‘ஜாதி என்றாலே மகா அநாகரிகமான ஏற்பாடு என்று இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டும்படியாயிருப்பதற்கு யார் காரணம்? ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விழுவதற்கு யார் பொறுப்பாளி?’ என்று ஒரு கேள்வியை எழுப்பினேன் அல்லவா?
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி.
பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.
சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது; இவன் சொத்தே சேர்க்கக்கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன் வாழ்க்கை நடத்தி, வேத சப்தத்தாலும் யக்ஞங்களாலும் லோக க்ஷேமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வரையில், இவனிடம் மற்ற எல்லா ஜாதியாரும் குறைவில்லாத அன்பும் மரியாதையும் காட்டிவந்தனர். இவனையே உதாரணமாக, வழிகாட்டியாக, முன்மாதிரியாக (example, guide , model) வைத்துக் கொண்டார்கள்.
இப்போது தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தைவிட்டு, பட்டணத்துக்கு இவன் வந்து, இங்கிலீஷ்காரன் தந்த படிப்பு, அவன் கொடுக்கிற உத்தியோகம், அவனுடைய வாழ்க்கை முறை இதை எல்லாம் எடுத்துக் கொண்டு, இதனால்தானே ஏதோ ரொம்பவும் நாகரிகத்தில் உயர்ந்து விட்டதுபோல் ‘தாட் பூட்’ என்று பண்ணியதை, மற்ற ஜாதியினர் பார்த்தார்கள். இதுவரை நல்லதெற்கெல்லாம் இவனை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டிருந்த அவர்கள் இப்போது ஒழுங்கு தப்பிப் போவதிலும் இவனையே பின்பற்ற ஆரம்பித்தார்கள். தாங்கள் பாட்டுக்குத் திருப்தியோடு செய்துவந்த தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தையும்விட்டு, நகர வாசம் (town life) இங்கிலீஷ் படிப்பு, வெள்ளைக்கார அரசாங்க உத்தியோகம் இவற்றுக்கு மற்றவர்களும் ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.
பிராமணனே புத்தியால் ஆகிற காரியங்களை ஆயிரம் பதினாயிரம் வருஷங்களாகச் செய்து வந்திருக்கிறான் அல்லவா? ஆதியிலெல்லாம் இவனுடைய புத்தி கொஞ்சம்கூடத் தன்னலனுக்குப் பிரயோஜனமாகாமல் சமூக க்ஷேமத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்டு வந்தது. இந்தத் தியாக விசேஷத்தாலேயே அது பிரகாசமான சாணை தீட்டிய கத்தி மாதிரிக் கூர்மையாக இருந்தது. இப்போது, இவனுக்கு சமூக க்ஷேம நோக்கம் போய், தன்னலமான லௌகிக ஆசைகள் எல்லாம் வந்தபின் அந்த புத்திப் பிரகாசம் மழுங்கவேண்டியதுதான். இவனுக்கென்று ஏற்பட்ட கடமைகளைச் செய்யவே முன்பு இவனுக்கு புத்தி வன்மையும் பகவத் பிரசாதமாகக் கிடைத்திருந்தது. கடமையை விட்டபின் அந்த புத்திக்கூர்மை மழுங்க வேண்டியதுதான்.
ஆனாலும் — சைக்கிளில் காலால் பெடல் பண்ணுவதை நிறுத்திய பிற்பாடுகூட, ஏற்கெனவே உந்தின வேகத்தின் விசேஷத்தால், கொஞ்சம் தூரம் அது பெடல் பண்ணாமலே ஓடுகிறது அல்லவா? அந்த மாதிரி, பிராமணன் ஆத்மீக வித்தைகளை விட்டு லௌகிக வித்தைகளில் போய் விழுந்த பின்னும், ஏற்கெனவே தலைமுறை தலைமுறையாக இவனுடைய பூர்விகர்கள் பெடல் பண்ணியிருந்த பலம் இவனுக்கும் கொஞ்சம் மிஞ்சியிருந்தது. இவனாகப் பெடல் பண்ணாவிட்டாலும் அவர்கள் சேமித்து வைத்த புத்திப் பிரகாசம் இவனுக்கும் இன்னமும் பாரம்பரியமாகக் கொஞ்சம் வந்தது. இந்த மூளை பலத்தினால்தான் இங்கிலீஷ்காரனின் படிப்புமுறையில் ஆச்சரியப்படும்படியாகத் தேர்ச்சி பெற்றான். அவர்களுடைய உத்தியோகம், சட்டம், தொழில் முறைகள் ஆகியவற்றை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டு, இவற்றில் அவர்களுக்கே தெரியாத தந்திரங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிற அளவுக்குச் சதுரனாகி விட்டான்.
முஸ்லீம்கள் ஆட்சிக் காலத்தில்கூட கெடாத வேதரக்ஷணம் வெள்ளைக்காரர்கள் வந்தவுடன் ஏன் கெட்டது என்று ஒரு கேள்வி. இதற்குக் காரணம், வெள்ளைக்காரர்களோடு புது ஸயன்ஸ்களும், இயந்திர (மெஷின்) சகாப்தமும் கூடவே வந்ததுதான்—இதுவரைக்கும் தெரிந்திராத பல புது விஷயங்கள் இப்போது தெரிந்தன. ‘விஷயம்’ என்று மட்டும் எடுத்துக் கொண்டால் இந்த ஸயன்ஸினால் பல உண்மைகள் தெரிய வந்தன. இது நல்லதுதான். ஆனால், இந்த விஷய ஞானத்தினால் ‘காரியம்’ என்று செய்கிறபோது, ஒழுங்கு தப்பிப் போகிறதற்கான சபலங்கள் ஏகப்பட்டதாக உண்டாகிவிட்டன. ஸயன்ஸினால் காரியம் செய்ய மெஷின்கள் உண்டாயின. எலெக்ட்ரிசிட்டி, ஸ்டீம் பவர் எல்லாம் வந்தபின் வெகு விரைவில் பல காரியங்களைச் செய்து கொள்ள முடிந்தது. இவற்றால் பல சௌகரியங்களைச் செய்து கொள்ளலாம் என்றாயிற்று. ஆனால் இந்த செளகரியங்கள் எல்லாம் இந்திரியங்களுக்குத்தான். இந்திரியங்களுக்கு சுகத்தைக் காட்டிவிட்டால் போதும். அது மேலே மேலே கொழுந்துவிட்டுக் கொண்டு, ஆசைகளை விஸ்தரித்துக்கொண்டே போகும். இப்படியாக அவசியமில்லாத—ஆத்மாவையே கெடுக்கிற சுக சாதனங்கள் பெருகின. முன்பின் கண்டிராத இந்த சுகங்களின் ஆசை எல்லா தேச ஜனங்களையும் இழுத்த மாதிரி பிராமணனையும் இழுத்தது. வெள்ளைக்காரனோடு வந்த ஸயன்ஸினால் ஏற்பட்ட இன்னொரு பெரிய அனர்த்தம் அது. ரொம்பவும் பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு, நம்பிக்கையின் மீதும் அநுபவத்தினாலும் ஏற்பட வேண்டிய சமய விஷயங்களைப் பொய், புரளி என்று நினைக்க வைத்தது. முஸ்லீம் ஆட்சியில்கூட தன் ஸ்வதர்மத்தை விடாதவன், இப்போது அதைவிட்டு சௌக்கியங்களைத்தேடி வந்து விட்டான். இங்கிலீஷ்காரனைவிட ‘டிப்டாப்பாக’ டிரஸ் செய்துகொண்டு, சிகரெட் குடிக்கவும், டான்ஸ் ஆடவும் சாமர்த்தியம் பெற்றுவிட்டான். தங்கள் வித்தைகளில் இப்படிக் கைதேர்ந்து விட்டவனுக்கு அவர்களும் நிறைய உத்தியோகம் கொடுத்தனர்.
இப்போதுதான் பெரிய அனர்த்தம் உண்டாயிற்று. ‘இதுவரை தலைமுறை தத்வமாக அவரவருக்கும் ஒரு தொழில் என்று ஏற்பட்டு, ஜீவனோபாயத்துக்கு என்னடா செய்வோம்?’ என்கிற கவலையில்லாமல் நிம்மதியிருந்து வந்தது. இப்போது பிராமணனைப் பார்த்து, மற்றவர்களும் இப்படிப் பரம்பரையாக வந்த தொழிலை விட்டுவிட்டு, பிரிட்டிஷ்காரன் தருகிற உத்தியோகம், அவனோடு வந்த தொழில்கள், பாங்கு, ரயில்வே இவற்றிலேயே போய் விழுந்தார்கள்! அதோடு மெஷின்கள் ஜாஸ்தியாக ஆக, கைவேலையும் குறைந்ததால், சில தொழில்காரர்கள் கஷ்டத்துக்கு ஆளாகி, வேறு உத்தியோகத்துக்கு வர வேண்டியதாயிற்று. இன்னாருக்கு இன்ன தொழில் என்ற வரையறை இல்லாமல், புதிதாக நம் தேசத்தில் “தொழிலுக்காகப் போட்டி” என்கிற பெரிய விபரீதம் உண்டாயிற்று. போட்டி என்று வந்துவிட்டால் சாதாரணமாகவே அப்புறம் பொறாமை, வயிற்றெரிச்சல், அசூயை, துவேஷம், சண்டை அத்தனை பட்டாளமும் அதன்கூட வந்துதானே ஆக வேண்டும்? அதோடுகூட, இங்கே, விசேஷமாக, முன்னே நான் சொன்னபடி, பூர்வீகர்கள் பெடல் செய்து தந்திருந்த புத்தி பலம் பிராமணனுக்கு அதிகமாக இருந்து படிப்பு, உத்தியோகம் இவற்றிலே இவன் முதன்மைக்கு வந்ததால்—சமூகத்தில் ரொம்பக் குறைச்சல் சதவீதமே இவனுடைய ஜனத்தொகையாக இருந்தும்கூட சர்க்கார் பதவி, காலேஜ், வைத்தியம், சட்டம் (law) எல்லாவற்றிலும் இவனே ரொம்ப ஸ்தானங்களைக் கைப்பற்றியிருந்ததால், மற்றவர்களுக்கு இவனிடம் துவேஷம் வரத்தானே செய்யும்? துவேஷத்தைக் கூடுதலாக்கினால் தன் ஆட்சியைத் ஸ்திரப்படுத்திக்கொள்ளலாம் என்று வெள்ளைக்காரன் கண்டு கொண்டான். ஆரியன்-திராவிடன் Race-theory ஐக் கட்டிவிட்டான். ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தவர்களிடையில் பேதத்தின் விதைகளை நன்றாக போட்டு விட்டான். போட்டிச் சூழ்நிலையில் ஏற்பட்டிருந்த கசப்பில் இந்த யுக்தி நன்றாகப் பலித்துவிட்டது.
துவேஷம் இரட்டிப்பாகிற மாதிரி பிராமணனே இன்னொன்றும் செய்தான். ஒரு பக்கத்தில் ஜாதி தர்மத்தை விட்டுவிட்டு, இவனும் வெள்ளைக்காரனோடு சேர்ந்து ‘பழைய ஏற்பாடு காட்டுமிராண்டித்தனமானது; ஒருத்தரை இன்னொருத்தர் சுரண்டுவது (எக்ஸ்பிளாயிட் பண்ணுவது) கூடாது’ என்றெல்லாம் சமத்துவம் பேசினாலும், இன்னொரு பக்கம் இவன் மற்றவர்களோடு ஒட்டிப்போகாமல், தான் ஏதோ உசத்தி என்று பெருமை கொண்டாடிக் கொண்டான். முன்பும் இவன் மற்றவர்களோடு ஸ்தூலமாக (Physical) ஒட்டிப் பழகத்தான் இல்லை. ஆனால், அதற்கு நியாயம் இருந்தது. பலவித காரியங்களை உத்தேசித்து, அவரவருக்கும் ஆகாரம் முதலியவற்றிலும் மற்ற விஷயங்களிலும் வித்தியாசங்கள் இருந்தாக வேண்டியிருக்கிறது. அவர்கள் வேறு வேறு விதமான சூழ்நிலைகளில் இருந்தாக வேண்டியிருக்கிறது. ஃபிலிமைக் கழுவுகிற இடம் இருட்டாகத்தான் இருக்க வேண்டும்; ஸினிமா ஷூட்டிங் செய்கிற இடத்திலோ நிறைய வெளிச்சம் வேண்டும். ஒரே காரியாலயத்தில் கான்டீனில் இருக்கிறவர்கள் பரம சுத்தமாகக் கைகாலில் அழுக்கில்லாமல் இருக்க வேண்டும். அங்கேயே மெஷினைத் துடைக்கிறவன் எண்ணைப் பிசுக்கோடு அழுக்குச் சட்டை போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். இதனால் இந்த ‘ஸர்வர்’ அந்த ‘மெஷின்மேனை’விட உசந்தவன் என்று அர்த்தமாகுமா? இதே மாதிரி,தன்னலமில்லாமல் புத்தி பலத்தைப் பேணுகிறவன் பட்டினி கிடக்க வேண்டும். சைனியத்திலிருக்கிறவனோ மாம்சாதிகளுக்குக்கூட விலகில்லாமல் புஷ்டியாகச் சாப்பிட்டாலும் தோஷமில்லை. ஆகாரம் வேறாக இருப்பதால் பிராமணனுக்கும் க்ஷத்திரியனுக்கும் துவேஷம் என்று அர்த்தமாகுமா? அதற்காக துவேஷமில்லையே என்று இவன் ஸ்தூலமாக அவனோடு ஒட்டி வாழ்ந்தால், அவனுடனேயே உட்கார்ந்துகொண்டு இவனும் சாப்பிட்டால், அவனுடைய ஆகாராதிகளை நாமும்தான் ருசித்துப் பார்ப்போமே என்ற சபலம் உண்டாகத்தான் செய்யும். அந்தச் சபலம் இவனை இழுத்துக் கொண்டுபோய்க் கடைசியில் இவன் தர்மத்துக்கே ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகிவிடும். அந்தந்த சமுதாயத்துக்கு அந்தந்த குல தர்மம், பழக்க வழக்கம், ஆகார முறைகள்தான் உகந்தவை. ஆனால் சமத்துவம் என்ற எண்ணத்தில் ஸ்தூலமாக (Physical) எல்லோரும் பழகி, அந்த தனித்தனி ஏற்பாடுகளையெல்லாம் பல பட்டறையாகக் குழப்ப ஆரம்பித்தால், அத்தனை காரியமும் கெட்டு, மொத்தத்தில் பொதுக்காரியமே சீர்குலைகிறது. இதனால்தான் அக்ரஹாரம், வேளாளர் தெரு, சேரி என்று கிராமங்களில் பிரித்து வைத்தார்கள். கிராம வாசத்தில் இது முடிந்தது. புதிதாக உண்டான பட்டணவாசத்தில் இது சாத்தியமாக இருக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி ஷிஃப்டில் வேலைக்குப் போய், ஒரே மாதிரி காண்டீனில் உட்கார்ந்து, ஒரே ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும் என்றாகிவிட்டது. இப்படிப் பல தினுசுகளில் கலந்து கலந்துதான் இருக்க வேண்டும் என்றாகி விட்டது. உபவாஸாதி நியமங்களைக் கண்டிப்பாக அநுஷ்டிக்க வேண்டிய பிராமணன் எல்லாவற்றிலும் மற்றவர்கள் போலவே ஆகிவிட்டான். ஆபீஸ் நேரம், காலேஜ் நேரம் எல்லாம் இவனுடைய கர்மாநுஷ்டானங்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் அவற்றை எல்லாம் காற்றிலே விட்டு விட்டு, மற்றவர்களைப் போலவே ஆகிவிட்டான். இதுவரை இவன் அவற்றை அநுஷ்டித்தது மற்றவர்களுடைய க்ஷேமத்துக்காகத்தான்; முக்கியமாகவே அதற்காகவேதான். தர்மகர்த்தா (trustee) மாதிரி, சமூகத்தின் பொருட்டு, இவன் இந்த தர்மங்களை ரக்ஷித்துப் பிரயோஜனத்தை எல்லாருக்கும் தந்துவந்தான். இப்போது ‘அவர்களோடு நானும் ஒன்று, எல்லோரும் சமம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்களுடைய வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக எல்லா ஸ்தானங்களுக்கும் போட்டியாக வந்துவிட்டான். இது போதாது என்று நியமங்களில் அவர்களைவிடத் துளிக்கூட கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்தாலும், உள்ளூற அவர்களை விடத் தான் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களின் துவேஷம் ஜாஸ்தியாகத்தானே செய்யும்?
‘தானும் கெட்டு, சந்திர புஷ்கரணியையும் கெடுத்தானாம்’ என்கிற கதையாகப் பிராமணன் தானும் தர்மத்தை விட்டு, மற்றவர்களுக்கும் அவரவர் தர்மங்களைவிடுகிற மாதிரி செய்துவிட்டான். தன் தர்மத்தை விட்டபின் இவனுக்கு உயர்வு எதுவுமே இல்லை. தன் தர்மத்தைச் செய்தபோதும்கூட, இவனாக உயர்வு பாராட்ட நியாயமில்லை. ‘ஒவ்வொருவரும் ஒன்றைச் செய்கிறார்கள்; நான் இதைச் செய்கிறேன்’ என்றுதான் அடக்கமாக இருக்கவேண்டும். ஆனாலும் தன்னலமில்லாமல், கடும் விரத நியதிகளோடு இவன் தூய்மையாக வாழ்ந்ததைப் பார்த்து மற்றவர்களே இவனுக்கு ஒரு ஏற்றம் கொடுத்து கௌரவித்து வந்தார்கள். இப்போது அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எல்லாரும் தன்னைத் தூற்றும்படி, கரித்துக் கொட்டும்படி இவனே ஆக்கிக் கொண்டு விட்டான்.
ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். சிலபேர் இதற்கு சமாதானம் சொல்கிறார்கள். வேதாத்யயனம், யக்ஞாதி கர்மாக்களுக்கே பிராமணனுக்கு ஸதாஸர்வ காலமும் தேவையாயிருந்தது. ஆயுசுக் காலம் முழுதையும் அதற்கே செலவிடுவது அவசியமாயிருந்தது. இப்படி இவன் வேதம் ஓதுவது, வேள்வி செய்வது, சாஸ்திரங்களை ரக்ஷித்துத் தருவது என்றே பொழுது முழுவதையும் செலவழித்தால், இவனுடைய ஜீவனோபாயத்துக்கு என்ன செய்வது? இவன் பொருள்தேடிப் போக ஆரம்பித்தால், ஆயுட்கால பிறவிப் பணி (life-time mission) நடக்காது. இந்தப் பிறவிப் பணிக்கோ part time போதாது. அப்படியே இவன் வயிற்றுக்காக வேறு வேலையும் வைத்துக்கொண்டால் ஆசாரங்களும் கெட்டுப்போகும். அதன்பின் பத்தியமில்லாத மருந்துபோல் இவனுடைய அத்யயன வீர்யம் குறைந்துபோய், அதனால் லோகத்துக்குக் கிடைக்கிற க்ஷேமம் நஷ்டமாகிவிடும். இதனால்தான் பிராமணன் மாத்திரம் யாசகம் செய்யலாம் என்று சாஸ்திரம் அனுமதித்தது. ‘யாசகம் என்றில்லாமல், ராஜாக்களே இவனுடைய அத்யயனம், யக்ஞம், சாஸ்திர ரக்ஷணம் இவற்றால் ஏற்படுகிற சமூக சிரேயஸை முன்னிட்டு இவனுடைய அத்யாவசியத் தேவைகளுக்கு குறை வைக்கக்கூடாது என்று மானியங்கள் விட்டார்கள். பூதானம், கிருஹதானம், கோதானம், ஸ்வர்ணதானம் எல்லாம் செய்தார்கள். ஆனாலும், ‘அவர்கள்தான் கொடுக்கிறார்களே’ என்று இவர்கள் வரம்பில்லாமல் வாங்கிக்கொள்ளக்கூடாது; அப்படிச் செய்தால் அது ரொம்பவும் இவர்களை இந்திரிய சுகத்தில் இழுத்துவிட்டு ஆத்மா அபிவிருத்தியைக் கெடுக்கும்; அதோடு ரொம்பவும் கைநீட்டி வாங்கிவிட்டால் இவர்கள் கொடுக்கிறவனுக்கு பவ்யப்பட்டு சாஸ்திரங்களை அவர்கள் இஷ்டப்படி வளைத்து அர்த்தம் பண்ண வேண்டிவரும். நடுநிலைமை தப்பிப்போகும்படி நேரிடும்—இந்தக் காரணங்களை உத்தேசித்து தர்ம சாஸ்திரங்கள் பிராமணன் உயிர் வாழ்வதற்கு அதம பட்சமாக எது தேவையோ அதற்கு மேல் ஒரு திருணமாத்திரம்கூட வைத்துக் கொள்ளக்கூடாது என்று விதித்தன. இந்த முறைப்படியே இவர்களும் ராஜாக்களின் போஷணையில் தங்கள் தர்மத்தைச் செய்துகொண்டு வந்தார்கள்.
இங்கிலீஷ்காரர் ராஜ்யம் வந்தபின், இவர்களுக்கு ராஜ மான்யங்கள் இல்லையே. இவர்கள் எப்படி எவ்விதமான வருவாயும் இல்லாமல் உயிர்வாழ முடியும்? அதனால்தான் இங்கிலீஷ் படிப்பு, சர்க்கார் உத்தியோகம் என்று இவர்கள் இறங்கும்படி ஆயிற்று. சந்தர்ப்பச் சூழ்நிலை (force of circumstances) இவர்களை அப்படி நெரித்தது. அதற்காக இவர்களைக் கண்டிக்கக் கூடாது என்று ஒரு சமாதானம் சில பேர் சொல்கிறார்கள்.
இதில் கொஞ்சம் நியாயமும் இருக்கலாம். ஆனால் முழு நியாயமும் இல்லை என்றுதான் என் மனசுக்குப் படுகிறது. இங்கிலீஷ்காரனுக்கு முன்னால் மொகலாய சாம்ராஜ்யம் (Moghul Empire), மற்ற பல சுல்தான் ஆட்சி எல்லாம் இருந்ததே. அப்போதெல்லாம் ஏதோ கொஞ்சம் பண்டிதர்கள் தர்பார் உத்தியோகத்துக்குப் போனார்கள் என்றாலும், மற்றவர்கள் ராஜ மானியம் இல்லாமலேதானே தங்கள் தர்மத்தைத் தொடர்ந்து செய்து வந்தார்கள்? அக்ரஹாரம் காலியானது; கிராமம் பாழானது. வேதபாடசாலைகள் சூனியமானது, நிலங்கள் எல்லாம் ஸர்டிஃபிகேட்களாக மாறினது—இந்த அனர்த்தங்கள் எல்லாம் சுமார் நூறு வருஷத்துக்கு உட்பட்ட விஷயங்கள்தானே? அதற்கு முந்தின தலைமுறை வரை வைதிக தர்மம் உருக்குலையாமலேதானே இருந்திருக்கிறது.
இதற்குக் காரணம் ஹிந்து ராஜாக்கள் மட்டும்தான் என்றில்லை; ஹிந்து சமூகத்தில் மற்ற எல்லா வர்ணத்தாருமே வேத தர்மம் நசித்துப் போகக்கூடாது; பிராமண ஜாதி அழிந்து போகக் கூடாது என்று மனசார நினைத்து அதற்காக அள்ளிக் கொடுத்துக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் படிப்பதற்கு பிராமணப் பசங்கள் இல்லாததால் வெறிச்சோடியிருக்கிற நூற்றுக்கணக்காண பாடசாலைகள் இருக்கின்றனவே. இவற்றுக்கெல்லாம் முதல் போட்டு மூலதனம் வைத்திருப்பது யார்? பெரும்பாலும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களும், கோமுட்டிச் செட்டிமார்களும், பண்ணையார்களான வேளாளர்களும்தான். நகரத்தார் செய்த கோயில் திருப்பணிக்குக் கணக்கில்லை. அதே மாதிரி, ‘இந்தக் கோயிலுக்கும் வேர் வேதம். அது இருந்தால்தான் இந்தக் கோயிலில் பூஜையும் சாந்நித்தியமும்’ உண்டு என்ற நம்பிக்கையில், ஒரு ஆலயத் திருப்பணி செய்தால் ஒரு வேத பாட சாலையும் வைக்க வேண்டும் என்று அவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் வைத்திருக்கிறார்கள். வேளாளர்களில் பெரிய நிலச்சுவான்தார்களாக இருந்தவர்களும் இப்படியே வேத பாடசாலைகளுக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். இங்கிலீஷ்காரன் ஆட்சி வந்த பிறகும் அவன் காட்டிய சுகபோக்ய ஜீவனத்தில் மயங்காமல், சாஸ்திரம் விதிக்கிற அளவுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதோடு மட்டும் பிராமணன் வாழ முற்பட்டிருந்தால், அவனுக்கு நிச்சயம் மற்ற சமூகத்தார் அதற்கான வசதிகளைச் செய்து தந்திருப்பார்கள். அவர்கள் இவனைக் கைவிடாதபோதே, இவனாகத்தான் அக்ரஹாரத்தை, வேதபாடசாலைகளை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான். மேல் நாட்டு நாகரிகத்தில் புதிதாக வந்த ஸயன்ஸினால் பெருகி விட்ட போக்கிய வாழ்வில் இவனுக்கு ருசி வந்துவிட்டது. ‘ஆத்மாபிவிருத்திக்கு எந்த அளவு அவசியமோ, அநுகூலமோ, அந்த அளவிற்கு மட்டுமே சரீர போஷணம் செய்து கொண்டால் போதும்’ என்ற உயர்ந்த லட்சியம் போய்விட்டது. ‘சாப்பாட்டுக்கே இல்லையே என்ற நிர்பந்தத்தின் மேல்தான் இவன் தர்மத்தை விட்டான்’ என்ற சமாதானத்தை ஒப்புக் கொள்வதற்கில்லை. அவசியத்துக்கு அதிகமான வஸ்துக்களில் இவனுக்குத் துராசை வந்துவிட்டது என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
கிராமத்தில் சாப்பிட வசதியே இல்லை என்றால், மெட்ராஸ் மாதிரி டவுன்களுக்கு வந்து, ஏதோ வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்தவுடன் இவன் திருப்திப்பட்டிருக்க வேண்டியதுதானே? அப்படி திருப்தி அடைந்திருந்தால் மேலே சொன்னது சரி. நடைமுறையில் நாம் பார்ப்பது என்ன? மெட்ராஸில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால்கூட, டில்லியில் இரண்டாயிரம் தருகிறான் என்றால் இவன் அங்கே ஓடுகிறான்! இங்கே ஏதோ கொஞ்சம் அனுஷ்டிக்க முடிந்த தர்மங்களையும் அங்கே போய் விட்டுவிடுகிறானே! அதற்கப்புறம் நியூயார்க்கில் 4000 டாலர் சம்பளம் கிடைக்கிறது என்றால், கண்டத்தைவிட்டு கண்டம் போய் கண்டபடி வாழ ஆரம்பித்துவிடுகிறானே—கொஞ்சம் மிஞ்சியிருந்த ஆசாரங்களைக்கூட உதறி தள்ளிவிடுகிறானே! ‘மிலிடிரியில் அதிகப் பணம் வருகிறதா?அதிலும் சேருகிறேன். அங்கே மதுபானம், மாம்ஸ போஜனம் எல்லாம் பழகவேண்டியிருந்தாலும் பரவாயில்லை’ என்று பணத்துக்காக எதையும் செய்வதைத்தானே பார்க்கிறோம். ஆகையால் பிராமணன் ஸ்வதர்மத்தை விட்டதற்குச் சொல்கிற சமாதானம் கொஞ்சங்கூட எடுபடவில்லை.
நான் இதற்கு மேலேயே ஒருபடி போகிறேன். இங்கிலீஷ்காரர்களுடன் புது ஸயன்ஸுகள், இயந்திர யுகம் எல்லாம் வந்ததால், நம்மவர்களில் மற்ற ஜாதிக்காரர்களுக்குத் தானாகப் பழைய தர்மங்களில் பிடிப்புப் போய் விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இங்கிலீஷ்காரர்கள் கிளப்பிவிட்ட ஆரிய திராவிட பேத உணர்ச்சியால் மற்ற சமூகத்தார் பிராமணர்களை ரக்ஷிக்கக்கூடாது என்ற முடிவுகட்டியதாகவே வைத்துக் கொள்வோம். (இதெல்லாம் யதார்த்தம் – fact – இல்லை. ஒரு பேச்சுக்காகத்தான் assume பண்ணிக் கொள்ளச்சொல்கிறேன்.) வீட்டைவிட்டு ஓடி எங்காவது படித்து உத்தியோகம் பார்த்தால்தான் ஒரு பிடி சோற்றுக்கு வழி உண்டு என்ற நிலை பிராமணர்களுக்கு வந்ததாகவே வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருந்தால்கூட அவர்களை, “செத்தாலும் நம் தர்மத்தை விடாமல் செய்து கொண்டே சாக வேண்டும்” என்று உறுதியோடு வேதாத்யயனத்தையும் கர்மாநுஷ்டானத்தையும் விடாமலிருந்திருக்க வேண்டும் என்கிறேன்.
ஆனால், முன் தலைமுறைக்காரர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது சொல்லிப் பிரயோஜனமில்லை. அவர்கள் லோகத்தைவிட்டே போய் விட்டார்கள். அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்கிறேனோ, அதையேதான் இன்றைக்கு உள்ளவர்களுக்கும் சொல்கிறேன்.
அதாவது, செத்தாலும் ஸ்வதர்மத்தை விடக்கூடாது. இப்போது மட்டும் சாகாமல் இருக்கப் போகிறோமோ என்ன? பணத்தை நிறையச் சேர்த்துக் கொண்டு, ஆனால் அதைவிட நிறைய அவமானத்தைச் சேர்த்துக் கொண்டு, மற்றவர்களின் அசூயைக்குக் காரணமாக இருந்துகொண்டு, நமக்கான தர்மத்தை விட்டுவிட்ட பிரஷ்டர்களாகச் சாகப்போகிறோம். இதைவிட சாப்பாட்டுக்கு இல்லாவிட்டாலும், நம் கடமையைச் செய்தோம் என்று மூச்சு இருக்கிற மட்டும் பட்டினி கிடந்தாவது வேத ரக்ஷணத்தைச் செய்து சாவது பெருமைதானே! இப்படிச் செய்வதால் மற்றவர்கள் நம்மை பூஷிக்கட்டும் அல்லது தூஷிக்கட்டும். அதைப் பற்றி நமக்கு என்ன வந்தது—யாருக்கும் போட்டியாக இல்லாதவரை நம்மைக் கண்டு நிச்சயம் யாரும் அசூயை, பொறாமை, வயிற்றெரிச்சல் படமாட்டார்கள் அல்லவா? காலத்துக்கு ஒவ்வாத அசட்டுப் பிச்சுக்கள் என்று கேலி வேண்டுமானால் செய்வார்கள். அதாவது பரிகசிப்பார்கள். பண்ணிவிட்டுப் போகட்டுமே. இப்போது மட்டும் குறைச்சலாகவா பரிகாசத்துக்கு ஆளாகி வருகிறோம்? நம் தர்மத்தை விட்டு ஊர் சிரிக்கிற நிலையில் வயிறு வளர்ப்பதைவிட தர்மத்தைச் செய்து கொண்டு ஊர் சிரித்தாலும் சிரிக்கட்டும் என்றுதான் இருக்கலாமே! அல்லது சாகலாமே! ஒவ்வொருத்தன், “என் தேசம்” என்கிறான், “என் பாஷை” என்கிறான். அதற்காகச் சண்டை போட்டு உயிரை வேண்டுமானாலும் விடுகிறான். சுதந்திரப் போராட்டம் மாதிரி பெரிய விஷயங்கள்தான் என்றில்லை; ஏதோ ஒரு ஜில்லாவின் பகுதி இன்னொரு ஜில்லாவுக்கு போய் விடக்கூடாது என்பதற்காகப் பிராணனை விடுவதற்கு சித்தமாக தானே தன் மேல் மண்ணெண்ணையைக் கொட்டிக் கொண்டு தீக்குளிக்கிறவர்கள் இருக்கிறார்கள். கொள்கைக்காக இதை இவர்கள் செய்கிற மாதிரி இங்கிலீஷ்காரர்களின் புது மோஸ்தர் வாழ்க்கை வந்தபோது பிராமணர்கள் பிராணனும் துச்சம் என்று பரமத் தியாகமாகத் தங்கள் தர்மத்தை ஏன் ரக்ஷித்திருக்கக்கூடாது? பிறத்தியானுடைய தர்மத்தை எடுத்துக் கொண்டு, அதனால் பெரிய வசதி, கிசதி பெறுவதைவிட, தன் தர்மத்திலேயே இருந்து கொண்டு சாகிறது மேல் (நிதனம்ச்ரேய: – சாவே சிலாக்கியம்) என்றுதான் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். முஸ்லீம் ஆட்சியில் பிராமணர்கள் மாறாததற்கும் வெள்ளைக்காரன் ஆட்சியில் மாறி விட்டதற்கும் என்ன காரணம் சொல்கிறார்கள்? வெள்ளைக்காரனோடுதான் புது ஸயன்ஸ், யந்திர சாதனங்கள் வந்தன. மோட்டார்கார், எலெக்ரிஸிடி மாதிரி வெகு சுருக்கக் காரியத்தைச் செய்து கொள்வதற்கான சாதனங்கள் வந்தன. அதுவரை நினைத்தும் பார்த்திராத இத்தனை சௌகரியங்கள், சுக சாதனங்கள் வெள்ளைக்காரனோடு வந்ததால்தான் அவற்றின் கவர்ச்சியால் இவன் இழுக்கப்பட்டு அவர்களுக்குரிய வழிகளிலேயே மோகித்து விட்டான் என்கிறார்கள். இது ஒரு காரணமாக இருக்கலாமே ஒழிய சமாதானமாகவோ நியாயமாகவோ ஆகாது.
பிராமணனின் தேகம் இந்திரிய சுகத்துக்காக ஏற்பட்டிருக்கிறதே அல்ல. அது லோக க்ஷேமார்த்தமாக வேதத்தை ரக்ஷிப்பதற்கு என்ன நியமங்களை அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டுமோ அவற்றைச் செய்யவே ஏற்பட்டது. அதில் அதிகப்படியான எந்த போக்ய வஸ்துவும் சேர்க்கக் கூடாது என்பதுதான் அடிப்படை தர்மம். அந்த தர்மத்தை, அதில் உள்ள தியாகப் பண்பை விட்டுவிட்டு, நவீன உபகரணங்களால் சுலபத்தில் கிடைக்கிற சுகங்களுக்கு இவன் ஆசைப்பட்டது அடியோடு தவறுதான். பாதகமான சூழ்நிலையிலும் ஸ்வதர்மத்தை ரட்சிப்பதுதான் பெருமை. அப்படி அவர்கள் செய்யாதது பெரிய தப்பு. அதன் பலனைத்தான் இப்போது ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்த நம்மிடையில் வந்துவிட்ட துவேஷ உணர்ச்சியில் அநுபவிக்கிறோம். மற்றவர்களுக்கும் பெரிய கிலேசத்தை உண்டாக்கி விட்டோம். முதலில் பிராமணனுக்கு காலேஜிலே இடமில்லை, வேலையில்லை என்று ஆனதே, பிறகு படிப்படியாக மற்றவர்களுக்கும் அந்தக் கதிதான் என்கிற நிலைக்கு முற்றி இருக்கிறது. மனித சக்தியினாலேயே கிராம வாழ்க்கையை எளிதாக நடத்தியமட்டும் எல்லாம் சரியாயிருந்தது. யந்திர சக்தி, ஆலைத்தொழில் எல்லாம் வந்து, தேவைகளும் ரொம்ப அதிகமாகி, வாழ்க்கையே சிக்கலாகிவிட்ட (Complicated) இன்றைய நிலையில் காலேஜ் அட்மிஷன், வேலை இவற்றுக்கு எல்லோருமே திண்டாடும்படியாகத்தான் ஆகியிருக்கிறது.
“இப்போது என்ன பரிகாரம் (remedy)? பிராமணர்கள் எல்லோரும் இப்போதிருக்கிற வாழ்க்கை முறைகளை விட்டு, அத்யயனத்துக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?” என்று என்னைக் கேட்டால், அப்படி நான் எதிர்பார்க்கிறேனோ இல்லையோ, அது காரிய சாத்தியமாக உங்களுக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, அவர்கள் இப்படித்தான் செய்தாக வேண்டும் என்றுதான் நான் சொல்ல வேண்டும். நம் மூலதர்மமே பறிபோய்விட்டது என்று வாயை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதற்கு குரு பீடம், ஆசாரிய ஸ்தானம் எதுவும் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. முடியாததாகத் தோன்றினாலும்கூட, அப்படிப்பட்ட நல்ல லக்ஷியங்களையும் முடித்துக் காட்ட வேண்டும் என்று சொல்வதற்குத்தான் மதங்கள், மடங்கள் இருக்கின்றன. இந்த லக்ஷியத்துக்குத்தான் அவை தங்கள் பூரண சக்தியையும் செலவழித்துப் பாடுபட வேண்டும். “சத்தியாக்கிரஹத்தால் வெள்ளைக்காரனைப் போகப் பண்ணுவதாவது, இதெல்லாம் நடக்காத காரியம்” என்று சொன்னவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். நடக்க முடியாது என்று நினைத்த எத்தனையோ இந்த உலகத்தில் நடந்துதான் இருக்கிறது. இது நடக்க முடியாத விஷயம் என்று நினைத்து, தர்மத்தையும் சத்தியத்தையும் விட்டுக் கொடுத்துப் பேசுவது எனக்கான காரியமில்லை. நடத்துவதும் நடத்தாததும் உங்கள் கையில் இருக்கிற விஷயம். நான் செய்யக்கூடியது எல்லாம் நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறவைகளை அலுக்காமல் சலிக்காமல் உங்கள் காதில் போடுவதுதான்; சாஸ்திரங்கள் எவற்றை உங்கள் கடமை என்று விதித்திருக்கின்றனவோ அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, எத்தனை பிரதிகூலங்கள் இருந்தாலும் நீங்கள் அதன்படிதான் நடக்கவேண்டும் என்று வலியுறுத்துவதுதான்.