வேற்றுமையில் ஒற்றுமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

வர்ண தர்மத்தைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. முதலில் ஆகாயக் கப்பலில் காற்றுப் பையை (gas bag) ஒன்றாக அமைத்தார்கள். பிறகு அதில் ஓர் ஓட்டை விழுந்தால்கூடக் கப்பலே கெட்டு விழுந்து விடுகிறது என்று கண்டு கொண்டார்கள். அதனால் சிறிது சிறிதாகப் பல காற்றுப் பைகளை வைக்கலானார்கள். தனித்தனியாக இருந்தாலும் எல்லாம் ஒரே இடத்தில் நெருங்கியிருந்து ஒன்றையே தாங்கிக் கொண்டிருந்தன. கப்பல் பழுதடையாமல் இருந்தது. இதுவேதான் நம் மதத்தில் தனித்தனி தர்மம் என்று பிரித்து வைத்திருக்கிற ஏற்பாடு. வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்பது இதுதான்.

ஏகப்பட்ட சுல்லிக் கட்டைகளை சேர்த்துப் பிடித்து ஒரு கட்டாகக் கட்டுவது என்றால் அது சிரம சாத்தியமான காரியம். அப்படியே சிரமப்பட்டு ஒரு கட்டாகக் கட்டினாலும்கூட அது சுலபத்தில நெகிழ்ந்து கொடுத்துத் தளர்ந்து விடும். முதலில் ஒரு சுள்ளியை ஆட்டி எடுக்கிற மாதிரி நெகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டாலே போதும். அந்த ஒன்றை எடுத்ததால் தளர்ச்சி ஜாஸ்தியாகி இன்னொரு சுல்லியைச் சுலபமாக உருவி விடலாம். இப்படி இரண்டு மூன்று என்று எடுத்து விட்டால் அப்புறம் கட்டு ஒரேயடியாக தொள தொளவென்று தளர்ந்துபோய் அத்தனை சுள்ளிகளும் தனியாக விழுந்துவிடும்.

மாறாக முதலிலேயே அத்தனை சுள்ளிகளையும் ஒரே கட்டாகக் கட்டாமல் கைக்கு அடக்கமாகப் பத்துப் பதினைந்து என்று சேர்த்து சின்னக் சின்னக் கட்டுகளாகப் போடுவதாக வைத்துக் கொள்ளுங்கள்; இது ஒவ்வொன்றும் கையடக்கமாக இருப்பதால் தளராதபடி நல்ல பிகுவாகக் கட்டிவிட முடியும். அப்புறம் இந்தச் சின்ன சின்னக் கட்டுகளையெல்லாம் சுலபத்தில் ஒன்றாக அடுக்கி எல்லாவற்றையும் சேர்த்து பெரிய கட்டாகப் போடலாம். ஒட்டு மொத்தமாக அத்தனை சுள்ளிகளையும் வைத்துப் போடுகிற கட்டைவிட இப்போது நாம் போடுகிற பெரிய கட்டு இன்னும் விறைப்பாக, உறுதியாக இருக்கும். அது மட்டுமில்லை. இந்தப் பெரிய கட்டு கொஞ்சம் தளர்ந்தால்கூட ஒரு தனிச் சுள்ளி விழுகிற மாதிரிச் சின்னச் சுள்ளிக்கட்டு விழாது. அதாவது பெரிய கட்டு பந்தோபஸ்தாகவே இருக்கும். என்றைக்கும் அது கட்டு விட்டுப்போகாது.

சின்னக் கட்டுகளில் எதுவோ ஒன்று தளர்ந்து கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுகூட அதிலுள்ள சுள்ளிகள் மட்டும் விலகுமே தவிர, மற்ற கட்டுகள் எல்லாம் அப்படி அப்படியே பத்திரமாக இருக்கும். அவற்றிலுள்ள சுள்ளிகள் கொஞ்சங்கூடக் கலகலத்துப்போய் விடாது.

ஒரு பெரிய ஜனசமூகத்தை ஒரே அமைப்பிலே போட்டு கட்டுகிறேன் என்றால் அது முடியாத காரியம். ஆண்டளிக்க முடியாத சமுதாயத்தை யார், எப்படிக் கட்டுப் பாட்டில் வைத்து நிர்வகிப்பது? இதற்காகத்தான் ஒவ்வொரு தொழிலைச் செய்யப் பரம்பரையாக ஒரு ஜாதி என்று பிரித்து தனித் தனிக் கட்டுகளாக வைத்தார்கள். இதிலிருக்கிற கட்டுக் கோப்பை யாரும் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வர்ணத்தினரும் சிறு கட்டுகளாக – ஜாதிகளாக – பிரிந்தார்கள். அவரவருக்கும் “ஜாதி நாட்டாண்மை” என்று ஒன்று இருந்தது. அந்தந்த நாட்டாண்மைக்காரர்கள் தங்கள் தங்கள் சமூகத்தினர் ஒழுங்கு தப்பினால் அவர்களைத் தண்டித்தார்கள். இப்போது சர்க்கார்கூடத்தான் ஜெயிலில் போட்டு சிக்ஷிக்கிறது. ஆனால் இது ஒன்றும் குற்றவாளிகள் நெஞ்சில் உறைப்பதில்லை. அதனால் குற்றங்கள் பாட்டுக்கு வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. நாட்டாண்மையில் கொடுத்த தண்டனையோ சுரீலென்று உறைத்ததால் ஜனங்கள் தப்புத் தண்டாவில் இறங்காமல், இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூடிய மட்டும் யோக்கியர்களாகவே இருந்து வந்தார்கள். அதுவரை போலீசுக்கும், மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கும் வேலை ரொம்பக் குறைச்சலாகவே இருந்தது.

அதென்ன அப்படிப்பட்ட தண்டனையை நாட்டாண்மைக்காரர்கள் கொடுத்தார்கள் என்றால், ஜாதி ப்ரஷ்டம் என்பதுதான் அது. ஒரு சக்கிலியாக இருக்கட்டும், பரியாரி (நாவிதன்)யாக இருக்கட்டும் – எவராகத்தான் இருக்கட்டும் – இப்போது பிற்பட்ட (Backward) தாழ்த்தப்பட்ட (depressed) என்றெல்லாம் சொல்கிற எந்த ஜாதியினராக இருந்தாலும்கூடத்தான் – அவரவருக்கும் தன் ஜாதியை விட்டுத் தள்ளிவிடுவார்கள் என்றால், அதுவே சுரீலென்று மனதில் தைத்தது. அது தாங்க முடியாத பெரிய தண்டனை, மகத்தான அவமானம் என்று தோன்றியது. இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த ஜாதியாரும் எந்த ஜாதியாரையும் மட்டம் தட்டி வைக்கவில்லை. அந்தந்த ஜாதியாரும் தங்கள் விவகாரங்களைப் பொறுத்தமட்டில் தாங்களே ராஜா என்கிற பூரண திருப்தியோடு இருந்திருக்கிறார்கள் என்றுதானே தெரிகிறது? உசத்தி-தாழ்த்தி அபிப்பிராயங்கள் இருந்திருந்தால், தானாகவே பலவிதமான தாழ்வு மனப்பான்மைகள் (inferiority complex) உண்டாகித்தான் இருக்கும். பிராம்மணனையும் க்ஷத்திரியனையும் தவிர ஜாதியார் எவருக்கும் தங்கள் ஜாதியிடம் மதிப்பு, கௌரவ புத்தி, விசேஷமான பிடிப்பு இருந்திருக்க முடியாது. இதெல்லாம் இல்லாவிட்டால் “ஜாதிப்ரஷ்ட”த்தைப் பொருட்படுத்தியே இருக்க மாட்டார்கள். ஆனால், நடைமுறையில் ஜாதி என்ன பெயரில் சின்னச் சின்னச் சமுதாயங்களாக ஜனங்கள் இருந்தபோது, தங்களுக்குள் பரஸ்பரமான அன்பும் விசுவாசமும் ஏற்பட்டு, அதிலே ஒரு பந்துத்துவமே உண்டாயிற்று. அதனால்தான் ‘ஜாதியிலிருந்து தள்ளி விடுவோம்’ என்றால் அது பெரிய தண்டனையாகத் தோன்றியது. இப்போது பிற்பட்டவர்களாக இருப்பதால் பலவித சலுகைகள் கிடைக்கின்றன என்பதற்காக வேண்டுமானால் பலர் தங்கள் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மனப்பூர்வமாக அதில் கௌரவ புத்திவைத்து அபிமானிக்கவில்லை. அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட சலுகைக் எதுவும் கிடையாது. ஆனாலும், மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்வரை நாம் பார்த்தது என்னவென்றால் அவர்களுக்கும் தங்கள் ஜாதியில் ஆழமான அபிமானம் இருந்திருக்கிறது. இப்போதுபோல் இன்னொருத்தரிடம் போட்டியும் எதிர்ப்பும் இருப்பதால் தங்களுக்குள் அபிமானம் பாராட்டிக் கொள்ளவில்லை. அப்போது இந்த ஜாதிச் சண்டை, போட்டாபோட்டி எல்லாம் இல்லவே இல்லை. மெய்யாகவே அவரவருக்கும் தங்கள் ஜாதியில் இருந்து கொண்டு, அதற்கான தொழிலைச் செய்து கொண்டு, அதற்கென்று ஏற்பட்டுள்ள தனிச் சடங்குகள், விதிகள், ஆசாரங்கள், தர்மங்களைப் பின்பற்றிக் கொண்டிருப்பதில் சந்துஷ்டியும் பெருமிதமும் (pride) இருந்தன.

இப்போது கலகம் செய்கிறவர்களிடம் போலீஸ் வந்தால் போலீஸாரிடமே கலகக்காரர்கள் அடிதடியில் இறங்குகிறார்கள்! ஆனால் முன்னமே ஜாதி நாட்டாண்மையில் எதிர்த்து இப்படி யாரும் சண்டை போட்டதில்லை. காரணம் இப்போதிருக்கிற போலீஸ் வெளியிலிருந்து செய்கிற கட்டுப்பாடாயிருக்கிறது. ஜாதி நாட்டாண்மையிலோ, ‘நம்மவர்கள்’ என்ற பாந்தவ்யம், அபிமானம் இருந்தது. இதனால் ஆயுத பலமும் படை பலமும் இல்லாமலே அன்றைய நாட்டாண்மை இன்றைவிட வெகு சிறப்பாகக் குற்றங்களைக் குறைத்து வந்தது. எல்லாரும் ஜாதி, அதற்கான தொழில், அதற்கென்று ஏற்பட்ட ஆசாரங்கள் என்று பிரிந்திருந்தும் ஒற்றுமையாக இருந்தார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is வர்ண தர்மம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  காரியத்தில் பேதமும் மனோ பேதமும்
Next