஞை. ஆதம் அப்படியே சாப்பிடாமல் இருந்தான். ஆனால் ஈவ் அதைச் சாப்பிட்டாள். அதன் பிறகு, ‘வாழ்வோ தாழ்வோ அவளுக்கு என்ன சம்பவிக்கிறதோ அதுவே தனக்கும் சம்பவிக்கக்கூடும்’ என்று ஆதமும் அந்தப் பழக்கத்தைச் சாப்பிட்டான் என்பது பைபிள் பழைய ஏற்பாட்டின் (Old Testament) முதல் கதை (Genesis).

நம் உபநிஷத் தத்வங்களில் ஒன்றுதான் இப்படி கதா ரூபமாயிருக்கிறது. அப்படி ஆகும்போது காலம், தேசம் இவற்றின் மாறுபட்டால் குளறுபடியும் உண்டாகியிருக்கிறது, மூல தத்வமே மறைந்து போகிறாற் போல.

உபநிஷத்தில் என்ன சொல்லியிருக்கிறது? ‘பிப்பல மரத்தில் இரண்டு பட்சிகள் இருக்கின்றன. ஒன்று பிப்பலத்தைச் சாப்பிடுகிறது. இன்னொன்று சாப்பிடாமல் மற்றதைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது’ என்று உபநிஷத்து சொல்கிறது. சரீரம்தான் அந்த விருட்சம். அதில் ஜீவாத்மாவாக ஒருத்தன் தன்னை நினைத்துக் கொண்டு விஷயாநுபவங்கள் என்ற பழத்தைத் தின்று கொண்டிருக்கிறான். இவன் ஒரு பட்சி. இந்த சரீரத்திலேயே பரமாத்மா இன்னொரு பட்சியாக இருக்கிறான். அவன்தான் ஜீவனை ஆட வைக்கிறவன். ஆனாலும் அவன் ஆடுவதில்லை. சர்வ சாக்ஷியாக அவன் ஜீவனின் காரியங்களைப் பார்த்துக் கொண்டு மாத்திரம் இருக்கிறான். இந்த ஜீவனுக்கு அவனே ஆதாரமானாலும் அவன் விஷயங்களை அநுபவிப்பதோ—பழத்தைச் சாப்பிடுவதோ—அதற்கான கர்ம பலனை அநுபவிப்பதோ இல்லை. இதை உபநிஷதம், பழம்—அதைச் சாப்பிட்ட பட்சி—சாப்பிடாத பட்சி என்று கவித்வத்தோடு சொல்கிறது. சாப்பிடுபவன் ஜீவன், சாப்பிடாதவன் பரம்பொருள்—தன்னை ஆத்மாவாக உணர்ந்திருக்கிறவன்.

இந்த ஜீவன்தான் ஹீப்ரு மதங்களில் ஈவ் ஆகியிருக்கிறான். ‘ஜீ’ என்பது ‘ஈ’ யாவது ஒரு வியாகரண விதி. ‘ஜ’ வரிசை சப்தங்கள் ‘ய’ வரிசையாக மாறிவிடுவது சகஜம். இப்படித்தான் யமுனா ஜமுனாவாயிற்று. ‘யோகீந்திர்’ என்பது ‘ஜோகீந்தா’ என்றாயிற்று. ‘ஜீவ’ என்பது ‘ஈவ்’ என்றாயிற்று. ‘ஆத்மா’ என்பது ‘ஆதம்’ ஆக மாறிவிட்டது. பிப்பலம் என்பது ஆப்பிள் (apple) என்றாயிற்று; அறிவு விருட்சம் என்பதும் நம் ‘போதி விருட்சம்’ தான். போதம் என்றால் ‘ஞானம்’. புத்தருக்குப் போதி விருக்ஷத்தின் கீழ்தான் ஞானம் உண்டாயிற்று என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? ஆனால், அவருக்கும் முந்தியே அரச மரத்துக்குப் போதி விருட்சம் என்று பெயர் வந்தது.

உபநிஷதமானது தூர தேசம் ஒன்றில் எத்தனையோ காலத்துக்குப் பிற்பாடு மாறி மாறிப் புது ரூபம் எடுக்கிறபோது மூல தாத்பர்யம் மாறிப்போயிற்று. ஒரு போதும் விஷயாநுபோகத்துக்கு ஆளாக முடியாத ஆத்மாவும் பழத்தைச் சாப்பிட்டதாக பைபிள் கதை திசை திரும்பி விடுகிறது. விஷய சுகம் எல்லாம் அடிபட்டுப் போகிற அறிவை நம்முடைய போதி விருட்சம் குறிப்பிடுகிறது என்றால், அவர்களோ விஷய சுகத்தைப் பழுக்கிற லௌகீக அறிவையே Tree of Knowledge என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும், நம் வேத மதம் ஆதியில் அங்கேயிருந்திருக்கிறது என்பதற்கு இதிலிருந்து அத்தாட்சி கிடைக்கின்றதோ இல்லையோ? இன்னொரு உதாரணம் சொன்னால்தான் மூலத்தில் இருப்பது வெளி தேசத்தில் வேறு காலத்தில் ரொம்பவும் மாறிப்போகும்—மாறினாலும்கூட மூலத்தைக் காட்டிக் கொடுக்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை வரும். நம்முடைய திருப்பாவை – திருவெம்பாவைப் பாடல்கள் வேதம் மாதிரி அத்தனை பிராசீனமானவை அல்ல. ஒரு ஆயிரத்தைந்நூறு வருஷங்களுக்குள் அவற்றை ஆராய்ச்சியாளர்கள் கொண்டு வந்து விடுகிறார்கள். எப்படியானாலும் வேத இதிஹாச காலங்களுக்கு மிகவும் பிற்பட்டுத் தோன்றியவர்கள்தான் இந்த இரு பாவைகளைச் செய்த மாணிக்கவாசகரும் ஆண்டாளும். இவர்கள் காலத்துக்கு அப்புறம் கடல் கடந்து ஹிந்து சாம்ராஜ்யங்கள் உண்டாயின. தமிழ்நாட்டின் சோழ ராஜாக்கள்கூட அம்மாதிரி தேசாந்தரங்களில் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக்கிறார்கள். ஆனால் இந்த படை எடுப்பைவிட முக்கியமாக நம் கடல் வாணிபம் பெருகினதையே சொல்ல வேண்டும். வியாபார ரீதியில் நம் அந்நியத் தொடர்பு (Foreign contact) மிகவும் விருத்தியாயிற்று. இந்த வியாபாரிகளைப் பார்த்தே பல தேசங்களில் ஹிந்து நாகரிகத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு நம் மத அம்சங்களைத் தாங்களும் எடுத்துக் கொண்டார்கள். தூரக் கிழக்கு (Far – East ) என்று சொல்கிற நாடுகளை இவற்றில் முக்கியமாகச் சொல்ல வேண்டும். பாலி மாதிரி தேசங்கள் முழுக்க ஹிந்துவாயின. கம்போடியா, இப்போது தாய்லாந்து என்கிற ஸயாம், இந்தோ சைனா முழுவதும் பரவி, மணிலா இருக்கிற ஃபிலிப்பைன்ஸ் எல்லாம்கூட ஹிந்து கலாச்சாரத்துக்குள் வந்தன. அதை ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் என்பார்கள்.

ஆக, ரொம்பவும் ஆதியில் எங்கேயும் வேத மதமே இருந்தது ஒரு நிலை; அப்புறம் அங்கங்கே புது மதங்கள் ஏற்பட்டது ஒரு நிலை; பிறகு இந்த மதங்கள் எல்லாம் மங்கிப் போகிற மாதிரி கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் இவை மட்டுமே அங்கெல்லாம் பரவிய நிலை; இதற்கப்புறம், சரித்திரத்தில் நன்றாக உறுதிப்பட்டுவிட்ட காலத்தில் மறுபடி இப்போது நான் சொன்னமாதிரி, ஹிந்து நாகரிகச் செல்வாக்கானது பல தேசங்களில் — குறிப்பாக கீழ்த்திசை நாடுகளில் ஜீவ களையுடன் ஏற்பட்டது ஒரு நிலை. இந்தக் கட்டத்தில்தான் அங்கோர்வாட், பேராபுதூர், ப்ரம்பானன் மாதிரி பெரிய பெரிய தமிழ்நாட்டுக் கோயில்கள் அங்கே எழும்பின. இந்தக் கட்டத்தில்தான் நம்முடைய திருப்பாவையும் திருவெம்பாவையும் கூட ஸயாமுக்கு—இப்போது தாய்லாந்து என்கிறார்கள்—சென்றிருக்கின்றன.

இதற்குச் சான்றாக இப்போதும் அங்கே வருஷா வருஷம் இங்கே நாம் இந்தப் பாவைகளைப் பாராயணம் பண்ணுகிற அதே மார்கழி மாதத்தில் ஒரு பெரிய உத்ஸவம் நடக்கிறது. இரண்டு பாவைகளும், சைவத்தையும் வைஷ்ணவத்தையும் சேர்த்து வைக்கிற மாதிரி இந்த உத்ஸவத்தில் பெருமானுக்குரிய டோலோத்ஸவத்தை (ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதை) சிவபெருமான் வேஷத்தைப் போட்டுக் கொள்கிற ஒருத்தனுக்கு ஸயாம் தேசத்தில் செய்கிறார்கள். சரி அவர்களுக்குப் ‘பாவை’ நூல்களைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டால், அடியோடு ஒன்றும் தெரியாது. அப்படியானால் இந்த உத்ஸவம் மார்கழியில் நடக்கிறது என்பது ஒன்றுக்காக அந்தப் பாவைகளோடு சேர்த்துப் பேசுவதற்கு ஆதாரம் இல்லை என்று தோன்றலாம். பின் நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், அவர்கள் இந்த உத்ஸவத்துக்குப் பெயரே ட்ரியம்பாவை, ட்ரிபாவை (Triyambavai, Tripavai) என்கிறார்கள். இப்போது பைபிள் படிப்பவர்களுக்கு உபநிஷத சமாச்சாரமே தெரியாவிட்டாலும், அதிலிருந்து வந்த கதை மாத்திரம் அவர்களிடம் இருக்கிற மாதிரி, தாய்லாந்துக் காரர்களுக்கு இப்போது திருப்பாவை – திருவெம்பாவை பாராயணம் அடியோடு விட்டுப் போய்விட்டது என்றாலும், அவர்கள் இதே தநுர் மாசத்தில் சிவ வேஷம் போட்டுக் கொண்டவனுக்காக நடத்துகிற டோலோஸ்தவத்துக்கு “ட்ரியம்பாவை, ட்ரிபாவை” என்ற பெயர் மட்டும் இருக்கிறது! சரித்திர காலத்துக்குள் இப்படிப்பட்ட மாறுபாடுகள் உண்டானால், மூவாயிரம் நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட சமாசாரங்கள் வெளிநாடுகளில் எத்தனையோ திரிந்தும் மாறியும் தானே இருக்கும்? இத்தனை மாறினாலும் எல்லாவற்றிலும் வேத சம்பிரதாயத்தின் அடையாளங்கள் “இதோ இருக்கிறோம்” என்று தலை நீட்டுகின்றன.

சரித்திர காலத்துக்கு முற்பட்டவர்கள் என்று வைக்கப்பட்ட பழங்குடிகளின் மதங்களில்கூட நம் சமய சின்னங்கள் இருக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? அத்தனை காலத்துக்கு முந்தி, நாகரிக வாழ்க்கையே உருவாகாத தூர தூர தேசங்களுக்கு இந்தியாவிலிருந்து படையெடுத்தோ வியாபாரத்துக்காகவோ போய் நம் நாகரிகத்தைப் பரப்பினார்கள் என்றால், அது பொருத்தமாகவே இல்லையே! அதனால்தான் ‘இங்கிருந்து கொண்டுபோய் அங்கே புகுத்தவில்லை; ஆதியில் லோகம் முழுக்கவே வேத மதம்தான் இருந்திருக்க வேண்டும்’ என்று எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் அவை திரிந்து திரிந்து இப்போது அந்தந்த தேசத்து ‘ஒரிஜினல்’ மதங்களாக நினைக்கப்படுபவையாக ஆகி, பிற்பாடு அங்கும் சரித்திர காலத்துக்கு உட்பட்ட கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம் ஆகியன பரவியிருக்க வேண்டும்.


*Treaty of Rameses II with the Hittites.

** Baron Humboldt-quoted in Har Bilas Sarada’s ‘Hindu Superiority’

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is பெயரில்லாத மதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  நம் மதத்தின் தனி அம்சங்கள்
Next